என் கணக்கு வாத்தியார்

This entry is part [part not set] of 19 in the series 20010618_Issue

அனந்த்


உருட்டு விழியும் உலர்ந்த சிகையில்
சுருட்டிச் செருகிய துணித்தலைப் பாகையும்
விரட்டு நெடிப்பொடி வீங்கிடு நாசியும்
இருட்டு வேளையில் இடிந்த மதிலுறை
வெருட்டும் அய்யனார் மீசையும் வயிற்றைப்
புரட்டும் பெருங்குரல் ஓசையும் ஒருங்கே
திரட்டிப் படைத்ததோர் திருவுரு கொண்டஅக்
கொரட்டூர்ப் பள்ளியின் கணிதஆ சிரியன்,
அரட்டை அடித்தலும் அருகிலே அமரும்
பரட்டைத் தலையுடை பிறமா ணவரை
மிரட்டி அவரது பண்டம் பறித்தலும்
குருட்டாம் போக்கில் வரும்விடை யெனப்பெருங்
குறட்டை யொலியுடன் துஞ்சலும் கொண்ட
இரட்டைத் தலையேற்கு எட்டாக் கணக்கெலாம்
தெருட்ட முயன்று தோற்றபின் தன்பெயர்
கிருட்டிணன் அன்றெனக் களைந்து
உருட்டிய மாலையோ டேற்றனன் துறவே

Series Navigation