கண்ணதாசனின் பாடல்களில் சமுதாயப் பார்வை

This entry is part [part not set] of 41 in the series 20101010_Issue

முனைவர்,சி,சேதுராமமுனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com

தமிழ்த் திரையுலகின் இசைப்பாடல் துறையில் கவியரசர் கண்ணதாசன் தமக்கென்று ஒரு தனியிடத்தைப் பெற்றுள்ளார். காதல் கவிதைகளை மட்டுமே கண்ணதாசன் படைப்பார். அவரது பாடல்களில் காதல் சுவை மட்டுமே மிகுந்து இருக்கும் என்பர். அவரது பாடல்களில் சமுதாயத்தை வளப்படுத்தும் கருத்துக்களும் இடம்பெறுவது நோக்கத்தக்கதாகும். மாங்கனி, தைப்பாவை, கடல் கொண்ட தென்னாடு உள்ளிட்ட பல பனுவல்களை தந்து காவியத்தாயின் இளையமகனாகக் கண்ணதாசன் விளங்கினார். இவரதுவாடல்கள் சமூக உணர்வு கொண்டவையாக விளங்குகின்றன.
நாடும் மொழியும்
கவிஞர் கண்ணதாசனுக்குத் தமது தாயகத்தின் மீது அளவுகடந்த பற்றுதலும் மதிப்பும் உண்டு. பொற்காலத் தமிழகத்தின் சீரினில் சிந்தை இறுமாந்துள்ள இவர்,
‘‘சிங்களத் தீவின் கடற்கரையை – எங்கள்
செந்தமிழ்த் தோழர் அழகு செய்தார்
எகிப்திய நாட்டின் நதிக்கரையில் – எங்கள்
இளந்தமிழ் வீரர் பவனி வந்தார்“
என்று பாடுகின்றார்.
தமிழ் மொழி எத்தகைய ஆற்றல் கொண்டது என்பதை இவர் கூறும் முறை மிகவும் சுவை பயப்பதாக உள்ளது. இதுவரை எக்கவிஞரும இவ்வாறு கூறியதில்லை. தமிழ் மொழியின் பண்பைக் கேட்டுக்கேட்டுக் கருவில் வளரும் குழந்தையும் தைரியம் பெறுகிறதாம். மொழி வாழ்ந்தால் நாடு வாழும். மொழிதான் சமுதாயத்தில் மக்களிடையே நாட்டுப்பற்றையும், வீர உணர்வையும் வளர்க்கும். இதனை, மன்னாதி மன்ன்ன் என்ற படத்தில்,
“கருவினில் வளரும் மழலையின் உடம்பில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான்அவள் பிள்ளை“
என்ற பாடலில் தெளிவாக எடுத்துரைக்கிறார்.
சாதி
சமூகத்தில் பல்வேறு விதமான இன்னல்களுக்கு அடிப்படைக் காரணம் சாதி வெறியே ஆகும். உலகம் மதம், நிறம் எனும் இரு பிரிவால் மட்டுமே பிரிந்து நிற்கின்றது. ஆனால் இந்தியாவில் மதம், நிறம், சாதி, நிறம் எனப் பலநிலையில் பிரிந்து காணப்படுகின்றது. தமிழகத்தில் மட்டும் சுமார் 1003 சாதிகள் இருப்பதாக டாக்டர் பெருமாள் கூறுகிறார். சாதிய அமைப்புகள் தான்தமிழகத்தின், இந்தியாவின் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாக விளங்குகின்றன. இதனை உணர்ந்த கவிஞர்,
‘‘சாதி எனும் பகைஉணர்ச்சி வாழுமட்டும்
தமிழ்நாட்டின் முன்னேற்றம் கானல் நீரே”
எனத் தம் கவிதையில் கூறுகின்றார்.
பொதுமை நோக்கு
சமுதாயத்தில் காணப்படும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக்களைய வேண்டும் எனப் பாடியவர்கண்ணதாசன். பொதுமை நோக்குடைய கருத்துக்களைத் தம் பாடல்களில் எழுதி சமூகப் பொதுமைக்கு வித்திடுகிறார். இதனை,
‘‘எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்
இல்லாமை இல்லாத நிலைவேண்டும்
வல்லான் வகுத்த ஒரு தனி உடைமை நீங்கி
வரவேண்டும் இங்கு நல்ல பொது உடைமை”
என்ற பாடல் வரிகள் தெளிவுறுத்துகிறன்றன.
காதல்
காதலைப் பாடாத கவிஞர்க இல்லை எனலாம். சங்க காலம் முதல் இக்காலம் வரை சமூகத்தில் மக்களிடையே இருந்த காதலுணர்வைக் கவிஞர்கள் பாடிவந்துள்ளனர். கவிஞர் கண்ணதாசன் எழுதிய திரைஇசைப் பாடல்களில் காதல் பாடல்களே எண்ணிக்கையில் மிகுதியாக உள்ளன. காதல் உணர்வு சமூக வாழ்வின் உயிர் நாடியாக்க் கருதப்படுகிறது. கண்ணதாசனின் முதல் பாடலும்,இறுதிப் பாடலும் காதல் பாடல்களாகவே அமைந்திலங்குகின்றன எனலாம்.
ஆணும், பெண்ணும் சரிசமமாக அன்புடன் இணைந்து எல்லாவற்றிலும் ஒரு நோக்கும் ஒரு மனமும் கொண்டு நடத்துவதே சிறந்த இல்லற வாழ்வாகும். காதல் மிகுதியாக இல்லாத வாழ்வில்தான் இன்பமும் இதமும் சுரக்கும் புகழும் சிறப்பும் பெருகும். இதனையே கவிஞர்,
“காதல் நாயகன் ஒரு பாதி
காதலி தானும் மறுபாதி
இரு மனம் அங்கே ஒரு மனம்
என்றே சொல் சொல்”
என வாழ்க்கைப் படகு என்ற படத்தில் அழுத்தத்துடன் சுட்டிக் காட்டுகிறார்.
வீர உணர்வு
சமூகம் உயர மக்களின் மனதில் வீர உணர்ச்சி இருத்தல் வேண்டும். கோழையாக வாழும் மக்களால் சமூகத்தில் அடிமை மனப்பான்மையே மேலோங்கி நிற்கும். வீர உணர்வுதான் சமூகத்திலும் உலகிலும் மனிதனுக்கு ஏற்றத்தைத் தருகிறது. ஒரு நாட்டு மக்களின் வீரப் பெருமிதமே அந்நாட்டைப் பகைவர்களிடமிருந்து காப்பாற்றும். கவிஞர் கண்ணதாசன் பல பாடல்களில் இவ்வீர உணர்வு மக்களுக்கு வேண்டும் எனப் பாடியிருக்கிறார். ஆக்கிரமிப்ப வெறி கொண்ட சீனர்கள் பாரத நாட்டின்மீது போர்தொடுத்தபோது கவிஞர் தம் கவிதைகளால் தமிழர் உள்ளங்களில் வீர உணர்வு குமிழியிடஉணர்ச்சிகவிதைகள் பல பாடினார். இரத்தத்திலகம் படத்தில்,
“பாரத நாட்டுத் திருமகனே வா
பச்சை ரத்தத்தில் திலகமிட்டு வா
பொருது வெங்களத்தை நோக்கி வா
பொன்னளந்து மண்ணளக்க வாவா”
எனப் பாடுகிறார்.
தன்னம்பிக்கை
தன்னை, தன் ஆற்றலை உணராத எவனும் தான் வாழும் சமூகத்தைப் பற்றி அறிந்திராத எவனும் வாழ்வில் உயர முடியாது. மனிதன்தன்னம்பிக்கையை இழக்குபோது பேயாக மாறுகிறான் என்பார் அறிஞர் இங்கர்சால். தன்னம்பிக்கை மிகுந்த இளைய தலைமுறையினரை உருவாக்க வேண்டுமென நினைத்தவர் கவிஞர். அதனால் தான்,
“யானையின் பலம் எதிலே தும்பிக்கையிலே
மனிதனோட பலம் எதிலே நம்பிக்கையிலே“
என்று பாடுகின்றார். மேலும்,
“மழை கூட ஒரு நாளில் தேனாகலாம்
மணல் கூட சிலநாளில் பொன்னாகலாம்“
எனஇளைஞர்கள் முயன்றால் முன்னேறலாம் எனத் தன்னம்பிக்கையூட்டுகின்றார்.
பொருளாதார ஏற்றத்தாழ்வு
கண்ணதாசன் தமது பல பாடல்களில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் மனிதர்களை அடிமைப்படுத்தும் நிலையினைச் சாபிக்கிறார். மனிதனைத்தவிர பிற உயிர்த்தொகுதிகளில் எவ்வித வேறுபாடுமில்லை. வானத்தின் ஒளியினிலே மலர்களிலே, ஆற்றினிலே காற்றினிலே ஏழ்மை, செழுமை என்ற பேதமில்லை. ஆனால் மனித சமுதாயத்தில் மட்டும் காணப்படும் இந்த ஏற்றத் தாழ்விற்குச் சுயநலமே காரணம் எனக் கவிஞர் கூறகிறார். இதை,
“வான் நிலவின் ஒளியினிலே
பேதங்களில்லை – மண
மலர்களிலே ஏழையில்லை
செல்வர்களில்லை“
எனத் ‘தென்றல் வீசும்‘ என்ற திரைப்படத்தில் வரும் பாடலில் வெளிப்படுத்துகிறார் கவிஞர்.
தொழிலாளர் வாழ்வு
ஒரு நாட்டின் முதுகெலும்பாக விளங்குபவர்கள் தொழிலாளர்களே ஆவர். இவர்கள் தங்கள்உழைப்பால் நாட்டைச் செழுமைப்படுத்துகின்றவர்கள். தொழிலாளர் வாழ்வு மேமபட அவர்கள்ஒற்றுமையோடு வாழ வேண்டும் இதனை,
“உழைக்கும் கைகளே
உருவாக்கும் கைகளே
உலகைப் புதுமுறையில்
உண்டாக்கும் கைகளே“
எனத் தொழிலாளர் உழைப்பினைப் பற்றியும்,
“உலகம் எங்கும் தொழில் வளர்க்கும்
மக்கள் ஒன்றாய்க் கூடுவோம்“
எனத் தொழிலாளர் ஒற்றுமையைப் பற்றியும் பாடுகிறார்.
இவ்வாற நாடு, மொழி, சாதி, பொதுமை நோக்கு, காதல், வீரம், சுயமுன்னேற்றக் கருத்துக்கள், பொருளாதார ஏற்றதாழ்வு, தொழிலாளர் வாழ்வு உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களைப் பற்றிப் பாடி சமுதாய உயர்வுக்குக் கவிஞர் கண்ணதாசன் வழிகாட்டுகிறார் எனலாம்.

Series Navigation

முனைவர்,சி,சேதுராம

முனைவர்,சி,சேதுராம