கடிதங்கள் – டிசம்பர் 25 -2003

This entry is part [part not set] of 40 in the series 20031225_Issue

பி எஸ் நரேந்திரன்- கார்த்திக் – நாக இளங்கோவன் – K.ரவி ஸ்ரீநிவாஸ் – சங்கரபாண்டி -விஸ்வாமித்திரா – நக்கீரன்


மதிப்பிற்குரிய திரு. மயிலாடுதுறை சிவா அவர்களுக்கு,

வணக்கம்.

திண்ணையில் தங்களின் கடிதம் கண்டேன். திரு. மு.கருணாநிதி அவர்களைப் பற்றி நான் எழுதிய சில வார்த்தைகள் தங்களின் மனதைப் புண்படுத்தியதாக அறிந்தேன். யார் மனதையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல. என் இயல்புக்கு மாறாக எழுதிய வார்த்தைகள் அவை. மிகவும் வருந்துகிறேன். சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி. இம்மாதிரியான சொற் பிரயோகங்களை எதிர்காலத்தில் என்னால் இயன்ற அளவு தவிர்க்க முயற்சி செய்வேன் (வானரம், கபோதி போன்ற நாகரீக வார்த்தைகளும் இதில் அடக்கம்).

திண்ணையின் ஆசிரியர் குழுவினரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியமைக்கு அவர்களிடமும் மன்னிப்புக் கோருகிறேன். என் கட்டுரையைப் பிரசுரித்ததைத் தவிர வேறொரு சம்பந்தமும் அவர்களுக்கு இதில் இல்லை.

இனி மற்றவை,

எனது தகப்பனார் ஒரு தீவிர தி.மு.க. அனுதாபி. அவரின் இள வயதில், கிராமத்தில் பல எதிர்ப்புகளுக்கிடையே தி.மு.கவைத் துவக்கிக் கொடியேற்றியவர். என்னையும் ஒரு தி.மு.க அனுதாபியாகவே வளர்த்தார். எனக்கு ஏழு அல்லது எட்டு வயதிருக்கையில், சென்னை சீரணி அரங்கில் நடந்த தி.மு.க கூட்டத்திற்கு என் தகப்பனாரின் கைகளைப் பிடித்துக் கொண்டு போனதும், திரு. மு.கருணாநிதி அவர்களின் பின் வழுக்கையும் (தலையில் கொஞ்சம் முடி இருந்தது அப்போது) எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.

கல்லூரி நாட்களில், உங்களைப் போலவே திரு. மு.கருணாநிதி அவர்களின் அடுக்கு மொழி தமிழ்ப் பேச்சால் பெரிதும் ஈர்க்கப்பட்டவன். இரண்டாவது இந்தி எதிர்ப்பு போராட்டம் எண்பதுகளில் நடந்த போது, அதில் ஈடுபட்டு இந்தி எழுத்துக்களை தார் பூசி அழித்தும் இருக்கிறேன். அவரது ஆதரவில் நடந்த இலங்கைத் தமிழர் ஆதரவு போராட்டத்தில் கலந்து கொண்டு போலிஸ்காரர்களிடம் அடியும் வாங்கி இருக்கிறேன். ஆயிரம் விளக்கு மசூதிக்கருகில் கண்மூடித்தனமாக சுழலும் லட்டிகளில் இருந்து தப்ப, சுரங்க நடைபாதையில் புகுந்த மாணவர்களை, நடைபாதையின் இரு பக்கக் கதவுகளையும் மூடி வைத்து அடித்து நொறுக்கினார்கள். உங்களுக்குத் தெரிந்திருக்குமோ என்னவோ ?

இதை உங்களுக்கு விளக்கக் காரணம், எனது பின்புலத்தைப் பற்றிக் கூறுவதற்காகவே. காலப்போக்கில், திரு. மு.க. மற்றும் அவரது தி.மு.க பற்றிய எனது நம்பிக்கை சிறிது சிறிதாக தகர்ந்து போனது. அதனை விளக்கி ஒரு புத்தகமே எழுதலாம். ஒன்று மட்டும் கூறுவேன். எனது குரல் ஒரு ஏமாற்றப்பட்ட தமிழ் இளைஞனின் குரலே.

Nobody is perfect in this world. ஒத்துக் கொள்கிறேன். அதற்காக விமரிசனமே கூடாது என்றால் எப்படி ? இன்றைய தமிழகத்தில் விமரிசனம் செய்யத் தகுதி வாய்ந்த ஒரே தலைவர் திரு. மு. கருணாநிதி அவர்கள் மட்டும்தான். கொஞ்சமேனும் ஜனநாயக எண்ணம் உடையவர் என்பதால்தான் அது. எல்லா மத, இன, சாதி, மொழி மக்களையும் ஒன்றுபோல நடத்தவில்லை என்ற ஆதங்கம் எனக்கு அவர் மீது உண்டு.

நான் தமிழ்நாட்டுக்காரன் என்ற பெருமித உணர்ச்சி இருப்பதால்தான் ‘திண்ணை ‘ போன்ற ஊடகங்களில் எனது எண்ணங்களை எழுதி வருகிறேன். மற்றவர்களைப் போல ‘எனக்கென்ன வந்தது ? ‘ என்று என்னாலும் இருக்க முடியும். அதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது ?

நட்புடன்,

நரேந்திரன்.

பி.கு. : எனது ‘மனித நல்லிணக்கம் ‘ கட்டுரையில் ‘பச்சை ‘ என்ற வார்த்தை ஒன்று வந்திருக்கிறது. சவூதி அரேபியா போன்ற நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், பாகிஸ்தானியர்களை ‘பச்சைகள் ‘ என்று அழைப்பது வழக்கம். கல்ஃப் வாழ் தமிழர்களிடம் இதை உறுதிப் படுத்திக் கொள்ள முடியும். இன்னொரு வார்த்தையுடன் சேர்ந்து வருகையில் அதிர்ச்சியூட்டும் வகையில், மிகத் தவறான ஒரு அர்த்தத்தைத் தரும்படியாக இருப்பது எனக்கு இப்போதுதான் புரிந்தது. தவறான அர்த்தத்தில் அந்த வார்த்தை எழுதப்படவில்லை என்பதே எனது விளக்கம்.

narenthiranps@yahoo.com

(வார்த்தை நீக்கப் பட்டுவிட்டது – திண்ணை குழு)


திரு ஸ்ரீ அவர்களது நீயே உனக்கு, சாட்சியாளன் என்னும் கட்டுரையை படித்தேன்.

எனக்கு சில கேள்விகள் எழுந்தன.

‘அப்படி என்றால் 100% உணர்வு யாருணர்வது ? இதுதான் பிரபஞ்ச தத்துவம்!

இது இரு முனைகளால் ஆனது! ஆனால் அந்த இருமுனைகளும் ஒரே முனை ஆகும்! ‘ ‘

இரு முனை எப்படி, எங்கே, எவ்வாறு ஒரு முனை ஆகும் ? ?

அந்த ஒரு முனை எனபது எது ? உணரக்கூடியதா ? ?

‘ ‘இப்போது உனக்கு சிந்தனை அற்ற, காலமற்ற, உணவற்ற நிலையை அடைகிறாயோ அப்போது நீ உள்முக பயணத்திற்கு ஆரம்பமாகிவிட்டாய்! நீ ஆரம்பமாவதை உணர முடியாது. ‘ ‘

இவ்வாறு ஒரு மனிதன் இருக்க முடியுமா என்றால் முடியாது என்றே தோன்றுகிறது.

காலமற்ற , உணர்வற்ற நிலை எப்படி இருக்கும் ? ? ? இது ஜடத்துக்கோ அல்லது சடலத்துக்கோ ம்ட்டுமேசாத்தியமாகும் நிலை.

உணர்வற்ற நிலைக்கு இவர் சென்றிருந்தால், அதை எப்படி வார்த்தைகளில் விளக்க முற்படுகிறார் ? ?

உணர்வற்ற நிலையில் நினைவுதான் வேலை செய்யாதே, அப்போது எப்படி அதை மொழியில் கொண்டுவர முடியும் ? ?

சரி அப்படியே அந்த நிலைக்கு சென்றாலும், அதனால் பயன் என்ன , அதுதான் உணர்வற்ற நிலை ஆயிற்றே ? ?

‘கருத்தா என்பது உன்னை இயக்கும் சக்தி! ‘

உன்னை இயக்குவது, இன்னொரு சக்தி எனின், உன் முழுமையான ரசனை எப்படி

உன்னால் மட்டும் சாத்தியம் ஆகும் ? ?இந்த சக்தி உனக்குள்ளேயே உள்ளது என்றால், நீ எவ்வாறு அதிலிருந்து வேறுபடுகிறாய் ?

‘ ‘நேர் சக்தி-எதிர்சக்தி – இரண்டும் ஒரே சக்தி! ‘ ‘

இரண்டும் ஒரே சக்தி என்றால், எதிர் சக்தி என்று எதை குறிப்பிடுகிறார் ? ?

============================================================

இனி சில சொந்தமான கேள்விகள்:-

‘கருவி-கருத்தா-கருபொருள்-காீுயம்-காரணம ‘

இதில் காலம் எங்கு வேலை செய்கிறது ? ?

கருத்தா என்பது நீயா அல்லது இன்னொரு பொருளா ? ?(second objective)

னீ கருவியாக மாறிவிட்ட பிறகு, உன்னை இயக்குவது எது ? ? அல்லது

நீயே செயலாகிவிட்ட பிறகு, மிச்சமிருப்பது எது ? ?

இது போன்ற கட்டுரைகளை படித்தால் குழப்பங்கள் தான் மிஞ்சுகிறது. இது போன்று

நிறைய படித்து குழம்பியவன் என்கிற முறையில்,கோபம்தான் வருகிறது.

மனிதன் மனிதானாக இருந்தாலே போதும்.

கார்த்திக்

karthikramas@yahoo.com


கலைஞரும் கொழுக்கட்டையும்: ஒரு ஆய்வு மற்றும் எதிர்வினை

——————————————————————

திரு.வரதன் அவர்களின் கொழுக்கட்டைக் குமுறலையும், அவரின் 15 கருத்துப் பட்டியலையும் பார்த்தேன். அவற்றைப் பற்றிய என் கருத்துக்களைக் கூறுவது மட்டுமே என் நோக்கம். ‘ ‘ என்ற அடைப்புகளுக்குள் இருப்பவை, திரு.வரதன் அவர்களின் ‘ஒரு இந்துவின் பதில் ‘ என்ற தலைப்பில் திருமாவளவனுக்கு எழுதிய மடலின் பகுதிகள். அதற்குக் கீழே என் கருத்துக்கள்.

1. ‘செல்வி.ெ ?யலலிதாவின், மதமாற்றச் சட்டம் அவசியமற்றது. தேவையில்லாதது. இந்தியாவிலோ, மதம் மாறிய பின் நாடார், கிறி ?துவ நாடார் ஆனார். பிள்ளை கிறி ?துவப் பிள்ளை ஆனார். ‘

இந்து மதத்தின் கேடே இதுதான். மதத்தை விட்டே மாறிப் போனாலும் சாதிப் பிரிவினைகள் கூடவே போகிறது என்பது எவ்வளவு பெரிய தாக்கம் என்றுதான் கருதவேண்டும். அதை விட்டு அங்கு போயும் பிரிவுகள் இருக்கின்றன என்றால் அது இசுலாத்திற்கோ அல்லது கிறித்துவத்துக்கோ இழுக்கல்ல. இழுக்கு மீண்டும் இந்து மதத்திற்குத்தான். இந்த மண்ணில் பிறக்கும் மனிதர் யாவரும் சாதிக் குட்டையில் குளித்துவிடுகிறார்கள் என்பதால்தான் இந்து மதத்தின் இந்தப் பகுதிகள் இன்றும் இழிவான ஒன்றாய்க் கருதப் படுகிறது. அங்போயும் அழுக்கு போகவில்லை என்பது வேதனையின் வேதனை.

2. ‘திரு.சங்கராச்சாரியாரின் பங்களிப்பு காலத்தின் கட்டாயம். அவரின் செயல்கள் அத்தனையிலும் உடன்பாடு இல்லாத பலரில் நானும் ஒருவன். ஆனால் கோடாரிக்காம்புகள், ரம் ?ான் நோன்பு கஞ்சிக்கு எல்லா வே ?மும் போட்டு ஓட்டுக்காக மண்டியிடும் போட்டு, அவர்கள் கொழுக்கட்டை திண்பதை மறுக்கும் போது, திரு.சங்கராச்சாரியார் முக்கியத்துவம் பெற்றார். ‘

இரம்சானுக்குக் கஞ்சி குடிப்பவர்கள், கொழுக்கட்டையையும் தின்று விட்டால், இந்துத்துவக் காரர்கள், உடனே கலைஞரை கோபுரத்தில் தூக்கி வைத்து விடவாப் போகிறார்கள் ? கொழுக்கட்டைத் திங்க வேண்டும் என்று கொடிபிடித்து குறைபேசுபவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இசுலாத்தைத் தழுவுபவர்கள் சிறுபான்மையினர். இந்து மதத்தினர் என்று சொல்லப்படுபவர்கள்தான் பெரும்பான்மையினர். இரம்சான் விழாவின்போது சிறுபான்மையினரோடு சேர்ந்து அவர்களுடன் அரவனைப்பைக் காட்டுவதற்காகத்தான் அனைத்து பொறுப்புள்ள அரசியல்வாதிகளும் செய்கிறார்கள். செயலலிதா கூட கஞ்சி குடிக்கப் போகிறார். அதைக் கொச்சைப்படுத்துவது ஒரே நேரத்தில் இசுலாமியர்களையும், கலைஞரையும் இழித்துரைப்பதாகும். சரி – என் எதிர்வினாக்களுக்கு விடை சொல்லுங்கள்: அ) கலைஞர் கொழுக்கட்டை சாப்பிடவில்லை – அதனால் அவர் இந்துக்களுக்கு மாறானவர் என்கிறீர்கள். வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும், சங்கராச்சாரியார் என்றாவது இரம்சான் கஞ்சி குடித்திருக்கிறாரா ? குடிப்பாரா ? இந்து-இசுலாமியர் உறவுக்காக சூலத்தைத் தூக்கிக் கொண்டு அலையும் சங்கராச்சாரியாரை உங்களால் இரம்சான் கஞ்சியைக் குடிக்கச் சொல்ல முடியுமா ? ஆ) கலைஞர் கொழுக்கட்டை சாப்பிடவில்லை – சரி; செயலலிதா சாப்பிட்டிருக்கிறாரா ? செயலலிதா பிள்ளையார் சதுர்த்தி விழாக்களில் கொழுக்கட்டையை சாப்பிட்டிருக்கிறாரா ? அல்லது அவருக்கு கொழுக்கட்டை விருந்து வைத்திருக்கிறாரா இராமகோபாலன் ? நீங்கள் சொல்லும் அதே தொணிதான் திராவிட தமிழ் உணர்வாளர்களுக்கு. அதாவது, சங்கராச்சாரியார் எதற்காக முக்கியத்துவம் பெறுகிறாரோ, அதேபோல கலைஞர் பிடிவாதமாக கொழுக்கட்டை சாப்பிட மறுப்பதால்தான் முக்கியத்துவம் பெறுகிறார். கொழுக்கட்டையை இன்னும் சற்று ஆய்வோம்; என் வினாக்களோடு! இரம்சான் கஞ்சி என்பது, இசுலாமியர்களின் ஒரே அடையாள உணவு. இ) இந்துக்களுக்கு கொழுக்கட்டைதான் அடையாள உணவா ? அப்போ, சாமிக்கு நெய்வேத்தியம் செய்யப்படும் பொங்கல், சமயத்தில் தரப்படும் சுண்டல், அனுமாருக்கு சார்த்தும் வடை, திருப்பதி இலட்டு, அவல் பொரி கடலை, போன்றவற்றை கொழுக்கட்டை சாப்பிட்ட பிறகு கலைஞருக்கு ஊட்டிவிட வருவார்களா ? ஒருவேளை இவற்றைக் கலைஞர் சாப்பிடாவிட்டால் என்ன சொல்லப்போகிறீர்கள்! கருணாநிதி கொழுக்கட்டை சாப்பிட்டாலும், ‘அனுமார் வடையை சாப்பிடலை ‘ அதனால் அவர் ஒரு கோடரிக் காம்பு என்று சொல்லப் போகிறீர்கள்; அவ்வளவுதான். ஈ) இரம்சானின் கஞ்சி என்பது தொன்றுதொட்டு வரும் அடையாள உணவு. கொழுக்கட்டை என்ற பலகாரமும் தமிழர்களின் பிடித்தத்திற்குரிய உணவு. ஆனால், கடந்த பத்தாண்டுகளாக அந்த அருமையான சுவையான பண்டத்தை வைத்து ‘பலகார-அரசியல் ‘ நடத்துவது இந்துத்துவத்தின் நவீன இழிகுணம் என்று சொல்வதைத் தவிர வேறென்ன இருக்கிறது கொழுக்கட்டையில் ? பிள்ளையாரையே 10 வருடமாக தமிழகத் தெருக்களிலில் வலம் வரவிட்டு, சுற்றம் சூழ கொழுக்கட்டை தின்று கொண்டிருக்கிறார்கள். (இது சரியா, தவறா என்பது வேறு விடயம்). உ) கலைஞர் கொழுக்கட்டை தின்னவில்லை என்பவர்கள், எம்.சி.யார் சாப்பிட்டாரா, பக்தவத்சலம் சாப்பிட்டாரா ? காமராசர் சாப்பிட்டாரா ? இராசாசி சாப்பிட்டாரா ? அல்லது அதற்கு முன்னர் இருந்த வெள்ளைக் கார துரைகள் சாப்பிட்டனரா ? இவர்களையெல்லாம் கேள்வி கேட்டு, சாப்பிடாததால் கோடரிக்காம்புகள் என்று சொல்லிவிடுவாரா திரு.வரதன் ? ஒன்றும் வேண்டாமைய்யா, மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் திரு.சோ.இராமசாமிக்கும், முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனுக்கும் இராம கோபாலன் கொழுக்கட்டை ஊட்டி விட்டிருக்கிறாரா, பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தின் போது ? இதெல்லாம் யோசிக்காமல், கலைஞரை மட்டும் கொழுக்கட்டை திங்கலை, கொழுக்கட்டை திங்கலை என்பது விதண்டாவாதமும், உள்நோக்கமும் கொண்டவை. ஊ) கொழுக்கட்டை என்பது கடவுளுக்கு நெய்வேத்தியம் செய்யப்பட்ட பலகாரம். இசுலாமியர்கள், கஞ்சி குடித்து நோன்பு முடிக்கும் விழாவை புனிதமான விழாவாக அமைதியாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள். வரிசையாக அமர்ந்து ஒரு நாகரிக முறைப்படி உண்ணுகிறார்கள். அதற்கு இந்துவையும் அழைக்கிறார்கள்; கிறித்துவையும் அழைக்கிறார்கள். ஆனால், இந்துக்கள் கோயில்களிலே, விழாக்களிலே, கடவுளுக்கு அருச்சனை செய்து, பிரசாதங்களை, பொங்கலோ, சுண்டலையோ, அள்ளி அள்ளி கொடுக்கும் கும்பல் கும்பல்களாக கொடுக்கும் முறைதான் உளது. திருப்பதி போன்ற கோயில்களில் வரிசையில் வர வைத்துக் கொடுப்பார்கள். பிள்ளையார் சதுர்த்தி முடிந்ததும் அந்த விழாவில், கொழுக்கட்டைப் பந்தி ஏதேனும் ஒழுங்காக வைக்கப் படுகிறதா ? அவ்விழாவிற்கு இசுலாமிய, கிறித்துவரை அழைக்கும் பெருந்தன்மையும், சமதர்ம எண்ணமும், இந்துக்களுக்கும், முக்கியமாக இராம கோபாலன் போன்றோருக்கு இருக்கிறதா ? நாங்கள் பெரும்பான்மையினர்: எங்களை அனுசரித்துப் போகவேண்டும் என்ற ஆணவ எண்ணத்தையே இந்துக்களின் தலைவர்கள் காட்டிக் கொண்டு, இது வரை மரபாக இல்லாத ஒரு விழாவின் போது, மரபில்லா முறைகளில், கொழுக்கட்டை திங்கலை, கொழுக்கட்டை திங்கலை என்று சொல்வது நாணத்தக்கது.

3. ‘வெண்மணி தியாக சீலர்கள் நினைவிடத்தில் ?ாதிய அடையாளம் இன்றி கம்யூனி ?டுகள் பணிசெய்த போது, நீங்கள் அஞ்சலிக்கு அவ்விடம் சென்ற போது உங்களை அனுமதிக்க அவர்கள் மறுத்தனர். அதன் காரணம், ?ாதிய ரீதியாக அணுகினால், தலித்துகள் தனித்தீவாக ஆகி விடுவார்கள் எனும் நி ? அக்கறையினால். ‘

கீழவெண்மணித் துயரம் நடந்த போது, இன்றைய தலித் இயக்கங்கள் போல அன்று தலித் இயக்கங்கள் தோன்றாமல் அல்லது வலுவடையாமல் இருந்தன. இம்மாதிரிக் கொடுமைகள் மிகையாக மிகையாகத்தான் அவ்வியக்கங்கள் வலுப்பெற்று செயலாற்றி வருகின்றன. அக்கால கட்டத்தில், தொழிலாளர்களுக்கு என்றும் குரல் கொடுக்கும் பொதுவுடைமைக் கட்சிகள், அன்றும், அந்தத் தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்து காக்க முன்வந்தவர்கள். அன்று முதல் வெண்மணித் துயர் நாளின்போது அவர்கள் அதை நினைவு கூர்கிறார்கள். அண்மையில் திருமா போயிருந்தபோது ஏற்பட்ட புகைச்சல் என்பது ஒரு உரிமைப் பிரச்சினைதானே ஒழிய, வேறு ஏதும் சாதிய அடையாளங்கள் என்ற நோக்கத்தில் அல்ல; பொதுவுடைமைக் காரர்கள் சாதியத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்றபோதும் கூட.

4. ‘வேறு ஒரு வி ?யத்திற்காக திரு.பெரியார் ஒரு முறை சொன்னர், நாயை அவிழ்த்து விடத் தெரிந்தால் மட்டும் போதாது. தேவையான சமயத்தில் இழுத்துப் பிடித்துக் கட்டிப் போடவும் தெரியணும், என. நாய் = தீவிரவாதம் எனக் கொள்ளலாம். அது போல் தான் தலித்துகளை உங்களின் சிறுத்தையாக மாறத்தூண்டும் அறிவிப்பு. சிறுத்தை ஒன்று காட்டிலிருக்கும் இல்லை கூண்டிலிருக்கும். ஆனால் தலித்துகள் நாட்டில் மக்களாக எல்லா உரிமையுடனும் வாழ வேண்டியவர்கள், திராவிடர்களின் அடிவேர் – ஆணிவேர். இப்படி எல்லா ?ாதியினரும் அரிவாள் , துப்பாக்கி எடுத்தால், தலித்துகளின் போராட்ட்ம் எப்படி வெற்றி பெறும். சமாதியிலும் பூக்கள் பூக்கும், ஆனால் சுடிக் கொள்ளத் தான் ஆளிருக்காது. ‘

இங்கு நாய் உதாரணம் தேவையில்லாதது. எனினும் அதை நல்நோக்கோடு சொல்கிறீர்கள் என்றே வைத்துக் கொள்கிறேன். எனினும் சிறுத்தை என்ற அடைமொழிக்கான உங்களின் விளக்கம் நகைப்புக்குரியது. அமுக்கப்பட்டவர்களை எழுப்பும் குரல் உங்களுக்கு ஏதோ அரிவாள் கத்தி வியாபாரமாகப் படுவது வியப்பைத் தருகிறது. விவேகானந்தரின் ‘விழிமின் எழுமின் ‘ என்பதில் இருக்கும் எழுப்புதலின் ஓசையே இதிலும் இருக்கிறதே தவிர வேறொன்றும் தெரியவில்லை. நாட்டில் வாழும் மக்களுக்கு காட்டில் வாழும் சிறுத்தைகளின் பெயரையா இடுவது என்று கேட்டிருக்கிறீர்கள். வீட்டில், நாட்டில் வாழும் ‘பூனைகள் ‘ என்ற பெயரையா வைக்க முடியும் ? இந்துவின் சார்பாக நீங்கள் எழுதுகிறீர்கள்; அதனால் கேட்கிறேன். தலித்துகள், அரிவாள் கத்தியைத் தூக்கக் கூடாது என்கிறீர்கள் – சரி. ஆனால், இந்து என்ற போர்வையில், தொகாடியாவும் பிறரும் சூலத்தையும் கத்தியையும் வாரி வழங்குகிறார்களே, அது எதற்கு ? இந்து மதத்தை வளர்க்க ஒவ்வொருவர் கையிலும் சூலம் அவசியமா ? அதை வைத்துக் கொண்டு இந்துக்கள் என்ன செய்வார்கள் ? பூசை செய்வார்களா ? அல்ல தலையைச் சொறிந்து கொள்வார்களா ? இல்லை நண்பரே – எல்லாம் காரணமாகத்தான் கொடுக்கிறார்கள். எனினும் தொகாடியாவிற்கும் இராமகோபாலனுக்கும் சூலம் கொடுக்க வேண்டாம் என்றும் எழுதிப் பாருங்களேன்.

5. ‘தாழ்த்தப்பட்டவர்களுக்கு, அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதற்காகவே அநீதி இழைக்கப்பட்டால் அதை இரும்புக்கரம் கொண்டு தான் தடுக்க வேண்டும். அதில் எந்த மாற்றமும் இல்லை. அது போலவே, தலித்துக்களால் கொடுமைப்படுத்தப்படும் ‘சலவைத் தொழிலாளிகளும் ‘ காக்கப்பட வேண்டும். ‘

ஆம். உண்மை. அண்ணாவின் மடலொன்றை திண்ணையில் கண்டேன். அது மிகவும் சிந்திக்கத் தக்கது.

6. ‘தாழ்த்தப்பட்டவருக்கு பூணுல் போட்ட பாரதி இந்து. பிறாமணர். மதுரை மீனாக் ?ி கோவிலுக்கள் தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துச் சென்றவர், ஐயர் தான். இந்து தான். தாழ்த்தப்பட்டவர்கள் பள்ளிக் கூடம் சென்ற போது, பாடம் சொல்லிக் கொடுத்தவர்களில் ஐயரும் உண்டு, பிள்ளையும் உண்டு, கோனாரும் உண்டு. அம்பேத்காருக்கு கல்விக்கு உதவி செய்தது உயர் ?ாதி சேர்ந்தவரா இல்லையா.. ? – அவர்கள் மனதில் ?ாதி தாண்டி மனித நேயம் இருந்தது. அவர்கள் இந்துவாகவும் இருந்தார்கள். இ ?லாமியர்கள் , கிறி ?துவர்கள் தாழ்த்தப்பட்டவர்களின் மேல் மிக அக்கறையுள்ளவர்கள் என்றிருந்தால், பல நூறு காலம் இந்தியாவை அவர்கள் ஆண்ட போது தாழ்த்தப்பட்ட இனத்தையே உயர்த்திருக்கலாமே.. ? ஏன் செய்யவில்லை…. ? ‘

பாரதியார் பூணூல் போட்டு விட்ட போது அவரை வெறுத்து ஒதுக்கியவர்கள், இன்று அதையே கேடயமாக, உதாரணமாகப் பயன்படுத்திக் கொள்வதைப் பார்க்கிறோம். இதுதான் பச்சை சந்தர்ப்பவாதம் என்பது. ஏன் இன்றைய சங்கராச்சாரியாரையோ, இராமகோபாலனையோ தாழ்த்தப்பட்டவர்களுக்கு பூணூல் போட்டு விடச் சொல்லுங்களேன் பார்க்கலாம்!! கிறித்துவனையும் இசுலாமியனையும் விட்டு விடுங்கள். இந்து என்ற நினைப்போடு தாழ்த்தப்பட்டவர்களுக்கு செய்யச் சொல்லுங்களேன். ஏன் போய் கடந்த வெள்ளைய, மொகலாய ஆட்சிகளை இழுக்க வேண்டும். செய்யலாம் என்றால் இப்பொழுது கூட செய்யலாமே! கிறித்துவர்களின் கல்விக் கொடை உயர்ந்தது. கேரள மாநிலத்தில் கல்வி கற்றோர் எண்ணிக்கை 100 விழுக்காடு என்று சொன்னால், அதற்கு பெரும் பங்காற்றியவை கிறித்துவ அமைப்புக்கள்.

7. ‘தாழ்த்தப்பட்டவரை அறநிலையத் துறை அமைச்சராக நியமித்து, போகும் கோவிலில் எல்லாம் முதல் மரியாதை கிடைக்கச் செய்து, தாழ்த்தப்பட்டவர்களுக்கு மனபலம் தந்த ‘திரு.காமரா ?ர் ‘, இந்து தான். ‘

காமராசர் ஒரு சிறந்த மனிதர், தலைவர். அவர் இந்து என்று மதப்பிரிவை சேர்ந்தவர்தான். அவர் ‘நான் ஒரு இந்து ‘ என்று சொல்லிக் கொண்டு திரியவில்லை. அப்படிச் சொல்லித் திரிந்திருந்தால் அவர் சிறப்பு பெற்றும் இருந்திருக்க மாட்டார். காமராசரையெல்லாம் இந்து அது இது என்று மதப்பெயரிட்டு இழிவு படுத்துதல் கூடாது. அவர் ஒரு மனிதர்!

8. ‘இந்து மத கோட்பாடுகளில் நம்பிக்கையில்லா, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் ஆட்சியில் தாழ்த்தப்பட்டவருக்கு இந்த அங்கிகாரம் தரப் பட்டதா… ? தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சனையின் ஆதார காரணம் இந்து மதம் இல்லை. அப்படியிருந்தால் இந்து மதம் இல்லாத அமெரிக்கா, ஆப்பிரிக்கா கண்டத்திலே தாழ்த்தப்பட்டவர்கள் போல் கொடுமைக்குள்ளான கறுப்பர்கள் ஏன் துன்புற்றார்கள். தங்கள் உரிமைக்காக போராடிய அவர்கள், இ ?லாமியர்களாகவோ, புத்த மதத்தினராகவோ மாறி பிரச்சனையில் இருந்து வெளு வந்திருக்கலாமே… ? ‘

ஆப்பிளையும் தக்காளியையும் ஒப்பிடாதீர்கள். மொட்டைக்கும் முட்டிக்கும் முடிச்சுப் போடாதீர்கள். அது தவறான ஒப்புமை. வெள்ளையர் கறுப்பர் என்பது நிறவெறி. நிறத்தின் பேரால் ஏற்பட்ட கேடுநிலை அது. மதத்தின் பேராலும், சாதியின் பேராலும் ஏற்பட்டதல்ல. இங்கே, இந்தியக் கறுப்பர்களுக்கு இந்து மதத்தின் காணிக்கை சாதி வெறி.

9. ‘ தாழ்த்தப்படுத்தப்பட்டவர்களுடன் கோவிலுக்கும் போகும், மழையில் குடை பிடித்துப் போகும், அவர்கள் வந்த சூழல் தெரிந்து பொறுமையாக வேலை நுணுக்கம் கற்றுத் தரும் பல உயர் ?ாதி இந்துக்கள் எனக்குத் தெரியும். அந்த நிலையை அடைய அந்த தாழ்த்தப்பட்டவர்கள் படித்தார்கள். பதவிக்கு வந்தார்கள். ‘

இதில் பெரிய சங்கதி ஒன்றும் இல்லை. இனிப் போய்த்தான் ஆகவேண்டும். சிலருக்கு மனிதம் என்று இருந்திருக்கிறது. அது இல்லாத பலரால்தான் சரவலே.

10. ‘தேவர், நாடார்கள் கீழ்மட்ட ?ாதி நிலையில் இருந்த போது, வெகுவாக, ராணுவத்திலும், போலிசிலும் சேர்ந்தார்கள். அது போல், தலித் மக்களுக்கு விழிப்பூட்டி, ராணுவத்திலும், போலிசிலும் சேரச் சொல்லுங்கள். அது ஒரு நல்ல மன நிலையைக் கொடுக்கும். பாதுகாப்பு சுழலைக் கொடுக்கும். நாடார்கள் ‘சாணாப்பயலுக ‘ என்றும், தேவர்கள், ‘கள்ளப்பசங்க ‘ எனும் கீழ்மட்டமாக பேசப்பட்டுள்ளனர். ‘

உங்களுக்கு தமிழக சாதி அமைப்பு பற்றி நிறைய அறிய இருக்கிறது. தேவர் குலத்தவர் என்றும் கீழ்மட்ட நிலையில் இருந்தவர்கள் அல்லர். பார்ப்பனர்களில் பலர் பெருநிலைகளில் இருக்கையில் சிலர் சிறு கோயில்களில் பணி செய்து குறைந்த வருவாய் ஈட்டுவது போல, பொருளாதார அடிப்படையில் சிலர்/பலர் முன்னே பின்னே இருந்திருக்கலாம். அவ்வளவுதான். நாடார்கள் பற்றி நெல்லை நெடுமாறன் எழுதியுள்ள நூலைப் படியுங்கள். மதுரைக்குத் தெற்கே அவர்கள் சீருடன் வாழ்ந்த நிலை தெரியும். அவர்கள் ஏன் தாழ்த்தப்பட்டு தாழ்ந்து பின் நிமிர்ந்தார்கள் என்ற வரலாறு தெரியும். அதே போல கிறித்துவ நாடார், இந்து நாடார், ஏழை நாடார், பணக்கார நாடார்களின் வரலாறு தெரியும். இன்னும் சொல்லப் போனால், பெரியாருக்கும் முன்னரே, 1872ல் திருச்செந்தூர் கோயிலில், அடக்கு முறையை எதிர்த்து, சாதி வெறியை எதிர்த்து, கருவறை நுழையும் போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டவர்கள் நாடார் குலத்தவர். அன்றே விழித்தெழுந்து போராட்டம் கண்டு மீண்டும் முன்னேறியவர்கள் நாடார்கள். அதைத்தான் தலித்துக்கள் செய்கிறார்கள்.

‘இடம் பெயர்தல் ஒரு புத்திசாலித்தனமான முறை.. அனைவரும் அல்ல… வீட்டுக்கொரு தலித், நகரம் நோக்கி வேலை தேடி இடம் பெயர உதவலாமே உங்கள் இயக்கம். ‘

வேடிக்கையான யோசனை. எரியும் இடத்தில் இருந்து கொதிக்கும் இடத்திற்குப் போவது போன்றது. வீட்டுக்கு ஒருவர் நகரத்திற்கு வருவார்களாம் ;-)) சரிங்க; கிராமத்தில் ஏர் உழுவும் 50 வயசு தலித்துக்கும் களை எடுக்கும் பெண்ணுக்கும் நகரத்தில் என்ன வேலைங்க கொடுப்பீங்க ? படித்த இளைஞர்களுக்கு திருமாவளவனோ அல்லது நீங்களோ சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை.

11. ‘உங்கள் புத்தக வெளடெ¢டு விழாவிலே இருந்த , வந்தவர்களில் இந்துவும் உண்டு, மேல் சாதிக்காரர்களும் உண்டு. எதிரில் தெரிவதால் மட்டுமே, சமுகமே எதிரி என்று நீங்கள் நினைத்தால் பின் உங்கள் அருகே வந்து உங்களுக்கு அங்கீகாரம் தரும் இவர்கள் யார்….. ? சொல்லுங்கள். ‘

இன்னும் கூட ‘அங்கீகாரம் தரும் இவர்கள் ‘ என்கிறீர்கள். அங்கீகாரம் தர என்ன இருக்கிறது. இவர்களின் அங்கீகாரம் ஒரு தேவை என்பது போல் படுகிறது உங்கள் கருத்து.

12. ‘பிறக்கும் போது இந்துவாகப் பிறந்ததால் இழிவும், சாகும் போது பெளத்தராக இறந்ததால் உயர்வும் அம்பேத்காருக்கு கிடையாது. அவர் வாழும் போது வாழ்ந்த வாழ்க்கைக்காக கிடைக்கும் மரியாதை அது. புரியும் உங்களுக்கும். ‘

மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள். இதுதான் உண்மை. வாழும்போது வாழும் வாழ்க்கைதான் முக்கியம். எந்த மதம் என்பதல்ல. அதனால்தான் மதவாதிகள் மதிக்கப் படுவதில்லை. இந்துவாக இல்லாமல் இருந்தால்தான் என்ன ? மனிதராக இருந்தால் போதாதா ? ஏன் நீங்கள் இவ்வளவு நீள மடல் எழுத வேண்டும் ?

13. ‘காஞ்சி பற்றி தாக்க வேண்டும் என்று , தேவாலய கூட்டமைப்புக்கு கொடி பிடிக்கிறீர்கள். வாடிகன் ஆய்வேட்டு மையம் திறந்த ஆராய்ச்சிக்குத் திறந்து விட்ட போது, போப் ஆண்டவரே கடந்த காலத்தில் வாடிகன் கிறி ?துவ மதத்தின் பெயரால் சமுதாயத்திற்கு இழைத்த கொடுமைகளுக்கு மன்னிப்புக் கேட்டது பற்றி உங்கள் மக்களிடம் சொல்லுங்கள். பாவம் அவர்கள். கொதிக்குது தீச்சட்டி என்று உங்களிடம் சொன்னால் அவர்களைத் தீயில் தூக்கிப் போட்டு விடாதீர்கள். நமது கடமை தீயை அணைத்து அவர்களைக் காக்க வேண்டியது. ‘

எல்லாம் சரி. இந்து மதமும் அதன் மதவாதிகளும் செய்திருக்கும் கொடுமைகளுக்கு இந்து மதத்தலைவர்கள் மன்னிப்பு கேட்பார்களா ? அதைச் செய்து, அனைவரையும் சமமாக நடத்தினால் அதுவே போதுமே!!! செய்வாரா சங்கர் ? மாட்டார் – அவர் பேசுவதெல்லாம் இன்னும் சாதிப்பிரிவினை, உயர்வு-தாழ்வை உயர்த்திப் பிடிப்பதாகவே இருக்கிறது. இங்குதான் கிறித்துவ-நாணயமும், இந்து-நாணயமும் உரசிப் பார்க்கப் படுகிறது.

14. ‘எங்களுக்கும் இந்த செல்வி.ெ ?யலலிதா மற்றும் காஞ்சி.சங்கராச்சாரியாரிடம் சொல்லனும்- இந்த மத மாற்ற சட்டத்தை தூரப் போடுங்கள், என்று. சங்கிலியில் கட்டி வைக்க இந்து அடிமையில்லை என்று. இந்தச் சட்டத்தினால் எங்களைக் கேவலப்படுத்துகிறார் – செல்வி.ெ ?யலலிதா. ‘

இதை மிகவும் வரவேற்கிறேன். மனதாரப் பாராட்டுகிறேன். வேறொரு தளத்தில் இதைக் குறித்து ஒரு ஒப்புமையை எழுதியிருந்தேன். ‘மதமாற்றச் சட்டம் என்பது எப்படியிருக்கிறதென்றால், ‘வேலைக்குப் போகும் கணவன் வீட்டில் பெண்டாட்டியை உள்ளே வைத்துப் பூட்டி விட்டுப் போவது போல் உள்ளது ‘; அந்த நிலைக்கு இந்து மதம் வந்து விட்டது அதன் நிலையைக் காட்டுகிறது ‘ – என்று எழுதியிருதேன்.

15. ‘ திரு.திருமாவளவனுக்கு, உங்களைக் கொம்பு சீவி விட்டு கூத்துப் பார்க்க விரும்பாததால் தான், இக் கடிதம். இது கசக்கலாம் – ஆனால் வேப்பங்கொழுந்து போல் மருந்து. ‘

இது கசக்க வில்லை. ஏனெனில், ‘இதில் சுவையே யில்லை ‘. மன்னிக்கவும், நண்பரே, தங்களுடையது வேப்பங் கொழுந்து அல்ல. வெறும் மயில் தோகை; அவ்வளவுதான். கொஞ்ச நேரம் வீசிக் கொள்ளலாம். பின்னர் கை வலிக்கும். பின்னர் கீழே வைத்துவிடுவோம். நிறைய எழுதியிருந்தாலும், நகரத்து வாழ்க்கைக்கே பழக்கப் பட்டவர்களின் கருத்தாகவே இருக்கிறது. கிராமங்களில் போய்ப் பார்க்க இன்னும் நிறையவே இருக்கிறது. தமிழகத்தில் மட்டுமல்ல – இந்தியா முழுவதும்.

அன்புடன்

நாக.இளங்கோவன்


ஆசிரியருக்கு

குவாண்டம் என்பதற்கு பொருத்தமான/சரியான தமிழ்ப்பதம் என்ன ?கண்ணன் சிப்பம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார், யமுனா ராஜேந்திரன் கதிரியக்க அலைவீச்சு என்ற சொல்லை முன்வைக்கிறார்.தமிழ் இணையப்பல்கழைக தளத்தில் குவாண்டம் உட்பட வேறு சில சொற்கள் தரப்படுகின்றன.இவற்றும் எது சரியானது/பொருத்தமானது. quantum leap என்பது தமிழில் எப்படி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.விபரமறிந்தவர்கள் தெரிவிக்கலாம்.நாகூர் ரூமியின் கடிதம் அவர் ஒரு அடிப்படைவாதி (fundamentalist) என்பதை காட்டுகிறது. உடல் ரீதியாக பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல.மாறாக பெண்களின் சராசரி ஆயுள் ஆணின் சராசரி ஆயுளை விட அதிகம்.ஆனால் அவர்கள் சமமாக நடத்தப்படுவதில்லை என்பதால் பல பெண்கள் இதன் பயனைப் பெறமுடிவதில்லை.எவெரெஸ்ட் சிகரத்தை பெண்கள் எட்டியுள்ளார்கள்.எந்த விளையாட்டிலும் தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை அவர்கள் நீருபித்துள்ளார்கள்.சமத்துவம் குறித்து இந்திய அரசியல் சட்டம், CEDAW என்ன சொல்கின்றன என்பதாவது அவருக்குத் தெரியுமா ?. ஈரானிலும்,பிற இஸ்லாமிய நாடுகளிலும் உள்ள கலாச்சாரக் கண்காணிப்பாளர்கள்/காவலர்களுக்கு துணையாக அவர் பணியாற்றலாம்.எழுத்தாளர்களுக்கு தண்டனை வழங்குவது, பெண்களுக்கான தண்டனைகளை தீர்மானிப்பது போன்றவற்றில் உதவலாம்.சமத்துவம் குறித்து ரூமி,காஞ்சி சங்கராச்சாரியர் கூறியுள்ள கருத்துக்கள் ஒப்பு நோக்கத்தக்கவை.

K.ரவி ஸ்ரீநிவாஸ்


தலித்துகள், பழங்குடியினர் மீதான இந்துத்துவ அமைப்புகளின் கரிசனம் பற்றி…

திரு.இரவி ஸ்ரீநிவாஸ் அடிக்கடி குறிப்பிடுவது போல அரவிந்தன் நீலகண்டன் தன்னுடைய இந்துத்துவப் புளுகு மூட்டையை, தலித் மக்களின் மேன்மைக்காகப் பாடுபடுவதாகக் கூறும் கட்டுரையிலும் அவிழ்த்து விட்டுள்ளாரோ என்று ஐயமாக உள்ளது. உண்மையிலே சேவாபாரதியினர் என்ன பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அந்த ஊர்களுக்குச் சென்று அறிந்தால்தான் தெரியும். குஜராத் கலவரத்தின் போது, பல பகுதிகளில் முஸ்லீம் இனப்படுகொலையை நடத்த இந்துத்துவ அமைப்புகள் பழங்குடியினரை பயன்படுத்தியதை உலகமே அறியும். இந்துத்துவ அமைப்புகளுக்கு தலித்துக்கள் மற்றும் பழங்குடியினர் மேலான பற்றுதலின் காரணங்களை வாசகர்கள் அறிய வேண்டுமானால், ஜெஹாங்கீர் போச்சா என்ற பாஸ்டன் நகரில் வாழும் பிரபல பத்திரிகையாளர் எழுதியக் கட்டுரையிலிருந்து தெரிந்து கொள்ளலாம் (http://www.stopfundinghate.org/resources/news/010303InTheseTimes.htm).

ஒரு செத்த பசுமாட்டுத் தோலை உரித்ததற்காக ஐந்து தலித்து இளைஞர்களைக் கொன்று எரித்த இந்துத்துவக் குண்டர்களின் மிருகத்தனத்தைப் பற்றி (http://www.ambedkar.org/News/News102202.htm) அரவிந்தன் நீலகண்டன் போன்ற இந்துத்துவ வாதிகள் என்ன சொல்கிறார்கள் ? திருமாவளவனுக்கு இலவசமாக ஆலோசனைகள் வழங்கும் வரதன் போன்றவர்களும் என்ன நினைக்கிறார்கள் ? திருமாவளவன் இதையெல்லாம் கண்டு கொள்ளக்கூடாது என்கிறார்களா ? தாழ்த்தப்பட்டவர்களை பல துறைகளிலும் முன்னேற்றப் பயிற்சி முகாம்களையும் நடத்திக் கொண்டுதான் வருகிறார். இன்னும் சொல்லப் போனால், திருமாவளவன் தேர்தல் அரசியலுக்கு வருமுன் முழு நேரமும் அப்படிப்பட்ட முயற்சிகளில்தான் ஈடுபட்டிருந்தார். இந்து மதத் தலைவர்களும், நிறுவனங்களும் தலித்துகளுக்கு எதிராகக் கொண்டுள்ள கொள்கைகளை கொழுக்கட்டை சாப்பிட மறுக்கும் தமிழ்நாட்டிலுள்ள கோடாரிக்காம்புகள் மட்டும் விமர்சிக்கவில்லை. வரதன் வக்காலத்து வாங்கும் காங்கிரஸ் கட்சியினர் கூடக்கூறுகின்றனர். கர்நாடகத்து உள்துறையமைச்சர் சில தினங்கள் முன்பு கூட வெளிப்படையாக இதைப்பற்றிக் கூறியுள்ளதைப் படியுங்கள். (http://www.hindu.com/2003/12/22/stories/2003122203630300.htm).

அரவிந்தன் நீலகண்டனின் புளுகு மூட்டைகளை இத்தோடு ஒதுக்கிவிடுகிறேன். உரிமைக்கும், கருணைக்கும் வேறுபாடு பாராட்டாத வரதன் போன்றவர்களின் கேள்விகளுக்கான பதில்களை திருமாவளவனின் நூல்களிலிருந்து கூடியவிரைவில் தட்டச்சு செய்வேன் என்று உறுதியளிக்கிறேன்.

சங்கரபாண்டி

sankarpost@hotmail.com


மதிப்பிற்குரிய இஸ்லாமிய அறிஞரும், போராசிரியருமான முனைவர் ரூமி அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்

ஆசாரகீனனுக்கு உங்கள் கடிதம் கண்டேன். நீங்கள் பக்தியுடன் வணங்கும் உங்கள் அன்னையர் போன்ற சல் அவர்களின் மனைவிமார்களை இழிவுபடுத்தி எழுதியதாலேயே, ரஷ்டி ஒரு அயோக்கியன் என்றும், அவருக்கு விதிக்கப் பட்ட மரண தண்டனை நியாயம்தான் என்றும், அவர் ஒரு பண்பட்ட மனிதராக இருக்க முடியாதென்றும், கோபம் கொந்தளிக்க எழுதியுள்ளீர்கள். உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன். உங்களின் கடிதத்தில் கொப்புளிக்கும் கோபமும், தமிழோவியத்தில் நீங்கள் எழுதிய இரண்டு கட்டுரைகளின் சாரமும் என்னை பின்வருமாறு அனுமானிக்கத் தூண்டியது.

1. பல கோடி இந்துக்களின் பக்திக்குரிய கடவுள்களான சீதாவின் பெயரையும், ராதாவின் பெயரையும், ஒரு சினிமாவில் ஒரினப்புணர்ச்சியாளர்களின் பெயர்களாக சூட்டியதைக் கண்டித்துப் போராடிய சிவசேனாத் தொண்டர்கள், இந்து வெறியர்கள் என்றும், வானரங்கள் என்றும் ஏசப்பட்டனர். குரானை இகழ்ந்த புத்தகத்தை எரிப்பதும், தடை செய்வதும், மரண தண்டனை கொடுப்பதும் மதச்சார்பின்மை, அவ்வாறான சிறுபான்மையினரின் எதிர்ப்புணர்வுகள் மதிக்கப் பட வேண்டிய ஒன்று. அதே உணர்ச்சி, இந்துக்களுக்கு ஏற்பட்டால் அவ்வாறு எதிர்ப்பவர்கள், மத வெறியர்கள், அடிப்படைவாதிகள். இதுதான் நமது பத்திரிகைகளும், மதசார்பற்ற அரசியல்வாதிகளும் பின்பற்றும் மதச்சார்பின்மை. அவ்வாறான போலி மதச்சார்பின்மை உங்களுக்கு நிச்சயம் ஏற்புடையதாக இருக்காதென்பதை உங்கள் கடிதத்தின் மூலம் புரிந்து கொண்டேன். நீங்கள் ரஷ்டிக்கு காட்டிய எதிர்ப்பும், சிவசேனா fire படத்திற்காக மீரா நாயருக்குக் காட்டிய எதிர்ப்பும் உணர்வுபூர்வமாக ஒன்றே என்பதை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

2. விஷ்ணுவின் அவதாரமாகிய ராமர் அவதரித்த இடம் என்று கோடிக்கணக்கான இந்துக்கள் நம்பும் ஒரு கோவிலை இடித்துத் தரைமட்டமாக்கி அதன் மேல் மசூதியை எழுப்பிய பாபர், உங்கள் கருத்தின்படி ஒரு அயோக்கியனாகவே இருக்க வேண்டும். அத்தகைய மதவெறியன் கட்டிய கட்டிடத்தை இடித்தவர்களை வானரங்கள் என்றும், இந்து தீவிரவாதிகள் என்றும் இகழ மாட்டார்கள் என்று கடிதத்தைப் படிக்கும்போதே புரிந்து கொண்டேன். அவ்வாறு ஒரு அயோக்கியன் கட்டிய கட்டிடத்தை இடித்து, அதே இடத்தில் தங்கள் பக்திக்குரிய ராமருக்கு கோவில் எழுப்ப வேண்டும் என்று விரும்பும் கோடிக்கணக்கான இந்துக்களின் மத உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்காக வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பீர்கள் என்றும் உளமார நம்புகிறேன். நீங்கள் சல்லின் மனைவிமார்களிடம் காண்பிக்கும் பக்தியும், இந்துக்கள் ராமரிடம் காண்பிக்கும் பக்தியும் ஒரே தளத்தில் இருக்கின்றன என்பதை மறுக்க மாட்டார்கள் என நம்புகிறேன். நீங்கள் மெக்காவின்மீது வைத்திருக்கும் பக்தி எவ்வளவு புனிதமானதோ, அவ்வளவு புனிதமானது இந்துக்கள் அயோத்தியில் வைத்திருக்கும் நம்பிக்கையும் என்பதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

3. உங்கள் அன்னையர்களை இகழ்ந்த ரஷ்டி அயோக்கியன். பல கோடி இந்துக்கள், பசுவைத் தங்கள் அன்னையாகத் தொழுகிறார்கள். அவர்களின் நம்பிக்கையை கிண்டலடித்துத் தமிழோவியத்தில் கட்டுரை எழுதியது நீங்கள்தானே ? இந்துக்கள் கோமாதா என்று பசுவை வணங்கும் வழக்கத்தை, மூடப் பழக்கம் என்று (http://www.tamiloviam.com/html/Exclusive43.Asp) ஏகடியம் பண்ணிணீர்களே அதை எவ்வாறு எடுத்துக் கொள்வது ? அவ்வாறு பிறமதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்திய உங்களை எவ்வாறு அழைப்பது ? உங்கள் வாதத்தின்படி அவ்வாறு உங்கள் மத நம்பிக்கைகளை கேலி செய்யும் ஒருவர் பண்பாளராக இருக்க முடியாது, அயோக்கியனாகத்தான் இருக்க வேண்டும். ஒரு வேளை உங்கள் வாதம் உங்கள் மத நம்பிக்கைக்கு மட்டும்தான் பொருந்துமோ ? உங்கள் மதத்தை இழிவு படுத்திய ரஷ்டி உங்களுக்கு அயோக்கியன், ஆனால் இந்து மதத்தை அன்றாடம் இழிவு படுத்திக் கொண்டிருக்கும் ஒரு கும்பலின் தலைவனோ உங்கள் (http://www.tamiloviam.com/html/Exclusive44.Asp) கட்டுரையின்படி மிகச்சிறந்த உலக சீர்திருத்தவாதிகளில் ஒருவர். உங்கள் கடிதப்படி உங்கள் நம்பிக்கைக்கு எதிராக யாராவது எழுதி விட்டால், அவன் பண்பற்றவன், அயோக்கியன், கொல்லப்பட வேண்டியவன். அப்படிப்பட்ட மேலான சகிப்புத்தன்மையுடைய நீங்கள், பிறமதத்தினரின் நம்பிக்கையை எதிர்த்து எழுதியிருக்க வாய்ப்பேயில்லை, ஒருவேளைத் தமிழோவியத்தில் எழுதியது வேறொரு நாகூர் ரூமியாக இருக்கக் கூடும். அப்படியெல்லாம் முரண்பாடாக எழுதியது நீங்களாக இருக்காது என்று நம்புகிறேன்.

4. ஒவ்வொரு ஆண்டும் ரம்லான் நோன்பின் போது, தலையில் குல்லா மாட்டிக்கொண்டு, கஞ்சி குடித்துக் கொண்டு, அதே மேடையில் இந்து மதத்தை கீழ்த்தரமாக பேசும், கருணாநிதி போன்ற நாலாந்தர அரசியல்வாதிகளின் பேச்சை வன்மையாகக் கண்டிப்பீர்கள் என்றும் நம்புகிறேன்.

5. இந்து மதத்திலுள்ள குறைகளைப் ஈ.வெ.ராவைத் துணைக்கழைத்துப் பட்டியலிட்டு, அது எவ்வாறு ஒரு நல்ல மதமாக இருக்கமுடியுமென கேள்வி எழுப்பியுள்ளீர்கள். அவ்வாறு விமர்சிக்க உங்களுக்கு அனைத்து உரிமையும் இந்தியாவில் உள்ளது. அதுபோன்ற உரிமை ரஷ்டி போண்ற படைப்பாளிக்கும் உள்ளது. அவ்வாறு கேள்வி கேட்க உங்களைப் போன்ற வேறு மதத்தினர் உட்பட யாரையுமே அனுமதியளிக்கும் பெருந்தன்மையும், சகிப்புத்தன்மையும் இந்து மதத்தில் உள்ளது. உங்கள் மதத்தை யாராவது குறையாகப் பேசி விட்டால் பொங்கி எழுந்து, தொழுநோயாளிக்கு கேள்வி கேட்கத் தகுதியில்லை என்று பட்வா கொடுத்து விடுகிறீர்கள். தொழுநோயாளியும் ஒரு மனிதன்தான். அவன் ஆரோக்கியசாலியைக் குற்றம் சொல்வதனாலேயே, அவனுக்கு மரண தண்டனை கொடுத்து விடமுடியாது. அப்படி எந்த மதமாவது கொடுக்கச் சொல்லுமானால், அது மனிதாபிமான, நாகரீகமான மதமாக இருக்க முடியாது என்று யாராவது சொன்னால் அதில் உள்ள நியாயத்தை ஒத்துக் கொள்வீர்கள் என உங்கள் கடிதம் புலப்படுத்துகிறது.

பிற மத நம்பிக்கையை சுதந்திரமாக விமர்சனம் செய்யும் உங்களுக்கு, உங்கள் நம்பிக்கையை ரஷ்டி (அதுவும் அவர் கூட ஒரு இஸ்லாமியரே) விமர்சிக்கும் போது மட்டும் ஆத்திரம் பொங்கி வருவானேன் ? அவ்வித இரட்டை நிலை எடுக்கும் உங்களின் அடிப்படைவாதக் கடிதமே என்னை இவ்வளவு நீண்ட ஒரு எதிர்வினையை எழுதத் தூண்டியது. நான் எதிர்ப்பது உங்களது இரட்டை வேட அடிப்படை வாதத்தையும், ஹிப்போகிரஸியையும் மட்டும்தான்.

இறுதியாக, உங்களைப் போன்ற அறிவார்ந்த ஒரு சிலராவது பரந்த மனப்பான்மையோடும், சகிப்புத்தன்மையோடும், மத அடிப்படைவாதத்தை பின்பற்றாமலும், மன்னிக்கும் மாண்போடும், எதிர் கருத்துக்களை கண்யமாக, வன்முறை நோக்கமின்றி எதிர் கொள்ளும் பண்போடும், இருப்பார்கள் என்று நம்பிக்கொண்டிருந்தேன். என் நம்பிக்கையின் மீது உங்கள் கடிதம் போட்டது மேலும் ஒரு கூடை மண்.

அவநம்பிக்கையுடன்

விஸ்வாமித்திரா

பி.கு. ரஷ்டி குறித்த உங்களது வசை மொழிகளான ‘குரைக்கும் நாய் ‘, ‘தொழுநோயாளி ‘, ‘அயோக்கியன் ‘ போன்றவை கருணாநிதியின் ‘கபோதி ‘, ‘வானரம் ‘ போன்ற பொன்மொழிகளுக்கு சரியாக ஈடுகொடுக்கிறது. சபாஷ், சரியான போட்டிதான் போங்கள்.

viswamitra12347@rediffmail.com


நான் கலைஞர் கருணாநிதி பற்றி நரேந்திரன் எழுதிய கட்டுரையைப் படிக்கவில்லை. சிவா எழுதிய பதிலைப் படித்ததில் நரேந்திரன் கலைஞரை மட்டம் தட்டி எழுதியிருக்கிறார் என்பது மட்டும் புரிகிறது.

என்னைப் பொறுத்தளவில் இரண்டு கருணாநிதிகள் இருக்கிறார்கள். ஒன்று இலக்கியவாதி கருணாநிதி. மற்றது அரசியல்வாதி கருணாநிதி.

இலக்கியவாதி கருணாநிதி பற்றி யாருக்கும் இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாது. அண்ணாவுக்கு இணையாக ஏன் அவரையும் மிஞ்சும்; வண்ணம் தமிழுக்கு ஒது புதிய ஒளியையும், வேகத்தையும், இனிமையையும் தேடிக் கொடுத்தவர் கருணாநிதி. பத்தாம் வகுப்பு மட்டும் படித்த கருணாநிதிக்கு இந்த செந்தமிழ் எப்படி கைவந்தது என்பது ஒரு புதிரே!

‘ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள் ‘ பராசக்தி வசனம் இலேசில் மறக்கக் கூடியது அல்ல. கலைஞர் கருணாநிதியின் பராசக்தி வசனத்தை கேட்ட பின்னரே தமிழுக்கு இவ்வளவு சக்தி உண்டா ? எனப் பலர் மூக்கில் கை வைத்தார்கள்.

சரி இனி அரசியல்வாதி கருணாநிதிக்கு வருவோம். சிவா கருணாநிதி நான்கு முறை முதலமைச்சராக இருந்தவர் என புளகாங்கிதம் அடைகிறார். உண்மை என்னவென்றால் கலைஞர் சாதித்ததைவிட சாதிக்கத் தவறியதுதான் அதிகம்.

(1) இந்தியை எதிர்த்த ஒரே மாநிலம் தமிழ்நாடு. அந்த மாநித்தில்தான் தமிழ்மொழி கற்கை மொழியாக இல்லை. ஒரு மாணவன் தமிழை ஒரு பாடமாகப் படியாது பல்கலைக் கழகம்வரை படித்து பட்டம் வாங்கலாம் என்ற பரிதாப நிலை தமிழ்நாட்டில்தான் உண்டு. (தமிழீழத்தில் மழலைப் பள்ளி தொடக்கம் பல்கலைக் கழகம் வரை தமிழே கற்கை மொழி!)

(2) தமிழ்நாட்டின் திருக்கோயில்கள், நீதிமன்றங்கள், அலுவலகங்கள், அங்காடிப் பெயர்பலகைகள் இவற்றில் ஒன்றிலேனும் தமிழ் இல்லை. தமிழ்நாட்டில் மட்டுமே இந்த அலங்கோலம் உள்ளது.

(3) தமிழ்நாட்டில் உள்ள 10,000 கிராமங்களில் இன்றும் இரட்டை கிளாஸ் வைக்கும் முறை இருக்கிறது. சாதியுணர்வு முன்னரைவிட கூர்மையடைந்துள்ளது. மலம், சிறு நீர் பருக்கும் அளவுக்கு தீண்டாமை கோலோச்சுகிறது.

(4) கலைஞர் கருணாநிதி குடும்பத்துக்கு சொந்தமான தொலைக்காட்சிக்கு தமிழில் பெயர் வைக்க முடியாத அவலம் இருக்கிறது. அது மட்டுமல்ல எந்த பார்ப்பனீயத்தை கருணாநிதி காலமெல்லாம் எதிர்த்தாரோ அந்தப் பார்ப்பனீயம் சன்ரிவியை ஆக்கிரமித்துள்ளது.

(5) தனது மகனுக்கு பட்டம் சூட்ட வேண்டும் என்பதற்காக கழகத்தின் ‘போர்வாள் ‘ என்று ஒரு காலத்தில் புகழ்ந்து பேசிய வைகோ மீது கொலைப் பழி சுமத்தி எந்த முகாந்திரமும் இல்லாது அவரை கட்சியை விட்டு தூக்கி எறிந்தது மூன்றாம் தர அரசியல்.

(6) சத்தியா அம்மையார் எனக்கும் அம்மா தான் நானும், எம்.ஜி.ஆரும் ஒரே தட்டில் சாப்பிடுவோம் நாங்கள் 4 ஆண்டு கால நண்பர்கள் ‘ என்று ஒப்புக்கு கூறுவார் கருணாநிதி. எம்.ஜி.ஆருக்கு இருந்த ஏற்றமிகு மக்கள் செல்வாக்கை தாங்கிக் கொள்ள முடியாமலும், தன் கிரீடம் பறி போய் விடுமோ என்று பயந்து ஈகணக்கு கேட்டார் ‘ என்ற ஒரே காரணத்திற்காக அவரை கட்சியிலிருந்து தூக்கி எறிந்ததும் அல்லாமல் அவரை, மலையாளி, கோமாளி, அரிதாரம் பூசும் கூத்தாடி ‘ என்று நா கூச, வசை பாடியது எந்த ரக அரசியல் ?

(7) கடந்த சட்டசபைத் தேர்தலில் மதிமுக பாமக வைக் கழட்டி விட்டது அரசியல் சாணக்கியத்தைக் காட்டவில்லை. தேர்தல் தோல்விக்கு இந்த முட்டாள்தனமான காய்நகர்வே காரணம் என்பதை ஒரு சிறு பிள்ளைகூட சொல்லும்.

(8) திமுக சேராத கூட்டணி இல்லை. பண்டாரங்கள் பரதேசிகள் என்று திட்டடிய பாரதிய ஜனாதாவோடும் கூட்டணி. ‘நேருவின் மகளே வருக! ‘அன்னை இந்திராவே வருக! நல்லாட்சி தருக ‘ என்பதெல்லாம் அரசியல் சாணக்கியமா ? அரசியல் சந்தர்ப்பவாதமா ?

இந்தப் பட்டியல் முழுமையானதல்ல. கலைஞர் கருணாநிதிக்குப் பதில் அண்ணாவுக்கு 4 முறை தமிழ்நாட்டை ஆளும் வாய்ப்புக் கிடைத்திருந்தால் ? இந்தக் கேள்விக்குரிய பதிலை கற்பனை செய்து பார்ப்பது சுகமாக இருக்கிறது!

நக்கீரன்

athangav@sympatico.ca

(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)


Series Navigation

விஸ்வாமித்திரா

விஸ்வாமித்திரா