ஒரு தண்ணீாின் கண்ணீர்.

This entry is part [part not set] of 26 in the series 20010910_Issue

ருத்ரா.


(கல்லிடைக்குறிச்சி எனும் என் பிறந்த ஊரைச்சுற்றி தழுவிக்கொண்டு ஓடும் தாமிரவருணி ஆற்றைப்பற்றிய கவிதை இது. அந்த ஊாின் கிளை பிாிந்து வேரைப் பிடுங்கிக்கொண்டு பிழைப்புக்காக வெளியேறியபோதும் அறுபடாத அந்த தொப்பூள்கொடி தாமிரபரணி பற்றிய ஒரு ஆற்றுப்படை இது.)

ஓ ! தாமிரபரணியே !
அன்று
சின்னப்பயல்கள்
சிறகடித்து மிதந்து வரும்
சித்திரகூடம் நீ.
சட்டைகளை சட்டைசெய்யாமல்
கரையில் எறிந்து விட்டு
தண்ணீருக்குள் ‘விரால் ‘ பாயும்
அந்த நிர்வாணப்பிஞ்சுகளுக்குள்
நிலைத்து விட்ட
நிலைக்கண்ணாடியல்லவா நீ!
அந்த கண்ணாடி கல்வெட்டுகளில்
ஈடன் தோட்டத்து
‘ஆதாம்-ஏவாள்-பாம்பு ‘முக்கோணத்து
மூச்சுகளின்
சூறாவளிகள்
சூல் கொள்ளாத
சுவடுகள் அவை.

ஆறு வயதின்
அந்த அரைஞாண் கயிறுகள்
திடாரென ஒருநாள்
மின்னல் கயிறுகள் ஆனபோது
அவர்களின்
ஆகாசத்தாமரைகளெல்லாம்
நீதானே.

மீன் கொத்திப் பறவைகளின்
கொண்டையில்
விழி குத்தி நிற்கும்
அந்த சின்னஞ்சிறு
நிலாப்பிறைகளுக்கு
தண்ணீர் மொள்ளவரும்
கன்னிப்பெண்களின்
மலர்க்கொண்டைகள்
மயக்கம் தந்ததில்லை.

மீசை அரும்பாமல் மணக்கின்ற
ஏழெட்டு வயதுகளின்
ஏலக்காடுகள் அவை.
‘ஏ சர்டிஃபிகேட்டின் ‘ வெயில் படாத
பூ நிழல்கள் அவை!

ஆற்றோர மருத மரங்களின்
இலைக்கவிப்பின் மேல்
நாரைக்கூட்டங்கள்
தலைதாழ்த்தி
‘தொழுகை ‘ நடத்தும்.
முட்டளவு நீாில்
முங்கிக்குளிக்கும்போது
தாமிரபரணியில்
எனக்கும்
அது ஒரு ‘ஹஜ் யாத்திரை ‘.

உன் கரைக்கு
புருவம் தீட்டியிருந்த
முடக்காத்தான் செடிகளின்
வெளிர் ஊதா பூக்களினூடே
உன் நீர்ச்சுழி விழிகளைக்
கண்டு கொள்வேன்.
தாகம் தீர்க்கும்
உன் தண்ணீருக்கும்
தாகம் உண்டு என
உணர்ந்து கொண்டபோது
அந்த நாணல்களின்
பச்சைக்கீற்றுகள்
தீயாய்
என்னை தகிக்கும்
சிவப்புக் கொளுந்துகள்.

தெற்கே தளச்சோி கோயில்
மானேந்தியப்பர்.
வடக்கே குமாரர் கோயில்
சுப்ரமணியசுவாமி.
தினமும் இவர்களுக்கு
உன்னிடமிருந்துதான்
குடமுழுக்குகள்.
இந்த பிரபஞ்சத்தை
மண்ணெடுத்து பிசையும் முன்
இந்த தெய்வங்கள்
உன் ‘மாணிக்க நீராட்டில் ‘தான்
மனம் நனைத்துக் கொள்கின்றன.

அந்தக் கல்லிடைக்குறிச்சி
எனக்கு இன்னும் ஒரு கனவு தேசம்.
முகத்தின்
பூனை மயிர்க்காட்டில்
புதைந்து கிடந்த
என் இளமைக்கு
மின்சாரம் பாய்ச்சியது….
ஓ! தாமிரபரணியே
உன் ஓட்டம்தானே.

குளிக்கிறோம் என்று
யார் சொன்னது ?
மனதை மண்வெட்டியாக்கி
நீருக்குள் வெட்டும்
சுரங்கம் அது.
மெளனமாய்
வாய் பிளந்து வாய் பிளந்து
பேசும் அந்த
‘கெண்டை கெழுத்திகளிடம் ‘
எத்தனை ‘கிம்பர்லிகள் ‘!

இந்தியாவின் முரட்டு நதிகளிடையே
நீ ஒரு பிஞ்சு ஆறு தான்.
ஆனாலும் உன் வயிற்றுக்குள்
எத்தனை குருட்சேத்திரங்கள் ?
சின்னப் புழுக்களைச்
சாப்பிடும் மீன் குஞ்சுகள்.
மீன் குஞ்சுகளைப்
‘பலகாரம் ‘ பண்ணும்
பொிய மீன்கள்.
தவளைகள் மீது படையெடுக்கும்
தண்ணீர்ப் பாம்புகள்.
நண்டுகளூக்கிடையே
‘டாங்கி யுத்தங்கள் ‘.
தாமிரபரணியின்
கர்ப்பத்துக்குள்ளும்
ஒரு கலிங்கத்துப் பரணியா ?

உன் கரையோரத்தில்

ஒரு உயரமான சிலுவையை நீ
உச்சிமோந்து பார்த்த போது
அந்த ‘மாதாங்கோவில் ‘
தலைகீழாய்
உனக்கு பிம்பம் காட்டியது.
மனிதனைக்
கழுவ
கழுவேறிக்கொண்ட
தியாக மெழுகுவர்த்தி அல்லவா
அங்கு உருகிக்கொண்டிருப்பது!
இந்தக் கரையோரத்துக்
கவிதைக்குள்
மானிட சமாதானத்தின்
மொழிபெயர்ப்பு மட்டுமே
எதிரொலித்துக்கொண்டிருக்கிறது.

உன் நுரைக்குமிழிகள்
ஏழுவர்ணங்களில்
எச்சில் படுத்தும்
சூாிய முத்தங்கள்.
உன் குறுகிய வளைவு
அங்கொரு
வானவில் குழம்பு.

பள்ளிக்கூடங்களில்
என்னை
வாத்தியார்கள்
வார்த்தெடுத்தபோது
வார்த்தைகளின் வைரத்துளிகளாய்
நீ வெளியே கிடந்தாய்.
வகுப்புகளை வெளியே வைத்துவிட்டு
உள்ளே ‘இருட்டிய ‘ சிலேட்டுகளில்
உறைந்து கிடந்தோம்.
பிரம்படிகள் கலவரப்படுத்தும்
பயங்களின் போது
வகுப்புகளை கட் அடிப்பதே
எங்களுக்குப்பிடித்த
‘வகுப்புக்கலவரங்கள் ‘.

உன் நீர் மட்டத்தோடு
என் அரை விழிகள் மட்டத்தில்
நான் அழுந்தி அழுந்திக்
குளிக்கின்ற போது
அகத்தியன் அருவிச்சலங்கைகள்
அகத்தினுள்ளே இனிப்பு காட்டும்.
மாஞ்சோலைத் தேயிலைக்கொழுந்துகள்
எண்ணத்துள் சூடேற்றி
‘டா ‘ போட்டுத் தரும்.

உன் ‘நீரும் நீர் சார்ந்த நிலமும் ‘
எங்கள் உயிர் சார்ந்தவை.
உன் பச்சை சுவாசத்தில்
பசும் வயல்கள் படுத்திருக்கும்.
நடு நடுவே
தூரத்து ‘பனங்குட்டிகள் ‘
தூாிகைமரங்களின்
தீவுகளாய் ஓவியம் காட்டும்.
எங்கள் ஊர் சிறு பயல்கள்
‘பனங்காய்களைக் குடைந்து
தேர் உருட்டும் ‘
கலித்தொகைக்காட்சிகள்
இன்னும் இங்கு உயிர் பூசும்.

‘ஓய்வு ‘ பெற்று
என் முதுகெலும்பே
ஈசிச்சேராய் இற்று
சாய்ந்து கிடந்த ஒரு
சாய்ங்கால வேளையில்
உன் நீர்த்துளியின்
தீப்பொறியில்
பொறி தட்டிப்போய்
புறப்பட்டு வந்துவிட்டேன்
உன்னிடம்.
ஓ!தாமிரபரணியே!
சிறுவர்கள்
தெருவில் அடித்துப் போட்ட
செத்த பாம்பாய் செதில்கள் சிதறி
சட்டை உாிந்தும் உாியாமலும்
அல்லவா
இப்போது
வதங்கிக்கிடக்கின்றாய் நீ.

பாபநாசக் கருவாயில்
துணி ஆலைக்காரர்கள்
‘துவம்சம் ‘ செய்தபிறகு
நீண்ட பயணமாய்
திருவைகுண்டம் தாண்டி
ஆறுமுகனோி வரைக்கும் நடப்பது
வெறும்
உன் சவ ஊர்வலம் தானே!
இடையில்
சேரன் மகாதேவியில்
காகித ஆலைக்
கழிவு அரக்கனால்
நீ கற்பழிக்கப்பட்டாய்.

குறுக்கு ஒடிந்து
குறுக்குத்துறைக்கு
ஓடி வந்தாய்.
கரையெல்லாம் மூளியாகி
அம்மணமாய்ப் போனதில்
அவசர அவசரமாய் அங்கு
சீமைக்கருவேலங்களின்
சீலை உடுத்திக்கொண்டாய்.
‘ஓசோன் ‘ ஓட்டைகளால்
வானம் புண் பட்டு
மண் மலடாகிப்போன நோய்க்கு
உன் ‘பச்சைக்களிம்பு ‘தானே
மருந்து போட வேண்டும்.
உன்னையே
சீக்காளியாக்கி விட்ட
கயவாளிகள் யார் ?

காவிாியைப் பாடிய இளங்கோ
உன்னைப் பாடவில்லையே
என்று வருத்தப்பட்டேன்.
வேண்டாம்.
அவன் இன்று பாடினால்
உனக்கு ஒப்பாாி அல்லவா
பாடியிருப்பான்.
‘பணி ஓய்வு ‘ பெற்று
உன்னுடன் பல்லாங்குழி ஆட
ஓடி வந்தேன்.
என் ஆகாய கங்கை இப்படி யொரு
பாதாள கங்கையாய்
படுகுழியில் கிடக்குமென்று
நினைக்கவில்லை.

சிந்துபூந்துறையைப் பற்றி
சிந்திவிட்டுப்போன
‘புதுமைப்பித்தனின் ‘
எழுத்துக்களினுள்ளும்
உன் பூங்குமிழிகளே
இன்னும்
சுவாசம் விட்டுக்கொண்டிருக்கின்றன.

வண்ணார்பேட்டையின்
கரையில் அமர்ந்து
எதிர்க்கரையை நோக்கி
தவம் இருந்து
ஒரு ‘கயிற்றரவின் ‘
குரல் கேட்டவன் அவன்.
அச்சமே கடவுள்.
மிச்சம் இருப்பது
கல்லும் பூசைகளும் தான்.
மரணத்தின் நிழலையே
பல்லக்கு தூக்கிகொண்டு
ஓடுவது தான் வாழ்க்கையா ?

நெருப்பையே
செதுக்கிகொண்டிருக்கும்
இலக்கிய தாகத்தின்
அந்த சிற்பிக்கு
எழுத்துக்கள் கூட
சிக்கி முக்கிக் கற்கள்.
தாமிரபரணியே!
மழுங்கிப்போன மனங்களுக்கு
மடை திறக்க வந்த
பளிங்கு காகிதமே!
வெறும்
ஜனனம்-மரணமெனும்
எதுகை-மோனைகளைக்கொண்டு
முடையப்பட்ட
எங்கள் கவிதைகள்
உன்னை அசுத்தப்படுத்த வேண்டாம்.

சுவைத்துப்பார்.

எப்படி உன் தண்ணீர்

உனக்கு உப்புக் காித்தது ?

ஆம் ! ஒரு தண்ணீாின் கண்ணீர் இது !

திசைகளை இழந்த
எங்கள் பயணத்தின்
மைல் கற்கள்
உனக்கு
கல்லறை கட்டவேண்டாம்.
நீ ஓடிக்கொண்டேயிரு.
ஆம்.
நீ ஓடிக்கொண்டேயிரு.

Series Navigation

ருத்ரா

ருத்ரா