கடிதம் மே 13,2004 – ஜோதிர்லதா கிரிஜாவுக்கு: வருத்தமும் விளக்கமும்

This entry is part [part not set] of 52 in the series 20040513_Issue

பிறைநதிபுரத்தான்


அன்பிற்குரிய ஜோதிர்லதா கிரிஜாவுக்கு,

கோடிக்கணக்கான இந்திய இஸ்லாமியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் RSS/சங்பரிவார் கும்பலின் கருத்தை எதிரொலிக்கும் விதமாக நீங்கள் எழுதியவைகளுக்குத்தான் என்னுடைய பதிலே தவிர ஜோதிர்லதா கிரிஜா என்ற தனிப்பட்ட மனிதருக்கோ அல்லது ஒட்டுமொத்த இந்து சமுதாயத்துக்கோ எதிரானது அல்ல. சாந்தியையும் சமாதானத்தையும் அடிப்படையாக கொண்ட மதத்தை பின்பற்றும் இந்திய முஸ்லிமாகிய நான் தங்களின் எழுத்துக்களை தவறாக புரிந்துக்கொண்டு உங்களையும், உங்களை போன்றவர்களின் உணர்வுகளையும் உண்மையிலேயே நோகடித்திருந்தால் என்னை மண்ணித்துவிடும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்னுடைய பதிலுக்கான பின்னனியை நீங்களும், உங்களைப்போன்ற நடுநிலைவாதிகளும் அறிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன். இந்நாட்டின் குடிமகன்களான இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக, விஷக்கருத்துக்களை அடிப்படையாக கொண்ட ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்கள் ஆண்டாண்டு காலமாக பரப்பப்பட்டு வருகின்றது அதுவும் தற்போதைய அறிவியல் உலகில் அவைகள் பரப்பப்படும் முறையும், வேகமும் முன்பைவிட மிகவும் செம்மையாகதிட்டமிட்டு தீவிரமாக்கபட்டுள்ளது.

பல்லாண்டுகளுக்கு முன்பாக, முஸ்லிம்கள் வசிக்கும் தெருக்களில், ஊர்களில் எல்லாம் இரவு நேரத்தில், சில நபர்கள் வந்து, ‘ முஸ்லிம்களே பாகிஸ்தானுக்கு திரும்பி போங்கள் ‘ ‘இந்தியா இந்துக்களுக்கு ‘ மற்றும் ‘இந்துக்களே முஸ்லிம்கள் கடையில் பொருட்கள் வாங்காதீர்கள் ‘ என்று கிறுக்கி வைத்துவிட்டு ஓடிவிடுவார்கள். இதைப்பார்த்து ஏளன சிரிப்புடன்தான் நாங்கள் சென்றுகொண்டிருந்தோம் ஏனென்றால் இதைப்போன்ற கிறுக்கர்களின் ‘கிறுக்கல்கள் ‘ நாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள இந்து சமுதாயத்தினர் எங்கள் மீதுகொண்ட நல்ல எண்ணங்களில் – உறவுகளில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. பாசத்துடனும், நேசத்துடனும் மாமன்-மச்சானாக ஒற்றுமையாக பழகி வந்தோம். ஆனால் தற்போது நிலையென்ன ? இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக பரப்பபட்ட விஷக்கருத்துக்கள் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என பெரும்பாலான மக்கள் இந்திய முஸ்லிம்களை வெறுக்கும் அளவிற்கு மாற்றிவிட்டது. மீண்டும் மீண்டும் சொல்லப்படும் பொய்கள் நாளடைவில் உண்மையென்றாகிவிடும் என்ற எதிபார்ப்பில் சங் பரிவாரத்தினர் இதைப்போல் செய்கிறார்கள். சங்பரிவார ஆட்கள் பேசுவதை, எழுதுவதை படிக்கும் இந்திய முஸ்லிம்கள் கூட நாளடைவில் இந்தியா இந்துக்களுக்கு மட்டும்தானோ என்ற உணர்வு வந்துவிடும்.

‘முஸ்லிம்கள் தேசப்பற்று அற்றவர்கள் – அந்நியர்கள் ‘ என்ற கோஷத்தை ஆரம்பித்து வைத்த ‘வீர் சவர்க்கார் ‘ வழியில் வந்தவர்களால்தான் இவ்வளவு கூச்சலும் கூப்பாடும் போடப்படுகிறது! தேசத்திற்காக ‘வீர் சவர்க்கார் ‘ ஆற்றிய பணியை பட்டியலிட்டுவிட்டு எங்களின் தேசப்பற்றுக்கு சான்றளிக்க இவர்கள் ஒருபோதும் துனிந்ததில்லை! ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்ட ‘அந்த மஹான் ‘ அந்தமான் சிறையில் வைக்கப்பட்டு தண்டிக்கப்பட்டபோது.. வீரன் பகத் சிங், அஷ்ஃபகுல்லா கான் மற்றும் சந்திர சேகர் ஆஸாத்தைப்போல ஆங்கிலேயரின் கொடுமைக்கும் சித்திரவதைக்கும் அடிபணியாமல் கொண்ட கொள்கைக்காக, தேசத்திற்காக உயிரையா துறந்தார் ? இல்லை..இல்லவே இல்லை.

வீர் சவர்க்கார் செய்தது என்ன தெரியுமா ?!. பிரிட்டிஷ் அரசு மன்னிப்பு வழங்கி தன்னை விடுதலை செய்து விட்டால் அதற்கு கைமாறாக ‘சுதந்திரம் ‘ என்ற வார்த்தை இனிமேல் தனது வாயில் வராது என்றும், தேசத்திற்காக இதுவரை தான் கொண்ட கொள்கையை கைகழுவி விடுவதாகவும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடவே மாட்டேன் என்று சரனாகதி சாஸனனம் எழுதிக் கொடுத்த வீரர்தான் அவர்! (அப்படிப்பட்டவருக்கு இந்திய பாராளுமன்றத்தில் படம் வேறு! அதையும் ‘முஸ்லிம் ‘ ஜனாதிபதியை விட்டு திறந்தனர்!) அவரின் வழியில் வந்தவர்கள்தான் எங்களுக்கு தேசப்பற்று அற்றவர்கள் என்று சான்றிதழ்கள் வழங்குகிறார்கள்!.மனுவின் வாரிசுகளான இவர்கள் இந்திய முஸ்லிம்களான எங்களை ‘பாபரின் வாரிசுகள் ‘ என்று அழைக்கிறார்கள்!

முஸ்லிம்கள் அனைவரையும் ஒளரங்கசீப் போல சித்தரிக்கிறார்கள் (முகலாயர் இந்தியாவை ஆண்ட 700 ஆண்டுகளில் இந்திய வரலாறு புத்தகங்கள் ‘மதவெறியன் ‘ என சித்தரித்த ஒளரங்கசீப்பின் ஆட்சியின்போதுதான் அதிக என்ணிக்கையில் இந்துக்கள் நாட்டு நிர்வாகத்திலும் – ரானுவ (மன்சப்தாரி) பொறுப்பிலும் இருந்தனர் என்பது வரலாற்று உண்மை! )

எவ்வளவு நாளைக்குத்தான் நாங்கள் சொந்த நாட்டிலேயே ‘அந்நியனாகவும் ‘ ‘துரோகியாகவும் ‘ கருதப்படும் கொடுமையை-இழி நிலையை தாங்கிக்கொண்டிருப்பது ? இந்திய-பாக்கிஸ்தான் யுத்தம் நடந்தபோது இந்திய ரானுவத்தில் பணிபுரியும் முஸ்லிம் வீரர்கள் ஈடுபடவில்லையா ? காஷ்மீரில் பிரிவினை வாதிகளை எதிர்த்துபோரிட்டு முஸ்லிம் வீரர்கள் மடியவில்லையா ? உலக அளவில் இந்தியாவை அனு ஆயுத வல்லரசாக மாற்றுவதில் இந்திய இஸ்லாமியர்கள் பங்களிக்கவில்லையா ? இந்தியாவின் வளர்சிக்காக இந்துக்களைப்போல் முஸ்லிம்களும் பங்களித்திருக்கிறார்கள் என்பதை ஏன் சங்பரிவார கும்பலை சார்ந்தவர்கள் மறுக்கிறார்கள்-மறைக்கிறார்கள்.

இந்தியன் – RSSன் அளவுகோல்:

இந்திய முஸ்லிம்கள் தங்களின் தேசப்பற்றை எவ்வாறு நிரூபிக்கவேண்டும் என்று சங்பரிவார் எதிர்பார்க்கிறது தெரியுமா ? இந்தியனாக அங்கீகரிக்கப்படவேண்டுமானால் நாங்கள் அனைவரும் இராமனை நாயகனாக ஏற்றுக்கொள்ளவேண்டுமாம்!. எங்கள் பாட்டன் முப்பாட்டன்கள் காலந்தொட்டே இம்மண்னில் ஒரிறைகொள்கையை ஏற்று அரூப இறைவனை வணங்கி வாழ்ந்து வரும் நாங்கள் எங்களின் மத அடிப்படைக்கு முரனான யாரையும் நாயகனாக ஏற்றுக்கொள்ளமாட்டோம்! இறுதி தூதர் நபி (ஸல்) அவர்களைக்கூட இறைவனுக்கு ஒப்பிடாத நாங்களா இராமனை நாயகனாக ஏற்றுக்கொள்வோம்.

சங்பரிவாரின் அடுத்த அளவுகோள் என்ன தெரியுமா ? இந்திய முஸ்லிம்களின் எண்ணங்கள் இந்திய மயமாக்கப்படவேண்டுமாம் – இந்தியமயமாக்கள் என்றால் என்ன ? குறிப்பிட்ட ஒரு சிறுபான்மை சாதியினரை கூனி குறுகி கும்பிட்டு – நாட்டையும் நிர்வாகத்தையும் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு- பரம்பரை பரம்பரையாக அடிமைகளைப்போல் பணிந்து வாழும் பெரும்பான்மை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இந்துக்களைபோல் வாழ்ந்தால்தான் நாங்கள் இந்தியர்களாக அங்கீகரிக்கப்படுவோம் என்று மறைமுகமாக சொல்கிறார்கள்.

இராமனை நாயகனாகவும், நடைமுறை சாதீய ஏற்றத்தாழ்வுகளை அதாவது மனு தர்மத்தை ஏற்றுக்கொண்டால்தான், இந்திய முஸ்லிம்களை சங்பரிவார் ‘இந்தியனாக ‘ அங்கிகரிக்கும் என்றால் அப்படிப்பட்ட அங்கீகாரமே எங்களுக்கு தேவையில்லை.

உங்களைப்போலவே இந்தியாவின் மீது எங்களுக்கும் உரிமை இருக்கிறது. ஒரே வேறுபாடு எண்ணிக்கையில் மட்டும்தான். எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதால் இந்துத்துத்துவ சக்திகளுக்கு முஸ்லிம்கள் அடங்கி இருக்கவேண்டும் என்பது அவசியமல்ல. (எண்னிக்கை அடிப்படையிலான ஆதிக்க கோட்பாடு நடைமுறைப் படுத்தப்பட்டு இருந்திருந்தால் இந்தியாவின் தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மை மக்களின் கை எப்பொழுதோ ஓங்கியிருக்குமே!.)

RSS-ன் மேற்கண்ட இரண்டு கட்டளைகளை முஸ்லிம்களாகிய நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே மாட்டோம். இந்தியாவிலே பரம்பரையாக வாழ்ந்துவரும் நாங்கள் சங்பரிவாரின் அங்கீகாரம் இல்லாமலே இந்தியனாக வாழமுடியும் என்பதை நிரூபித்திருக்கிறோம் – நிரூபிப்போம். பிழைப்பு தேடி நாங்கள் செல்லும் அந்நிய நாடுகளில் (அய்ரோப்பாவிலிருந்து அரபு நாடுகள் வரை) எல்லாம் எங்களை இந்தியனாகத்தான் பதிவு செய்கிறோம்- செய்திருக்கிறோம். அவர்களும் எங்களை இந்தியனாகத்தான் அங்கீகாரம் செய்கிறார்கள்.

பதவிவெறிப்பிடித்த இந்து-முஸ்லிம் அரசியல்வாதிகளின் அதிகாரப்பசியை ஊக்குவித்த பிரிட்டிஷ் நரிகளின் தூண்டுதலால்தான் இந்தியா கூறுபோடப்பட்டது என்பது வரலாற்று உண்மை. இன்று நடப்பதென்ன ? பிரிவினையின்போது இந்தியா மதசார்பற்ற நாடாக விளங்கும் என்ற இந்திய தலைவர்களின் உறுதி மொழியயையும், அரசியலமைப்பு உத்திரவாதத்தையும் மீறி, முடிந்துபோன பிரிவினைக்கு இப்பொழுது இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள்தான் காரணம் என்று குற்றம் சாட்டி இந்து-முஸ்லிம் கலவரங்களை உருவாக்கி கோடிக்கணக்கான முஸ்லிம்களை நாட்டை விட்டு வெளியேற்றிவிடலாம் அல்லது அழித்துவிடலாம் என்று திட்டம் தீட்டி ஒரு கும்பல் செயல்பட்டு வருவது இந்தியாவுக்கு நல்லதல்ல.

மதக்கலவரங்கள்:

நாடு சுதந்திரம் அடைந்திருந்ததிலிருந்து மீரட், மாலியான, டெல்லி, பகல்பூர், பம்பாய், கோயம்புத்தூர் மற்றும் குஜராத் என்று முஸ்லிம் படுகொலைகள் நடைபெறுவது தொடர்ந்துக் கொண்டேயிருக்கிறது. இதிலே மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையும், ரானுவமும் ஒருதலை பட்சமாக நடந்துக்கொண்டது ஒவ்வொரு கலவரத்தின்போதும் நடுநிலை பத்திரிக்கைகளால் சுட்டிக்காட்டப்பட்டது. கண்துடைப்புக்காக மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் விசாரனை கமிஷன் அமைப்பதோடு சரி. முஸ்லிம்களுக்கு எதிரான கொலை-கொள்ளை-கலவரங்களில் ஈடுபட்டதற்காக இதுவரை மத்தியில் எந்தக்கட்சி ஆட்சியில் இருந்தபோதும் இந்தியாவில் யாரும் தண்டிக்கப்பட்டதில்லை இது உண்மை. ஆனால் அதைவிடக்கொடுமை இப்பொழுதெல்லாம் குற்றம்சாட்டப்பட்டவர்கள் துனை பிரதமராகவும், முதல் மந்திரிகளாகவும் பதவி உயர்வு பெற்றுவிடுகிறார்கள். அதிகாரத்திலிருக்கும் இவர்களால் முஸ்லிம்களுக்கெதிரான கலவரங்கள் நியாயப்படுத்தப்படுகின்றன. இதுவரை நடைபெற்ற கலவரங்களில்

பம்பாய் கலவரம் பற்றிய SRI KRISHNA REPORT-ஐ எடுத்து ‘மாநில அரசாங்கம் ‘ தனது ‘எதையோ ‘ துடைத்துப்போட்டு விட்டது. குஜராத் கலவரத்தில் முஸ்லிம் சாட்சிகள் மிரட்டப்பட்டு பெரும்பலான கலவரக்காரர்கள் விடுதலைசெய்யப்பட்டனர். அதனால் தண்டிக்கப்படாத குற்றவாளிகள் ‘ சுதந்திரபோராட்ட தியாகிகளை ‘ போல் வலம் வந்து பாதிக்கப்பட்டவனை பார்த்து கெக்கலிக்கிறார்கள். பாதிக்கப்பட்ட இந்திய முஸ்லிம்கள் இந்த சூழ்நிலையில் எவ்வாறு நடந்துக்கொள்ளவேண்டும் என்று நடுநிலை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் ? பெற்றோர்கள் கொல்லப்படுவதை, சகோதரிகள் கற்பழிக்கப்படுவதை, இளஞ்சிறார்கள் தீவைத்து கொழுத்தப்படுவதை நேரில் கண்ட அனைவரின் உணர்வுகளும் ஒரே மாதிரியாகவா இருக்கும். ? நீதி-நியாயம் கிடைக்காததால் அரசாங்கம், காவல் மற்றும் நீதிதுறைகளின் மீது நம்பிக்கை இழந்து, உணர்ச்சிவயப்பட்டு குற்றவாளிகளை பழிவாங்க, தூண்டியவர்களுக்கு பாடம் கற்பிக்க, இந்திய முஸ்லிம் இளைஞர்கள்களில் சிலர் துரதிருஷ்டவசமாக ‘மனித வெடி குண்டுகளாக ‘ மாறிவிடுகிறார்கள். இந்த அபாயகரமான சூழ்நிலை உருவாக காரணமானவர்கள் யார் ?

முஸ்லிம்களுக்கெதிரான கலவரங்களை கைக்கட்டியும்-கைக்கொட்டியும் வேடிக்கைப்பார்க்கும் காவல்துறை இந்திய முஸ்லிம்கள் பதிலடி கொடுக்கும்போது மட்டும் உடனடியாக விழித்துக்கொள்வது ஏன் ?

குற்றவாளிகளை தேடுகிறோம் என்று நள்ளிரவு நேரங்களில் இந்திய முஸ்லிம்களின் வீட்டுக்கதவை உடைத்துக்கொண்டு தேடுவதும், படுக்கை அறையிலிருந்து கக்கூஸ் வரை மூக்கை நுழைத்து பார்ப்பதும், இஸ்லாமிய வழிபாட்டிடங்கள், கல்விக்கூடங்கள் என்று அனைத்து இடங்களிலும் பூதக்கண்ணாடி வைத்துக்கொண்டு தேடி இளஞ்சிறுவர்களை ‘ஒசாமா பின் லேடனாக ‘ முத்திரைகுத்தி தடாவில் கைது செய்வது, பெண்கள் மற்றும் முதியவர்களை மிரட்டுவது, முஸ்லிம்கள் வீட்டில் காய்-கறி நறுக்க வைத்திருக்கும் கத்திகள், ஷேவிங் செய்ய வைத்திருக்கும் பிளேடுகள் போன்றவைகளை கைப்பற்றி ‘பேரழிவு ஆயுதங்களாக ‘ பட்டியலிட்டு மக்கள் தொடர்பு சாதனங்களில் காட்டுவதும் தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.

முஸ்லிம்களுக்கெதிரான கொடுமைகளை எதிர்க்கும் உங்களைப்போன்ற நடுநிலைவாதிகளின் குரல்கள் சமீப காலங்களில் சங்பரிவாரால் நசுக்கப்பட்டு வருகின்றது. நியாயம் கேட்கும் இந்து சகோதரர்களை ‘போலி சமயசார்பின்மையை பின்பற்றுபவர்கள் ‘ என்றும் ‘இந்து மத விரோதி ‘ என்று முத்திரை குத்தப்பட்டுவிட்டனர். அவர்களின் மீது கட்டுப்பாடற்ற வன்முறையை கட்டவிழ்த்து விட்டதால்- தற்போது முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரலெழுப்பும் இந்து நடுநிலைமைவாதிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

இந்தியாவில் எங்களின் இருப்பிற்கும் போடப்படும் தடைகளும், வசிப்பிற்கும் இடப்படும் சவால்களும் வரம்புமீறிப் போய்க்கொண்டே இருக்கிறது – பாதுகாப்பளிக்கவேண்டிய அரசாங்கம் பாராமுகமாக இருக்கிறது. திரித்து எழுதப்பட்ட வரலாறு இந்திய மக்களின் மீது திணிக்கப்படுகிறது. தேர்தல் முடிவுகள் ஒருக்கால் சங்பரிவரத்துக்கு ஆதரவாக இருந்தால் (இல்லாவிட்டாலும்கூட) இனிமேல் எங்களின் எத்தனை வழிபாட்டிடடங்கள் இடிக்கப்படுமோ ? வசிக்குமிடங்கள் அழிக்கப்படுமோ ? என்ற அச்ச உணர்வு அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. அதனால் இந்திய முஸ்லிம்கள் தாங்களே தங்களையும் – உடைமைகளயும் தற்காத்துக் கொள்ளவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறார்கள்.

நாங்கள் இந்தியர்கள்தான், எங்களுக்கும் இந்தியாவின் மீது உரிமை உள்ளது என்பதை சங்பரிவார் அங்கீகரிக்கதக்க வகையில் நிரூபிக்க இந்திய முஸ்லிம்களால் இயலாது (அவசியமும் இல்லை!). நிர்ப்பந்தம் தொடர்ந்து கொண்டிருந்தால் கோழையாக ஓடி ஒளிந்துக்கொள்ளாமல் – அவர்களை எதிர்த்து போராடி அவசியமானால் போரிட்டு நாங்கள் ‘முகலாயர்கள் ‘ அல்ல இந்திய குடிமகன்கள்தான் என்பதை நிரூபிப்போம்.

அன்புடன்

பிறைநதிபுரத்தான்

say_tn@hotmail.com

Series Navigation

பிறைநதிபுரத்தான்

பிறைநதிபுரத்தான்