கடவுளும் குழந்தையும் (பி.எஸ்.ராமையாவின் ‘நட்சத்திரக் குழந்தைகள் ‘ – எனக்குப்பிடித்த கதைகள்- 55)

This entry is part [part not set] of 27 in the series 20030413_Issue

பாவண்ணன்


என் மகன் நான்கு வயதுக் குழந்தையாக இருந்த நேரம். வீட்டுக்கு நண்பர் ஒருவர் தம் குடும்பத்துடன் வந்திருந்தார். மதிய உணவுக்குப் பிறகு கூடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். நண்பரின் கைக்குழந்தை அவரது மடியில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தது.

திடாரென எங்கள் கவனத்தைத் திசைதிருப்பிய என் மகன் ‘அப்பா அப்பா, பாப்பா துாக்கத்துல சிரிக்குதுப்பா ‘ என்று சொன்னபடி காணாததைக் கண்ட ஆனந்தத்தில் துள்ளினான். மறுகணமே நாங்கள் திரும்பினோம். குழந்தையின் உதடுகளில் முற்றுப்பெறப் போகிற அச்சிரிப்பின் தரிசனம் எங்களுக்கும் கிடைத்தது. குழந்தையின் முகஅழகு அச்சிரிப்பால் பலமடங்கு கூடியது. எங்கள் எல்லாருடைய கவனமும் அக்குழந்தையின் முகத்தில் படிந்திருந்த அதே தருணத்தில் மற்றொரு முறையும் அதன் உதடுகளில் புன்னகை விரிந்தது. உப்பிய அதன் கன்னம் மேலும் சற்றே உப்பிப் பெருத்தது. ஒரு மலர் விரிவதைப் போன்ற அக்காட்சி என் மகனுடைய ஆனந்தத்தை மேலும் மேலும் அதிகரித்தது. எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தான். ‘அப்பா, பாப்பா சிரிக்கும்போது அழகா இருக்குதுல்ல ‘ என்று என் கையைப்பிடித்துச் சொன்னான். மறுகணமே ‘பாப்பா துாக்கத்துல ஏம்பா சிரிக்குது ? ‘ என்று கேள்வியை எழுப்பினான். நான் கொஞ்சமும் தயங்காமல் ‘துாக்கத்துல குழந்தைங்க கனவு காணும். அந்த கனவுல கடவுள் வருவார். கடவுளுக்கு குழந்தைங்கன்னா ரொம்ப புடிக்கும். குழந்தைங்களுக்கும் கடவுள்னா ரொம்ப புடிக்கும். ரெண்டு பேரும் பாத்து சிரிச்சிக்குவாங்க. பேசிக்குவாங்க. போவும்போது குழந்தைங்க கையில கடவுள் பூ குடுத்துட்டு போவாருடா ‘ என்றேன்.

நான் குழந்தையாக இருந்த போது இதேபோல கேட்கப்பட்ட என் கேள்விக்கு என் அம்மா சொன்ன பதில் அது. நான் சொல்லச்சொல்ல என் மகன் நம்ப முடியாமல் கண்களில் ஆர்வமும் சந்தேகமும் மின்ன என்னையே பார்த்தபடி இருந்தான். ‘உண்மையாவாப்பா ? ‘ என்று கேட்டு என் கைகளைத் தொட்டான். ‘ஆமாம்டா ‘ என்றபடி அவனை இழுத்து என் மடியில் உட்கார வைத்துக்கொண்டேன். தொடர்ந்து அவனுக்குச் சந்தேகங்கள் தோன்றிக்கொண்டே இருந்தன. ‘கடவுள்தான் வந்திருக்காருன்னு குழந்தைக்கு எப்படித் தெரியும் ? கடவுள் எப்படி இருப்பாரு ? உங்களப் போல இருப்பாரா ? தாத்தா மாதிரி தாடி வச்சிட்டிருப்பாரா ? தாடியையெல்லாம் பாத்தா குழந்தை பயந்துடாதா ? குழந்தையை மட்டும்தான் கடவுளுக்குப் புடிக்குமா ? பெரியவங்கள புடிக்காதா ? ‘ என்று கேட்டுக்கொண்டே போனான். ஒவ்வொரு கேள்விக்கும் நான் பதில் சொல்லி முடிப்பதற்குள் அடுத்த கேள்வியை முன்வைத்துவிட்டுப் பதிலுக்காகக் காத்திருந்தான். கடைசியாக ‘அதெல்லாம் சரிப்பா, அவரு எதுக்குச் சிரிக்கணும் ? ‘ என்று கேட்டான். ‘ரெண்டு நண்பர்கள் ஒருத்தவங்கள இன்னொருத்தவங்க பாத்தா ஹலோ சொல்லி சிரிக்கற மாதிரிதாம்பா இது. இப்ப வெளியில போயிட்டு திரும்பி வரேன்னு வச்சிக்க. நாம ரெண்டுபேரும் வாசல்ல பாத்துக்கறம். பாத்ததும் சிரிச்சிக்கறமில்ல ? அந்த மாதிரி குழந்தையும் கடவுளும் பாத்ததுமே சிரிச்சிக்கறாங்க ‘ என்று சொல்லி முடித்தேன். அப்பதிலில் அவனும் ஓரளவு நிறைவடைந்ததைப்போல இருந்தது. எழுந்து விளையாடப்போய்விட்டான்.

வேறொரு சந்தர்ப்பத்தில் குடும்பத்துடன் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தோம். நாங்கள் உட்கார்ந்திருந்த பெட்டியில் இன்னொரு இளம்தம்பதியினர் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் மடியில் ஒரு குழந்தை உறங்கிக்கொண்டிருந்தது. வெளியே வேகவேகமாக நகரும் மரங்களை வேடிக்கை பார்த்தபடியிருந்த என்னை அவசரமாக அழைத்து ‘அப்பா, அந்தப் பாப்பாவுக்கு கடவுள் சிரிச்சிட்டே பூ குடுக்கறாரு ‘ என்றான். எதிர்வரிசையில் அமர்ந்திருந்த பெண்ணின் மடியில் குழந்தை உறக்கத்தில் சிரித்தபடி இருந்தது. கண்பட்டு விட்டது என்று அந்தத்தாய் நினைத்ததாலோ என்னமோ, குழந்தையின் முகத்தை அவசரமாக முந்தானையால் மூடினாள். வேறு எதையோ புதிதாகக் காட்டி அவன் கவனத்தைத் திருப்பவேண்டியதாயிற்று. அதற்கப்புறம் அவன் பார்வையில் உறக்கத்தில் சிரிக்கும் எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் இதைச் சொல்வது வாடிக்கையாகிவிட்டது. ஒருநாள் அவனுடைய அம்மா உறக்கத்தில் புன்னகை செய்ததைக்கண்டும் இதையே சொன்னான். அதுவே அவனுக்கு வருத்த்முட்டும் விஷயமாகவும் மாறிவிட்டது. ‘என்னப்பா அம்மா துாக்கத்துலயும் கடவுள் வராரு, உன் துாக்கத்துலயும் கடவுள் வராரு, எல்லார் துாக்கத்துலயும் கடவுள் வராரு. என் துாக்கத்துல மட்டும் வரவே மாட்டறாரு. நீங்கள்ளாம் பாக்கறிங்க, நான் மட்டும் பாக்கமுடியல ‘ என்று அழாத குறையாகப் புகார் செய்தான். ‘கடவுளுக்கு என்னப் புடிக்கலையா அதான் வரவே மாட்டறாரா ? ‘ என்று தேம்பத் தொடங்கினான். ‘இல்ல ராஜா, கடவுளுக்கு ஒன்ன ரொம்ப புடிக்கும்பா. அவரு உன் துாக்கத்துலயும் வராருப்பா, நாங்கள்ளாம் பாக்கறமில்ல ‘ என்று திரும்பத் திரும்பச் சொன்னபிறகு ஓரளவு அமைதியடைந்தான். அதன் பின்னரும் ‘கனவில் வருபவரை ஏன் பார்க்க முடிவதில்லை ? கனவுக்காட்சி ஏன் ஞாபகத்தில் அப்படியே நிற்பதில்லை ? ‘ என்று ஏராளமான கேள்விகளைக் கேட்டபடி இருந்தான். புன்னகை தொடர்பான ஒரு சிறிய விஷயம் அவனைப் பலதிசைகளில் யோசிக்க வைத்துவிட்டது.

குழந்தையின் பிஞ்சுமனம் உலகின் எல்லா விஷயங்களையும் ஆர்வத்துடன் கவனிக்கிறது. ஒவ்வொன்றையும் அது என்ன என்று அறிவதில் அளவற்ற உற்சாகத்தைக் காட்டுகிறது. தெரிந்துகொள்ளும் தருணத்தில் தான் ஒரு புதிய விஷயத்தை அறிந்துகொண்டோம் அல்லது கண்டுபிடித்தோம் என்கிற பெருமிதத்தில் திளைக்கிறது. கிடைத்த அறிவை ஆதாரமாகக்கொாண்டு கண்ணுக்குப் படும் மற்ற விஷயங்களை ஆய்ந்தறிய முற்படுகிறது. அப்படிப்பட்ட முனைப்பில் ஒரு புதிய விஷயத்தைக் கண்டுபிடிக்கிறது. அல்லது ஒரு புதிய சந்தேகத்தை முன்வைக்கிறது. உற்சாகமூட்டும் இத்தகு புதுப்புது சந்தேகங்களைக் கேட்கிற பல குழந்தைகளைப் பார்த்திருக்கிறேன். அவர்களுடைய கேள்விகளுக்கு அவர்கள் நிறைவடையும் விதத்தில் விடைசொல்லத் தெரியாமல் தவித்திருக்கிறேன். அப்படிப்பட்ட நேரங்களிலெல்லாம் நினைவில் படரும் ஒரு கதை பி.எஸ்.ராமையாவின் ‘நட்சத்திரக் குழந்தைகள் ‘ .

கதையின் முக்கியப் பாத்திரங்கள் ரோகிணி என்னும் குழந்தையும் அதன் தந்தை சோமசுந்தரமும். குழந்தை மீது அளவற்ற அன்புள்ளவர் தந்தை. குழந்தை கேட்கிற எல்லாக் கேள்விகளுக்கும் ஆர்வத்துடன் பதில்கள் சொல்பவர். தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே ஒருநாள் நட்சத்திரங்களைப்பற்றிப் பேச்சு இடம்பெறுகிறது. பேச்சின் உற்சாகத்தில் கடவுள்தான் நட்சத்திரங்களுக்கெல்லாம் அப்பா என்றும் அவர் ரொம்ப அழகானவர் என்றும் குழந்தைகள் ஒவ்வொரு தடவையும் நிஜம் சொல்லும்பொழுது ஒரு நட்சத்திரம் பிறக்கிறது என்றும் சொல்கிறார். குழந்தையின் மனத்தில் அந்தப் பேச்சு பசுமரத்தாணியைப்போல நன்கு ஆழமாகப் பதிந்துவிடுகிறது. நமது ஊரிலுள்ள குழந்தைகள் அனைவருமே நிஜத்தைப் பேசினால் எண்ணற்ற நட்சத்திரங்கள் பிறக்குமல்லவா என்ற கற்பனையில் உள்ளம் களிக்கிறாள் குழந்தை. தன் முதிரா உள்ளத்தில் கடவுளைப்பற்றியும் அவருடைய நட்சத்திரக் குழந்தைகளைப்பற்றியுமான கற்பனைகளை வளர்த்துக்கொள்கிறாள்.

பொழுது சாயம் நேரத்தில் வீட்டு வாசலில் இரு பக்கங்களிலும் இருக்கும் வாதா மரங்களுக்கிடையே நின்று சூரிய அஸ்தமனத்தை நீண்ட நேரம் பார்த்தபடி இருக்கிறாள். அழித்து அழித்துத் தான் எழுதும் சித்திரத்தைப்போல வானத்திலெழும் புதியபுதிய வண்ணச்சித்தரிப்புகளைக் கண்டு களிக்கிறாள். மெல்லமெல்ல இருள் கவிகிறது. முதலில் இரு மேகவடிவங்கள் மட்டுமே தெரிகின்றன. இடையில் நீலவானத்தின் அழகு கண்ணைப்பறிக்கிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் மேகக்கூட்டங்களிடையே இருக்கும் நீலப்பட்டாடையில் ஒரு சுடர் தோன்றுகிறது. அழகான நட்சத்திரம். அதைக்கண்டதுமே குழந்தையின் மனம் ஆனந்தத்தில் துள்ளுகிறது. ‘அம்மா, கடவுளுக்கு ஒரு நட்சத்திரக் குழந்தை பிறந்துவிட்டது ‘ என்று கூவுகிறாள் குழந்தை. களிப்பில் கைகளைக் கொட்டுகிறாள். அவளது கண்கள் சிரிக்கின்றன. உள்ளம் களிவெறி கொள்கிறது. தான் கண்டடைந்த ஒரு விஷயத்தை உலகத்துக்கு அறிவிக்கத் துடிக்கிறது. அம்மாவை அழைத்துக் காட்டுகிறது. ஆசையுடன் நெருங்கிச்சென்று குழந்தையை இழுத்துக் கட்டிலடங்காத காதலுடன் முத்தாடுகிறாள் அம்மா. இருட்டிவிட்டதால் வீட்டுக்குள் வருமாறு குழந்தையை அழைக்கிறாள். இன்னும் கொஞ்ச நேரம் நட்சத்திரங்கள் பிறந்துகொண்டே இருக்கும் வானத்தைப் பார்த்துக்கொண்டே இருக்க விருப்பமுற்றுத் தயங்குகிறது குழந்தை. ‘சீக்கிரம் வந்துடுடா குஞ்சு ‘ என்று செல்லம்கொஞ்சியபடி உள்ளே செல்கிறாள் தாய்.

சிறிது நேரத்தில் குழந்தையின் தந்தை வருகிறார். வாசலில் தன்னந்தனியாக வானத்தில் அழகில் லயித்தபடி நின்றிருந்த குழந்தையை உள்ளே அழைக்கிறார். நட்சத்திரச்சுடரில் பொலியும் வானத்தைக்காட்டி மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறது குழந்தை. அதே நொடியில் நிலைதடுமாறியதைப்போல ஒரு நட்சத்திரம் வானிலிருந்து கீழே விழுகிறது. அதைப் பார்த்ததும் குழந்தையின் கண்களில் கண்ணீர் பெருகுகிறது. அந்தச் சின்னஞ்சிறு இதயத்தில் விவரிக்க இயலாத, சுருக்கென்று தைக்கும் ஒரு வேதனை எழுகிறது. விம்மிவிம்மி அழுதபடி தந்தையிடம் செல்கிறது குழந்தை.

திடாரென எழுந்த குழந்தையின் அழுகைக்குக் காரணம் தெரியாமல் குழப்பம் கொள்கிறார் தந்தை. பதற்றத்துடன் என்ன என்ன என்று கேட்டபடி குழந்தையைத் துாக்கித் தோளின்மேல் சாத்திக்கொள்கிறார். அவர் கவனம் அக்குழந்தையை ஆறுதல் படுத்துவதில் குவிகிறது. தேம்பல்களூடே குழந்தை அப்பா எனக்குத் தெரிஞ்சிபோச்சு என்கிறது. ‘என்னம்மா, என்ன தெரிஞ்சி போச்சு ? ‘ என்று மறுபடியும் குழப்பம் தெளியாமலேயே வினவுகிறார் தந்தை. பதில் சொல்ல முடியாத அளவுக்கு குழந்தை தேம்பிக்கொண்டே இருக்கிறது. ‘நாம் ஒரு நிஜம் சொன்னால் ஒரு நட்சத்திரம் பிறக்கிறதுன்னு நீதானே அப்பா சொன்னே. அப்படின்னா, ஒரு நட்சத்திரம் கீழே விழுந்தா, யாரோ ஒரு பொய் சொல்லிட்டாங்கன்னுதானே அர்த்தம். எனக்கே தாங்கலையே, அழுகைஅழுகையா வருதே, கடவுளுக்கு எப்படி இருக்கும்பா ‘ என்று தேம்புகிறது கபடற்ற குழந்தை.

உலக உயிர்களைப்பற்றிய அக்கறை உள்ளவர் என்றும் அனைவரையும் கடைத்தேற்ற வேண்டுமென்ற கவலை உள்ளவர் என்றும் எல்லாராலும் நம்பப்படுபவர் கடவுள். காலம் காலமாக மக்களுடைய மனத்தில் இடம்பெற்றிருக்கும் கருத்து இது. ‘கடவுளுக்கு எவ்வளவு கவலையாக இருக்கும் ‘ என்று யோசித்துப்பார்த்து அழுகிற குழந்தையை இக்கதையில் சித்தரிக்கிறார் பி.எஸ்.ராமையா. கதையின் வெற்றி இந்தப்புள்ளியில்தான் இருக்கிறது. கடவுளுடைய கவலையைப்பற்றி துக்கப்படுகிற மனத்துக்குத்தான் குழந்தைமை என்று பெயர் போலும்.

*

சிறுகதைக்கான ‘மணிக்கொடி ‘ இதழுக்கு ஆசிரியராக இருந்தவர். நுாற்றுக் கணக்கான சிறுகதைகளை எழுதினார். ஆனந்த விகடன் இதழில் தொண்ணுாறு இதழ்களுக்கு மேல் தொடர்ச்சியாக கதைகளை எழுதியவர். மணிக்கொடி இதழை நடத்திய அனுபவங்களைத் தொகுத்து அவர் எழுதிய ‘மணிக்கொடி காலம் ‘ முக்கியமான உரைநடை நுால். அல்லயன்ஸ் கம்பெனியின் வெளியீடான ‘கதைக்கோவை ‘ என்னும் தொகைநுாலில் ‘நட்சத்திரக் குழந்தைகள் ‘ என்னும் சிறுகதை இடம்பெற்றுள்ளது.

***

paavannan@hotmail.com

Series Navigation