எழுத்தாளர்கள்: நடை வேறுபாடு காட்டிவிடும் யாரென்பதை!

This entry is part [part not set] of 54 in the series 20080110_Issue

தேவமைந்தன்


சபரிமலைக்கு ஆண்களைப்போல் உடையணிந்து வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பதினான்கு பெண்களை அவர்களின் நடையை வைத்தே பம்பையில் கேரளக் காவல்துறையினர் கண்டுபிடித்துத் திருப்பியனுப்பினர்(13/12/2007: 02:00மணி). சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பத்து முதல் ஐம்பது வயதுக்கு உட்பட்ட பெண்கள் செல்லத் தடையுள்ளது அல்லவா? கழுத்து காதுகளில் நகையணியாமலும், ஆண்கள் போலவே தலைமுடியமைப்புடன் உடையுடன் பார்ப்பதற்கு ஆண்களைப்போலவே காட்சி தந்தாலும் தங்களின் நடையை அவர்களால் மாற்றிக் கொள்ள முடியவில்லை என்பதுவே இங்கே நமக்குத் தேவையான சேதி.

ஆண்கள் பெண்களை மட்டுமல்ல அவர்களுக்குள் ஒவ்வொருவரையும் நடை வகைபிரித்துக்காட்டிவிடும்; அதுபோலவேதான் மொழிநடையும் எழுத்தாளர் ஒவ்வொருவருக்கிடையிலும் வேறுபடுகிறது. இத்தகைய நடைவேறுபாடு இல்லாவிட்டால் ‘மரப்பாவை சென்றுவந் தற்று” என்று திருவள்ளுவர் கூறியதுபோல ‘பொம்மலாட்டம்’போல் ஆகிவிடும் இலக்கிய உலகத்தின் இயக்கம்.
இதற்கும் ஒரு நியாயம் உண்டு. மகாகவி காளிதாசனின் ரகுவம்சம் ஆறாவது சர்க்கம் முப்பதாவது சுலோகத்தில் சுயம்வரப் பெண்ணான இந்துமதி அங்கதேசத்து மன்னன் புகழைத் தோழி சொல்லக் கேட்டும் கடந்து செல்வாள். அப்பொழுது காளிதாசர் சொல்வார்: “உலகம் வெவ்வேறு சுவையுடையதன்றோ!.”(“நாஸெளந காம்யோ ந ச தேவ ஸம்யக் த்ருஷ்டும் நஸா, பந்நருசிர்ஹி லோக:)

ஒரு பொருள் சிறந்ததே என்றாலும் அறிஞனும் அதை விரும்பாமல் வேறொன்றை நாடுவதற்குக் காரணம் அப்பொருளின் குறைபாடும் அன்று அறிவின் குறைபாடும் அன்று; சுவை வேறுபாடே என்று ‘நியாயா மெய்யியல்”(nyaya philosophy) கூறுவது இலக்கியப் படைப்புத் துறைக்கும் பொருந்தும்.

எழுத்தாளர் எடுத்துக்கொள்ளும் கருப்பொருளே(concept) அவருக்குப் பரவலான வாசகர் வட்டத்தைத் தருகிறது என்று சிலர் கூறுவார்கள். கருப்பொருள் சிறப்பில்லாத கதையையும் சொல்லும் முறையால் சிறப்பாக்கி விடுகிறார்கள் எழுத்தாளர் சிலர். அவர்கள் சொல்லும் முறையை முற்றிலுமாக உறுதிப்படுத்துவது அவர்களின் நடை அல்லவா? பாவண்ணனின் ‘நேற்று வாழ்ந்தவர்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ள ‘மரங்களின் கதை’யை வாசித்தவர்கள் இத்தகைய உணர்வை அடைந்திருப்பார்கள். தொடர்வண்டிப் பயணத்தில் படர்க்கை(object)யான ஒருவர் தன்மை(subject)யான ஒருவருக்குச் சொல்லுவதாக உள்ள அந்தக் கதையின் வயணத்தை உற்றுநோக்கினால் – “மரங்கள் என்ற ‘உயர்ந்த மனிதர்களின்’ இருத்தலியல் நுட்பங்கள்” என்ற கட்டுரைத் தலைப்பிற்கேற்ற விடயங்களே அதனுள் இடம்பெற்றிருத்தலை உணரலாம். கட்டுரையைச் சிறந்த கதையாக்கியது எது? பாவண்ணனின் ‘யாரோ ஒருவர் நம்மை ஏதோ வழியில் வழிப்படுத்துகிறார்’ என்னும் ‘eerie’ உணர்வு கமழும் நடையல்லவா? ‘ரிங்டோன்’களிலும் இந்த ‘eerie’க்குத் தனி ஈர்ப்பு உண்டு. டேனியல் ஸ்டீலின் ‘தெ கோஸ்ட்'(‘The Ghost’) நாவலை வாசித்தவர்கள் அதில் சார்லி(Charlie) அடைந்த ‘சாரா'(Sarah) இருப்பின் உணர்தலும் இத்தகைய ‘ஏதோ’ உணர்நிலைதான், விமானப் பயணத்தில் சாரா சந்தித்தாளே… உயர்பண்புகளே உருவெடுத்த உன்னதமான பிரஞ்சுக்காரர் ஒருவரை…..அப்பேர்ப்பட்ட ஒருவரை, ரயில் பயணத்தில், பாவண்ணன் கதைசொல்லும் தன்மை (subject)மனிதர் சந்திக்கிறார். எனக்கென்னவோ அந்தக் கதையின் முடிவில் விடைபெறும் மனிதர், மனிதரே அல்லர், நெடுநாள் வாழ்ந்த மரம் ஒன்றுதான் மனித வடிவெடுத்து வந்து தன் இனத்தைப் பற்றிய அத்தனை சேதிகளையும் சொல்லிச் சென்றதோ என்று படுகிறது.

இங்கே நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். பாவண்ணனின் கதையான ‘மரங்களின் கதை,’ முற்றாக அவருடைய கற்பனையிலிருந்துதான் பிறந்திருக்க முடியும். அப்படியிருக்கும் பொழுது, ஒரு கற்பனைப் பாத்திரம் சகபயணியைப்போல்/சகமாந்தரைப்போல் தோற்றம் தராமல், நம் மனித இன முன்னோர்கள் தங்கள் ‘சக மனிதர்களாக’ உணர்ந்த, உயிர்கலந்து பழகிய, காத்த, காக்கப் பெற்ற, உடனுறைந்த, உடன்மரித்த இணை உலகமான(parallel world) மரங்களின் உலகத்தைச் சார்ந்தவராக எவ்வாறு உணரப் பெறுகிறார்? பாவண்ணன் தான் கதை சொல்லப்பயன்படுத்தும் நடையினால் அல்லவா? தன் கட்டுரைகளுக்குப் பாவண்ணன் பயன்படுத்தும் நடையும் கதை சொல்லுதல் நடையும் ஒன்றையொன்று கைநெகிழ்க்காமல் கலந்து செல்வதையும் இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது. ‘இருபத்திரண்டு அட்டைப் பெட்டிகள்’ கட்டுரைத் தொகுப்பில் உள்ள அதே தலைப்பிலான கட்டுரையில், வாசிப்பை நேசிக்கும் படைப்பாளர் வீட்டிற்கு வந்து அடைசலாகும் புத்தகங்கள் தொடர்பாக, தானும் தன் குடும்பத்தாரும் அடையும் இம்சைகளையும் ஒழுங்குசெய்யும் ஏற்பாடுகள் குறித்தும் கதைசொல்லும் போக்கில் கட்டுரையாகச் ‘சொன்னதால்தான்’ வாசிப்பைக் கவர முடிந்தது. தவிர அட்டைப்பெட்டிகளும், அவற்றுள் குடியிருந்தவாறே- பல ஊர்களுக்கும் வாடகை வீடுகளுக்கும் பயணம் செய்யும் புத்தகங்களும் கூட கதைப்பாத்திரங்களாகும் அதிசயம் நிகழ்கிறது. தான் ஒரு வாசகனாக இருந்து எழுதிய கட்டுரைகள்(குறிப்பாக ‘மலரும் மணமும் தேடி’ என்ற தொகுப்பு) தவிர்ந்த கட்டுரைகள் சிலவற்றில், தான் இளமையில் புழங்கிய ஊர்களும் இடங்களும் தன் ஆழ்மனத்துக்குள் ஊடுருவி உருவாக்கிய தாக்கங்களைத் தனக்கே உரிய நடையில் பாவண்ணன் புலப்படுத்துகிறார்.

மனோன்மணீயம் சுந்தரனார் படைத்த ‘மனோன்மணீயம்’ நாடகத்தில் வரும் நடராசன் என்பவனும் மேற்படி நாம் பார்த்த பாவண்ணன் கதைமாந்தரைப் போன்றவன்தான். ஆனால், அவன் உருமாறியவன் ஆகாமல் அவதானி ஆனவன். (subject)நடராசனைப் பற்றி ஜீவக மன்னனிடம் சகடர் வஞ்சகமாகச் சொல்லுவதிலும்கூட அவனோர் அவதானியென்பது புலப்பட்டு விடுகிறது. சகடர் சொல்லுவார்:

சுத்தமே பித்தன்; சொல்லுக்கு அடங்கான்;
தனியே உரைப்பன்; தனியே சிரிப்பன்;
எங்கேனும் ஒருபூ இலைகனி அகப்படில்
அங்கங்கு அதனையே நோக்கி நோக்கித்
தங்கா மகிழ்ச்சியில் தலைதடு மாறுவன்.

சுந்தரனார் நடையை மாற்றி வேறு நடையில் சொல்லிப்பார்த்தால் நடராசன் காணாமற் போய்விடுவான். அவ்வளவுதான்.

புதுமைப்பித்தன் நடைக்குச் சான்றுகள் காட்டும் பேராசிரியர்கள் பலர் அவருடைய ‘பொன்னகரம்’ சிறுகதையின் கடைசி வரிகளையே(12வரிகள்) வழக்கமாகச் சுட்டுவதுண்டு. சிலர் கடைசி இரண்டு வரிகளை மட்டுமே சுட்டி மனநிறைவடைந்து விடுவார்கள். ஆனால் நாரத ராமாயணத்தின் தொடக்கப் பகுதியில் வரும் புதுமைப்பித்தனின் நடைபற்றிய ஆராய்ச்சி குறித்த நக்கலடிப்பு நடை “புதுமைப்பித்தன் நடையல்லவா இது?” என்று முத்திரை குத்திவிடும். பாருங்கள்:

“இதன் நடை ஏறக்குறைய வேதகாலத்து ஸம்ஸ்கிருத நடையாக இருப்பதினாலும், இதன் அபூர்வ இலக்கணப் பிரயோகங்கள் வான்மீகத்தில் மட்டும் வருவதாலும், இதை ஒருவேளை அவர் அறிந்திருப்பாரோ என்று சந்தேகிக்க இடமுண்டாகிறது.

கால ஆராய்ச்சியில் தேர்ச்சி பெற்ற பண்டிதர்கள், தமிழ்நாட்டில் தவிர, வேறு எங்கும் கிடையாது என்று எனக்கு நன்றாகத் தெரியுமாகையால், இதைத் தமிழில் மொழிபெயர்த்தால் பாரத நாட்டிற்கே ஒரு பெரிய தொண்டு இயற்றியவனாவேன் என்று நினைத்தே மொழி பெயர்க்கலானேன். எனக்குத் தமிழ்ப் பயிற்சி ஸம்ஸ்கிருதத்தைவிடக் குறைவு; சம்ஸ்கிருதத்தில் ஆங்கிலத்தைவிடக் குறைவு; ஆங்கிலத்தில் சீன பாஷையைவிடக் குறைவு. தமிழ்நாட்டுப் பண்டிதர்கள் நடை விஷயத்தில் மிகவும் கண்டிப்பானவர்கள் என்று கேள்விப்பட்டு எல்லாவற்றையும் வெளிவிட்டுச் சொல்லிவிட்டேன்.” – நாரத ராமாயணம் (?) (மொழிபெயர்ப்பு ஆசிரியரின் குறிப்பு)

‘அபூர்வரக உயிர்வகைகள்’ போல நடைகள் சில உள்ளன. அவற்றைப் படிக்க நேரும்போதெல்லாம் ஜெயந்தி சங்கரின் ‘பெருஞ்சுவருக்குப் பின்னே’ என்ற புத்தகமும் அதில் இடம்பெறும் சீனப் பெண்கள் தமக்குள் பேசிக்கொள்ளும்/எழுதிக்கொள்ளும் மொழி நினைவுக்கு வரும். அம்மொழியில் எழுதப்படும் கவிதை கடிதமெதுவும் ஆண்களுக்குப் புரியாதாம். அதுபோல அந்த நடைகள் ‘பிரத்தியேகமானவை.’ வேறென்ன சொல்ல?

வலையேடுகளில் எழுதுவதொன்றும் எளிய வேலையில்லை. வலையேடுகளை வாசிப்பவர்களில் பெரும்பாலோருக்கு பொழுதுபோக்கு நேரம் குறைவு. மிக விரைவாக விழிப்பார்வையை ஓடவிட்டு வாசிக்க வேண்டிய கட்டாயம் உடையவர்கள். ஒருவர் கனவு காணும்பொழுது விரைந்த விழியோட்டம்(Rapid Eye Movement) நிலவுமே, அதுபோல. ஆனால் கொஞ்சம் வேறுபாடு. அவர் கண்கள் மூடியிருக்கும். இவர் கண்கள் விழித்திருக்கும்.

மயிலாடுதுறையில் ஒரு நாவலைத் தொடங்கி, சென்னை நெருங்கும்போது முடிக்கும் புத்திசாலிப் பயணிக்குள்ள வசதி, வலையேடு வாசிப்பவர்களுக்குக் கிடையாது.

இன்னும் ஒரு சேதி, வலையேடு தொடர்பானவர்கள் பலருக்குத் தெரியாது.

வலையேடுகளை வாசிப்பவர்கள் பலர், வீட்டில் இணைய இணைப்பு வைத்துக் கொள்ளாமல் ‘பிரவுசிங் செண்டர்’களுக்குச் சென்று வாசிப்பவர்கள். அதற்கான வாய்ப்பு இல்லாததால் அல்ல. இணையதள விளையாட்டுகளில் வீட்டில் உள்ள சிறுவர் மூழ்கி, தங்கள் படிப்பைக் கோட்டைவிட விரும்பாதவர்கள். வேறு சிலர், தங்களின் உடன்பிறந்தார் உறவினரான இளைஞர்கள் பலவகையான ‘ஆல்பங்கள்’ திரைப்படங்களின் பாட்டுக்களை ஆயிரங்கள் கணக்கில் இறக்கிக் கொள்ளச் சகியாதவர்கள். ‘ஹோட்டல்கள்’ போலத்தான் ‘பிரவுசிங் செண்டர்களும்………’ இப்படி ‘லோல்பட்டு லொங்கழிந்து’ அந்த மையங்களுக்குப் போய், கிடைக்கும் ‘சிஸ்டம்’ உள்ள தடுப்பறையில் மிஸ்டர் பீன் போல உடலைச் சுருக்கிக் கொண்டு வலையேடுகளை வாசிப்பவர்கள் எந்த அளவுக்கு ‘அறிவு இலாப’த்தை வலையேடுகளிலிருந்து, குறுகிய நேரத்தில் எதிர்பார்க்கிறார்கள் தெரியுமா?

அப்படிப்பட்ட ‘நலிந்த’ வாசகர்களுக்கும் நேரமே கிடைக்காத வாசகர்களுக்கும் படுக்கையில் கிடந்தவாறே அவ்வப்பொழுது எழுந்து/தலைநிமிர்த்த்தி வாசிக்கும் வாசகர்களுக்கும்[எனக்குத் தெரிந்து இத்தகைய வாசகர்கள் இருவர், ஒருவர் பிரான்சிலும் இன்னொருவர் புதுச்சேரி மாநிலத்திலும் இருக்கிறார்கள்] வலையேட்டு எழுத்தாளர்களின் நடை மிகவும் முதன்மையானது. இவர்கள், ஆகவும் பயனாளிகள். திரட்டிகளில் வரும் நட்சத்திரக்குறிகள்- வலைப்பூக்களில் வரும் பின்னூட்டங்களின் எண்ணிக்கை இவர்களைக் கவரவே கவராது. எழுத்தாளரின் நடைதான் ஈர்த்து வாசிக்க வைக்கும்.

அ.முத்துலிங்கம் ஐயா கதைகளின் நடை தனித்தன்மை வாய்ந்ததாயிருக்கிறது. ‘தமிழினி’ வெளியிட்டிருக்கும் ‘அ.முத்துலிங்கம் கதைகள்’ புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கதைகள் வெவ்வேறு இதழ்களில் வெளிவந்தவை; திண்ணை வலையேட்டிலும் வந்தவை. அச்சிதழுக்கும் அதேபொழுது வலையேட்டுக்கும் பொருத்தமான நடை அவருடையது. ‘பிரவுசிங் செண்டர்களில்’ ஆகவும் குறைந்த நேரத்தில் ஆகவுமதிகமான அறிவுப் பலன் பெறும் நண்பர் ஒருவர், அ.மு. அவர்களின் ‘வெள்ளிக் கரண்டி’ கதையைச் சிற்றிதழிலும் திண்ணை வலையேட்டிலும் இருமுறை வாசித்தின்பமுற்ற கதையை என்னிடம் வந்து கூறினார்.

நாகரத்தினம் கிருஷ்ணாவின் நடை விரைவானது. அடுத்தடுத்துத் தரவுகளை அடுக்கி ஓடுவது. திண்ணை.காம் வலையேட்டில் வந்த ‘பிரான்சுவாஸ் சகன்’ என்ற எழுத்தாளர் குறித்த நா.கி. அவர்களின் எழுத்து நடை:

“தீவிர பெண்ணெழுத்தாளரெனில் சில தகுதிகள் வேண்டாமோ? உண்டு. மொடாக் குடியர். தன்னைத் திடப்படுத்திக்கொள்ள அவருக்கு மது தேவைப்பட்டது. நேர்காணலுக்கு முன்பாக தன்னை தயார்படுத்திக் கொள்ள விஸ்கி குடித்தாக வேண்டும். போதை மருந்துக்கு அடிமையா? ஆமாம், விடுதலை பெற விருப்பமில்லாத அடிமை. கார் விபத்தொன்றில் ஆறுமாதத்திற்குமேல் மருத்துவமனையில் நினைவு தப்பியும், நினைவோடும் வலிகளோடும் போராடியபோது, போதை மருந்துக்கு அறிமுகம். அவரது நிரந்தர முகவரியென்று, சூதாட்ட விடுதிகளையோ, இரவு விடுதிகளையோ குறிப்பிட்டாக வேண்டும். பந்தயக் கார்களில் மோகம் கொண்டவர் என்பதால் வேகம்…விபத்து…கோமாவென மரணத்தோடு நெருங்கி வாழ்ந்தவர். போதைமருந்தின் உபயோகத்திற்காகவும் வரியேய்ப்பு குற்றங்களுக்காகவும் நீதி மன்றங்களால் தண்டிக்கப்பட்டவர். பிரான்சை உலுக்கிய எல்ஃப் பெட்ரோலிய கம்பெனி ஊழலில், பிரான்சின் முன்னாள் அதிபர் பிரான்சுவா மித்தரானுக்காக இடைத்தரகராகச் செயல்பட்டவரெனக் குற்றச்சாட்டு உண்டு. இவரை விமர்சிக்கின்ற அல்லது ஒவ்வாத மனிதர்கள் மீது, தயக்கமின்றி உபயோகிப்பது ‘c’est la barbe!’ (வாயை மூடு!) என்கின்ற கடுமையான வார்த்தைப் பிரயோகம். இப்படி வரிசையாக அவரது எதிராளிகளை மகிழ்விக்கின்ற வகையிற் பாதகக் குணங்களை அடுக்கலாம். ஆனால் இவ்வெழுத்தாள பெண்மணியின் படைப்புச் சாதனைகளை ஒப்பிடும்போது, அவை நிலவின் மீதான களங்கம்.”

இதுபோன்ற நடைதான் வலையேட்டுப் பயனாளிகளை ஈர்த்து, தொடர்ந்து ஒவ்வொரு கிழமையும் வாசிக்க வைப்பது. ‘வலையேட்டுப் பயனாளிகள்’ என்று இக்கட்டுரையில் நான் பயன்படுத்துவதற்கு – தொடர்புள்ள எவரும் வருத்தப்பட வேண்டாம். ஏனெனில் நானும் அத்தகைய மையங்களுக்குச் சென்று, மணிக்குப் பதினைந்து ரூபாய் கொடுத்து வலைவாசிப்பும் வலையெழுதுதலும் செய்பவன்தான். காரணம்? இதே கட்டுரைக்குள் ஒளிந்திருக்கிறது.



karuppannan.pasupathy@gmail.com

Series Navigation

author

தேவமைந்தன்

தேவமைந்தன்

Similar Posts