என்னைக் கொஞ்சம் தூங்கவைத்தால்

This entry is part [part not set] of 36 in the series 20080327_Issue

குரல்செல்வன்


ஐரீனுக்கு மைசூர்பாக்கின் நிறமும் வடிவமும் தெரிந்திருந்தன, ஆனால் பெயர் நினைவில்லை.
“கிறிஸ்மஸின்போது மஞ்சள் நிறத்தில் கட்டிகட்டியாக இனிப்பு செய்திருந்தாயே.”
“அது மைசூர் பாக்” என்றாள் சரவணப்ரியா.
“அதில் நான்கு கட்டிகள் செய்து எடுத்து வரமுடியுமா? அது என் குடும்பத்தில் ஒருவருக்கு மிகவும் பிடித்திருந்தது.”
“நான்கு கட்டிகளெல்லாம் செய்ய முடியாது. பன்னிரண்டு கட்டிகள்தான் செய்வேன்.”
“நீ செய்தால் நான் மறுக்கப்போவதில்லை. நிறைய வெண்ணெய் போட்டுத் தயாரித்தால் நல்லது.”
“அப்படித்தான் அதைச்செய்வது வழக்கம்.”
“நாளை சனிக்கிழமை, என் வீட்டிற்கு வரும்போது கொண்டுவந்தால் நன்றாக இருக்கும்.”
“சாமி சூரனோடு டென்னிஸ் மாட்ச்சிற்காக அட்லான்டா போயிருக்கிறான். ஞாயிறுதானே அவர்கள் திரும்புவார்கள்.”
“நீ வந்தால் போதும். ஆண்ட்ரு சனி இரவு கப்ஸ்கௌட் கேம்ப் போகிறான். அவனும் ஜேசனும் கூட அப்போது வீட்டில் இருக்கமாட்டார்கள்.” மகளிர் மட்டும் போலிருக்கிறது, சரவணப்ரியா மேலும் விவரம் கேட்கவில்லை.
சனிக்கிழமை ஐந்து மணி அளவில் ஐரீன் வீட்டின் முன் சரவணப்ரியா காரை நிறுத்திய போது வேறு கார்கள் இல்லை. கறுப்பு உடையும் அதே நிறத்தில் நீண்ட காலுறையும் அணிந்த ஐரீன் முன்கதவைத் திறந்தாள். தந்தத்தின் நிறத்தில் இருக்கும் அவள் கூந்தல் பெராக்ஸைட் போடாமலே வெள்ளையாகத் தெரிந்தது.
“ஹாய் ஐரீன்! நான்தான் விருந்துக்கு வந்த முதல் ஆள் போலிருக்கிறது.”
“சாரா! நீதான் முதல், நடு, கடைசி எல்லாம்.” ஐரீன் சாராவின் கைப்பையை வாங்கிக் கொக்கியில் மாட்டினாள்.
சாராவுக்கு ஏமாற்றமாக இருந்தது. அது அவள் முகத்தில் வெளிப்பட்டிருக்க வேண்டும். “சாரா! இது ஒரு மிக முக்கியமான விருந்து. அதைச் சிறப்பிக்கப் போகிறவர்” என்று ஐரீன் நிறுத்திவிட்டுப் பின்னால் திரும்பிக் கையை விரித்துக் காண்பித்தாள். “நெப்போலியன்!!” சாராவுக்கு ஐரீனுடன் பத்து ஆண்டுப்பழக்கம். அத்தனைக் காலமும் நெப்போலியனை அவள் வீட்டில் பார்த்திருக்கிறாள். அதனால் அது சாராவை அடையாளம்கண்டு, “மியாவ்” என்றது. “ஹாய் நெப்போலியன்!” நெப்போலியனைப் போல அதன் தலையில் முன்னும் பின்னும் அரைவட்டமாக உயர்ந்து காதருகில் தாழ்வாகத் தொங்கிய ஒரு தொப்பி. சில ஆண்டுகளுக்கு முந்தைய கிறிஸ்மஸின்போது ஐரீன் அதற்கென்று தன் கையால் பின்னிய ஒரு சிவப்பு ஸ்வெட்டர். அக்டோபர் மாதத்தின் ஆரம்ப காலத்திற்கு அது அவசியமில்லைதான், ஆனால் நெப்போலியன்மேல் அழகாக இருந்தது
சாரா தான் எடுத்து வந்திருந்த பாத்திரத்தைச் சாப்பாட்டு மேஜையின்மேல் வைத்தாள்.
ஐரீனும் சாராவும் சோஃபாவில் அமர்ந்து பேசும்போது, நெப்போலியன் அதன் மேலேறி அங்கிருந்து அருகிலிருந்த அலமாரியில் தாவிப் பிறகு நாற்காலியில் குதித்து அங்கிருந்து தரையில் மெல்ல இறங்கியது. அடுத்த சுற்றைத் தொடங்கும்முன் பாராட்டுக்காகத் தலையைத் தூக்கி நின்றது. அதற்கு ஏமாற்றம் தராமல் ஐரீனும் சாராவும், “ஹ_ர்ரே நெப்போலியன்!” என்று கைதட்டினார்கள். அதுவும் அலுக்காமல் பலமுறை ஏறிகுதித்தது. முன்பும் இந்த வித்தையைச் செய்திருக்கிறது. ஆனால் இன்று கால் பட்டு வால் பட்டு அலமாரியிலிருந்த ஆண்ட்ருவின் கால்பந்துக் கோப்பை, ஐரீன் ஜேசன், இருவரின் இளமைக்காலப் படங்கள் தரையில் விழுந்தன. ஐரீன் நெப்போலியனை அதட்டவில்லை. “நெப்போலியன் இதுபோல விளையாடிப் பல வாரங்களாகின்றன. உன்னைப் பார்த்த சந்தோஷமாக இருக்க வேண்டும், சாரா!”
அவர்கள் வீடு பல பிராணிகளுக்கு இருப்பிடம். சில நிரந்தரவாசிகள். மற்றவை உடல் தேறும்வரை தங்கிப் பிறகு வெளிஉலகை எதிர்கொள்ளச் செல்லும். அதனால், “மற்ற நாய் பறவைகள் எங்கே?” என்று சாரா கேட்டாள்.
“எல்லாம் வீட்டின் பின்புறம்.”
நெப்போலியன் ஓய்ந்த போது ஐரீன் அதைத் தூக்கிவந்து சாப்பாட்டு மேஜையில் உட்கார வைத்தாள். மேஜை விரிப்பு, தட்டுகள், கோப்பைகள், காகிதக் கைக்குட்டைகள் எல்லாவற்றிலும் பூனைகளின் படங்கள். நெப்போலியனுக்கு மேஜையின் ஓரத்தில் சிறப்பான இடம். எதிரும் புதிருமாக ஐரீனும், சாராவும். நெப்போலியனுக்கென்று சால்மனை வதக்கித் தயாரித்த சிறப்பான உணவை ஐரீன் அதன் முன் வைத்தாள். முன்காலால் துண்டுகளை எடுத்து இறைத்தது, பிறகு அவற்றைக் கவ்விச் சாப்பிட்டது. பக்கத்தில் வைத்திருந்த பாலை நாவால் நக்கியது.
ஐரீன் அவர்களுக்கென்று தக்காளி சூப், வாழைப்பழமும் வால்நட்டும் கலந்த ப்ரெட், காய்கறிகளின் கலவை, பச்சடி செய்திருந்தாள்.
“இன்றைக்குச் சரியாகப் பதினேழு ஆண்டுகளுக்கு முன் இது நடந்தது. நான் கல்லூரியில் ஜுனியர். அப்போது என்னிடம் கார் கிடையாது. என் சினேகிதி ஒருத்தி எப்போதாவது அவள் காரில் என்னை வெளியே அழைத்துச் செல்வாள். பொதுவாகவே அவள் தாறுமாறாக ஓட்டுவாள். அன்று மதிய உணவின்போது ஒயின் அதிகம் குடித்திருக்க வேண்டும். காலியாக இருந்த ஒரு வீட்டின் தோட்டத்தில் போய் காரை இடித்துவிட்டாள். அங்கிருந்த பூனைக்குட்டிகளில் இரண்டு தப்பி ஓடிவிட்டன. மூன்றாவது தரையில் கிடந்தது, காலில் ரத்தம். நான் அதைக்கையில் எடுத்துக்கொண்டேன். என் சினேகிதி ஒரு மிருகங்களின் மருத்துவமனைக்கு உடனே அழைத்துச் சென்றாள். அதுவரை நான் ஒரு வெடரினரி டாக்டரைப் பார்த்ததுகூட கிடையாது. அவள் அன்புடன் அதன் காலைச் சுத்தம் செய்து அதை ஒருசேரக் கட்டியதைப் பார்த்துப் பிரமித்துப் போனேன். அப்போதே வெடரினரி ஸ்கூலுக்குப் போகவேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன்.”
கடைசியில் இனிப்பிற்காக ஐரீனும் சாராவும் ஆளுக்கொரு மைசூர்பாக் கட்டியைச் சுவைத்தார்கள். நெப்போலியனுக்கு மட்டும் நான்கு கட்டிகள்.
“ஐரீன்! அதற்கு டயபெடிஸாயிற்றே. இவ்வளவு சாப்பிடலாமா?”
“இன்று பாதகமில்லை.” சாராவுக்கு அப்போதுதான் விருந்தின் காரணம் உறைக்கத் தொடங்கியது.
“சமீபத்தில் நெப்போலியனுக்கு எந்த சாப்பாடும் ஒத்துக்கொள்வதில்லை. எழுந்து நடப்பதே ஒரு பிரும்மப்பிரயத்தனமாக இருக்கிறது. அதன் முழு வாழ்க்கையையும் அது பூர்ணமாக அனுபவித்து வாழ்ந்துவிட்டது, இனி மிச்சம் எதுவுமில்லை.”
உண்ட களைப்பில் நெப்போலியன் சாராவின் மேல் சாய்ந்திருக்க அவள் அதைத் தடவிக் கொடுத்தாள். மகிழ்ச்சியில் கண்களை மூடி அது கத்தியது. வலதுபுறமாக வந்த ஐரீன் அதன் கழுத்தின் அடிப்புறத்தில் சிறிய ஊசியால் குத்திக் கொஞ்சம் மயக்க மருந்தைப் புகுத்தினாள். மியாவ் மெல்ல நீண்டு அடங்கியது. நெப்போலியன் நகர முயன்று அந்த முயற்சியில் தோல்வி அடைந்தது. அதன் மெலிந்த சுவாசத்தில் வயிறு மெல்ல எழுந்து விழுந்தது. “அது தூங்கட்டும்.”
ஐரீன் வீட்டின் கீழ்த்தளத்திற்குச் சென்று ஒரு அட்டைப் பெட்டியை எடுத்து வந்து கூடத்தின் நடுவில் வைத்தாள். ‘நெப்போலியனின் இறுதி உறைவிடம்’ என்ற அலங்கார எழுத்துகள் அழகு செய்த மேல் பகுதியை எடுத்தாள்.
“சாரா! இந்தப் படங்களைப் பெட்டியின் கீழ்ப் பாதியில் உள்புறம் ஒட்டவேண்டும்.” அலமாரியின் இழுப்பறையிலிருந்து ஐரீன் படங்களை எடுத்துவந்தாள். ஒன்றைத்தவிர மற்றவை புகைப்படங்கள். ஒவ்வொரு படத்தையும் கையில் வாங்கிப் பார்த்தபிறகு அதைச் சாரா டேப் போட்டு ஒட்டினாள். வண்ணங்களை இழந்த முதலாவது படம் போலராய்ட் காமராவில் எடுக்கப்பட்டது. காலில் கட்டுடன் ஒரு பூனைக்குட்டியை ஒரு இளம்பெண் தூக்கிப் பிடித்திருக்கிறாள். அடுத்ததில் அந்தப் பெண்ணின் தலையில் குஞ்சலம் வைத்த ஒரு சதுரக்குல்லாய். அவளுடைய கறுப்புக் கோட்டுக்கு முன்னால் முழுமையாக வளர்ந்த வெள்ளைப்பூனை. மணக் கோலத்தில் ஜேசனும் ஐரீனும், அவர்களுக்கு நடுவில் நெப்போலியன். அடுத்த படத்தில் டயபர் மட்டும் அணிந்த இரண்டு வயதுப் பையன் பூனைமேல் சவாரி செய்யப் பார்க்கிறான், அது நழுவுகிறது. கடைசியாக டிஜிடல் யுகத்தில் எடுக்கப்பட்ட படம். வரிசையாக ஐரீனின் முழுக்குடும்பம். மூன்று மனிதர்களைத் தவிர இரண்டு நாய்கள், ஒரு வாத்து, ஓர் ஆமை, நெப்போலியன். ‘என் பூனை’ என்ற தலைப்பில் ஆண்ட்ரு வண்ணப்பென்சில்களில் வரைந்து கையெழுத்திட்ட ஒரு படம்.
ஒரு பூனை படம் போட்ட போர்வையைப் பெட்டியின் அடியில் விரித்தாள். நைந்துபோன அது பல ஆண்டுகளைக் கண்டிருக்கவேண்டும். இருவரும் நெப்போலியனின் அருகில் வந்தார்கள். ஐரீனின் கையில் ஐந்து மிலி சிரிஞ்சின் நுனியில் ஒரு ஊசி. சாரா கேட்கும் முன்பே, “இது பென்டோபார்பிடால்” என்று சொல்லிக்கொண்டு நெப்போலியனின் உள்ளங்காலில் ஊசியைக் குத்தி மருந்தைச் செலுத்தினாள். ஒரு சில வினாடிகளில் சுவாசம் அடங்க அது தன் கடைசிப் பிரயாணத்தைத் தொடங்கியது. ஐரீனின் கண்களில் பதினேழு ஆண்டுகள் விரிந்து ஒரு சொட்டுக் கண்ணீராக அதன் மேல் உதிர்ந்தது. அவளும் சாராவும் மௌனமாக நெப்போலியனுக்கு வழி அனுப்பினார்கள். அடுத்த பத்து நிமிடங்கள் எந்த சத்தமும் எழவில்லை. பிறகு ஐரீன் அதைத் தூக்கிப் பெட்டியில் வைத்துப் போர்வையால் மூடினாள். அதன் பக்கத்தில் அது விளையாடிய பந்து, நெப்போலியன் என்ற பெயர்போட்ட குழிவான தட்டு, பிரிக்கப்படாத ட்யூனா அடங்கிய ஒரு டப்பா. பெட்டியின் மேல்பாதியை வைத்து அழுத்தி மூடினாள். சாரா பின் தொடரப் பெட்டியை எடுத்துக்கொண்டு ஐரீன் வீட்டின் பின்புறத்திற்கு வந்தாள். தோட்டத்தில் ஜேசன் ஒருகுழி பறித்திருந்தான். அதில் பெட்டியை வைத்து மண்ணால் மூடினார்கள். ஐரீன் அந்த இடத்தில் சில கற்களை அடுக்கினாள். சூரியனின் கடைசிக்கதிர்களும் மறைய இருள் பரவத் தொடங்கியது. “ஆண்ட்ருவுக்கு மற்ற பிராணிகளைவிட நெப்போலியன்தான் உயிர்” என்றாள் ஐரீன். அவளுக்கும் அப்படித்தான் இருக்கவேண்டும் என்று சாராவுக்குத் தோன்றியது.
“நாளை கேம்ப்பிலிருந்து திரும்பியவுடன் எங்கே என்று அவன் கேட்கமாட்டானா?”
“நெப்போலியனின் நேரம் முடிந்துவிட்டது என்றால் புரிந்துகொள்வான்.”

கைப்பையை எடுத்துக்கொண்டு சாரா கிளம்பத்தயாரானாள்.
“நெப்போலியனின் கடைசி விருந்துக்கு வந்ததற்கு நன்றி, சாரா!”
“நன்றிக்கு அவசியமே இல்லை. பிராணி எதுவும் வளர்க்காத எனக்கு இது ஒரு தனி அனுபவம். நெருங்கிய மனிதர்களின் மறைவு மாதிரிதான் இதுவும் போலிருக்கிறது.” நெப்போலியனின் இழப்பின் வருத்தம் சாராவுக்கு இன்னும் அகலவில்லை.
ஐரீன் மறுமொழி சொல்லும்முன் தொலைபேசியின் மணி அடிக்கவே அவள் கூடத்தின் மறுபக்கம் நகர்ந்தாள். அவள் பேசி முடித்தபிறகு விடைபெறலாம் என்று சாரா நுழைவிடத்தில் காத்திருந்தாள். ஐரீன் ஹலோவுக்குப்பிறகு மறுமுனையில் இருந்தவரை ஏதோ கேட்ட மாதிரி இருந்தது, பிறகு அதிகம் பேசவில்லை. முகத்தில் இறுக்கம். நடுவில் ஒரு துண்டுக்காகிதத்தில் சில வரிகள் எழுதினாள். அதைப் பல தடவை மடித்தாள். “நிச்சயமில்லை, பார்க்கலாம், எதற்கு” என்ற வார்த்தைகள் பலமுறை காதில் விழுந்தன. கடைசியில், “பை.”
கூடத்தைக் கடந்துவந்த ஐரீன், “சாரா! தொலைபேசியில் இப்படிப்பட்ட ஒரு அழைப்பு வருமென்று நான் எதிர்பார்த்ததே இல்லை” என்றாள். “அது என் அப்பா பால் ஐசன்மாங்கர், நாஷ்வில்லுக்கு வந்திருக்கிறானாம். என்னைப் பார்க்கவேண்டுமாம், எந்த முகத்தை வைத்துக்கொண்டு கேட்கிறான் என்று தெரியவில்லை.” குரலில் அதுவரை அடக்கிவைத்திருந்த சினம் வெளிப்பட்டது.
“அவன்தான் என்று நிச்சயமாகத் தெரியுமா?”
“என் அம்மாவின் செல்லப்பெயர் என்ன என்று கேட்டேன். கஸ்ஸி என்று சரியாகச் சொன்னான். அவன் குரல் கிணற்றிலிருந்து வருவதுபோல் மிகப்பலவீனமாக இருந்தது.”
“இப்போது எங்கிருக்கிறான்?”
துண்டுக் காகிதத்தைப் பிரிக்காமலேயே சாராவின் கையில் தந்து, “எங்கிருந்தால் என்ன? நான் அவனைப் பார்க்கப்போவதில்லை” என்றாள் அலட்சியமாக. சாரா அதைப் பிரித்துப் படித்தாள். முகவரியில் ‘அக்டோபர் தற்காலிக முதியோர் இல்லம்’ என்கிற வார்த்தைகள் இரக்கத்தை வருவித்தன.
“சாரா! உன் முகத்தைப் பார்த்தால் நீ என் முடிவை மறுப்பதுபோலத் தெரிகிறது.”
“ஒரு தடவை அவனைச் சந்திப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன். என் அக்காவுக்கு அவள் கணவன் செய்த துரோகம் இந்தியக் கணக்குப்படி பார்த்தல்கூட மிகக்கொடுமை. ஆனாலும் அவன் கடைசிக்காலத்தில் அவளைப் பார்க்க விரும்பியபோது அவள் அவனைச் சந்திக்க சம்மதித்தாள்.”
ஐரீன் யோசித்தாள்.
“ஐரீன்! இந்த இடம் என் வீட்டிற்குப் போகும் வழியில்தான் இருக்கிறது. நான் அழைத்துப் போகிறேன். அவனைப் பார்த்தபிறகு இன்றிரவு நீ என் வீட்டிலே வந்து தங்கலாம்.” ஐரீன் சாராவைத் தொடர்ந்து வெளியேவந்து காரில் ஏறிக்கொண்டாள்.
நாஷ்வில் போகும்போது சில வாரங்களுக்கு முந்தைய உரையாடல் சாராவின் நினைவுக்கு வந்தது. ஆண்ட்ரு படிப்பில் கவனமில்லாமல் விளையாட்டுத்தனமாக இருக்கிறான் என்ற அவன் ஆசிரியையின் குறிப்பிற்கு ஐரீன் காட்டிய வருத்தம் சாராவுக்கு மிகையாகத் தோன்றியது.
“இப்போதுதானே முதலாவது வகுப்பில் படிக்கிறான், விளையாட்டுத்தனம் இருக்கத்தான் செய்யும்” என்று சமாதானப்படுத்தினாள் சாரா.
“இல்லை, அவனுக்கு என் அப்பாவின் பொறுப்பற்ற குணம் வந்துவிடுமோ என்று கவலையாக இருக்கிறது.” ஐரீன் அதுவரை அவள் தந்தையைப் பற்றி எதுவும் சொன்னதில்லை.
“அவர் இப்போது எங்கே இருக்கிறார்?”
டெட்ராய்ட்டிற்கு வடமேற்கில் இருக்கும் நியுஹார்லம் என்ற சிற்றூரின் சர்ச்சில் சமீபத்தில் கூட்டம் சேருகிறது. இளம் பாஸ்டரின் கவர்ச்சியான முகமும், வசீகரமான குரலும்தான் காரணம். அதனால் தட்டுகளில் ஒரு டாலர் நோட்டுகளோடு ஐந்தும் தாராளமாக விழுகிறது. மூன்று மாதம் முடியும்போது நிர்வாகத்தினர் அதில் ஒரு பங்கைக் கணக்குப்பார்த்து அவனுக்குக் கொடுப்பது வழக்கம். அன்று கஸ்ஸி ஐசன்மாங்கர் ஒரு பெருந்தொகையை எதிர்பார்த்தாள். இதுவரையில் அப்படிக் கிடைக்கும் தொகையை ட்ரைவ்-இன் சினிமா போவதிலும், க்ராண்ட் ராபிட்ஸ் சென்று சாப்பிடுவதிலும் விரைவாகக் கரைப்பது வழக்கம். இனி அதை முழுவதுமாகச் சேமிக்கவேண்டும் என்று தீர்மானித்தாள். அவர்கள் குடும்பம் பெரிதாகப்போகிறதே. உண்மையில், இருவர் கொண்ட அவர்கள் குடும்பத்தில் அன்று ஒரு ஆள் குறையப்போவதை அவள் உணரவில்லை. அவள் கணவன் பால் சர்ச்சிலிருந்து வீடு திரும்பவில்லை. பணம் கிடைத்த சந்தோஷத்தில் அதைச் செலவழித்துவிட்டு மறுநாள் வருவான் என்று எதிர்பார்த்தாள். ஆனால் போனவன் போனவன்தான். அடுத்து வந்த ஆண்டுகளில், சிறிய ஊர்களின் சேப்பல்களில் பாஸ்டராகச் சேர்ந்து அங்கிருக்கும் ஒரு ஏமாளிப்பெண்ணைக் கவர்ந்து சில ஆண்டுகளில் அவளைக் கைவிட்டு வேறிடம் செல்வது அவன் தொழில் என்று தெரியவந்தது.
ஐரீன் மிருகஇயல் கல்லூரியில் படிக்கும்போது பால் ஐசன்மாங்கர் பற்றிய ஒரு செய்தி அவள் கண்ணில் பட்டது. நாஷ்வில்லுக்குத் தென்மேற்கில் நூற்றைம்பது மைல் தொலைவிலுள்ள வைன்ஸ்பரோ சர்ச்சின் பாஸ்டரை அவள் மனைவி சுட்டுக்கொல்ல முயற்சித்தாள். அவன் தோளில் காயத்துடன் தப்பினான். அவர்களின் மூன்று குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக நீதிபதி அவளை மன்னித்துத் திருமணபந்தத்திலிருந்து விடுவித்தார். அந்த செய்தியை அவள் தன்தாயிடம் தெரிவித்தபோது, கஸ்ஸி “மூன்று குழந்தைகள் பிறக்கும்வரை ஒருத்தியிடம் ஒழுங்காக இருந்திருக்கிறானே” என்று அதிசயப்பட்டாள்.
இப்போது, ஐரீனிடம் மன்னிப்பு கேட்கத்தான் அழைத்திருக்கிறானோ?
“ஐரீன்! எப்படி அவன் உன்னைக் கண்டுபிடித்தான்?”
“ஏதோ பைத்தியக்காரத்தனத்தில் அவன் புறக்கணித்துவிட்டுச் சென்றபிறகும் என் அம்மா ஐசன்மாங்கர் என்கிற பெயரை மாற்றிக்கொள்ளவில்லை. என் பெயரும் ஐரீன் ஐசன்மாங்கர் என்றுதானே வான்டர்பில்ட் புத்தகத்தில் இருக்கிறது.”
தெருவில் அந்த வழியாகச் செல்லும்போது சாரா ‘அக்டோபர் தற்காலிக முதியோர் இல்லம்’ என்ற பலகையைப் பார்த்திருக்கிறாள். உள்ளே சென்று முன்வாயிலில் காரை நிறுத்தியபோதுதான் ஏதோ மூன்றாம்தர ஓட்டல் போல இருக்கும் என்று எதிர்பார்த்த அவளுக்கு அந்தக் கட்டிடத்தின் பரிமாணத்தைப் பார்த்து அதிர்ச்சி.
“தோளில் பட்ட அடியால் வேலை செய்யமுடியாது என்ற இயலாமையைக் காட்டி இன்சூரன்ஸிடம் நிறைய பணம் கறந்திருப்பான்” என்றாள் ஐரீன்.
வரவேற்பறையில் இரண்டு சோஃபாக்கள், நான்கு நாற்காலிகள், ஒரு பெரிய தொலைக்காட்சி. அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தாள் முகப்பில் நின்றிருந்த இளம்பெண். பெயரைச் சொல்லும் முன்பே அதிகார தொனியில், “இது பார்வையாளர்களின் நேரமில்லை” என்றாள்.
ஐரீன், “பால் ஐசன்மாங்கரைக் கூப்பிடு! இப்போது அவனைப் பார்க்காவிட்டால் நாங்கள் இப்படியே திரும்பிப் போய்விடுவோம்” என்றாள். அந்தக்குரலின் உறுதி பல சோம்பேறிகளை உலுக்கியிருக்கிறது. அந்தப்பெண் யாருடனோ உடனே தொடர்பு கொண்டாள். சில நொடிகளில் சீருடை அணிந்த ஆள் தோன்றினான். “இவன் அழைத்துச்செல்வான்.”
“நன்றி!”
மின்தூக்கியில் நான்கு மாடிகள் ஏறி நீண்ட நடைவழியைக் கடந்து ஒரு கதவின் முன் அவர்களை நிறுத்தினான். “இந்த அறைதான்” என்று அவன் அகன்றவுடன் ஐரீன் கதவைத்தட்டிளாள்.
“கம் இன்!”
அறையிலேயே ஒரு மூலையில் சாப்பாட்டு மேஜை. சூப் குவளை முதல் இனிப்புத்தட்டு வரை சிறிதும் பெரிதுமாகப் பாத்திரங்கள் நிறைந்திருந்தன, பாதிக்கு மேல் காலி. இடதுகையால் சாப்பிட்ட அவன் எழுந்து, “ஹாய் ஐரீன்!” என்றான்.
“ஹாய் பால்! இது என் சினேகிதி சாரா.”
“ஹாய் சாரா!”
“ஹாய் பால்!” பல பெண்களையும், சர்ச்சுக்கு வந்தவர்களையும் மயக்குவதற்கு அந்த முகத்திலும் குரலிலும் என்ன இருந்திருக்கும் என்று சாரா ஆராய்ந்தாள்.
“நீ சாப்பிட்டு முடி! நாங்கள் காத்திருக்கிறோம்” என்று ஐரீனும் சாராவும் அறையின் இன்னொரு பாதியிலிருந்த சோஃபாவுக்குச் சென்றார்கள். “நான் இனிப்பு சாப்பிடாவிட்டால் பரவாயில்லை” என்று அவன் எழுந்துவந்து அவர்களுக்கு எதிரில் ஒரு நாற்காலியில் அமர்ந்தான்.
“இந்த இடம் நீ வர்ணித்ததுபோல இடிபாடாக இல்லை” என்றாள் ஐரீன் குறை சொல்வதுபோல்.
“நான் எதுவும் வர்ணிக்கவில்லையே.”
“உன் குரலைக் கேட்டபோது ஏதோ நீ படுத்தபடுக்கையாக இருப்பதுபோல எனக்கொரு பிரமை.”
“இல்லாவிட்டால் நீ வந்திருப்பாயா?”
ஐரீனுக்கு அவன் தன்னை ஏமாற்றியதாகத் தோன்றியிருக்கலாம். அதை மறைக்க, “நீ ஏமாற்றிய பெண்கள், அவர்களின் குழந்தைகள் யாராவது இதுவரை உன்னைச்சந்திக்க வந்திருக்கிறார்களா?” என்று கேட்டாள்.
“இல்லை, நீ ஒருத்திதான்.”
“சரி, நானும் பார்த்தாயிற்று. நாங்கள் கிளம்புகிறோம்” என்று எழுந்தாள்.
“என்ன அவசரம்? எனக்கொரு உதவி செய்வதற்காக உன்னை வரவழைத்தேன்.”
“மிஸ்டர்! உன்னை இப்போது நான் பார்க்கவந்ததே பெரிய உதவிதான். இந்த என் தோழி வற்புறுத்தியிராவிட்டால் நான் வந்திருக்கக்கூட மாட்டேன்.” சாராவுக்கு ஐரீனை அழைத்துவந்தது சரியில்லையோ என்ற சந்தேகம் எழுந்தது.
“நான் அப்படி என்ன தவறு செய்துவிட்டேன்?”
“எத்தனை தவறுகள்? ஒவ்வொன்றாகச் சொல்கிறேன், கேள்! நீ புறக்கணித்துப் போனபோது எங்கள் கையில் ஒரு பென்னிகூடக் கிடையாது. உன் பேச்சில் மயங்கிப் பள்ளிப்படிப்பைக்கூட முடிக்காத என் அம்மா பரிசாரகியாக வேலை செய்தாள். இருபத்தைந்து ஆண்டுகளில் இரண்டு கால்களும் வீங்கி வளைந்து போனதுதான் மிச்சம். தான் டேட் செய்த சில ஆட்கள் என்னை விகாரமாகப் பார்த்ததால் ஆண்களோடு பழகுவதையே நிறுத்திவிட்டாள். நான் பள்ளியில் பரிசு வாங்கும்போது மாலை நேரத்தில் அவள் வேலைக்குப் போகவேண்டிய கட்டாயத்தில் அதைப் பார்க்கமுடியவில்லையே என்று எத்தனை முறை அழுதிருக்கிறாள். நான் கல்லூரியில் படிக்க வேண்டும் என்பதற்காக மூன்று வருடம் இரண்டு இடங்களில் பதினான்கு மணி வேலை செய்திருக்கிறாள். அவள்தானே நீ மணம் செய்து ஏமாற்றிய முதல் பெண். அவள் சென்ற ஆண்டு இறந்தபோது ஏன் வரவில்லை? அவளைக் கண்டுபிடிப்பதில் என்ன சிரமம்? அவள் கடைசி வரை உன் பெயரைத்தானே வைத்துக்கொண்டிருந்தாள்.” கோபத்தில் வார்த்தைகள் வேகமாக வந்துக் கடைசியில் திடீரென நின்றன.
பால் மிக நிதானமாக, “உன் கோபத்திலிருந்து நான் கேட்பதை நீ உடனே செய்துவிடுவாய் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. உன் ஒருத்தியால்தான் அதைச் செய்யமுடியும். அதற்குத்தானே உன்னைத் தேடிக்கண்டுபிடித்தேன்” என்றான்.
“என்ன செய்யவேண்டும்? சீக்கிரம் சொல்லித்தொலை!”
“நீ அதைப் பல பிராணிகளுக்குச் செய்திருப்பாய். என்னை முடியாத துயிலில் ஆழ்த்திவிடு!”

இந்தக்கதைக்கான விவரங்களைக் கொடுத்துதவிய டாக்டர் ஹாலி வேலன்டைனுக்கு மிக்க நன்றி.


venkataraman.amarnath@vanderbilt.edu

Series Navigation