கடிதம் பிப்ரவரி 11, 2005

This entry is part [part not set] of 46 in the series 20050311_Issue

விஸ்வாமித்ரா


பல மாதங்களுக்குப் பின் சமீபத்தில்தான் ஒரு சைபர் கேஃபுக்குச் சென்று திண்ணையை மீண்டும் படிக்க முடிந்தது. வரதன் என்பவர் திருமாவளவன் மற்றும் இராமதாசின் மொழி வெறி அரசியல் குறித்து எழுதிய கட்டுரைகள் அட்சர லட்சம் பெறும், துணிவான கருத்துக்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் வரதன் அவர்களே.

மரத்தை வெட்டியவர்களும், படப்பெட்டிக்களைக் கடத்திச் சென்று மிரட்டல் செய்து கோஷ்டியினரும் இன்று தமிழின் பெயரைச் சொல்லிப் பிழைப்பு நடத்த முடியுமா என்று முயற்சி செய்கிறார்கள். ஆனால் இவர்களின் இலக்கு ஆங்கிலத் தலைப்பு வைக்கும் படங்கள் அல்ல என்பது மட்டும் உறுதி. தமிழின் பெயரால் தமிழர்களின் தலையில் அண்ணாத்துரை கம்பெனி அன்று மிளகாய் அரைத்தது, ராமதாஸ் திருமாவளவன் கும்பல் இன்று அதிலிருந்து ஆதாயம் ஏதும் பெறுமா என்று மீண்டும் முயற்சிக்கிறது. சமீபத்தில் 7 G ரெயின்போ காலனி என்றொரு படம் பார்த்தேன். அதில் பொறுக்கிகளாக வரும் ஒரு கும்பல் தியேட்டரில், ரவுடித்தனம் செய்து கொண்டு இருக்கும். தமிழ் என்று கூடச் சரியாக உச்சரிக்கத் தெரியாத அந்தக் கும்பல், ‘ஏஏய்ய்ய் தமில்ல பேசுங்கடி ‘ என்று ஆங்கிலத்தில் அவர்களை கண்டிக்க முயலும் பெண்ணிடம் கூறுவார்கள். எனக்கு ஏனோ தமிழின் பெயரால் அரசியல் செய்யும் தமிழ் நாட்டின் அரசியல் கும்பல்தான் சட்டென்று நினைவுக்கு வந்தது. இராமதாசின் சந்தர்ப்பவாத அரசியல் நாடே அறிந்தது. தமிழ் மொழி அவருக்கு இன்னொரு வியாபார விற்பனைப் பொருள். திருமாவளவன் தன்னை நம்பி இருக்கும் மக்களுக்குச் செய்ய வேண்டிய ஆக்க பூர்வமான கடமைகள் ஏராளம் உள்ளது. இவர் இராமதாசுடன் சேர்ந்து தமிழ் அரசியல் பண்ணுவது அரசியலுக்கு மட்டும்தானா ? திருமாவை கண்மூடித்தனமாகப் பின்பற்றுபவர்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இராமதாசின் மகன் அன்புக்கு மணி பாராளுமன்றத்தில் பேசுவது அரைகுறை ஆங்கிலத்தில், இவர்கள் நடத்தும் பசுமைத் தாயகம், திண்ணை எனும் தமிழ் இணைய இதழுக்கு ஆங்கிலத்தில் அறிக்கை அனுப்புகின்றது. திருமாவளவன் தமிழ் தெரிந்த முதல்வரிடம் பயபக்தியுடன் கொடுக்கும் புத்தகமோ அவர் எழுதிய கட்டுரைகளின் ஆங்கில பதிப்பு. ஏன் தமிழில் இவர் எழுதிய உலகப் புகழ் கட்டுரைகளை ஜெயலலிதாவிடம் கொடுத்தால் ஆகாதா ? ஜெவுக்குத் தமிழில் படிக்கத் தெரியாதா ? இவர்கள் கும்பலில் உள்ள மற்றொரு மருத்துவரின் மருத்துவமனையின் பெயரே ‘மீனாட்சி மிஷன் மருத்துவமன ‘. மிஷன் என்பது தூய தமிழோ ? இவர்கள் கூட்டணித்தலைவரும் செம் மொழிச் செல்வரின் குடும்பம் நடத்தும் தொலைக் காட்சிக்கும் தமிழுக்கும் காத தூரம், அதன் பெயர் உட்பட. இதையெல்லாம் கண்டித்து விட்டு இவர்கள் சினிமாக்காரர்களிடம் செல்லட்டும், தமிழ் அதற்குள் சினிமாக் காரர்களால் மட்டுமே அழிந்து விடாது. செம்மொழித் தமிழ் இது போன்ற வியாபாரிகளால் எத்துனைக் காலத்துக்கு பயன்படுத்தப் படப்போகிறதோ ? இந்த பித்தலாட்டக்காரர்களின் கையில் மாட்டிக் கொண்டு சீரழிந்து கொண்டிருக்கிறது தமிழ். இவர்களின் அரக்கப் பிடியில் இருந்து அதை யாரேனும் காக்கவில்லையெனில், மெல்ல அல்ல சீக்கிரமே தமிழ் இனிச் சாகும்.

வரதன் அவர்களின் கட்டுரையை எதிர்த்து பலர் கடிதம் எழுதியுள்ளனர் அதில் இருவருக்கு அடிப்படைத் தமிழ் அறிவு கூட இல்லை. ‘குரல் ‘ என்பதை ஒருவர் ‘குறள் ‘ ‘குறள் ‘ என்று லகர ளகர வித்தியாசம் கூடத் தெரியாமல் தமிழைப் பாதுகாக்க கிளம்பி விட்டார்கள். இவர்கள் அழிக்காத தமிழையா கமலஹாசன் அழித்து விடப் போகிறார். மேலும் வரதனுக்கு ஒருவர் பகிரங்கமாக வன்முறை நோக்கத்துடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். திண்ணை ஆசிரியர் குழு, அது போன்ற மிரட்டல் கடிதங்களை எப்படி அனுமதிக்கின்றனர் என்று தெரியவில்லை ?

விஸ்வாமித்ரா

—-

viswamitra12347@rediffmail.com

Series Navigation

விஸ்வாமித்திரா

விஸ்வாமித்திரா