கடிதங்கள் – மே 13, 2004

This entry is part [part not set] of 52 in the series 20040513_Issue

பி கே சிவகுமார் –


திண்ணை ஆசிரியருக்கு,

1. சிவவாக்கியர் திருவாக்கியங்கள் கட்டுரையில் ஜெயமோகன் புத்தகத்தை மேற்கோள் காட்டியிருந்தது ஏன் என்று திரு.தேவேந்திர பூபதி கேட்டிருந்தார். கீதை மற்றும் கபிலரைப் பற்றிய மேற்கோள்கள் இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டதால், அதைக் குறிப்பிட்டிருந்தேன். இதை விவரமாக மூலக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்க வேண்டும். விட்டுவிட்டது இக்கேள்வியை எழுப்பியிருக்கிறது.

2. சிவவாக்கியரின் பாடல்கள் அடங்கிய பூம்புகார் பிரசுரம் வெளியிட்ட ‘சித்தர் பாடல்கள் ‘ புத்தகத்திலிருந்தே சிவவாக்கியரைப் படித்தேன். சித்தர்களின் காலம் பதினான்காம் நூற்றாண்டிலிருந்து தொடங்கப்பட்டதாகவே இப்புத்தகம் சொல்கிறது. அதையே என் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். திரு.தேவேந்திர பூபதி சித்தர்களின் காலம் வேறு என்று அறிந்தால், அந்தக் காலத்தைக் குறிப்பிட்டு எழுதுவது திண்ணை வாசகர்க்கு உதவக் கூடும்.

3. வாழ்க்கை எவரிடமிருந்து எதைக் கற்றுத் தரும் என்று சொல்ல முடியாது. எனவே, சுஜாதா மூலம் சித்தர்களை அறிய நேர்ந்ததில் சித்தர்கள் வருந்தக் கூடிய அளவுக்கு ஒன்றும் இல்லை என்றே நம்புகிறேன். சுஜாதா எழுத்துகளிலிருந்து நான் கற்றவை நிறைய இருக்கின்றன என்று சொல்லிக் கொள்வதில் எனக்குத் தயக்கம் இல்லை.

4. சனாதனம் என்கிற வார்த்தை பழமைவாதம் (Conservative) என்கிற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சடங்குகளின் தொகுப்பாகவும் பஜனைகளின் கூச்சலாகவும் என்கிற மூடநம்பிக்கைகளின் தொகுப்பைச் சொல்ல அந்த வார்த்தைப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைக் குறிப்பிட்ட பத்தியைப் படிக்கும்போது அறியலாம்.

5. திரு.தேவேந்திர பூபதி கருத்துகளுக்கு நன்றி.

– பி.கே. சிவகுமார்

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்