கடிதம் – மார்ச் 11 ,2004 – இலக்கிய மதிப்பீடுகளும் பூசல்களும் : காஞ்சனா தாமோதரன், ஜெயமோஹன் நிலைப்பாடுகள் பற்றிய ஒரு குறிப்பு

This entry is part [part not set] of 48 in the series 20040311_Issue

ஸ்ரீதரன்


இலக்கிய மதிப்பீடுகள் பற்றி சமீபத்தில் இரண்டு முரண்படும் கருத்துகள் திண்ணையில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று காஞ்சனா தாமோதரனின் ‘ஒரு விருதும் புனைவிலக்கியமும் ‘, மற்றது ஜெயமோஹனின் ‘இலக்கிய விவாதங்களும் எல்லை மீறல்களும் ‘. இரண்டு கருத்துகளும் வெவ்வேறு திசைகளில் நம்மை இட்டுச் செல்கின்றன. இங்கு அவைபற்றிய ஓரிரு கருத்துகளைச் சொல்லலாம் என்று தோன்றுகிறது.

காஞ்சனா தாமோதரன், யேல் பல்கலைக்கழகத்துப் பேராசிரியர் ஹரல்ட் ப்ளூம், வெகுஜன எழுத்தாளர் ஸ்டாவன் கிங்கிற்கு அமெரிக்கப் புத்தக நிறுவனத்தார் இலக்கிய விருது அளித்ததைத் தொடர்ந்து அவர்களை ‘மேட்டிமைத்தனத்துடன் ‘ ‘முட்டாள்கள் ‘ என்கிற ரீதியில் எழுதியதை எடுத்துக்காட்டி இவ்வாறான பண்டிதத்தின் வெறுமையைச் சாடுகிறார். மறுபக்கத்தில் மேன்மையானவை என்று கருதப்பட்டவற்றைக் ‘கோடாரி விமரிசகர்கள் ‘ எவ்வாறு ஒதுக்கி எறிகிறார்கள் என்பதையும் விமரிசகர் பெக்கின் உதாரணத்துடன் காட்டிய அவர், ஷேக்ஸ்பியர் உதாரணத்தைக் கொண்டே எழுத்துகளின் வெகுஜனத்தன்மை எழுத்தின் உயர்வின்மைக்குக் காரணமாகாது என்பதையும், ‘ சந்தை ‘யும், புகழும், எழுத்தினால் லாபமும் எழுத்தின் ‘சாதாரணத்தன்மையை ‘க் காட்டி மேன்மையின்மையைப் பிரதிபலிக்கின்றன என்ற வாதம் நியாயமில்லாதது என்பதையும் உதாரணங்களுடன் எடுத்துக் காட்டுகிறார். பின் நவீனத்துவத்தின் தேய்வின் ஆரம்பமும், அதை மீறும் முயற்சியில் எழப்பார்க்கிற நவயதார்த்தப் படைப்புகளின் வெகுஜனக் கொள்ளளவும் அவர் கட்டுரையில் நன்றாகச் சொல்லப்படுகிறது.

ஜெயமோஹனின் விவாதங்கள் பண்டிதப் போக்குகளின் எல்லையில் அமைந்துள்ளன. வெகுஜன எழுத்தாளர்களுக்குள் பூசல் எதுவுமில்லை ஆனால் கருத்து வேறுபாடுகளும் பூசல்களும் அமைவதே எழுத்தின் மேன்மைக்கான அடையாளம் என்பதை ஓர் அரைவேக்காடான முரணியக்கத் தருக்கத்துடன் முன் வைக்க முயல்கிறார். வியாபித்திருக்கிற ஆலமரம் ஆயிரம் செடிகளைவென்று அப்பகுதியைத்தன் அதிகாரத்திற்குள் கொள்வது போன்று உயர்வான எழுத்தாளர் பலரையும் இல்லாமல் பண்ணிவிடுவார் என்பது அவர் வாதம். ‘ஒரு படைப்பைப் பிறிதொன்றிற்கு மேலாக வைக்காமல் இலக்கிய வாசிப்பு சாத்தியமே இல்லை ‘என்பதுவும் ரசனை என்பது நுட்பமான தேர்வும் நிராகரிப்பும் தேர்வும் தானே ? ‘ என்பதுவும் பிறழ்மன நிலையைக்காட்டுவன. எனக்குத்தெரிந்த வரையில் இலக்கியப்படைப்பொன்றில் இறங்கும் போது ஒரு புதிய பிரயாணத்தை மேற்கொள்ளுகிறோம். சில வேளைகளில் புதிய காட்சிகள் தென் படும் சில வேளைகளில் பார்த்ததையே பார்க்கிறோம். உண்மையான் ரசனை என்பதுக்கு ஒப்பு எதுவும் தேவையில்லை. மனத்தையும் அறிவையும் காட்சிகள் ஊடுருவும் போது தேர்வும் நிராகரிப்பும் எங்கே எப்படி வந்து சேரும் ?.

ஆறுமுக நாவலருக்கும், ராமலிங்க அடிகளுக்கும் நட்ந்த அருட்பா – மருட்பா விவாதத்திலிருந்து தமிழ் இலக்கிய மரபே இவ்வாறான வகையில் அமைந்து வந்திருக்கிறது என்பது விவாதம். ஜெயமோஹனின் தன் போக்குகளுக்குக் காரணம் சொலவ்துபோன்று அவர் கட்டுரை இருக்கிறது.

வருக்க முரண்கள் ஏற்படுத்தும் வாழ்க்கை ஒட்டங்கள் பற்றி எழும் புனைவுகளைப் பற்றியோ எழுத்தாளர்களின் வருக்க நிலை அவர்களின் எழுத்தையும் அவ்வெழுத்தின் விமரிசனத்தையும் பாதிப்பதுபற்றி காஞ்சனா தாமோதரன் அவர்கள் தன் கட்டுரையில் குறிப்பிடும் அதே நேரத்தில் ஜெயமோஹனின் விவாதங்களின் திரையில் இம்முக்கியப் பிரச்சனை பற்றி எதுவும் இல்லை.

ஜெயமோஹ்ன் குறிப்பிடும் ‘கருத்தியல் செயல்பாடுகள் ‘ எழுவதின் காரணகரியங்களைப் பற்றியோ மர்க்சீய வாதிகள் எழுப்பும் அவற்றின் வருக்க முரண்பாட்டு மூலங்களைப் பற்றியும் ஒரு குறிப்பும் இல்லை. ஜெயமோஹனே குறிப்பிடும் கார்சீயா மார்கேஸின் ‘மிகேல் லிட்டினின் அவன் சிலியில் மறைந்து வாழ்ந்தபோதான சாகசங்கள் ‘ புத்தகப் பிரதிகளை (கிட்டத்தட்ட 15,000 பிரதிகள்)1987 ல் எரித்தபடியால், ஜெயமோஹன் வாதப்படி சிலி நாட்டு ராணுவ அரசு இலக்கியத்தின் அதி உயரத்தை அடைந்துவிடுமா ? டாக்டர் லோசா (யோசா என்பது ஸ்பானிஷ் உச்சரிப்பு) அரசியல் வாதியாய் மாறியதுவும் எழுத்தாளருக்குரிய மனிதநேயமில்லாத அரசியல் போக்கில் இறங்கியதுவும்தான் அவர்களுடைய முரணுக்கு அடிவேரே தவிர இலக்கியம் பற்றிய முரண்கள் எதுவுமில்லை. அவர்களுக்குள்ளான ‘கருத்தியல் ‘ விவாதங்களையும் அவரவர் இலக்கியம் பற்றி அவர்கள் முரண்படுவதற்கும் ‘ஈழப்பாணச்சாதிப் பயலே ‘ என்ற அல்லது ‘ நாச்சியார் மட ‘ வகைத் தூஷணைகளும் ஒரே வகை ‘கருத்தியல் செயல்பாட்டின் ‘ முரண்கள் என்று பிணைப்பது அறிவுடைய போக்காகாது. ப்ளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்தில் வருகைதரும் பேராசிரியராகப் பணியாற்றிய யோசாவை இராக்கிற்குப்போய் அம்மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று அறிந்துவர அமெரிக்க அரசு அவரை அனுப்பிவைத்ததை உற்று யோசிக்கையில் அவர் குடை எங்கு சாய்கிறதென்பதையும் மார்கேஸின் மனித நேயப்போக்கிற்கு யோசாவின் போக்குகள் உண்டாக்கும் முரணையும் இதில் பார்க்கலாம். தென் அமெரிக்க பிரபல எழுத்துகள் பல அன்னாடுகளில் அமைந்திருக்கிற நசிப்பையும் அரசுகளின் மற்றும் பலம் வாய்ந்தோரின் ஒடுக்கு முறையையும் பல்விதமாகவும் சொல்வன. மார்கேஸின் மாய யதார்த்த எழுத்துக்குள்ளேயே இவற்றின் எதிரொலிகளைப்பார்க்கலாம். எனவே அடிப்படையில் சமூக முரண்களிின் பின்னணியில் தனி மனித ஓட்டம் எப்படிச் செல்கிறது என்பதைக் காட்டும் வகையில் இவ்வெழுத்துகள் அமைந்திருக்கின்றன. மார்கேசும் யோசாவும் பிரச்சனைப்படுவது என் எழுத்து பெரிதா அல்லது உன் எழுத்து பெரிதா என்றல்ல. ஆத்மார்த்த எழுத்தாளரின் அடிவயிற்றில் இருந்து எழும் இலக்கியப் போக்கினை எதிர்க்க செல்வாக்கு எழுத்தாளர் எப்போதுமே ஆயத்தமாக இருக்கிறார்கள். முக்கியமற்ற பரிமாணங்களை எடுத்துப்பின்னி செல்வாக்கு எழுத்தாளர் வாதத்தைத்திசை திருப்பியபடி இருக்கிறார்கள். மார்க்சீய வாதிகள் நெடு காலமாகவே வருக்க முரண்கள் ஒழிந்து போய் சம நிலை வரும்போது இலக்கியம் என்ன முரணைச் சொல்லப்போகிறது என்று விவாத்து வந்திருக்கிறார்கள். இந்த விவாதத்திற்கு எமக்கு உதவும் வகையில் தென்னமெரிக்க எழுத்துகள் அமைந்திருக்கின்றன. அந்தத் தளத்திற்கும் ஜெயமோஹன் எங்களை இட்டுச் செல்வதாக இல்லை. வள்ளலார்- நாவலர் சணடையில் சாதி முரணை மாத்திரம் காட்டும் ஜெயமோஹன் எழுத்தில் பூரணமான பார்வையில்லை. கருத்தியல்வாதம் தனிப்பட்ட சண்டையில் இறக்கிவிடும்போது சண்டையில் கவனத்தைசெலுத்துவதைவிட கருத்தியல் முரணை ஆய்வது திறமானது. இரண்டையும் குழப்பிப்பார்ப்பது தீர்க்கமாகாது.

தோல்ஸ்தோய் ‘ எத்தனை எழுத்தாளர்களை இல்லாமல் பண்ணியிருப்பார் ? ‘ என்று சொல்லும் ஜெயமோஹனுக்கு தோஸ்தயேவ்ஸ்கி, தோல்ஸ்தோயின் சமகால எழுத்தாளர் என்பது தெரியாமல் போய்விட்டது. வாசிப்பின் போது ஒரு படைப்புக்கு மேலோ கீழோ வைத்துத்தான் அவ்வெழுத்தை உள்வாங்கிக்கொள்கிறோம் என்பது தவறானது. வாசிப்பின் உளவியல் (Psychology of Reading) கோட்பாடுகளின்படி, எங்கள் முன்னைய வாசிப்பு உட்பட்டான அனுபவங்கள் யாவும் எங்கள் வாசிப்பு இயக்கத்தைப்பாதிக்கும் என்பது உண்மைதான் ஆனால் மற்றவர் எழுத்தை முன்னோ பின்னோ வைத்து எடைபோட்டபடி எல்லாரும் வாசிக்க முனைவர் என்பது தவறானது. ஷோபா சக்தியின் ‘கொரில்லா ‘ வை வாசிக்கும்போது தோவ்ஸ்தயேவ்ஸ்கி காட்டிய ‘தந்தை – தனயன் ‘ முரண் சிக்கல்கள் நாங்கள் உணரமுடிகிறது. ரஷ்ய சமூகமும் இல்லை – 19 ம் நூற்றாண்டின் கடைசியோ அல்லது 20 ம் நூற்றாண்டின் தொடக்கமோ இல்லை வேறோர் பின்னணியில் அவை சொல்லப்படுவதை வாசிக்கும்போது ஷோபாசக்தியை தோவ்ஸ்தயேவ்ஸ்கியுடன் முன்னோ பின்னோ வைக்க வேண்டிய கட்டாயமோ உந்துதலோ இல்லை. ஷோபா சக்தியின் எழுத்தின் பின்னணியின் நிஜம் தோவ்ஸ்தயேவ்ஸ்கயின் கதைகளின் பின்னணியைவிட நிஜமானது என்பது ஈழ வாசிப்பாளருக்குத்தெரியவருகிறது. தோவ்ஸ்தயேவ்ஸ்கியோ ஷோபா சக்தியோ சிக்கல் எழுத்துக்காரர்கள் இல்லை. இவ்விருவர் எழுத்திலுமான சக்தி அந்த நிஜமே. நிஜத்தின் பின்னணி தெரிந்தவர்களுக்கு ஷோபாசக்தியின் மேன்மை தோற்றுகிறது. அவ்வளவே.

வாசிக்க இறங்கும்போது – வேறு மனச்சிக்கல் இல்லாதவர்களுக்கு- அது ஒரு பிரயாணம். வேறு உலகுக்கும் நம்மை இட்டுச்செல்லலாம். இந்த ரீதியில் எழுத்துகளின் வாசிப்புத்தள இயக்கத்தில் கதையின் தளமே முக்கியம் அடைந்து எழுத்தாளனை முக்கியப்பட வைக்கிறதே தவிர எழுத்தாளனை மட்டும் வைத்து இலக்கியப்பிரயாணத்தை நாங்கள் அனுபவிப்பதில்லை. எதிர்கொள்வதும், ஏற்பதும், ஒப்புக்கொள்வதும், மறுப்பதும் யாவும் வாசிப்பில் அடங்கும். மறுப்பதில்தான் வாசிப்புத் தொடங்கும் என்பது மனோ வியாதியைக்காட்டுகிறது. வாசிப்பில் ஏது தந்திரங்கள் ?

அகங்காரமும் பொறாமையும் மேன்மை எழுத்தாளருக்கே உரிய அடையாளங்களாக

வணிகப்படைப்புகள் அக்காலகட்டத்து ‘அங்கீகரிக்கப்பட்ட ‘ கருத்தியலைச் சார்ந்து பேசும் இலக்கியப்படைப்புகள் அவற்றை எதிர்க்கும் என்கிற ஜெயமோஹன் பார்வையில் காஞ்சனா தாமோதரன் எழுப்புகிற வெகுமக்கள் கதை-இலக்கியப்படைப்புகள் வினாவிற்கு பதில்சொல்கிற மாதிரித் தோற்றலாம். என்ன பிரச்சனை என்றால் எதை, யார், எங்கே, அங்கீகரிக்கப்பட்ட கருத்தியலை நாங்கள் ஏற்கவோ மறுக்கவோ செய்ககிறோம் என்பதுவும் கருத்தியலை ஏற்கவோ மறுக்கவோ இலக்கியம்தான் ஊடகமா என்பதுவும் முக்கியமான கேள்விகள். புதுமைப்பித்தன், தன் கணவனுக்கு மருந்து வாங்க ஒரு மனைவி தன்னை விற்ற கதையை எழுதியபோது அந்த வாதத்தின் ஆழத்தை உணர்ந்தவரெல்லாம் அங்கீகரிக்கப்பட்ட் கருத்தியலின் வெறுமையை உணர்ந்தவர்தான். அக்கதையே ஒரு கூத்தாக ஒரு வெகுமக்கள் ஊடக வாயிலாகச் சொல்லப்பட்டிருக்குமானால் அது பிரபலமடைந்திருக்கும். ஒரு வெற்றிகரமான வணிகப்படைப்பாகவும் அமைந்திருக்கும். எது நியாயமானதோ அதை விளக்குவதான படைப்புகள் வெகு மக்கள் படைப்பாகவும் இருக்கலாம் இலக்கியமாகவும் இருக்க்லாம். கண்ணகி மன்னனைச்சாடி மதுரையை எரித்த கதை வெகுமக்கள் கதையா அல்லது இலக்கியமா ? அங்கீகரிக்கப்பட்ட கருத்தியல்களில் பண்டிதத்தனமான தராதரங்கள் இருந்தாலொழிய வெகுமக்கள் கதை – இலக்கியம் என்கிற பிரிவு கருத்தில்லாதது. ஆனால் கருத்தியல்களில் எது வாழ்க்கையின் அடிவேரைப் பாதிக்கும் எது பாதிக்காது என்பதைச் சொல்லலாம்.

‘உன் கதையை நீ எழுது அவன் கதையை அவன் எழுதட்டும்மென்பது பொருளில்லாதது ‘ என்ற ஜெயமோஹன் வாதத்தையும் காஞ்சனா தாமோதரன் எழுப்பும் வெகுமக்கள் கதை – இலக்கிய எழுத்துகளின் முரணையும் நாங்கள் இன்னோர் தள்த்தில் வைக்கலாம். கதைகளின் முக்கியத்துவம் எழுத்தாளனில் அல்ல. அவன் கதையின் பொருள் தளத்திலேதான். பொருள்தளங்களில் சின்னது- பெரியது, சிக்கலானது- சிக்கலில்லாதது என்கிறவாதங்களுக்கு ஒரு முழுமையான அளவுகோல் கிடையாது. எனவே எல்லாக் கதைகளும் சொல்லப்பட வேண்டியததுதான்.

ஒவ்வொரு மனித உயிருக்கும் தனித்துவமான வாழ்வு அமைந்திருக்கிறது. – பொதுத்தன்மைகள் பல இருந்தாலும். அந்த அனுபவத்தின் தனித்தன்மையை எழுத்தாளர்கள் முன்வைக்க வருகிறார்கள். சொல்வது அழகியலில்லாது அமையலாம், வேறொருவவன் வாழ்க்கையின் போக்கிலும் இருந்திருக்கலாம் ஆனால் கதைகளின் தனித்துவத்தை மறுக்க முடியாது. இந்தக்கதைகளுக்கான பொதுத்தளத்தை மறுக்கவும் நிராகரிக்கவும் வேறொருவருக்குமில்லை. நிராகரிப்பவன் எழுத்தாளனாகமாட்டான். இந்தக் கோட்பாட்டை நாங்கள் ஒரு கணித முறையில் அணுகி விளக்கலாம். கணிதத்தில் Vector Spaces என்கிற பாடப்பிரிவு உண்டு. இந்தப்பிரிவு பல பரிமாண (multi- dimensional) அளவுகளைப் பற்றியது. இந்தப் பிரிவில் முழுமை (completeness) என்கிற ஒரு நோக்கு உண்டு. நாங்கள் அளக்க முயற்சிப்பதற்காக எடுத்துக்கொள்ளும் அடி அளவுகள் (bases) முழுமையானதா இல்லையா என்று தீர்மானித்துக்கொள்ளுவோம். உதாரணமாக ஒரு முப்பரிமாண அளவை இரு பரிமாணத்திட்டத்தால் (two diemnsional scheme) முற்றாக விளக்கி விட முடியாது. மனித இருப்பு (existence) என்பது எங்கள் ஒவ்வொருவராலும் அமைக்கப்பட்ட அடி அளவினாலேயே தீர்மானிக்கப்படுகிறது. அதில் முழுமை வேண்டும். ஒவ்வொரு அனுபவத்திலுமான தனித்தன்மை வைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மனிதனின் கதையும்- எழுதப்பட்டதும் சொல்லப்பட்டதும், பாடப்பட்டதும் அதனதன் நிலையைப்பெற்று இருத்தலின் அடி அளவை முழுமைப்படுத்த வேண்டும். மனித இருத்தலின் முழுமையை உணர இதுவே வழி. உண்மையான இவ்வகை ஞானத் தேடல் முறையிருந்தால் சக எழுத்தாளரிடம் பொறாமையோ எரிச்சலோ வரவே வராது.

03/07/04.

subramania@sbcglobal.net

Series Navigation

ஸ்ரீதரன்

ஸ்ரீதரன்