கசப்பும் இனிப்பும் (நா.பார்த்தசாரதியின் ‘வேப்பம்பழம் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 63)

This entry is part [part not set] of 37 in the series 20030530_Issue

பாவண்ணன்


மழைபொழியத் தொடங்கிய ஒரு ஆகஸ்டு மாதத்தில்தான் நான் முதன்முதலில் கர்நாடகத்தின் குடியேறினேன். இலையுதிர்காலம் முடிந்து மீண்டும் வசந்தம் துளிர்க்கிற ஏப்ரல் மாதத்தில் யுகாதிப்பண்டிகை வந்தது. அன்று அலுவல் இல்லை. அந்த ஏழெட்டு மாதக்காலத்துக்குள் எனக்குக் கணிசமான அளவில் கன்னட நண்பர்கள் கிடைத்தார்கள். கூடாரங்களிட்டு எல்லாரும் ஒரு முகாமாக நாங்கள் வேலை செய்வது வழக்கம். யுகாதிப்பண்டிகை வந்ததும் விடுப்பையொட்டி எல்லாரும் ஊருக்குச் சென்றுவிட்டார்கள். நான் மட்டும் கூடாரத்தில் தனிமையில் இருந்தேன். யுகாதி என்பது ஆண்டின் தொடக்கம் என்றும் அதன் முதல்நாளைத் தனிமையில் கழிப்பது அவ்வளவு நல்லதல்ல என்றும் சொல்லி அதே ஊரில் வசித்த நண்பர்கள் தத்தம் வீட்டுக்கு அழைத்தார்கள். எவ்வளவோ எடுத்துச்சொல்லி மறுத்துப்பார்த்தேன். அவர்கள் விடுவதாக இல்லை. பிறகு அவர்கள் அன்புக்கு இணங்கி வருவதாகச் சொன்னேன். எங்கே தவிர்த்துவிடுவேனோ என்று அவர்கள் தயங்கினார்கள். கையோடு அழைத்துச்செல்ல விரும்பினார்கள். வாக்களித்த பிறகு கண்டிப்பாக வருவேன் என்று சொல்லி ஒவ்வொருவர் வீட்டுக்கும் வரத் தீர்மானித்திருந்த நேரத்தையும் சொன்னேன்.

காலையில் ஒரு நண்பருடைய வீட்டுக்குச் சென்றேன். சிரித்தபடி வரவேற்று உபசரித்தார்கள். கன்னடமே என் தாய்மொழி என்பதைப்போல என் பேச்சுமொழி சுத்தமாக இருப்பதாக அந்த நண்பரின் வீட்டார்கள் சொல்லி மகிழ்ந்தார்கள். வீட்டு உறுப்பினர்கள் எல்லாருமே என்னை அடுத்தடுத்து நெருங்கி என் கையில் வேப்பிலையும் வெல்லமும் கொடுத்தார்கள். வாயிலிட்டுச் சாப்பிடச் சொன்னார்கள். என்னையும் எடுத்துத் தரச்சொல்லி தட்டை எடுத்து நீட்டினார்கள். அவர்கள் சொன்னபடியே செய்தேன். கொடுத்ததும் வாங்கி வாயில் போட்டுக்கொண்டார்கள். இதற்குப் பின்னணியாக ஏதாவது பொருள் இருக்கக்கூடும் என்ற தோன்றியது. சிறிது நேரமான பிறகு மெதுவாக நண்பரிடம் அதைப்பற்றிக் கேட்டேன். அதற்குள் என்னிடம் ஒப்பட்டு எனப்படும் போளி இனிப்பைக் கொண்ட தட்டு நீட்டப்பட்டது. பிறகு நண்பர் சொன்னார்.

‘காலம்காலமாக பின்பற்றப்பட்டு வரும் பழக்கம் இது. குறியீட்டு அளவில் இதற்கு மிகப்பெரிய முக்கியத்துவம் உள்ளது. வேப்பிலை என்பது வாழ்க்கையில் சிற்சில எதிர்பாராத சந்தர்ப்பங்களில் நடந்துவிடுகிற கசப்பான அனுபவங்களைக் குறிக்கும். வெல்லம் என்பது இனிய அனுபங்களைக் குறிக்கும். கசப்போ இனிப்போ எல்லாவற்றையும் ஒரே நிலையில் எடுத்துக்கொள்ளும் பக்குவம் நமக்கு வேண்டும் என்பதற்கு அடையாளமாகத்தான் வேப்பிலையையும் வெல்லத்தையும் இணைத்துத் தரும் ஏற்பாடு உருவாகியிருக்கிறது. ‘

இந்த நம்பிக்கையைக் கேட்பதற்கே எனக்குச் சந்தோஷமாக இருந்தது. அதன் ஆழமான பொருள் என் மனத்தில் நன்கு பதிந்துவிட்டது. அன்று நண்பகலும் மாலையும் ஏற்கனவே குறிப்பிட்ட நேரங்களில் நண்பர்களுடைய வீடுகளுக்குச் சென்று அங்கேயும் வேப்பிலையும் வெல்லமும் தின்று வந்தேன். நான் கொடுத்ததை அவர்களும் மகிழ்வோடு பெற்றுக் கொண்டார்கள்.

வேம்பு கசக்கும் என்பது தெரிந்த விஷயம்தான். ஆனால் அதை வாழ்வின் கசப்போடு ஒப்பிட்டுப் பேசியது ஒரு கவிதையைப் படிப்பதைப்போல இருந்தது. பல சமயங்களில் அதிகாலை அல்லது இரவு நடைநேரத்தில் இந்த மண்ணில் காலடி எடுத்துவைத்ததை நினைத்துக்கொள்வேன். அப்போதெல்லாம் இந்த நிகழ்ச்சியும் நினைவுக்கு வரும். கடந்த இருபத்துமூன்று ஆண்டுகளில் இந்த மண்ணில் எவ்வளவோ நல்ல விஷயங்களைப் பார்த்திருக்கிறேன். எவ்வளவோ காயங்களையும் அவமானங்களையும் அனுபவித்திருக்கிறேன். அப்போதெல்லாம் வேப்பிலையையும் வெல்லத்தையும் கொடுத்துச் சமமாகப் பாவிக்கக் கற்றுக்கொடுத்தது இந்த மண்தானே என்கிற எண்ணம் எழுந்து எல்லாவற்றையும் புன்னகையுடன் விழுங்க வைத்துவிடும். அப்படி விழுங்க நேர்ந்த ஒரு சந்தர்ப்பத்தில் வேப்பம்பழத்தை எடுத்துத் தின்பதையே தன் பழக்கமாகக் கொண்ட ஒரு சிறுமியின் மன ஓட்டத்தை எழுதிய நா.பார்த்தசாரியின் கதையொன்றையும் நினைத்துக்கொண்டேன். தற்செயலான விஷயம் அது.

கல்லுாரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற சிற்சபேசன் மன அமைதியை விரும்பி ஒரு கிராமத்தில் குடியேறுவதிலிருந்து அக்கதை தொடங்குகிறது. குடும்பத்தில் அவரும் அவர் மனைவியும் மட்டுமே இருக்கிறார்கள். குடிவந்த மறுநாள் அதிகாலை அழகைச் சுவைத்தபடி வாசலில் இருக்கும் வேப்பமரத்தடியில் நின்றிருக்கும்போது பதின்மூன்று அல்லது பதினான்கு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி நெருங்கி வந்து வணங்குகிறாள். அழுக்குச் சிற்றாடையும் கிழிந்த தாவணியுமாக ஏழைமைக் கோலத்தில் இருந்த அச்சிறுமியைக் கண்டு பேராசிரியர் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும்போது தனக்கு வீடு வாசலைப் பெருக்கிச் சுத்தமாக வைத்திருக்கத் தெரியுமென்றும் சம்பளமாக எவ்வளவு கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள முடியுமென்றும் சொல்கிறாள். மேலும் தாயும் தந்தையுமற்ற தனக்கு தொடக்கப்பள்ளியில் படிக்கக்கூடிய ஒரு தம்பி மட்டும் இருப்பதாகவும் தான் உழைத்து அவனைக் காப்பாற்றுவதாகவும் பணிவுடன் சொல்கிறாள்.

பேராசிரியர் ஆதரவுடன் அவளுடன் பேச்சைத் தொடங்குகிறார். அவள் பெயர் பட்டு. பெற்றோர்கள் இல்லை. உறவு என்று சொல்லிக்கொள்ள ஒன்றிரண்டு பேர் வெளியூரில் இருந்தாலும் அவர்களால் உதவி எதுவுமில்லை. கிராமத்தில் இருக்கிற முன்சீப்பின் ஆலோசனையின் பேரில்தான் நாலு வீட்டில் எடுபிடி காரியங்கள் செய்து தம்பியைப் படிக்க வைக்கிறாள். தம்பி படித்துப் பெரிய ஆளானதும் வாழ்வில் பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி தானாக விழுந்துவிடும் என்பது அவள் நம்பிக்கை. அவள் பேச்சும் சுறுசுறுப்பும் மனத்தைக் கவரத் தன் வீட்டிலும் அவள் தாராளமாக வேலை செய்யலாம் என்று அனுமதி கொடுக்கிறார் பேராசிரியர். அடுத்த தருணமே நெடுநாள் பழகிய வேலைக்காரியைப்போல சிற்றாடை நுனியை இழுத்துச் செருகிக்கொண்டு விளக்குமாறால் வாசலைக் கூட்டிச் சுத்தப்படுத்தி கோலம் போடத் தொடங்கிவிடுகிறாள் சிறுமி.

சிற்சபேசன் வீட்டுக்குள் போய் காப்பி குடித்துவிட்டு, மனைவியிடம் வேலைக்காரச் சிறுமி கிடைத்த பெருமையை அளந்துவிட்டுத் திரும்பவும் வாசலுக்கு வருகிறார். அப்போது வாசலில் விளக்குமாறு புரளும் பெருக்கல் ஓசை கேட்கவில்லை. வேப்பமரத்தடியில் விழுந்து கிடக்கிற பழங்களைக் குனிந்து எடுத்து ஒவ்வொன்றாக ஊதி வாயில் போட்டுச் சுவைத்துத் துப்பிக் கொண்டிருக்கிறாள் அவள். ஆச்சரியத்தில் உறைந்து போகும் பேராசிரியர் ‘ஐயையோ, வேப்பம் பழத்தைச் சாப்பிடுகிறாயே, கசக்கவில்லையா உனக்கு ? ‘

என்று கேட்கிறார். சிறுமியோ புன்னகையுடன் ‘பழமா இருக்கும்போது சாப்பிட்டா கசப்பு தெரியாது சார், அசட்டுத் தித்திப்பா ஒரு இனிப்பு இருக்கும். மென்னு கடிக்காம லேசா சப்பிச் சுவைத்துவிட்டுத் துப்பிடணும் ‘ என்கிறாள். ஆவலில் ஒரு பழத்தை எடுத்து வாயில் போட்டுக்கொண்ட மறுகணமே கசப்பு தாங்காமல் துப்பி விடுகிறார் பேராசிரியர். வேப்பம்பழத்தை சாக்லெட்டாக விழுங்கும் சிறுமியை அதிசயமாகப் பார்த்தபடி வாயைக்கழுவ உள்ளே செல்கிறார்.

சிறுமிக்கு ஊர்முழுக்க நல்ல பேர்தான். யார் எந்தக் காரியத்தைச் சொன்னாலும் தட்டுவதில்லை. யாரிடமும் எதற்காகவும் அலுத்துக் கொள்வதில்லை. ஒருநாள் மாலைநடையின் போது ஊர்க்கோடியை அடைகிறபோது சிறுமியின் வீட்டைக் கவனிக்கிறார் பேராசிரியர். இடிந்த சுவர்கள். வாசலில் புதர்கள். தாறுமாறாகச் செடிகள் முளைத்துக் காடாக இருக்கின்றன. ‘ஊர்க்காரங்க வீடெல்லாம் வாசல் தெளிச்சுக் கோலம் போடறியே, உன் வீட்டிலே மட்டும் வாசலெல்லாம் எருக்கஞ்செடியா முளைக்க விட்டிருக்கிறியே ‘ என்று கேட்கிறார். ‘அதுக்கு நேரம் ஏது சார் ? எனக்குத்தான் கோழி கூவறதுக்கு முன்னேயிருந்து இருட்டறவரிக்கும் வாடிக்கைக்காரங்க வீடுங்கள்ள வேலை சரியா இருக்கே. இங்கே தம்பிக்கும் எனக்கும் சாப்பாடு வேறே சமைக்கணுமே ‘ என்று காரணம் சொல்கிறாள் சிறுமி.

ஏறத்தாழ ஒரு ஆண்டு ஓடிவிடுகிறது. திடுமென ஒருநாள் சிறுமி வாசலைக்கூட்ட வரவில்லை. தாமதமாக அவள் பூப்படைந்திருக்கிற சங்கதி தெரிய வருகிறது. பேராசிரியருக்குத் திகைப்பு ஒருபுறம். மகிழ்ச்சி ஒருபுறம். இரண்டையுமே வெளிக்காட்டிக்கொள்ளாமல் அச்சிறுமிக்காக அனுதாபப் படுகிறார். உறவுக்காரர்களால் எந்தப் பயனுமில்லை என்று அச்சிறுமி சொன்னதெல்லாம் நினைவுக்கு வருகிறது. புதுச்சிற்றாடையும் கண்ணாடி வளையலும் மஞ்சள் குங்குமமும் வாங்கிக்கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வரும்படி மனைவியைக் கேட்டுக்கொள்கிறார். மனைவியும் அவ்வாறே செய்கிறாள்.

மறுபடியும் வீட்டுவேலைக்கு வருவாளோ மாட்டாளோ என்று இருவருமே பேசிக்கொள்கிறார்கள். கிராமத்து நடைமுறைப்படி அவள் வெளியே வராமலேயே வீட்டுக்குள் அடைபட நேரும் என்று நினைக்கிறார்கள். இனிமேல் எப்படிக் காலம் தள்ளப்போகிறார்களோ என்று வருந்துகிறார்கள். ஆனால் பட்டு இந்த மாதிரி எதையுமே யோசிக்கவில்லை. நாலாவது நாள் விடிந்ததுமே வாசல்பெருக்க வந்துவிடுகிறாள். வேலைகளை முடிக்கும் தருணத்தில் பேராசிரியர் தயங்கித் தயங்கி பெரிய பெண்ணான பிறகு வீட்டு வேலைக்குப் போவதைப் பற்றி ஊர் நாலு தினுசாப் பேசாதா என்று தயக்கத்துடன் கேட்கிறார். ஆனால் அவளுக்கு எதைப்பற்றியும் கவலையில்லை. ‘பட்டினி கிடந்தா ஏன்னு கேக்க இந்த ஊராருக்குத் துப்பு இருக்கா ? அவுங்க என்ன பேசினாலும் கேட்க நான் தயாராயில்ல சார் ‘ என்று சொல்கிறாள். பிறகு வழக்கம்போல மரத்தடியில் உதிர்ந்திருந்த வேப்பம்பழங்களை எடுத்துத் தின்கிறாள்.

வீட்டுக்குள் செல்லத் தயாரான பேராசிரியர் அவள் பழம் தின்னுவதைப் பார்த்து அவள் பழக்கத்தைக் கேலி செய்கிறார். அவளும் ‘சின்ன வயசிலேருந்தே எனக்கு இந்தக் கசப்பிலே ஒரு பிரியம். இந்தக் கசப்பிலே ஒரு அசட்டு இனிப்பும் இருக்கு சார் ‘ என்று களங்கமற்றுச் சிரித்தபடி சொல்கிறாள்.

வேப்பம்பழம் சாப்பிடும் பழக்கம் தொடக்கத்தில் ஒரு சிறிய குறிப்பாக இடம்பெற்றாலும் கதையின் போக்கில் அது அவளுடைய கசப்புகள் நிறைந்த வாழ்வையே குறிப்பிடுகிற ஒரு வலிமையான படிமமாக இயல்பாக மாறிவிடுவதை இக்கதையின் வெற்றியாகக் குறிப்பிட வேண்டும். வழக்கமாக குறிப்புப்பொருளை விரித்தெழுதிவிடும் பழக்கமுள்ள நா.பார்த்தசாரதி அதைச் செய்யாமல் மெளனமாக விட்டிருப்பதே இக்கதைக்கு அழகு சேர்க்கிறது.

*

அறுபதுகளிலும் எழுபதுகளிலும் தமிழ்வாசகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட எழுத்தாளராக விளங்கியவர் நா.பார்த்தசாரதி. அவர் எழுதிய ‘குறிஞ்சிமலர் ‘ அரவிந்தனாக லட்சியத்துடன் தானும் விளங்கவேண்டும் என்று எண்ணாத லட்சிய இளைஞர்கள் அன்று மிகவும் குறைவு. சமுதாய வீதியிலே, பொன்விலங்கு, மணிபல்லவம் ஆகியவை இவருடைய பிற புகழ்பெற்ற லட்சியப்படைப்புகள். 1960 ஆம் ஆண்டில் தமிழ்ப்புத்தகாலயத்தின் வெளியீடாக வந்த ‘காலத்துக்கு வணக்கம் ‘ என்னும் சிறுகதைத் தொகுதியில் ‘வேப்பம்பழம் ‘ என்னும் கதை இடம்பெற்றிருக்கிறது.

***

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்