எனக்குப் பிடித்த கதைகள் – 96 – பொறாமை என்னும் நெருப்பு – ந.சிதம்பர சுப்ரமணியனின் ‘சசாங்கனின் ஆவி ‘

This entry is part [part not set] of 46 in the series 20040129_Issue

பாவண்ணன்


மாநிலத்தின் முக்கிய அலுவலகம் ஒன்றில் என் நண்பர் ஒருவர் வேலை செய்துவந்தார். நல்ல இலக்கிய ரசனை உள்ளவர். நல்ல புத்தகங்களைத் தேடித்தேடிப் படிப்பவர். ஆனால் எழுதுவதில் எந்த ஆர்வமும் இல்லாதவர். படிப்பதில் மட்டுமே கட்டுக்கடங்காத ஆர்வம் உள்ளவர். அவரைப் பார்ப்பதற்கு ஒரு குறிப்பிட்ட நாளில் செல்வது என் வழக்கம். எந்த முன்கூட்டிய தகவலும் தேவைப்படாத அளவுக்கு அந்தப் பழக்கம் எங்களிடையே ஆழ்ந்து படிந்த ஒன்று. ஆனால் ஒரு குறிப்பிட்ட வாரத்தில் நான் சென்ற நேரத்தில் அவர் இல்லை. அலுவலகத்தின் வேறு எந்தப் பகுதிக்காவது சென்றிருக்கக்கூடும் என்று நினைத்துத் தயக்கத்துடன் அருகில் இருந்த நாற்காலி ஒன்றில் உட்கார்ந்தேன். அந்தப் பகுதியின் மேற்பார்வையாளர் என்னைப் பற்றி விசாரித்தபிறகு என் நண்பர் அன்று விடுப்புக்காகத் தகவல் சொல்லியிருப்பதாகச் சொன்னார். விடுப்பெடுப்பதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்தபடி வெளியேறிவிட்டேன். அவர் வீடும் வெகுதாலைவு பயணப்படவேண்டிய இடத்தில் இருந்தது. சோர்வுடன் நான் வீட்டுக்குத் திரும்பினேன்.

அடுத்த வாரச் சந்திப்பில்தான் அவருடன் பேசமுடிந்தது. தேநீர் பருகுவதற்காக வெளியேறி விடுதிக்குள் உட்கார்ந்த நேரத்தில் கடந்தவார விடுப்பைப்பற்றி விசாரித்தேன்.

‘போனவாரம் ஏதோ மெடிக்கல் லீவு குடுத்திருங்கன்னு சொன்னாங்க. என்னாச்சி ஒடம்புக்கு ? ‘

அவர் என் கேள்வியைக் கேட்டுப் புன்னகைத்தார். ‘ஒடம்புல்லாம் நல்லாத்தான் இருந்தது. லீவு வேணுமின்னா அப்படித்தான் பொய்சொல்ல வேண்டியிருக்குது. என்ன செய்யறது ? ஏ

ஏலீவ் எடுக்கற அளவுக்கு என்ன அவசரம் ? ‘

‘அவசரம்லாம் ஒன்னுமில்ல. தி ஸ்டோரி ஆப் பீன்னு போன வருஷம் புக்கார் பிரைஸ் வாங்கன புத்தகம் ஒன்னு கெடைச்சிது. காலையில படிக்க ஆரம்பிச்சேன். நல்லா விறுவிறுப்பா போச்சி. படிக்கறதுக்கும் நல்ல மனநிலை இருந்திச்சி. இடைவெளி இல்லாம படிச்சா நல்லா இருக்கும்ன்னு தோணிச்சி. தொலைபேசியில சூப்பர்வைசர கூப்பிட்டு ஒடம்பு சரியில்லன்னு சொல்லிட்டு வீட்டிலயே தங்கிட்டேன். ‘

படிப்பதும் அதைப்பற்றிப் பேசுவதும் அவருக்கு உவகை தரும் விஷயங்களாக இருந்தன. எதிர்பாராத ஒரு தருணத்தில் அப்பழக்கம் அவருடைய அலுவலகத்தில் அவருடைய நிம்மதியைக் குலைக்கிற அளவுக்குப் பிரச்சனையாக முளைத்தது.

ஒருநாள் அவருடைய அலுவலகத்தின் மூத்த நண்பரொருவர் ஓய்வு பெறுவதை முன்னிட்டு ஒரு சிறிய கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. மாநிலத்தின் பிரதான அலுவலகத்தின் பிரதான அதிகாரி வரவழைக்கப்பட்டிருந்தார். வரவேண்டியவர்கள் அனைவரும் வந்ததும் நிகழ்ச்சி தொடங்கியது. ஓய்வு பெறுபவரைப்பற்றி நண்பரும் பேசவேண்டிய நிலை உருவாகிவிட்டது. நண்பர் அழகான ஆங்கிலத்தில் பத்து நிமிடங்கள் மனம் நெகிழ்ச்சியேற்படுத்தும் வகையில் பேசிவிட்டு அமர்ந்தார். அவருடைய பேச்சைத் தொடர்ந்து நிகழ்ந்த எந்தப் பேச்சும் பார்வையாளர்கள் முன் எடுபடவில்லை. பிரதான அதிகாரியும் தன் பேச்சிலும் அவருடைய பேச்சைப்பற்றிச் சிலாகித்துச் சொன்னார். நண்பருக்கு உடனடி அதிகாரியாக இருப்பவரால் அப்புகழுரையைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை. நியாயமாகத் தனக்குக் கிடைக்கவேண்டிய புகழுைரையை நண்பர் தட்டிப்பறித்துச் சென்றுவிட்டதாக அவர் எண்ணத் தொடங்கிவிட்டார். அது ஒரு அவமானமாக அவர் மனத்தை உறுத்தத் தொடங்கிவிட்டது. நிகழ்ச்சி முடிவடைந்தபிறகு பிரதான அதிகாரி நண்பரிடம் வெகுநேரம் தனிப்பட்ட முறையில் இலக்கியம் பற்றியெல்லாம் பேசியதும் அவரைப் பாடாய்ப்படுத்தின. புதுசாய் வந்திருக்கும் புத்தகங்கள், புதுசாய் எழுத வந்திருக்கும் எழுத்தாளர்கள் என இலக்கிய விஷயங்களை ஒட்டியே அவர்கள் பேச்சு அமைந்திருந்தது.

மறுநாளே அதன் வெளிப்பாடு மோசமான முறையில் அலுவலகத்தில் பிரதிபலிக்கத் தொடங்கிவிட்டது. அந்த அதிகாரி நண்பர் தயாரிக்கும் கடிதத்தில் வேண்டுமென்றே தவறுகளைக் கண்டுபிடித்து கையெழுத்திடாமலேயே கோப்புகளைத் திருப்பியனுப்பத் தொடங்கினார். விளக்கம் கேட்டு நெருங்கிப் பேசச் செல்லும் தருணங்களில் அவருடைய ஆங்கிலத்தைத் தான் ரசிக்கவில்லை என்றும் கன்னடத்திலேயே பேசினால் போதுமென்றும் முகத்தில் அடித்ததைப்போலச் சொல்லித் திருப்பியனுப்பினார். அவருடைய விடுப்புகள் கண்காணிக்கப்பட்டன. சில தருணங்களில் மறுக்கவும் பட்டன. நண்பர் மிகவும் பொறுமையாக அவரை எதிர்கொண்டார். பொறுமையிழந்து பேசுகிற ஒரே ஒரு வார்த்தைகூட தன்னை அந்த அலுவலகத்திலிருந்து வெளியேற்றவோ அல்லது கர்நாடகத்தின் எதாவது ஒரு மூலைக்குத் துாக்கியடிக்கவோ அதிகாரியைத் துாண்டிவிடும் என்பதை அவர் புரிந்தே வைத்திருந்தார். அதிகாரியின் பிடிக்கு அகப்படாமல் அவருடைய ஒவ்வொரு அசட்டுப் பேச்சையும் சகித்துவந்தார்.

பார்க்க நேரும் எவருக்குமே அந்த அதிகாரி வீண்பிரச்சனையை உருவாக்குகிறார் என்பது ஒரே கணத்தில் புரிந்துவிடும். ஆனால் நண்பர் எதையும் புரியாதவர்போல அமைதி காத்தார். பிரதான அதிகாரி நெருக்கமாக இருக்கும் நிலையில் இதைப்பற்றி அவசியம் பேசவேண்டும் என்றும் அதன் வழியாக இப்பிரச்சனைக்கு முடிவு நேரலாம் என்றும் பலரும் எடுத்துரைத்தார்கள். ஆனால் நண்பர் அந்த எண்ணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இலக்கியச்சுவை காரணமாக உருவாகியிருக்கிற நட்பைச் சொந்தக் காரியத்தின் நிமித்தமாகப் பேசிக் களங்கப்படுத்துவது தவறானது என்று சொல்லி எல்லாருடைய வாயையும் அடைத்துவிட்டார். ஏறத்தாழ எட்டு மாதங்கள் இந்த நிலை நீடித்தது. எதிர்பாராத விதமாக அந்த அதிகாரியே இடம்மாறி வேறொரு அலுவலகத்துக்கு மாறிப் போனபிறகுதான் மறுபடியும் நிம்மதியான சூழல் அலவலகத்துக்குள் திரும்பியது. நண்பர் பல நேரங்களில் அப்பிரச்சனையைப் பற்றி வேடிக்கையாகக் குறிப்பிடுவார்.

‘பதவி வித்தியாசம்தான் பிரச்சனை சார். நான் குமாஸ்தா. அவர் எனக்கு அதிகாரி. அதிகாரியாக இருப்பதாலேயே தனக்கு எல்லா விஷயங்களும் தெரிந்திருக்கவேண்டும் என்று நம்புகிறார். தன் ஆங்கிலமே அழகாக இருக்கவேண்டும் என்று நம்புகிறார். தனக்குக் கீழே வேலை செய்கிற ஒருவன் இவ்விஷயங்களில் புலமை பெற்றிருப்பதை அவரால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. அதுவும் அவருக்கு அதிகாரியாக இருக்கக்கூடிய ஒருவர் என்னைப் பொருட்படுத்தி அருகில் அழைத்து மரியாதை கொத்துப் பேசுவதையும் சிரிப்பதையும் சகித்துக்கொள்ளவே இயலவில்லை. தன் ஸ்தானத்தால் அடைய முடியாத விஷயங்களும் உலகத்தில் உள்ளன என்கிற உண்மை அவரைச் சதாகாலமும் சுடுகிறது. அந்த வெப்பத்தைத்தான் அவர் என்மீது கக்கினார். ‘

நண்பர் இவ்வளவு அழகாக அலசி ஆராய்ந்து அமைதியிழக்காமல் இருந்ததைப் பல சமயங்களில் பெருமையுடன் நினைத்துக்கொள்வேன். சில சமயங்களில் அந்தச் சம்பவத்துடன் இணைத்துப் பார்க்கத்தக்க ஒரு கதையும் மனத்தில் ஓடும். அரசன் என்கிற தகுதியால் சதாகாலமும் எல்லா விஷயங்களிலும் வெற்றிகள் தன்னிடம் குவிந்தபடி இருக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் மிதந்த ஓர் அரசனைப்பற்றிய கதை அது. அதன் பெயர் ‘சசாங்கனின் ஆவி ‘. எழுதியவர் ந.சிதம்பர சுப்ரமணியன்.

தன்னுடன் சதுரங்கம் ஆடுவதற்கு வரவேண்டிய நண்பன் சசாங்கனுக்காகப் பொறுமை இழந்து காத்துக்கொண்டிருக்கும் மன்னன் விஜயகீர்த்தியின் பதற்றத்துடன் தொடங்குகிறது அக்கதை. ஒரு பக்கத்தில் இரண்டு ஆசனங்கள் போடப்பட்டிருக்கின்றன. நடுவே உயரமான பீடத்தில் சதுரங்கப் பலகையும் காய்களும் வைக்கப்பட் டிருக்கின்றன. ஆட்டத்தை வேடிக்கை பார்ப்பதற்காக அங்கே வருகிற கணிகை ஹேமாங்கனை தனித்து அமர்ந்திருக்கும் அரசனைப் பார்த்து ‘சசாங்கர் இன்னும் ஏன் வரவில்லை ? ‘ என்று கேட்கிறாள். அவள் கேள்வி சாதாரணமான ஒன்றுதான். ஆனால் சசாங்கன் வரவை எதிர்பார்த்து அவள் தவிப்பதாகத் தப்பர்த்தம் செய்துகொள்கிறான் அரசன். சில மாதங்களாகவே சசாங்கனுக்கும் ஹோமங்கனைக்கும் இடையே நிகழும் பேச்சுவார்த்தைகளிலிருந்தும் முகக்குறிப்புகளிலிருந்தும் அரசனை அரித்தபடி இருக்கிற சந்தேகம் இக்கேள்வியால் மேலும் அதிகரிக்கிறது. உலகத்தையே வெல்லமுடிந்த தன்னால் சதுரங்க ஆட்டத்தில் சசாங்கனையும் கணிகையான ஹேமாங்கனையின் மனத்தையும் வெல்லமுடியவில்லையே என்கிற எண்ணத்தால் அமைதியடைய முடியாத துன்பத்தில் தவிக்கிறான்.

கோபத்தைக் காட்டும் முகத்துடன் ஹோமங்கனையின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் எழுந்துபோகிறான் விஜயகீர்த்தி. ஹேமாங்கனையும் அருகில் இருக்கிற நந்தவனத்துக்குள் செல்கிறாள். தாமதமாக வந்துசேரும் சசாங்கன் முதலில் எதிர்ப்படும் ஹோமங்கனையுடன் பேசியபடி நின்று விடுகிறான். பேச்சோடு பேச்சாக ஹேமாங்கனை அவனைத் துாண்டிவிடும் நோக்கத்துடன் ‘இன்று நீங்கள் வெற்றிபெறப் போவதில்லை என்று எனக்குத் தோன்றுகிறது ‘ எனச் சொல்கிறாள். அவனோ தானே வெல்லப்போவதாகச் சொல்கிறான். பந்தயமாக அவனுடைய கழுத்திலிருக்கும் முத்துமாலையும் அவளுடைய கையிலிருக்கும் மலர்களும் கைமாறுகின்றன. அவர்களுடைய சிரிப்பும் செய்கையும் தொலைவிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் அரசனுக்கு எரிச்சலைக் கிளப்புகிறது.

தாமதத்தால் பாராமுகத்துடன் அமர்ந்திருக்கிற அரசனை ஊக்கப்படுத்தவேண்டி உங்களை ஓர் ஆட்டத்தில்கூட ஜெயிக்கவிடப் போவதில்லை என்று சொல்கிறான். இந்த வார்த்தைகள் அரசனுக்கு எரிகிற கொள்ளியில் எண்ணணெய் வார்த்ததைப்போல இருக்கிறது. அவன் மனம் சிறிது நேரத்தில் வெடிப்பதற்குத் தயாராக இருக்கும் எரிமலையைப் போல இருக்கிறது. எதுவும் பேசாமல் காய்களின் முன் உட்கார்கிறான். இன்று இவனை ஜெயிப்பேன் அல்லது இவன் உயிரையே வாங்குவேன் என்ற எண்ணம் அவன் மனத்தில் எழுகிறது.

ஆட்டம் தொடங்குகிறது. சசாங்கன் நிதானமாக காய்களை நகர்த்துகிறான். ஆத்திரமும் கோபமும் அசூயையும் பொங்கும் மனத்துடன் தப்பும் தவறுமாக ஆடுகிறான் அரசன். அதன் பலன் முதல் ஆட்டத்தில் அரசன் தோல்வியடைகிறான். இரண்டாவது ஆட்டம் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடந்ததற்கு மாறாக நிதானமாக விளையாடுகிறான் அரசன். ஆனாலும் அந்த ஆட்டத்திலும் அவன் தோல்வியடைய நேரிடுகிறது. வேடிக்கை பார்த்தபடி இருக்கும் ஹோமங்கனை அறைக்குள் சென்று அரசனுக்குத் தாகத்துக்குக் கொண்டுவந்து தருகிறாள்.

மூன்றாவது ஆட்டம் தொடங்குகிறது. பந்தய ஞாபகத்தில் சசாங்கனும் ஹோமங்கனையும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள். அரசனுடைய முகம் கடுகடுப்படைகிறது. இதுவரையில் ஆடாத முறையில் வெகுசாதுரியமாக ஆடுகிறான் அரசன். அவனது ஆட்டம் சசாங்கனுக்கே பிரமிப்பை ஊட்டுகிறது. ஒருக்கால் அரசனே ஜெயித்துவிடுவானோ என்னும் எண்ணம் ஏற்படுகிறது. கொஞ்சம் விறுவிறுப்பை உண்டாக்கிக்கொள்ள வேண்டி பாக்கை எடுப்பதற்காக அருகிலிருந்த தாம்பூலத்தட்டின் பக்கம் கையை நீட்டுகிறான் சசாங்கன். ஏற்கனவே தட்டிலிருந்து இலையை எடுக்க முனைந்த ஹேமாங்கனையின் கையுடன் அவன் கை உரசுகிறது. சதுரங்க அரசனைக் கட்டுப்படுத்துகிற விதமாகச் சாமர்த்தியமாகக் காயைநகர்த்துகிறான் மன்னன். தனக்கு இனி வெற்றி என்கிற எண்ணத்தில் பலகையிலிருந்த கண்களை விலக்கி ஏறெடுத்துப் பார்க்கும்போது இருவருடைய கைகளும் உரசிக்ககொண்டிருப்பதைக் கவனிக்கிறான். அவன் மேலும் வெறிகொண்டவனாகிறான். அதே நேரத்தில் ஆட்டத்தில் உருவான நெருக்கடியிலிருந்து மீளும் விதமாகவும் மன்னனுடைய அரசனைக் கட்டுப்படுத்துவம் விதமாகவும் காயை நகர்த்துகிறான் சசாங்கன். ‘ஆட்டம் போச்சு ‘ என்று கையைத் துாக்கி ஒரு சொடக்கச் சொடக்கிவிட்டு ஹோமங்கனையைத் திரும்பிப் பார்க்கிறான் சசாங்கன். அவன் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. மன்னனுடைய வாள் அவன் நெஞ்சில் பாய்ந்துவிடுகிறது.

சில தினங்களுக்குப் பிறகு ஹேமாங்கனையைத் தேடி வருகிறான் அரசன். சசாங்கனுடைய மரணத்துக்குப் பிறகு நாளுக்குநாள் பலவீனமடைந்துவரும் ஹேமாங்கனை படுத்துக்கொண்டிருக்கிறாள். அவளை எழுப்பி ஆட்டத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறான் அரசன். வந்தவளிடம் காய்களைக் காட்டி ‘இவை என்ன தெரியுமா ? சசாங்கன் முதுகெலும்பினால் செய்யப்பட்ட காய்கள் ‘ என்கிறான். சசாங்கனுடன் ‘வேண்டியமட்டும் ஆடியாகிவிட்டது, அவன் ஆவியுடன் இன்று ஆடப்போகிறேன் ‘ என்கிறான் அரசன். அவள்தான் அந்த ஆட்டத்தை ஆடவேண்டும் என்று ஆணையிடுகிறான். அவன் குரலின் வறட்சியும் உள்ளத்தின் ஈரமற்ற தன்மையும் ஹேமாங்கனைக்குப் பொசுக்கி எடுக்கும் வேதனையை உருவாக்கின. ஆட மறுக்கிற அவளுடைய கையைப்பற்றி இழுத்து அவள் விரல்களை அந்தக் காய்களின்மீது வைக்கிறான். காய்கள் கையில் பட்டவுடன் ஒருநொடி அவள் உடம்பு முழுவதும் கூசி நடுங்குகிறது. மறுநொடி பாம்பைப்போல சீறிவிழுகிறாள். பேய்பிடித்ததைப்போலத் தோன்றுகிறது அவள் முகம். அமானுஷ்ய சக்தியை அடைந்தவள்போலத் தோன்றும் அவளைப் பார்த்துத் திகைக்கிறான் அரசன்.

ஆட்டம் தொடங்குகிறது. உண்மையிலேயே காய் ஒவ்வொன்றும் உயிர்கொண்டு நகர்வதற்குத் தவிப்பதாகத் தோன்றுகிறது. ஹோமாவின் கையைக் காய்கள் இழுத்துக்கொண்டு போவதைப்போல ஒரு பாவனை அவனுக்குள் உருவாகிறது. ஹேமாவின் சதுரங்கப்படைகள் தாக்கத் தொடங்குகின்றன. அவளுடைய விசித்திர ஆட்டத்தால் அவனுக்கு ஒரு பக்கம் பயம் உருவாகிறது. எதிரில் ஆடிக்கொண்டிருப்பது சசாங்கனே என்று தோன்றுகிறது. அவள் பேச்சும் தோற்றமும் அந்த எண்ணத்தை உறுதிப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன. அரசன் பலம் சிறிதுசிறிதாகக் குறைந்துகொண்டு வருகிறது. அவள் காய்களின் பலமோ பெருகிக்கொண்டே செல்கிறது. எனக்குத்தான் வெற்றி என்று சிரிக்கிறாள் ஹோமங்கனை. அது சசாங்கன் சிரிப்பதைப்போலவே அரசனுக்குப் படுகிறது.

‘சசாங்கனின் ஆவிக்கு வெற்றி. இனிமேல் நிங்கள் தோற்பதைவிட உயிரை விடலாம் ‘ என்று சொல்லிக்கொண்டே அந்தக் காய்களை அரசன் முகத்தில் எறிந்துவிட்டு ஹேமாங்கனை எழுந்திருக்கிறாள். அரசன் தலை கிறுகிறுவென்று சுழல்கிறது. அந்தக் காய்கள் அவன்மீது பட்டவுடன் ஆயிரம் பேர்கள் ஈட்டியால் அவனைக் குத்துவதைப்போல இருக்கிறது. ஐயோ என்று அலறியபடி கீழே விழுகிறான். வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் ரத்தம் பீறிட்டுப் பாய்கிறது.

கவிஞன் என்கிற சலுகையோடும் நண்பன் என்கிற நெருக்கத்தோடும் இருக்கும் சசாங்கனுடைய ஆட்டத்திறமை புரியாதவனல்ல அரசன். புரிந்திருந்தும் நிஜப்படைகளையெல்லாம் வெற்றி பெறுகிற தன்னால் சதுரங்கக் காய்ப்படைகளை வெல்ல முடியவில்லையே என்கிற ஆதங்கம் வெறியாகப் பதிந்து மனத்தில் பொறாமைக் கனலைத் துாண்டுகிறது. தன் காலடியில்கிடந்து சேவை செய்யவேண்டிய கணிகையின் அன்பும் பரவசம் ததும்பும் பார்வையும் சசாங்கனுக்குக் கேட்காமலேயே கிடைக்கின்றன என்கிற நிலையும் அவனைத் தடுமாறச் செய்கின்றன. சாதாரண மனிதனாக இருந்திருப்பின் இதை அவன் சகஜமாக எடுத்திருக்கக்கூடும். ஆனால் அரசன் என்கிற அந்தஸ்து அவனை நிலைகுலைய வைத்துவிடுகிறது. இந்த நிலைகுலைவு பழகிய நண்பனைக் கொல்லவும் அவன் முதுகெலும்பால் சதுரங்கக் காய்களைச் செய்விக்கும் அளவுக்கும் மனத்துக்குள் ருரத்தை விதைக்கிறது. ஒரு விலங்கு நிலைக்குத் தள்ளிவிடுகிற ருர உணர்வு, விலங்கைப்போலவே எல்லாவற்றையும் சிதைத்துச் சின்னாபின்னமாக ஆக்கி உருக்குலைத்தபிறகே அடங்குகிறது.

வெற்றியையும் தோல்வியையும் சகஜமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று காலம்காலமாக சொல்லப்படுகிற நீதிபோதனைகள் பழகிய ஒன்றானாலும் செயல்முறையில் மனிதர்கள் அவ்வாறு இருக்கவியலாமல் தத்தளிப்பவர்களாகவே இருக்கிறார்கள். அவற்றை தற்செயலான வெறும் விளைவுகளாக அவர்களால் எண்ணிப்பார்க்க முடியவில்லை. பெரும்பாலான தருணங்களில் இவ்வெற்றி தோல்விகளை வேறு எதாவது ஒன்றுடன் இணைத்து மனம் புழுங்கத் தொடங்கிவிடுகிறார்கள். நான் அரசன், எல்லா வெற்றிகளும் என்னுடையதாகவே அமைய வேண்டும். நான் அழகன், பார்க்கும் பெண்களின் வசீகரத்துக்கு உரியவனா நான் மட்டுமே இருக்க வேண்டும். நான் எழுத்தாளன், என் படைப்புகள் மட்டுமே வாசகர்களால் பாராட்டப்பட வேண்டும். இப்படி நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம். இதற்கு மாறாக ஒரு சம்பவம் நடைபெற்றுவிடும் தருணங்களில் மனச்சமநிலை குலைந்துபோகிறது. பொறாமை என்னும் நெருப்பு பொறியாக விழுந்து படரத்தொடங்குகிறது. எதை அடைவதற்காக ஒருவன் பொறாமைப்பட்டு உள்ளூரக் குமுறுகிறானோ, அதை ஒருபோதும் மனிதனால் அடையப்படுவதில்லை. எடுத்துக்காட்டு துரியோதனன் நிகழ்த்தும் குருஷேத்திரப்போர். ஒருவேளை தன் சாமர்த்தியத்தால் அதை அடைந்தாலும் அடையப்பெற்ற ஒன்றால் துளியும் ஆனந்தம் கிட்டுவதில்லை. எடுத்துக்காட்டு சீதையைக் கவர்ந்துவரும் ராவணனுடைய சாகசம்.

*

புதுமைப்பித்தனுடைய காலத்தில் எழுதிக்கொண்டிருந்த சிறுகதையாசிரியர்களுள் முக்கியமான ஒருவர் ந.சிதம்பர சுப்பிரமணியன். ‘இதயநாதம் ‘ என்னும் இவருடைய நாவல் வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ஒன்றாகும். ‘சசாங்கனின் ஆவி ‘ என்னும் இச்சிறுகதை 1943 ஆம் ஆண்டு ஜனவரி மாத கலைமகள் இதழில் வெளிவந்தது. கலைமகள் இதழில் வெள்ளிவிழா வெளியீடாக 1957 ஆம் ஆண்டில் கலைமகள் காரியாலயத்தின் பிரசுரமாக வெளிவந்த ‘கலைமகள் கதம்பம் ‘ என்னும் தொகுப்பில் இச்சிறுகதை இடம்பெற்றிருக்கிறது.

————————————————————–

Series Navigation