கடைசியாக

This entry is part [part not set] of 28 in the series 20081127_Issue

ஸ்ரீபன்


புலம் பெயர்ந்த உறவுகளுக்கு

கொஞ்சம் கனவுகளோடும்
கொஞ்சம் நம்பிக்கையோடும்
மரணத்தின் வாசலில் காத்திருக்கும்போது
கடைசியாக எழுதத் தோன்றுகிறது

என் இருப்பிடம் ஒழுங்கற்று கிடக்கிறது
வீடு திரும்பலாம் என்ற நம்பிக்கையின்
கடைசி வழிகளும்
இறுக்க முடப்படுகின்றன

நான் ஏழாவது தடவையாக
இடம் பெயர்ந்ததில்
பாம்புகளும் விலங்குகளும்
அகதிகளாகிப் போயின

அத்திவாரத்தோடு
பிடுங்கிவீசப்பட்ட என் வாழ்விடத்தின் பின்னால்
என் கடைசி விசும்பல்களும் இனி
கேட்காது போகலாம்

நீங்கள் விதைத்துவிட்டுப்
போனதிற்கு
நான் அறுவடையாகிறேன்

பூச்சிகளும் கடைசியாக போனபின்
குறைந்தபட்ச பாதுகாப்பாய்
பதுங்கு குளியிலிருந்து
எனக்கு எழுதத்தோன்றுகிறது

கிளிசல்களுக்கிடையே தெரியும்
வானத்தின் வெறுமையை
சுடுகுழல்களின் வெடியோசை
நிரப்பிவிடுகிறது

நாளைய விரிதலுக்கான
மொட்டுக்களும்
கருகிப்போய்விடுகின்றன
சத்தமில்லாமலே

அன்னியர்களின் காலரவங்கள்
கேட்காத தூரம்வரை
ஓடிக்கொண்டிருக்கிறேன்

உங்களுக்கிருக்கிற தேவைகளுக்குள்ளும்
எமக்காக குரல் கொடுக்கவும்
கொஞ்சம் பொருள் கொடுக்கவும்
முடிகிறது உங்களால்

இப்போது கொஞ்சம் உரிமையாய்
கொஞ்சம் கோபமாய்
போரிடு என்கிறீர்கள்
நீங்கள் தந்ததிற்கு
கணக்குக் கேட்பதுபோல

கதவுகளுக்குப் பின்னால்
இடுக்குகள் வழியாகப்
பார்த்துக்கொண்டிருக்கும் என்
மகனின் விடியலுக்கான பயணத்தில்
சுpல வேளை நான் வெற்றிபெற்றால்

ஏல்லாமே மாறிவிடலாம்
புதிய கனவுகள்
புதிய நம்பிக்கைகள்
புதிய நகரங்கள்
இழப்புகளும் துயரங்களும் மட்டும்
பழயனவாக


stefiny20@hotmail.com

Series Navigation