ஒழுக்கம்

This entry is part [part not set] of 30 in the series 20021230_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


பெண்களை அரையும் குறையுமாகக் காட்டி அலுப்பும் கடுப்பும் உண்டு பண்ணும் பலரக விளம்பரங்களுக்கிடையில் பயனளிக்கும் சில நிகழ்ச்சிகளும் தொலைக்காட்சியில் வரத்தான் செய்கின்றன. அப்படியான ஒரு நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான் மயில்வாகனம். அதற்கு முன் முடிவடைந்திருந்த சினிமா நிகழ்ச்சிக்கு பக்கத்து வீடு அன்னம்மா ஆச்சியோடு சேர்த்து ஹவுஸ்புல்லாகியிருந்த இடம் இப்போது அவனை மட்டும் திடாரெனத் தனியே விட்டு வெறிச்சோடியிருந்தது.

அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. இது போன்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை யார்தான் மினக்கெட்டுப் பார்க்கப் போகிறார்கள்! அட்லீஸ்ற் அரசியலைப் பற்றி இருந்தாலாவது அவர்களின் வாய்ச்சண்டைகளைப் பார்க்கக் குந்தியிருக்கலாம். மூக்குக் கண்ணாடி அணிந்த ஐம்பதைத் தாண்டிவிட்ட நாலு பேர் வட்டமிட்டு இருந்து கொண்டு வாய்க்குள் நுழையாத ஒரு நோயைப் பற்றி மாறி மாறிக் கதைத்துக் கொண்டிருக்கும் இது போன்ற போர் அடிக்கும் நிகழ்ச்சியைப் பார்ப்பதென்றால் ஒன்று வேலை இல்லாதவனாயிருக்க வேண்டும் அல்லது வெளியே போக விடாமல் மழை பெய்து கொண்டிருக்க வேண்டும்.

வெளியே மழை பெய்து கொண்டிருந்தது!

மயில் என அழைக்கப்படும் மயில்வாகனம் மழைக்கூதலுக்கு மொறுமொறுப்பாகக் கொறிப்பதற்கு கடலை கிடலை கிடைத்தால் நல்லாயிருக்கும் என எண்ணினான். அம்மாவை நச்சரிக்க வேண்டும்! ரீவியை நிறுத்த எழுந்தான். அப்போது பார்த்து அந்த முகத்தை பெரிதாக கிட்டக் காட்டியது ரீவி.

அட எங்க ஊர் ஆள்..! அவர் அரசாங்கத்தில் பெரிய அதிகாரி. பெயர் வடிவேல். வேறு எங்கோ இருந்து மாற்றலாகி இங்கு வந்தவர். அவரது மகள் பாகீரதி கூட சென்ற் மேரீசில்தான் படிக்கிறாள். சும்மா சொல்லக்கூடாது வளப்பமான அழகு.

உள்ளுரில் அவருக்கு நல்ல மதிப்பு. அரச கடமையில் ஆள் எப்படியோ தெரியாது. பள்ளிக்கூட விழாக்களில் கட்டாயம் அவரது பெயர் இருக்கும். கொஞ்சம் அலுப்ப+ட்டும் அறுவைக் கேஸ்தான். ஆனால் பொடியன்களுக்கு மேடையில் நல்ல அறிவுரை வழங்குவார். பொடியன்கள் மத்தியில் பாகீரதியின் அப்பா என்ற முறையிலும் மானசீகமான தனி மரியாதை இருந்தது. ரீவியளவிலும் அவரது கொடி பறப்பதை இன்றுதான் மயில் கண்டான். ஒரு பிரத்தியேக ஒட்டுதல் உடனடியாக ஏற்பட> மிகுந்த அக்கறையோடு அந்த நிகழ்ச்சியைப் பார்க்கத் தொடங்கினான் இப்போது.

உரையாடல் எயிட்ஸ் நோயைப் பற்றியது. நால்வரில் ஒருவர் டாக்டர். ஒரு பத்திரிகை ஆசிரியர். ஓருவர் பல்கலைக்கழக புரொபசர். மற்றவர் வடிவேல் ஐயா. நெறியோடு பாதுகாக்கப்பட வேண்டிய பாலுணர்வுப் புத்தகத்தின் சீரழிந்த பக்கங்கள் அங்கே சித்தரிக்கப்பட்டன. 1979ல் முதலாவது எயிட்ஸ் நோயாளி தோன்றினான். இப்போது மில்லியன்களைத் தாண்டிக் கொண்டிருக்கின்றது எண்ணிக்கை. இன்னும் மூன்று ஆண்டுகளில் நம் நாட்டில் மட்டும் 10000 போ; பாதிக்கப்படுவர் என மதிப்பீட்டுப் புள்ளிவிபரம் பயமுறுத்தியது.

உடற்பாரம் தேய்ந்து ஓடாகிப் போவதும் ஓயாத களைப்பும் நோயின் பிரதான அறிகுறிகள். இந்த அறிகுறிகள் நோய் தொற்றி பத்து வருடங்களின் பின்னரும் தோன்ற ஆரம்பிக்கலாம். அதாவது சந்தேகத்தில் நோயாளி பரிசோதிக்கப்படும் வரை வைரஸ் இருக்கும் விசயம் அவருக்கே தெரியாமல் போகலாம். வைரஸ் உள்ள ஒரு ஆணிடமிருந்து அவனது மனைவிக்கும் அவளின் தாய்ப்பாலிருந்து பிள்ளைக்கும் வயிற்றிலிருக்கும் சிசுவிற்கும் கூட இது தொற்றுகிறது என்று டாக்டர் கூறிய போது ஒரு பாவமுமறியாத அந்த முகங்கள் தெரியாத தாய்களின் அவலம் நெஞ்சைப் பிசைந்தது.

சிறுகச் சிறுக ஆனால் நிச்சயமாகக் கொல்லும் இந்த நோயை மட்டுப்படுத்த ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கை துளிர்த்திருக்கிறது. ஆனால் அதற்குள் எயிட்ஸ் நோயாளிகளை தீண்டத்தகாதவர்களாக இந்த சமுதாயம் தூரத்தில் வைக்கத் தொடங்கிவிட்டது என்று கவலையோடு சொன்னார் பத்திரிகை ஆசிரியர்.

தகாத பாலுறவில் ஈடுபடுவோர் தற்பாதுகாப்பிற்காக கொண்டொம் உறைகளைப் பாவிக்க வேண்டும் என்று ஒரு கட்டத்தில் டாக்டர் யோசனை கூறினார். அப்போதுதான் வெடி போலக் கிளம்பினார் எங்கள் வடிவேல் ஐயா.

கொண்டொம் போன்ற தற்காலிகத் தடுப்புகளை விட்டு வேரோடு அறுத்தெறியும் முறைதான் எங்களுக்கு வேண்டும். ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களை மருத்துவ உலகம் பார்த்துக் கொள்ளட்டும். நம் எதிர்காலச் செல்வங்களை இந்தப் பொறியிலிருந்து பாதுகாக்க வேண்டியது நம் கடமை. வெட்கத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு இந் நோய் பற்றிய ப+ரண அறிவைப் பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டிய சமுதாயப் பிரக்ைஞு நமக்கு வர வேண்டும். பத்திரிகை சினிமா ரீவி வீடாயோ போன்ற வெகுஜன ஊடகங்கள் வெறும் பொழுதுபோக்கையே பிரதான இலக்காகக் கொண்டிருக்கும் போக்கை மாற்ற நாம் பாடுபட வேண்டும். காம உணர்வைத் தூண்டும் சினிமாக்களை நாட்டிற்குள் வரவிடாமல் செய்ய மக்கள் அரசை நிர்ப்பந்திக்க வேண்டும்.

அது மட்டுமல்ல பெற்றாராகிய நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பாரிய கடமை உண்டு. குழந்தைகளின் பிஞ்சு மனங்களில் காம உணர்வுகள் விதைக்கப்படும் சந்தர்ப்பங்களை நாம் கொடுக்கவே கூடாது. வீட்டில் எதைப் பார்க்கலாம் எதைப் பார்க்கக்கூடாது என்ற விவஸ்தையேயில்லாதவராய் பெற்றார்கள் பலர் இருக்கிறார்கள். ஒவ்வொரு தாயும் தந்தையும் தம் குழந்தைகளைக் ஒழுக்கசீலராய் வளர்க்கப் பாடுபட வேண்டும். அப்போது தான் இந்தப் பேரழிவிலிருந்து நம் எதிர்காலச் சந்ததியைப் பாதுகாக்கலாம். இது நம்மால் முடியும் – முடிய வேண்டும்.

அந்த உரையாடலில் கோடிட்டுக் காட்டப்பட்ட புள்ளிவிபரங்களின் நடுவே வடிவேல் ஐயாவின் சமூக சேமத்திற்கான தார்மீகக் கோபம் எல்லோரின் கவனத்தையும் அன்று கவர்ந்திருக்கும் என்பது நிச்சயம். எதிர்காலச்சந்ததியை இரட்சிக்க வந்த அந்த நல்ல மனிதனை மயிலுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. நிகழ்ச்சி முடிந்த போது இது ஒரு மறு ஒலிபரப்பு என்று போட்டுக் காட்டினார்கள். அடுத்தடுத்துப் போட்டுக் காட்ட வேண்டிய முக்கிய நிகழ்ச்சிதான்.

அழகிய பெண்ணொருத்தி உடலை கொஞ்சமே மறைத்த ஒரு சிறிய துவாய்த்துண்டுடன் ஷவரில் நளினமாக நீராடும் ரெக்சோனா சோப் விளம்பரம் அடுத்ததாக வர> அவன் அலுப்போடு ரீவியை நிறுத்திவிட்டு அடுப்படிக்குள் வந்தான்.

அம்மா என்னனை இருக்கு

மாடத்தில அவிச்ச சோளங்கதிர் வைச்சிருக்கிறன். அப்பாவுக்கு பெரிசை வைச்சிற்று நீ சின்னனை எடு.

மயில்வாகனம் அப்பாவிற்கு சின்னதை வைத்து விட்டு பெரிசை எடுத்துக் கொண்டு அம்மா சந்திக்குப் போயிற்று வாறன் என்று புறப்பட்டான்.

அவன் சந்திக்குப் போகிறேன் என்றால் சந்தியிலிருக்கும் வீடியோ கடைக்குப் போய் அளந்து கொண்டிருக்கப் போகிறான் என்று அர்த்தம். அவனைப் போல ஏலெவல் பரீட்சை எடுத்து விட்டு ரிசல்டை எதிர்பார்த்திருக்கும் மனோகரன் அங்கு வேலையில் இருந்தான். மாலை நேரத்தில் அவனுடன் கதைத்துக் கொண்டிருப்பதுதான் இவனுக்கு வேலை.

மனோ அங்கு முழுநேர ஊழியன். எடுபிடியாக ஒரு சின்னப்பொடியன். ஊர் சுற்றுவதைப் பார்க்கிலும் ரிசல்ட் வரும் வரை அங்கே சும்மா நிற்கட்டும் என்று மனோவின் அப்பா சொல்லியிருந்தார். அவர் முதலாளி வேதவனத்தின் பால்ய சிநேகிதர். கடையைக் கவனிக்க வசதியாக நம்பிக்கையான படித்த பையன் இலவசத்தில் அகப்பட்டதால் வேதவனம் வேறு சைட் பிஸ்னஸ்களில் இப்போது தீவிரமாக இறங்கியிருக்கிறார்.

டவுனை விட்டுத் தள்ளியிருந்த அந்தக் குடியிருப்புப் பகுதியில் மக்கள் சேவை செய்யும் மூன்று வீடியோக் கொட்டகைகள் இருந்தன. அவைகளுக்கு அங்கிருந்துதான் படங்கள் சப்ளையாகிக் கொண்டிருந்தன. நடுச்சாமத்தின் பின்பு ஒரு தினுசான படங்களும் அக் கொட்டகைகளில் ஓடுவதாக ஊர்ஜிதமற்ற ஒரு தகவல். அவன் பார்த்ததில்லை.

மயிலைக் கண்டதும்; இரு வாறன் என்று சொல்லிவிட்டு ஸ்டிக்கரில் படப் பெயர் எழுதிக் கொண்டிருந்தான் மனோ.

பின்னறையில் சின்னப்பொடியனின் மேற்பார்வையில் மூன்று வீசீஆர்கள் ஏதோ ஒரு படத்தை பிரதி பண்ணிக் கொண்டிருந்தன. சிறிய ரீவியில் அந்தப் படம் சத்தத்தோடு ஓடிக் கொண்டிருக்க இடையிடையே வெளியே வந்து உங்களுக்கு என்ன கொப்பி வேனும் என்று வந்தவரைக் கேட்டுக் கொண்டிருந்தான் பொடியன். இருவரும் படு பிசி. மயில் அப்போது தான் கவனித்தான். வாசலில் சாற்றியிருந்த விளம்பரத் தட்டிகள் இரண்டிலும் கவர்ச்சியான புதுப்பட நோட்டாஸ் ஒட்டியிருந்தது.

படத்தின் பெயர் ரட்சகன்.

ஓரு கொட்டகைக்காரர் வயிற்றுளைவு வந்தவரைப் போல் நெளிந்து கொண்டு நின்றார். இன்னம் முடியவில்லையா என்று வெடுவெடுத்தார். மற்றவர்கள் ஓட முதல் – தானே படத்தை ஓட வேண்டுமென்று நேரத்தைப் போட்டு விட்டார். கொட்டகை நிரம்பி வழிந்து விசிலடி பொறுக்க முடியாமல் இங்கு ஓடி வந்திருக்கிறார்.

இந்தா முடிஞ்சிரும் .. .. டேய் முடிஞ்சுதா.. .. .. என்று மனோ உள்ளே பார்த்துக் கத்தினான். பன்னிரண்டு வயது ‘டேய்’ உள்ளிருந்து வந்து இன்னம் கொஞ்சம் இருக்கு இப்ப முடிஞ்சிரும் என்றது.

மனோ கொஞ்சம் தலைநிமிர> அந்த இடைவெளியில் கொட்டகைக்காரர் கேட்டார். படத்தில பைட் எப்படியாம் ?

உள்ளிருந்து சூப்பர் என்றான் பொடியன். எந்தப் புதுப் படமானாலும் அந்த ஏரியாவிலேயே முதலில் பார்த்து ரசிப்பவன் அவன்தான். அந்தப் நடப்பு அவன் குரலிலும் தொனித்தது. இரண்டு வருடமாக வேதவனத்தோடு இருக்கிறான். சாப்பாடு போட்டு தன்னோடு வைத்திருக்கிறார். வீட்டு வேலைக்குமாச்சு வீடியோக் கடைக்குமாச்சு. சம்பளம் எவ்வளவு என்று யாருக்கும் தெரியாது. வீடியோ கடையின் சகல துறைகளும் அவனுக்கு அத்துபடி. தமிழ் மட்டுமல்ல ஹிந்தி மலையாள ஆங்கில சினிமாக்களிலும் நிறைந்த ஞுானமுள்ளவன். நிசத்தில் பையனிடமிருந்துதான் மனோ எல்லாம் கற்றுக் கொண்டிருக்கிறான்.

மயில் உள்ளே எட்டிப் பார்த்தான். கடைசிக்கட்டமாக இருக்க வேண்டும். படத்தின் ஹீரொ இருபது பேரை தட்டத்தனிய அடித்து பொய் ரத்தம் வடிய வடிய விரட்டிக் கொண்டிருந்தான்.

ஹீரோயின் புது வரவாக இருந்தாலும் ஆடைக்குறைப்பில் புதிய பரிமாணத்தைக் காட்டினாள். அவளுடைய குலுக்கல் கொட்டகைக்காரருக்கு மெத்தவும் பிடித்துப் போயிற்று. சண்டை முடிந்தவுடன் காதலனும் காதலியும் ஊட்டி மலையடிவாரத்தில் ஆடி ஓடிக் கட்டிப்பிடித்து பாட்டுக்கு வாயசைக்க அவர்களின் பின்புலத்தில் ஏஆர் ரகுமானின் ஆங்கிலத்தமிழ் இசைக்கு முப்பது நாற்பது கலர் பெண்கள் தொப்புளைக் காட்டி ஆடிக் கொண்டிருந்தனர்.

இந்தாங்க என்று பையன் கொடுத்ததுதான் தாமதம் கசட்டை வாங்கிக் கொண்டு மாயமாய் மறைந்து போனார் கொட்டகைக்காரர். புதுப் படம் வந்தால் நாலைஞ்சு நாளைக்கு இப்பிடித்தான் மச்சான் என்றான் மனோ.

நன்றாய் இருட்டுப் பட்டு விட்டது. கொப்பி பண்ணிய மூன்று கசட்களும் ஓட்டத்திற்குப் போய் விட்டன. சந்தடி முற்றாக அற்றுப் போயிருந்தது.

அப்பா சத்தம் போடப் போறார். நான் வரட்டா.. என்று எழுந்தான் மயில்.

கொஞ்சம் பொறு நானும் கடையைச் சாத்திட்டு வந்திர்றன்.

ஜீப் ஒன்று விளம்பரத்தட்டிக்குப் பக்கத்தில் சப்தமில்லாமல் வந்து நின்றது. வடிவேல் ஐயா இறங்கி சின்னப்பொடியன் உள்ளே தூக்கிக் கொண்டு போன விளம்பரத்தட்டியைப் பார்த்தார்.

இவருக்கு நூறு வயசு மச்சான். இப்பதான் இவர் நிகழ்ச்சியை ரீவியில் போட்டார்கள்

என்று மனோவிடம் சொன்ன மயில் சாரத்தை கூட்டிப் பிடித்துக் கொண்டு மரியாதையாக எழுந்து நின்றான். அவர் நேரே மனோவிடம் வந்தார். அவருக்கு மயிலைத் தெரியாது.

ரட்சகன் கொப்பி வந்திற்றுப் போல! வடிவேல் கேட்டார்.

ஓம் சேர் மூன்று கொப்பி அடிச்சது – நீங்க ஒரிஜினலைக் கொண்டு போங்க – நாளைக்குக் காலைல வந்து எடுக்கிறேன்.

அவர் ரட்சகன் ஒரிஜினல் கொப்பியை வாங்கிக் கொண்டு சாந்தமாக ஜீப்பில் ஏறினார்.

மனோ பெருமிதத்தோடு சொன்னான்.

சேர் எங்கட ரெகுலர் கஸ்டமர். புதுப்படமெண்றால் அண்றைக்கே கொப்பி குடுக்க வேனுமென்று முதலாளியின் ஓடர்.

ரட்சகன் விளம்பரத் தட்டியில் அநியாயமான ஆடைப்பஞ்சத்திலிருந்த வழுவழுப்பழகி சுஸ்மிதா சென் மினுக்கு மினுக்கென மயில்வாகனத்தைப் பார்த்து ஏளனமாய்ச் சிரித்தாள்.

விட்டிருந்த மழை திடாரென பெரிதாகப் பெய்யத் தொடங்கிற்று.

***

karulsubramaniam@hotmail.com

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்