கண்ணா நீ எங்கே

This entry is part [part not set] of 49 in the series 20040212_Issue

கவிநயா


ஈன்ற பொழுதினும்
இப்போது வலிக்குதடா
உன்னைக் காணாமல்
உன்மத்தம் பிடிக்குதடா
சிணுங்கிய உன் வதனம்
சிந்தையில் மிதக்குதடா
புன்னகை பூத்த முகம்
காண மனம் ஏங்குதடா

அன்னையிடம் கோபம் கொண்டு
ஆயர்ப்பாடி நீங்கினையோ
ஆவினத்தைத் தவிக்க விட்டு
ஆலிலையில் தூங்கினையோ
கோபியர்கள் தனித்திருக்க
கோகுலத்தை மறந்தனையோ
மண்ணுயிர்கள் மனங் கலங்க
மறைந்து எங்கு ஒளிந்தனையோ

கடைந்து வைத்த வெண்ணையெல்லாம்
கண்ணனின்றி உருகுதடா
காத்திருக்கும் கண்ணிரண்டும்
உன்னைத் தேடி மறுகுதடா
மாயக் கண்ணன் இல்லாமல்
மேகம் வண்ணம் இழந்ததடா
பவழச் செவ்வாய் பாராமல்
புல்லாங் குழலும் புழுங்குதடா

மண்ணுலகம் காத்திடவே
மன்னவனே வருவாயோ
வேதனையைத் தீர்த்திடவே
வெண்ணிலவே வருவாயோ
காற்சதங்கை கிணுகிணுக்க
கண்மணி நீ வருவாயோ
கரைந்துருகும் அன்னைமனம்
களிப்புறவே வருவாயோ


meenavr@hotmail.com

Series Navigation