கடிதம் – பிப்ரவரி 03, 2005 – திருமாவின் தனித் தன்மை

This entry is part [part not set] of 39 in the series 20050203_Issue

மயிலாடுதுறை சிவா


சென்ற வாரம் திண்ணை இதழில் திரு வரதன் அவர்கள் திருமாவை தாக்கி எழதி இருந்தார்கள். அதனை மறுத்து எழுதுவதும், திருமா தரப்பு நியாயத்தை எனக்கு தெரிந்தவரை எழதுவது ‘தமிழ் பாதுகாப்பு இயக்கத்திற்கு ‘ நான் செய்யும் ஒரு சிறிய பங்களிப்பு எனவும் கொள்ளலாம்.

இன்றையக் காலக்கட்டத்தில் தலித் மக்களின் ஏகோபித்த தலைவன் திருமா, வன்னிய மக்களின் மற்றும் பிற்படுத்தப் பட்ட மக்களின் தலைவர் மருத்துவர் திரு இராமதாஸ், மதுரை மாவட்ட மக்களின் பெருன்மான்மை தேவர் மக்களுக்கு நன்கு அறிமுகம் ஆன மருத்துவர் திரு சேதுராமன், எல்லாவற்றிக்கும் மேலாக தமிழ் மக்களின் தமிழ் உணர்வுகளுக்கும், தமிழ் மக்களின் சமுதாய முன்னேற்றத்திற்க்கும் பெரிதும் பாடுபடும் அய்யா நெடுமாறன் மற்றும் சில தலைவர்கள் சேர்ந்து ‘தமிழ் பாதுகாப்பு இயக்கம் ‘ என்று தொடங்கி மக்களிடம் தமிழ் உணர்வை மழுங்கடிக்கமால், தமிழ் மொழி வளர்ச்சிக்காக போராடுவதில் என்ன தவறு இருக்க முடியும் ?

முதலில் நம் தமிழ்ச் சமுதாயத்தில் திரைப்படம் மூலம் நம் தமிழ் மக்களை பாலியல் உணர்வுகளை தூண்டிவிட்டு, நம் மொழி உணர்வை மழுங்க அடிக்க செய்வது, திரைப்படம் மூலம் நம் தாய் மொழி தமிழில் பெயர் வைக்கமால் ஆங்கிலத்தில்தான் வைப்பேன் என்று ஓர் கூட்டம் அலைகிறதே ? அதனை யார் தடுத்து நிறுத்துவது ? அன்பாக பலமுறை கேட்டும் பலன் இல்லை. இதுப் போல் ஒர் இயக்கம் மூலம் நம் அரசியல்வாதிகள் போராடினால்தான் அவர்கள் வழிக்கு வருவார்கள். திரைப்பட புகழ் மூலமும், அதன் மூலம் பொருளாதார வசதி மூலமும் தனிபட்ட சொந்த வாழ்க்கையில் வெற்றிப் பெற்றுவிட்டு முடிவில் அரசியல் மூலம் பதவிக்கு வர துடிக்கும் நடிகர்களை நம் அரசியல்வாதிகள் கண்டிப்பதில் தவறு என்ன இருக்கமுடியும் ?

இராமதாஸ், திருமா, சேதுராமன், நெடுமாறன் இவர்கள் சேர்ந்து இருப்பது ஓர் நல்ல முயற்சியே!. அதுமட்டும் அல்ல இந்த கூட்டணி அப்படியே ஓட்டுகளாக மாறும் என்றும் யாரும் நினைக்கவும் இல்லை. கலைஞர் கருணாநிதிக்கு இதுப் பிடிக்கமால் இருக்கலாம் ஆனால் தேர்தல் நேரத்தில் இராமதாஸ் அய்யாவிற்கு ஒதுக்கப் படும் இடங்களில் திருமாவிற்கும் சீட்டுகளை கேட்டு வாங்குவார் என்று பலமாக நம்பலாம். கடந்த காலங்களில் இராமதாஸ் தம்பி திருமாவை நான் என்றும் விமர்சித்தது இல்லை எனவும், இனிமேல் நான் தம்பியை பிரிய மாட்டேன் எனவும் சொல்வது தமிழ் அன்பர்களுக்கு இனிப்பான செய்தியே!!!.

இரட்டை தம்ளர் (குவளை) முறை சமுதாயத்தில் நிச்சயம் ஒழிக்கப் படவேண்டியது. இவர்கள் அனைவரும் சேர்ந்து இருப்பதால் வரும் காலங்களில் நிச்சயம் இது குறையதான் செய்யும். அதுமட்டுமல்ல இவர்கள் சேர்ந்து இருப்பதால் நிச்சயம் சாதி சண்டைகளும் குறைந்து உள்ளது. மேலும் மேலும் சாதி சண்டைகள் பரவாமாலும், தொடராமாலும் இருக்க இந்த இயக்கம் நன்மைப் பயக்கும் என்பது பொதுவான கருத்து.

தங்களின் சாதிய அடையாளங்களை மறைத்துக் கொள்ள இவர்களுக்கு தேவைப்பட்ட பசுந்தோல் இந்த ‘தமிழ் நலன் ‘ என்கிறார் வரதன். இது ஓர் அபாண்டமான குற்றசாட்டு.

தங்களின் சாதிய அடையாளங்களை மறந்து ‘தமிழ் பாதுகாப்பு இயக்கம் ‘ கண்டது அரசியலில் அல்லது சமுதாயத்தில் அடுத்த நிலை. இது பசுந்தோல் அல்ல, தமிழ் உணர்வாளர்களுக்கும், தமிழ் மொழியை நேசிப்பவர்களுக்கும், இது ‘இரத்தின கம்பளம் ‘ அய்யா!!! தமிழ் உணர்வாளர்களை ஒரிங்கிணைக்கும் நற்செயல். இது அரசியலுக்கு அப்பாற்பட்டு நடக்கும் செயல்.

‘தலித்துகளை திருமாவளவனிடம் இருந்து ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் ‘ இதுவும் வரதன் குற்றசாட்டு. இன்றைய காலக்கட்டத்தில் லட்சகணக்கான தலித் மற்றும் தமிழ் உணர்வாளர்களின் ஏகோபித்த தலைவன் திருமாவளவன் என்றால் அது மிகையாகது. (இதுப் பற்றி நான் ஏற்கனவே திண்ணையில் எழுதி உள்ளேன்). திருமாவின் தமிழ் ஆர்வம், தமிழ் உணர்வு, முனைவர் அம்பேத்காரின் கொள்கை பிடிப்பு, தமிழ் தேசிய சிந்தனை, நம் தொப்புள் கொடி உறவுள்ள நம் ஈழத் தமிழர்களின் விடுதலைக்கு குரல் கொடுக்கும் மிக துணிவான ஆற்றல், எல்லாவற்றிக்கும் மேலாக ஓர் தலித் ஒருவருக்கு தமிழ் நாட்டில் எங்கோ ஓர் முலையில் ஏற்படும் அவமதிப்பை/மறுக்கப்பட்ட உரிமையை/ஒடுக்கப்பட்ட உரிமையை திருமா தட்டி கேட்கபடும் போழுது லட்சகணக்கான இளைஞர்களும் மக்களும் கூடுகிறார்களே அது எப்படி வரதன் சாத்தியம் ? தலித் மக்களை காசு கொடுத்து கூட்ட முடியுமா ? திருமாவின் சமுதாயப் பணிக்கு மக்கள் கொடுகின்ற அங்கீகாரமே இந்த கூட்டம்!!!

தலித் மக்களை ஆண்டவன் ஏன் காப்பாற்ற வேண்டும் ? நாங்கள்தான் ஆண்டவன் மறுப்பு கொள்கையை தந்தை பெரியாரிடம் இருந்து உள்வாங்கி கொண்டோமே ? கடவுள் பெயரால் தலித் மக்களுக்கு நடக்கும் கொடுமைகளைப் பற்றி உலகு அறியுமே ? சீரங்கத்திலும், மைலாப்பூரிலும், சிதம்பரத்திலும் தலித் ஒருவரை அர்ச்சகராக நியமித்தால் அப்பொழுது ஒத்துக் கொள்கிறோம் ஆண்டவன் இருக்கிறான் என்று!!!

‘திருமாவளவன் குழம்பிப் போன நிலையில் காந்தியை தாக்கிப் பேசி, காந்தி போன்றவர்கள் தூக்கிவிட்டதால் தான் இன்று திருமா அவரின் முதுகில் குத்த முடிகிறது ‘ இதுவும் வரதன் குற்றசாட்டு.

காந்தி இந்திய விடுதலைக்கு போராடினார். அதற்கு சிரம் தாழ்ந்த வணங்கங்கள். ஆனால் காந்தி சட்ட மேதை அண்ணல் முனைவர் அம்பேத்கார் தலித் மக்களுக்கு ஏன் இரட்டை வாக்கு உரிமை வேண்டும் எனவும் அதற்காக கடுமையாக போராடினார். ஆனால் அதற்கு காந்தி தடையாக இருந்தார் என்பது வரலாறு அறியும். ‘இந்துத்துவத்தை வேர் அறுப்போம், இழந்த முகத்தை மீட்டு எடுப்போம் ‘ என்பது திருமாவின் கொள்கை. பின் எப்படி இந்து மத காப்பாளர் காந்தியை திருமா ஆதரித்து பேச முடியும் ? பிற்காலத்தில் இந்துமத தீவரவாதிகளால் காந்தி கொல்லப் பட்டத்தும் நாடு அறியுமே ?

காலம் எப்பொழுதும் ஓர் அறிய தலைவனை மக்களுக்கு இனம் காட்டும், அப்படிப் பட்ட தலைவனே தொல். திருமாவளவன். சனநாயக நாட்டில் நீங்கள் யாரை வேண்டுமானலும் நீங்கள் தாக்கி எழுதலாம். ஆனால் காலம் மக்களுக்கு பாடுபடுகின்ற தலைவனை அடையாளம் காட்டத்தான் செய்யும். மக்களுக்கு யார் வேண்டும், யார் வேண்டாம் என்று அவர்களே தீர்மானிக்கட்டும்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழர்!!!

என்றும் அன்புடன்

மயிலாடுதுறை சிவா…

mpsiva23@yahoo.com

Series Navigation

author

மயிலாடுதுறை சிவா

மயிலாடுதுறை சிவா

Similar Posts