எலிப்பொறி

This entry is part [part not set] of 22 in the series 20010825_Issue

பவளமணி பிரகாசம்


எனக்கு கற்பனை பிடிக்கும். கல்கண்டாய் இனிக்கும். கவிஞர்களும், ஓவியர்களும், அனைத்து கலைஞர்களும் வெளிப்படுத்தும் அற்புத கற்பனை அழகில் மூழ்கித் திளைப்பதே எனக்கு முழு திருப்தியளிக்கும் வாழ்க்கை அனுபவமாய் இருக்கிறது. சதா சர்வ காலமும் ஒரு கற்பனை சொர்க்கத்தை சிருஷ்டித்து அதில் பவனி வருவதையே விரும்புகிறேன்.

என்னை பெற்றவர்கள் எனக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிப் பார்த்துவிட துடித்துக்கொண்டிருக்கிறார்கள். நானோ பிடி கொடுக்காமல் நழுவிக்கொண்டிருக்கிறேன். தங்கள் ஒரே மகன் முப்பத்து மூன்று வயதுக்கு கட்டை பிரம்மச்சாரியாய் தூரிகையும் கையுமாய் ஓவியம் தீட்டிக்கொண்டோ, உண்ணவும் உறங்கவும் மறந்து புத்தகக்குவியல்களுக்கிடையே மூழ்கியிருப்பதையோ கண்டு அவர்கள் வெகுவாய் கவலைப்படுகிறார்கள். தங்கள் ஒரே மகள் டில்லியிலிருந்து வருடம் ஒரு முறை வந்து பிறந்த வீட்டில் சீராடிவிட்டு செல்லும் போது தங்கள் கவலையை கொஞ்சம் மறப்பார்கள்.

என் சகோதரியும் என்னிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்து விட்டாள்: ‘நாத்தனாராய் ஆசையாய் சண்டை போடவாவது எனக்காக நீ கல்யாணம் பண்ணிக்கொள்ளேன் ‘ என்று கூட கேட்பாள். நான் மசியப்போவதில்லை. ஏனென்றால் எனக்கு பயம்.

கல்யாணம் ரொம்ப பெரிய விஷயம். என் தனி உலகை இன்னொருத்தியுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். சர்வ சுதந்திரமாய் என் அந்தரங்கத்துக்குள் நுழையும் அவள் எப்படி இருப்பாளோ, என்ன நினைப்பாளோ, எதையெல்லாம் எதிர்பார்ப்பாளோ. எனவே நான் உஷாராய் ஒதுங்கி இருக்கிறேன்.

என்னோடு கலீல் கிப்ரானை ரசிப்பாளா ? தாகூரின் கீதாஞ்சலிக்கு உருகுவாளா ? காணி நிலத்திடை ஓர் மாளிகை கட்டி முத்துச்சுடர் போல் நிலாவொளியில் குலவ விரும்புவாளா ? இந்த ரீதியில் நான் சிந்திக்கிறேன். கல்லூரியில் என்னோடு படித்த குமரிகள் சத்தமாக பேசிக்கொள்ளும் விஷயங்கள் கலவரப்படுத்திவிட்டன. நுனி நாக்கில் ஆங்கிலம், சிலுப்பிவிட்ட குதிரை வால் கொண்டை, அமெரிக்காவில் செட்டிலாகிவிடும் ஆசை, கருப்பு கண்ணாடி அணிந்து உதட்டில் சிகரெட்டுடன் திரியும் காமக்காளைகளை ஹீரோக்களாய் எண்ணி ஆராதிக்கும் வெட்கக்கேடு என்று நான் பார்த்த இந்தத் தலைமுறை பெண்பிள்ளைகள் என்னை சுத்தமாய் அரள வைத்துவிட்டார்கள். கல்யாணம் என்ற விஷப்பரீட்சைக்கு நான் தயாராயில்லை.

வழி வழியாய் வந்த பூர்வீக பூமி விளைச்சலில் பொன்னை அள்ளி வழங்கிக்கொண்டிருக்கிறது. மிராசு வீட்டு பிள்ளையான எனக்கு உத்தியோகம் பார்த்தாகவேண்டும் என்ற நிர்பந்தமேயில்லை. சிறு வயதிலிருந்தே கதை, கவிதை, இயற்கையை ரசிப்பது என்றிருப்பேன். என் வயதொத்த பையன்களின் கேளிக்கைகளில் எனக்கு என்றுமே நாட்டம் இருந்ததில்லை. ஆற்றில் நீச்சலடிக்கவும், கில்லி அடிக்கவும், பின்னாளில் கிரிக்கெட் ஆடவும் மற்ற பையன்கள் விரும்பிய போது நான் மட்டும் தோட்டத்து அணிலையும், தவிட்டுக்குருவி கூடு கட்டும் அழகையும் மணிக்கணக்காய் உட்கார்ந்து ரசிப்பேன். வாலிபனாகி மீசை முளைத்த பின்பும் விடலை குறும்புகளில் ஈடுபாடு ஏற்படவேயில்லை.

அம்மாவின் மாமியாராகவேண்டும் என்ற ஆசையை பார்க்கும் போது சில சமயம் சிரிப்பாகவும், சில சமயம் பாவமாகவும் இருக்கிறது. ஆனால் அதற்காக எலிப்பொறியில் சிக்கிக்கொள்ள மாட்டேன். நான் கற்பனை செய்து வைத்திருக்கும்படியான, என் போக்கோடு ஒத்துப் போகக்கூடிய, எனக்கு இன்பம் தரவல்ல பெண் கிடைப்பாள் என்று நான் நம்பத்தயாராய் இல்லை. நம்பி காலில் விலங்கை மாட்டிக்கொண்டு தானும் முடங்கிப்போய் இன்னொருத்திக்கும் நரகத்தை உண்டாக்க வேண்டாமே என்ற நல்லெண்ணெத்தில் சந்தோஷமாக பிரம்மச்சரிய வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.

காற்றோட்டமான ஒரு சாயங்கால வேளையில் பூங்காவிலுள்ள பெரிய மரத்தில் அடைய வரும் பறவைகளின் சங்கீத கூச்சலை ரசித்தவண்ணம் நான் ஒரு கவிதை தொகுப்பை புரட்டிக்கொண்டிருக்கும் போது திடாரென ஒரு சிறுவன் என் எதிரே சைக்கிளை ‘கிரீச் ‘சென பிரேக் போட்டு நிறுத்தவும் அதே கணத்தில் சற்று தூரத்தில் ஒரு பெண் வீலென அலறவும் நான் திடுக்கிட்டு தலை நிமிர்ந்தேன். பந்தை துரத்தி வந்த தளிர் நடை குழந்தை ஒன்று குறுக்கே வந்ததால் பையனின் கிரீச் சடன் பிரேக். குழந்தையை நோக்கி வந்த ஆபத்தை கண்டதால் பெண்ணின் வீலென்ற அலறல். நான் விருட்டென எழுந்து குழந்தையை வாரி எடுத்து கீழே விழாமல் காப்பாற்றி, பயத்தில் குழந்தை விக்கித்து போகாமல் ஆசுவாசமாய் அணைத்துக்கொண்டேன். அதற்குள் அந்த பெண் பாய்ந்தோடி வந்து குழந்தைக்காக என்னிடம் கைகளை நீட்டினாள்.அதைக்கண்ட குழந்தையும் அவளிடம் தாவி ஓடி அவள் கழுத்தை கட்டிக்கொண்டது.

அந்தப்பெண் அந்த குழந்தையின் தாயா என்று என்னால் தீர்மானமாய் சொல்ல முடியவில்லை- குழந்தை கொழுக் மொழுக்கென்று, ஜம்மென்று உடையணிந்து, சீமான் வீட்டு செல்வம் போல இருந்தது. அவளோ மெலிந்து, எளிமையான தோற்றத்தில் முகத்தில் சந்தோஷம் வற்றிப்போனவளாய் தெரிந்தாள். இந்த புஷ்டியான அழகு புஷ்பத்தை இவள் ஈன்றவளாயிருக்கமுடியாது என்று தோன்றியது. ஆனால் முகவாட்டத்தைத் தாண்டி அவளது தீர்க்கமான நாசியிலும், கண்களின் தீட்சண்யத்திலும் ஒரு கம்பீரம் இருந்தது.

குழந்தையை வளர்க்க அமர்த்தப்பட்டவள் என்று ஐயம் தோன்றினாலும் நான் உத்தேசமாக ‘உங்கள் குழந்தைக்கு பந்து விளையாட்டில் எவ்வளவு ஆர்வம்! ‘என்றேன். அவள் நேரிடையாக பதில் சொல்லாமல் பூடகமாக சிரித்துக்கொண்டே ‘நொடியில் என்னை தவிக்க வைத்து விட்டாயே! ‘ என்றாள். பிறகு என்னை நிமிர்ந்து பார்க்காமல் மெல்ல கூறினாள், ‘சமயத்தில் குழந்தையை காப்பாற்றிவிட்டார்கள். எப்படி நன்றி கூறுவதென்று தெரியவில்லை.

மிகவும் மிருதுவாக, யோசித்து பேசினாள். அவள் கண்களில் மானின் மிரட்சி தெரிந்தது. அவளும் நான் நடக்கும் பாதையில் சேர்ந்து நடந்து வந்தாள். ஏனோ எனக்கு அவளுடன் பேச்சை தொடர வேண்டும் போலிருந்தது. ‘ஆயாம்மா! குழந்தை உங்களுடன் நன்றாக ஒட்டிக்கொள்கிறதே! ‘ என்றேன்.ஒரு சிறு சிரிப்புடன் ‘நாள் முழுக்க நான் அவளை கவனித்துக்கொள்கிறேனில்லையா! ‘என்றாள். ‘இவள் பெற்றோர்கள் என்னவாயிருக்கிறார்கள் ? ‘ஏனோ அவளுடன் பேச்சை நீட்டிக்க தோன்றியது.

‘இரண்டு பேரும் டாக்டர்கள். ரொம்ப பிஸியான பிராக்டிஸ். அதனால் குழந்தையின் முழு பொறுப்பும் என்னுடையது. ‘ ‘ஓ!அப்படியானால் வீட்டையும் நீங்கள்தான் கவனித்துக்கொள்ளவேண்டியிருக்குமே! ‘ ‘என் கடமையை நான் திருப்தியாக செய்கிறேன். இப்படியே என் ஆயுளை கழித்துவிட விரும்புகிறேன். ‘சம்பாஷணையை முடிக்க விரும்பாமல் ‘உங்களை நல்ல மரியாதையாய் நடத்துவார்கள் என்று நினைக்கிறேன் ‘ என்றேன். இதைக்கேட்டதும் அவள் சிரித்தாள். எனக்கு அது விநோதமாக இருந்தது. ‘எனக்குத்தான் முதல் மரியாதை. சகல உரிமைகளும் உண்டு. நான் கேட்டு கிடைக்காததே இல்லை. ‘ ‘அப்படியானால் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான். ‘ ‘ரொம்ப. ‘ மீண்டும் சிரித்தாள்.

இவள் என்னை கேலி செய்கிறாளா ? இது என் மனதில் எழுந்த லேசான சந்தேகம். அவள் சிரிப்பில் ரேகையாக ஓடியது கேலியா, சோகமா ? என்னால் தீர்மானிக்க முடியவில்லை.அவள் ரொம்ப சகஜமாக என்னுடன் கூட நடந்து வந்தாள். அவளிடம் ஒரு இனம் புரியாத கம்பீரம் இருந்தது. ‘இதற்கு முன்னால் எங்கு வேலை பார்த்தீர்கள் ? ‘ என் ஆவலைப்பற்றி எனக்கே அதிசயமாய் இருந்தது. ‘ஒரு பெரிய வக்கீல் வீட்டில்.அங்கே நான் பட்டம் கட்டாத ராணிதான். ‘ ‘பின் ஏன் அங்கிருந்து வெளியேறினீர்கள் ? ‘ விருட்டென்று கேள்வி வெளிப்பட்டுவிட்டது. ‘விதி ‘. ஒற்றைச்சொல் பதில். இதற்கு என்ன அர்த்தம் ? இப்போது அவள் சிரிக்கவில்லை. அவள் கண்களில் ஏதோ காட்சி வந்து போனது போல ஒரு தூரப்பார்வை. ஒரு பெருமூச்சு அவளிடமிருந்து வெளிப்பட்டது.எனக்கு விளங்கவில்லை. ஆனால் அதை பற்றி பேசுவது ஆறாத ரணம் ஒன்றை கீறி விடுவது போல இருக்கும் என்று மட்டும் புரிந்தது. நல்ல வேளையாக நான் ஏற வேண்டிய பஸ் நிறுத்தம் வந்துவிட்டது. ‘பாப்பா டாட்டா ‘ என்று குழந்தையிடம் கையாட்டிவிட்டு நின்று கொண்டேன்.

அப்போதுதான் என் சிநேகிதனும் அங்கு நின்று கொண்டிருப்பதை பார்த்தேன். ‘என்னடா, அந்த பைத்தியம் உன்கூட பேசியதா, என்ன ? ‘என்று அவன் ஆச்சரியமாய் கேட்டான். ‘என்னது, பைத்தியமா ? ‘ ‘கிட்டதட்ட. புருஷன் போக்கு சரியில்லாம போனதுல ரொம்ப அப்செடாகி மெளன சாமியார் மாதிரி ஆயிருச்சி. ‘ ‘எப்படி ? விவரமா சொல்லேன். ‘ ‘ரொம்ப வசதியான வக்கீல் வீட்டு பொண்ணு. செல்லமா வளந்தவ. பாக்கவும் நல்லா களையா இருந்தா. பாரதியாரைப்பத்தி வரிஞ்சி வரிஞ்சி பேசுவா. நிறைய கொள்கைகள். பழமை புதுமை எல்லாம் கலந்த அழகான பிறவி. ஓரு வசதியான டாக்டருக்குத்தான் கல்யாணம் செஞ்சி வச்சாங்க. அவன் ஒரு துரோகி. காலேஜ் காதலிய வீட்டோட கூட்டிவச்சிகிட்டான். ‘ ‘அடப்பாவமே!அப்புறம் ? ‘ ‘இவளுக்கு வீட்டைவிட்டு வெளியேற கெளரவம் இடம் கொடுக்கல.ஆனா மனசு நொறுங்கி போயிட்டா. ‘தான், தன் குழந்தை ‘னு சின்ன வட்டத்துக்குள்ள யோகியா வாழ்ந்துகிட்டுருக்கா.அவ யார்கிட்டயும் பேசி நான் பார்த்ததில்லை. ‘

நான் அவளோடு பேசியவற்றை திரும்ப எண்ணிப்பார்த்தேன். அவ்ள் சொல்லாத சோகம், அதன் ஆழம், அந்த வடு தெளிவாக புரிந்தது. மனதுக்குள் வலித்தது.

Series Navigation