கண்ணுக்குள் உடலின் கடிகாரம்

This entry is part [part not set] of 26 in the series 20020210_Issue


உடலின் நேரத்தையும் அதன் 24மணி நேரச்சுழற்சியையும் கட்டுப்படுத்தும் கடிகாரம் போன்ற புதுவகை ஒளி உணரும் செல்கள் கண்களில் இருப்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

இந்தக் கண்டுபிடிப்பு, எவ்வாறு கண் தெரியாதவர்கள் கூட தங்கள் உடலின் நேரத்தை கட்டுப்படுத்தவும், அதன் இரவு, பகல் நேரத்தை அறியவும் முடிகிறது என்பதை விளக்கலாம்.

உடலின் கடிகாரம், நமது தூக்கம், விழிப்பு, ஏன் நம் உடலின் தட்ப வெப்பம் ஆகியவை அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது.

இதனை படுத்தினால், ஜெட் லாக், பகல் நேரத்தில் தூக்கம் வருதல், சோம்பல் போன்றவை வெகு வேகமாக உலக நேர பகுதிகளை தாண்டுபவர்களுக்கு வரும்.

முக்கோண செல்கள், குச்சி செல்கள் ஆகிய இரண்டு செல்களே கண்ணுக்குள் இருப்பதாக இதுவரை நம்பி வந்தார்கள். இந்த செல்களே ஒளி சக்தியை மின்சார செய்திகளாக மாற்றி மூளைக்கு அனுப்பி நம்மை காண வைக்கின்றன.

இப்போது, எவ்வாறு நம் கண் வேலை செய்கிறது, எவ்வாறு மூளை வரும் செய்திகளை உணர்கிறது, எவ்வாறு பார்வையில் தெரியும் உலகைப் புரிந்து கொள்கிறது என்பது பற்றி நாம் அறிந்ததை மறு பரிசீலனை செய்யவேண்டும்.

இந்த புது வகை ஒளியால் தூண்டப்படும் செல்கள் ரோட் ஐலண்டில் இருக்கும் பிரவுண் பல்கலைக்கழக ஆராய்ச்சிக்குழுவினரால் கண்டறியப்பட்டுள்ளன.

கண்ணின் ரெடினாவுக்குள், குச்சிகளும், கோண செல்களுக்கும் ஆழத்தில் வளைந்து செல்லும் மரத்தின் கிளைகள் போன்ற வடிவில் இந்த புதுவகையாக அறியப்பட்டுள்ள செல்கள் இருக்கின்றன.

இந்த புதுவகை செல்களை ‘காங்கலியான் செல்கள் ‘ என்று பெயரிட்டுள்ளார்கள்

இந்த செல்கள் ஒளி சக்தியை நேரடியாக மூளையின் செய்திகளாக மாற்றுகின்றன.

இந்த செய்திகளே நேரடியாக உடலின் 24 மணி நேர கடிகாரத்தைக் கட்டுப்படுத்துகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.

நரம்புகள் மூலம் இந்த செல்கள் நேரடியாக மூளையின் கடிகார அமைப்பைத் தொடர்பு கொள்கின்றன.

டாக்டர் டேவிட் பெர்கன் அவர்கள், ‘இந்தசெல்கள் சிர்காடியன் கடிகாரத்தை அமைக்க முக்கிய பங்கு வகிக்கின்றன என்று கருதுகிறோம். இன்னும் பல விஷயங்களுக்கும் மூளை இந்த செல்களைப் பயன்படுத்திக்கொள்கிறது ‘ என்று கூறுகிறார்.

‘இந்த பார்வை அமைப்பு, கண் பார்வை அமைப்பைப் போலவே தனியாக இயங்குகிறது ‘ என்றும் கூறுகிறார்.

இந்த செல்கள் எலிகளில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த செல்களைப் போலவே மனிதர்களிலும் இருக்கும் என்று தீவிரமாக நம்புகிறார்கள்.

ஏன் சில மனிதர்கள் முழுக்க முழுக்க கண்பார்வை தெரியாதவர்களாக இருந்தாலும், அவர்களது குச்சிகளும், கோண்களும் வேலை செய்யாமல் இருந்தாலும், அவர்களால் பகலையும் இரவையும் தெளிவாக உணர்ந்து கொண்டு அதற்கேற்றபடி தங்களது உடலின் கடிகாரத்தை சரிசெய்து கொள்ள முடிகிறது என்பதை ஆராய இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார்கள்.

ஆராய்ச்சியாளர்கள், ஒரு ஒளிவீசும் மையை எலியின் மூளைக்குள் அதன் கடிகார அமைப்பு பகுதியில் செலுத்தினார்கள்.

இந்த மை கரைந்து கண்ணுக்குச் சென்றது.

பிறகு இந்த மை நிரம்பிய செல்களின் மின்சார இயக்கத்தை பதிவு செய்தார்கள். இந்த செல்கள் தொடர்ந்து ஒளியை பொறுத்து மின்சார செய்திகளை, அவைகள் ரெடினாவோடு இணைப்பு கொண்டிருந்தாலும், அல்லது மூளையோடு இணைப்பு கொண்டிருந்தாலும், அனுப்பிக்கொண்டிருக்கின்றன என்பதைக் கண்டறிந்தார்கள்.

இந்த ஆராய்ச்சி ஸயன்ஸ் என்ற பத்திரிக்கையில் வெளியாகி உள்ளது.

Series Navigation