கசப்புகளைக் கரைக்கும் குழந்தைமை -கடற்கரய் கவிதைகள் அறிமுகம்

This entry is part [part not set] of 39 in the series 20050203_Issue

பாவண்ணன்


அன்றாடச் சுமைகளின் அலுப்புகளையும் கசப்புகளையும் முன்வைக்கும் கவிதைகள் தமிழில் ஏராளமாக உள்ளன. அவற்றை ஒதுக்கி சுமையற்றும் கற்பனையும் களிப்பும் மிகுந்ததாகவும் மனத்தை வசப்படுத்திக்கொள்ளும் வழியொன்றைக் கண்டடைகிற கவிதைகளை இத்தொகுதியில் பகிர்ந்துகொள்கிறார் கடற்கரய். அதனாலேயே இத்தொகுதியைப் படிக்கப்படிக்க உற்சாகமாக உள்ளது. கடற்கரய்யை முக்கியமான இளங்கவிஞராய் அடையாளப்படுத்துபவையாக உள்ளன இந்த முயற்சிகள். அவர் முன்வைக்கிற மாற்றுவழி குழந்தைமையைத் தழுவுவது. குழந்தைமை மென்மையானது. கருணை மிகுந்தது. கள்ளமில்லாதது. ஆனல் மனத்தால் அம்மாற்றுவழியில் வெகுதொலைவு நடக்கமுடிவதில்லை என்பதுதான் துரதிருஷ்டவசமானது. அறிவின் பாரமோ, வாழ்வின் பாரமோ, மீண்டும் அன்றாடங்களின் சக்கரப்பற்களில் கொண்டுவந்து மாட்டிவிடுகிறது. இரு விளிம்புகளிடையே ஓய்வற்று அலைவதாக உள்ளது வாழ்க்கை.

இத்தொகுதியில் 36 கவிதைகள் உள்ளன. இவை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தனிக்கவிதைகள் என்ற பிரிவில் 24 கவிதைகளும் குறுங்கவிதைகள் என்னும் பிரிவில் 8 கவிதைகளும் நெடுங்கவிதைகள் என்னும் பிரிவில் 4 கவிதைகளும் அடங்கியுள்ளன. எல்லாக் கவிதைகளையும் ஒருசேரப் படித்துமுடித்தபிறகு குழந்தைமைக்கான கனவு என்பதையே இவரது படைப்பு மையமாக எடுத்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது. குழந்தைமை என்பது ஒருவித கட்டற்ற சுதந்தரம். அறிவின் சுமை ஏதுமற்ற வெளி. கருணை. சிரிப்பு. சுகம். ஆனந்தம். இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். கடற்கரய் விரும்புவது இவை மட்டுமல்ல. இவற்றையும் உள்ளடக்கிய இன்னும் பெரிய அழகான உலகம்.

தனிக்கவிதைப் பிரிவில் முக்கியமான கவிதை ‘குதிரை சவாரி ‘. குழந்தைகளுக்கு மட்டுமே சாத்தியமான ஒரு கற்பனை இதில் நுட்பமாக கையாளப்பட்டுள்ளது. ஒரு புத்தக அட்டையில் காணப்படும் குதிரையின் சித்திரத்துடன் இக்கவிதை தொடங்குகிறது. சித்திரத்தில் சவாரி செய்துசெய்து பழக்கத்தால் சலித்துப்போய் தரையில் இறங்குகிறது அக்குதிரை. அதை வசப்படுத்துபவன் மனிதன். அவனுடைய இதமான வார்த்தைகளும் நீவுதல்களும் குதிரைக்குச் சுகமான அனுபவமாக உள்ளது. அவன் தீண்டுதலிலும் நீவுதல்களிலும் அக்குதிரையைத் தனக்கு இணக்கமாக மாற்றிக்கொள்ளும் முயற்சி ஒளிந்திருப்பதைத் தாமதமாக அறிகிறது குதிரை. பழக்கத்தின் சலிப்பை தாங்கவியலாமல் சுதந்தரத்தை நாடி தரைக்கு வந்த முயற்சி இன்னொரு பழக்கத்தின் சொடுக்கல்களுக்குள் தள்ளும் ஆபத்தைத் தேடித் தருவதை துக்கமுடன் உணர்ந்து இறங்கிவந்த இடத்துக்கே மறுபடியும் சென்று சேர்கிறது. அப்படியென்றால் சுதந்தரம் ? புதுமையில் இளகிக் கரையும் மனத்தில் அந்த எண்ணம் சற்றே அடங்கிப் போகிறது. மீண்டும் ஏதோ ஒரு முறை அதன் மனம் சலிப்பை உணரக்கூடும். அப்போது அது மீண்டும் இறங்கி வரலாம். அன்பால் வருடிக்கொடுக்கும் மனிதன் யாரேனும் அப்போதும் எங்காவது எதிர்ப்படக்கூடும். அவன் தீண்டுதலிலும் பயன்படுத்திக்கொள்ளும் தந்திரமும் வசப்படுத்தி நுகரும் நோக்கமும் புலப்படக்கூடும். மறுபடியும் ஒரு பெருமூச்சோடு அது பழைய இடத்துக்கே செல்லக்கூடும். அப்படியென்றால் அதன் சுதந்தரம் ? இது இக்கவிதையை அசைபோட அசைபோட நமக்கு எழும் எண்ணம். இதைத் தொடர்ந்து எங்கெங்கும் வசப்படுத்தும் தந்திரங்களும் நோக்கங்களும் நிறைந்த ஊரில் படத்திலிருந்து தரைக்கும் தரையிலிருந்து படத்துக்கும் இடையேயான பயணத்துக்கு முடிவே இருக்கப்போவதில்லை என்ற எண்ணமும் எழுகிறது. அப்போது நாமே ஒரு கேள்வியை உருவாக்கிக்கொள்கிறோம். அடிப்படையில் சுதந்தரம் என்பதுதான் என்ன ? கவித்துவம் மிளிரும் இக்கேள்வியின் முன் நாம் எந்தப் பதிலை வைக்கமுடியும் ? அதே நேரத்தில் ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளிக்கும் அந்த இன்னொரு புள்ளியிலிருந்து மற்றோர் புள்ளிக்கும் அல்லது பழைய புள்ளிக்குமிடையே மாறிமாறி நிகழ்த்தும் பயணங்களுக்கும் தாவல்களுக்கும் அளவே இல்லை. இடையறாது ஒலிக்கும் குளம்புகளின் ஓசை அதையே உணர்த்துகிறது. ஒருபோதும் சுதந்தரத்தை வரையறுக்க முடிவதில்லை. இதுவாக இருக்குமா அதுவாக இருக்குமா என்று அந்தந்த சந்தர்ப்பங்களுக்குத் தகுந்தவிதமாக தற்காலிகமான பொருளாக மட்டுமே வரையறுக்கமுடிகிறது. வரையறுத்துக் கொள்ள முடியாத துயரத்துக்கும் வரையறுத்துப் பார்க்கும் ஆர்வத்துக்கும் இடையே ஊடாடுகிறது மானுடனின் வாழ்க்கைப் பயணம். அதைச் சுட்டிக்காட்டும் ஒரு புள்ளியாக இருக்கிறது குதிரைச்சவாரி. தரையிலிருந்து சித்திரத்துக்குள் சென்றுசேரும் மனிதனின் ஆவலைக் குறிப்பிடும் ‘தைலவண்ண மனிதன் ‘ கவிதையில் வெளிப்படுவதும் இத்தகு பயணத்தின் இன்னொரு கிளைப்பாதையே.

சுதந்தர உலகுக்கான விழைவை வெளிப்படுத்தும் இன்னொரு கவிதை ‘வெட்டுக்கிளி மதுக்குவளை ‘. ஒரு கோப்பையளவு மதுநீரைக் கொண்டு தன் ஆகாயத்தை உருவாக்கிக்கொள்ள விரும்பும் மனிதன் இக்கவிதையில் வெளிப்படுகிறான். அவன் ஏற் கனவே நின்றுகொண்டிருப்பதும் உலவிக்கொண்டிருப்பதும் இன்னொரு ஆகாயத்தின் கீழேதான். ஆனால் அந்த ஆகாயத்தை அவன் மனம் தன்னுடையதென முழு ஈடுபாட்டோடு தழுவிக்கொள்வதில் ஏதோ தடையிருக்கிறது. அவனுடைய எதிர்பார்ப்புகள் சிலவற்றை அந்த ஆகாயம் முழுமைப்படுத்தவில்லை. ஏதோ கசப்பு. ஏதோ துயரம். இனம்புரியாத வலி. அல்லது சொல்லமுடியாத அலுப்பு. யாரோ உருவாக்கிய ஆகாயத்தின் கீழே தன்னை நினைத்துக்கொள்ளமுடியாது என்ற எண்ணம் எழுந்துவிடுகிறது. ஆகையால் தனக்கே தனக்கென்ற ஓர் ஆகாயத்தை உருவாக்கிக்கொள்ள உத்வேகம் கொள்கிறான். தனக்கு மட்டுமேயான ஓர் ஆகாயத்தை உருவாக்கி, தான் மட்டுமே அங்கு உலவி , ஆனந்தம் கொள்ளும்போதுதான் தன் ஆழ்மனத்தில் புதைந்திருக்கும் விழைவு நிறைவேறும் என்று அவன் ஆழமாக நம்புகிறான். அதன் செயல்பாடுதான் அவன் மதுககோப்பையில் ஆகாயத்தை உருவாக்குகிறான். அந்த ஆகாயம் அவனுக்குச் சிறகுகளைக் கொடுக்கிறது. எங்கோ துாக்கிச் செல்கிறது. அதில் ஒரு துண்டாக ஆனந்தத்துடன் மிதக்கிறான் அவன்.

கோப்பை காலியானதும் ஆகாயமும் மறைந்துபோகும் என்ற உண்மை தெரியாதவனல்ல மானுடன். ஆனாலும் தன்னால் உருவாக்கமுடிகிற ஆகாயத்தில் சிறிது காலமேனும் சுகமாகத் திரிந்த நிறைவை அடைவதில் இடையறாத ஏக்கமுள்ளவனாக இருக்கிறான். சொந்த ஆகாயத்தில் பெறமுடியாத சுகத்தையும் நிம்மதியையும் புனைவு ஆகாயத்தில் பெற்றுக் களிக்கும் விழைவை சுதந்தரத்துக்கான உள்ளார்ந்த நாட்டமென்று அழைக்காமல் வேறெப்படி அழைப்பது ? எதார்த்தம் அலுத்துப் போவது மானுடனுக்கு மட்டுமல்ல, பறந்து திரிகிற வெட்டுக்கிளிகளுக்கும் அலுப்புண்டு போலும். அதுவும் அந்தக் கோப்பைக்குள் விழும்போது அந்த எண்ணம் எழுவதைத் தடுக்கமுடியவில்லை. உயிர்கள் அனைத்துக்குமே இந்த ஆகாயம் அலுப்பைத் தருவதும் புனைவு ஆகாயம் சுகம் தருவதும் விசித்திர முரணாக இருக்கிறது. வாழ்க்கையே புரிந்துகொள்ளமுடியாத புதிராக எஞ்சுகிறது.

நகரத்தை மிருதுவாக வைத்திருக்கும் காகத்தின் கருணையைப் பறைசாற்றும் ‘வெயில்காகம் ‘ கவிதையும் பறவையின் உயிரைக் காக்கப் பதறும் குழந்தையின் கருணையை முன்வைக்கும் ‘பறவைகள் அழகை கவிதையில் ரசிப்பவன் ‘ கவிதையும் உணர்ச்சிமோதல்கள் மிகுந்த கவித்துவத் தருணத்தை முன்வைக்கின்றன. அவை கொடுக்கும் அனுபவம் என்றென்றும் அசைபோட்டு மகிழத்தக்கவை.

குறுங்கவிதை பகுதியில் முக்கியமான ஒரு கவிதை ‘விண்மீன் ‘. கவிதையில் வாழ்ந்து சலித்த ஒரு விண்மீன் விழுகிறது. கைப்பற்றி எடுக்கிறான் ஒரு சிறுவன். அவனுக்கு அது ஒரு பெரும் சாகச உணர்வைக் கொடுக்கிறது. பெறமுடியாத ஒன்றைப் பெற்றுவிட்டதைப்போல மனம் விம்முகிறது. கண்டெடுத்துப் பராமரித்துக் காக்கும் பெருமிதம் கண்களில் வழிகிறது. இதனாலேயே அவன் முகத்தில் தேவதையைப்போன்ற மலர்ச்சி படர்கிறது. எல்லாமே சிறிது காலம்தான். விண்மீனைச் சுமப்பதோ அல்லது காத்துக்கொண்டிருப்பதோ அவனால் எப்போதும் செய்யமுடிகிற காரியமாக இருப்பதில்லை. அலுப்பும் சலிப்புமான காரியமாகக்கூட பட்டிருக்கக்கூடும். கைநோகத் துாக்கி எறிந்துவிட்டு சுதந்தரமாக கைவீசிப் போகிறான். விழுந்த இடத்தில் விண்மீன் இல்லை. இக்குறிப்போடு கவிதை முடியும்போது வாசக மனம் எங்கே போயிருக்கக்கூடும் அந்த விண்மீன் என்ற கேள்வியோடு துள்ளியெழுகிறது. எடுத்தது உண்மை. வைத்திருந்ததும் உண்மை. வீசியெறிந்ததும் உண்மை. போன இடம் எது என்பது மட்டுமே புதிராக எப்படி இருக்கமுடியும். கேள்விகளைப் பின்பற்றிச் சென்றபடி இருக்கும் தருணத்தில் தற்செயலாக அந்தப் புதிரின் முடிச்சு அவிழ்கிறது. அதை எடுத்துக்கொண்டது இன்னொரு சிறுவன் அல்லது சிறுமியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. அவர்களும் சிறிதுகாலம் வசப்படுத்தி வைத்திருந்து மகிழ்ந்து, பிறகு சலிப்பு உருவானதும் கைநோக மீண்டும் வீசியெறியலாம். வீசி எறிதலுக்கு கணக்கே இல்லை. மாறும் கைகளுக்கும் அளவே இல்லை. விண்மீன்கள் உருண்டுகொண்டே இருக்கின்றன. கவிதை மெல்லமெல்ல தன்னைத் தானே விரிவாக்கியபடி இருக்கிறது. வாசிக்கவும் நல்ல அனுபவமாக உள்ளது. யார் அல்லது எது அந்த விண்மீன் ? சலிப்பு உருவாவது எதனால் ? இக்கேள்விகளுடன் பயணம் செய்யும்போது வாசகர்களால் மேலும் பல வாசல்களைக் கண்டடையமுடியும்.

நெடுங்கவிதைப் பிரிவில் தீட்டியிருக்கும் ‘குழந்தைச் சித்திரம் ‘ உயிர்த்துடிப்புடன் உள்ளது. பெரியவர்களின் பகுத்தறிவும் மேதைமையும் கூடிய மனத்தையும் தெய்வத்தன்மையும் புனைவுகளும் நிறைந்த சின்னஞ்சிறு குழந்தைகளின் மலர்போன்ற மென்மையையும் ஒவ்வொரு கட்டத்திலும் மாற்றிமாற்றிக் காட்டிக்கொண்டே செல்கிறது கவிதை. ஒரு சிறிய கோடு கிழித்து அதை வானம் என்று நம்பும் குழந்தை. குழந்தை என்றும் பாராமல் தர்க்கரீதியாக அதற்கு உண்மையைப் புகட்டும் ஆவேசத்தில் அது வானமே இல்லை என்று வலியுறுத்த முயற்சிசெய்கிறார்கள் பெரியவர்கள். அச்சத்தில் அவர்களைக் குழந்தைகளின் அருகில் நெருங்கவேண்டாம் என்று யாசிக்கிறது கவிதை வரி. ஆனாலும் உலகம் அப்படி எந்த வரிக்கும் கட்டுப்பட்டு இருப்பதில்லை. பெரியவர்கள் குழந்தைகளின் உலகில் உரிமையோடு சகஜமாக பிரவேசிக்கிறார்கள். குளிர்ந்த நீரை மறுக்கிறார்கள். இனிய காற்றைத் தடை செய்கிறார்கள். மழையின் சாரலுக்கு ஏங்கி நிற்பதைத் தடுக்கிறார்கள். கைநீட்டிக்கூட மழைநீரை உள்ளங்கைகளில் ஏந்திக்கொள்ளத் தடைவிதிக்கிறார்கள். சதாகாலமும் மரவட்டைபோல சுருண்டு கிடக்க வைக்கிறார்கள். காகிதக்கப்பல்களை அவர்களால் தண்ணீரில் விடமுடிவதில்லை. கண்ணீரில் மட்டுமே மிதக்கவிட வேண்டியிருக்கிறது. எல்லாப் பாடங்களையும் கச்சிதமாக ஏற்றிஏற்றி குழந்தைகளை மெல்லமெல்ல பெரியவர்களாக மாற்றுகிறார்கள் பெரியவர்கள். பெரியவர்களானதும் குழந்தைகள் தலைநிறைய சட்டங்களோடும் விதிகளோடும் அலைகிறார்கள். பிறகு, அடுத்த தலைமுறைக் குழந்தைகள் அருகில் செல்கிறார்கள். எதற்காக ? பெரியவர்கள் என்னும் தகுதிக்குப் பொருத்தமானவர்களாக அவர்களை மாற்றுவதற்கு. என்ன சோகம் பாருங்கள். ரசனைக்கும் ஆனந்தத்துக்கும் மென்மைக்கும் இடமின்றி தொடர்ந்து பெரியவர்களாலேயே உலகம் நிரம்பிக்கொண்டே போகுமென்றால் குழந்தைமைக்கு எந்த இடம் மிஞ்சும் ? குருவிக்காக கலங்கி கருணைகொள்ளும் குழந்தைமை இல்லாத உலகை எண் ணிப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

‘வீடு ‘ என்னும் நெடுங்கவிதையில் நகுலனின் சாயலில் தற்செயலாக வந்துவிழுந்துள்ள ‘யாருமில்லாத வீட்டில் யார் யாரோ இருக்கிறார்கள் ‘ என்னும் வரிகள் பல திசைகளில் எண்ணங்களை எழுப்பவல்லவை. மீன் வியாபாரிகள் கவிதையில் இடம்பெறும் ‘மீனும் நீந்தியது நிலவும் நீந்தியது ஒரே இடத்தில் ‘ என்னும் வரியும் இத்தகையதே.

( விண்மீன் விழுந்த இடம்- கவிதைத்தொகுதி. கடற்கரய், காவ்யா வெளியீடு, 14, முதல் குறுக்குத்தெரு, டிரஸ்டுபுரம், கோடம்பாக்கம், சென்னை-24, விலை. ரூ40)

Series Navigation