எடின்பரோ குறிப்புகள் – 13

This entry is part [part not set] of 34 in the series 20060428_Issue


பாதாள ரயிலில் பிக்கடலி சர்க்கிளுக்குப் போய்க் கொண்டிருந்தபோது சார்லஸ் டிக்கன்ஸ் பற்றியே மனம் அசைபோட்டுக் கொண்டிருக்கிறது. தேங்கிய கழிவுகளும் அசுத்தமும் எலிகளும் கெட்ட வாடையும் சூழ்ந்திருந்த தேம்ஸ் கரையோர ஷூ பாலீஷ் தொழில் பட்டறையில் (blacking factory) வறுமை காரணமாக வேலை செய்ய வேண்டி வந்த பனிரெண்டு வயதேயான டிக்கன்ஸ், நாள் முழுக்க போத்தல்களில் கருப்புத் திரவத்தை அடைக்கிறான். அவனுடைய வேலை நேர்த்திக்காக, கண்ணாடிச் சுவர்கள் கொண்ட சின்ன அறைக்குள் உட்கார வைக்கப்பட்டு வேலை வாங்கப்படுகிறான். ஆங்கில இலக்கியத்தில் ஆழமான தடங்களைப் பதித்த அந்த மகத்தான எழுத்தாளன் வழியில் போகிறவர்கள் ஒரு நிமிடம் நின்று வேடிக்கை பார்த்துப் போகிற எக்ஸிபிஷன் பிராணியாக, எதிர்காலம் பற்றிய கனவுகள் நசித்துப்போய் உடம்பெல்லாம் அழுக்கும் பிசுக்குமாக உழைத்துக்கொண்டிருந்தபோது மனதில் என்ன நினைவுகள் ஓடிக்கொண்டிருந்திருக்கும்?

ரயில் ஒரு வினாடி குலுங்க, மடியில் மெத்தென்று சின்னக் கரங்கள் பதியும் உணர்ச்சி. கண் விழித்துப் பார்க்க, மூன்று வயது காணும் ஒரு வெள்ளைக்காரச் சிறுமி. ஏதோ வித்தியாசமாகத் தெரிகிறது அவளுடைய புன்சிரிப்பு ஒளிவிடும் முகத்தில். ஸ்பிரிங் போல் சுருள் சுருளான அந்தத் தலைமுடி கறுப்பர் இனத்துக்கு உரியதில்லையோ?

எதிரில் நிமிர்ந்து பார்த்தபோது, ஒரு கறுப்பு இனப் பெண்மணி. அவள் அருகில் கறுப்பான ஆனால் வெள்ளைக்காரக் களையோடு சின்னப் பையன். என் பக்கத்தில் உட்கார்ந்து இண்டிபெண்டெண்ட் பத்திரிகையில் மூழ்கியபடி ஒரு வெள்ளைக்காரர் ஹலோ என்கிறார். சிறுமியை மடியில் இருத்திக் கொள்ள அவர் பத்திரிகையை மடக்கும்போது குழந்தை அதை வாங்கித் தரையில் போட்டுக் காலால் தேய்த்துவிட்டுச் சிரிக்கக் குடும்பம் முழுவதும் கூடவே சிரிக்கும் ஒலி.

கனவா என்று சந்தேகத்தோடு பிக்கடலியில் இறங்கி வெளியே வர சின்ன மழையில் தரையும் மனமும் குளிர்ந்திருக்கிறது.

8888888888888888888888888888888888888

இசையமைப்பாளர் ஆண்ட்ரூ லாய்ட் வெபரின் இசை முயற்சிகள் எல்லாமே பெரிய தோதில் இசையமைப்பும், பிரம்மாண்டமான கட்டமைப்பும் கூடியவை. ஏ.ஆர். ரெஹ்மானின் கூட்டுறவில் அவர் உருவாக்கி இரண்டு வருடம் முன்னால் சக்கைப்போடு போட்ட ‘பாம்பே ட்ரீம்ஸ்’ இசை நாட்டிய நாடக நிகழ்ச்சியைக் காணச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. பாலிவுட் திரைப்படப் பாதிப்பில் உருவான ம்யூசிக்கல் ஆன மும்பைக் கனவுகளை விட அவர் இசையமைப்பில் வெளியான ‘ஃபாண்டம் ஓஃப் தி ஓபரா’ முக்கியமானது.

பிரஞ்சு எழுத்தாளர் காஸ்தன் லெரோவின் லெ பாந்தெம் தெ லெ’யோபரா நாவல் அடிப்படையில், பரீஸ் ஒப்பரா தியேட்டரில் நிகழ்ந்ததாகக் கருதப்படும் ஒரு மர்ம மனிதன் அல்லது அமானுஷ்ய உருவமான முகம் மறைத்த பிறவியொன்று ஓபராக் கலைஞர்களுடன், இசை நிகழ்ச்சிகளுடன் இடையாடுவது பற்றிய மூன்று மணி நேர நிகழ்வு இந்த இசை, நாடக, நடனப் படைப்பு. அதாவது ஓப்பரா சூழலில் ஓப்பரா பற்றி நிகழும் ஓப்பரா.

இசையரசிகளான திவாக்கள், சோபர்னோக்கள், டெனார்கள், பாலே கலைஞர்கள் என்று கிட்டத்தட்ட அறுபது பேர் பங்குபெறும் இந்த நிகழ்ச்சி இசையிலும், நாடக ஆக்கத்திலும் நடன அமைப்பிலும் ஒரு வினாடி கூடத் தொய்வு இல்லாமல் விறுவிறுவென்று அமைந்து ரசிகர்களைக் கட்டிப் போடுகிறது.

ஏகப்பட்ட உலோகக் கம்பிகள் பிடித்திழுத்து உயர்த்த, ஒரு பெரிய சரவிளக்கு மேடைக்கு மேலே மெல்ல ஆடியபடி உயருகிறது. தான் இசைப்பயிற்சி அளித்த கதாநாயகியோடு பரீஸ் ஓப்பரா தியேட்டரின் நிலத்தடிப் பகுதியில் படகு ஓட்டியபடி கம்பீரமாகப் பாடுகிறது அந்த மர்ம உருவம். காட்சி மாற, வரிசை வரிசையாக விரைந்து நகரும் நடனக் கலைஞர்களின் இசையும் நடனமும் உச்சக்கட்டத்தை அடையும்போது அந்த உருவம் அடிக்குரலில் இசைத்தபடி வளைந்து போகும் மாடிப்படிகளில் மெல்ல இறங்கி வருகிறது. பழைய நாடக நாயகியின் குரல் பிசிறில்லாது மேலே மேலே பறந்து, திடீரென்று தவளைக் கூச்சலாக மாறிக் கரகரத்து அபஸ்வரமாக ஒலிக்கிறது. அமானுஷ்ய உருவம் கையசைக்கிறது. தொள்ளாயிரம் பவுண்ட் கனமான சரவிளக்கு அடுத்த வினாடி மேடையில் உதிர்ந்து விழத் தொடங்க, கீழே ஆர்க்கெஸ்ட்ரா பிட்டில் இருபதுக்கும் மேற்பட்ட வயலின்காரர்கள் கொஞ்சம் நடுக்கத்தோடு மேலே பார்த்தபடி தோளில் சாய்த்து வைத்த வயலின் தந்திகள் உச்சஸ்தாயியை எட்ட வில்லை அழுத்தி உயர்த்துகிறார்கள்.

கொட்டகையை விட்டு வெளியே வரும்போது பிரமிப்பு மட்டும் மிஞ்சுகிறது. ரீஜண்ட் தெரு விளையாட்டு உடை, ஷூ விற்கும் கடையில் கண்ணாடிக் கூண்டுக்குள் டிரெட்மில்லில் ஒரு தாடிக்காரர் நடந்தபடி இருக்கிறார். தொடர்ந்து ஒரு வாரத்துக்கு நடை தொடருமாம். குழுவாக நிகழ்த்தப்படும் கின்னஸ் சாதனை. Amazing என்கிறார் என் பக்கத்தில் அமெரிக்கரோ, கனாடியரோ ஒருத்தர். அவரவர் பிரமிப்பு அவரவர்களுக்கு.

8888888888888888888888888888888

லண்டன் கிளஸ்டர் வீதி பழைய புத்தகக்கடை பற்றிச் சொல்லியாக வேண்டும். இந்தப் பத்து வருடத்தில் பல தடவை அங்கே போனதெல்லாம் புத்தகம் வாங்குவதற்காக என்று சொல்ல முடியாது. அந்தப் புத்தகக் கடை இருக்கிற கட்டிடம், பக்கத்துத் தெருக்கள் தொடங்கி, கடைக்குள் நூறு வருடம் முந்திய மக்கிய பளபளப்பில் அலமாரிகளில் நிறைத்து வைக்கப்பட்டிருக்கும் பழைய புத்தகங்கள் வரை இதமான ஒரு அந்தக்கால வாடை. கிளஸ்டர் ரோடு புத்தகக் கடைக்குக் கால்கள் இழுக்க ஒவ்வொரு தடவை நடக்கும்போதும் அடிமனதில் ஒரு anglophile சிரிப்பது கேட்கும்.

நூறு பவுண்ட் கொடுத்து ஆர்தர் கானன் டாயிலின் ஷெர்லாக் ஹோம்ஸ் கதை வெளிவந்த பழைய ஸ்ட்ராண்ட் பத்திரிகையை வாங்க விரையும் கைகளை ரொம்பப் பிரயத்தனப்பட்டுக் கட்டிப்போட்டுவிட்டு, பத்து பவுண்டில் விக்டோரியா கால வெஸ்ட்மினிஸ்டர் பற்றிப் பொடி உதிரும் புத்தகம் எடுக்கும்போது சந்தோஷமும் வருத்தமும் கலந்து வரும். சிரித்த முகத்தோடு சதா தட்டுப்படுகிற புத்தகக் கடைக்காரரை ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் நெருங்கிய உறவினரையோ நண்பரையோ திரும்பக் காணும் மகிழ்ச்சி.

இரண்டு மாதம் முன்னால் தான் தெரிந்தது லண்டன் கிளஸ்டர் ரோடு பழைய புத்தகக்கடைக்காரர், பிரபல ஆங்கில எழுத்தாளர் கிரகாம் கிரீனின் மருமகன் என்று. நம்முடைய சொந்தம் ஆர்.கே.நாராயணின் படைப்புகள் உலகம் முழுவதும் வலம்வர வழியமைத்துக் கொடுத்த கிரகாம் கிரீனின் மருமகன் அவர் என்று முன்னமேயே தெரிந்திருந்தால் கிரீன் பற்றி, நாராயணோடு அவருக்கு இருந்த நட்பு பற்றியெல்லாம் நிறையப் பேசியிருக்கலாமே. ஆர்.கே.என்னின் சுவாமியும் சிநேகிதர்களும் முதல் பதிப்பு, பைனான்ஷியல் எக்ஸ்பெர்ட்டின் முதல் எடிஷன் இப்படியும் தேடியிருக்கலாமே!

இந்தத் தடவை ஏகப்பட்ட எதிர்பார்ப்போடு கிளஸ்டர் ரோடு பழைய புத்தகக்கடைப் படியேற, கிரகாம் கிரீனின் மருமகன் கடையில் இல்லை. அவருடைய மனைவியாக இருப்பார் என்று ஊகிக்க முடிந்த பெண்மணி நிறைய இந்தியர்கள் கடைக்கு வருவதாகச் சொன்னார். கிரகாம் கிரீனின் ‘கிட்டத்தட்ட வாழ்க்கை வரலாறு’ ஆன ஸார்ட் ஓஃப் அ லைஃப் படிக்க எடுத்திருப்பதாகவும் சொன்னார். ஆர்.கே நாராயண் பற்றிக் கேட்டிருக்கிறார். படித்ததில்லை.

பத்தொன்பதாம் நூற்றாண்டு லண்டன் டவர், பாலம் பற்றிய நுணுக்கமான படங்கள் (கிட்டத்தட்ட ஓவியர் சில்பி வரைகிற பாணி) அடங்கிய 1910-ல் வெளியான புத்தகம் ஒன்றை இருபது பவுண்டுக்குப் பதிலாக அதிலும் பாதிவிலைக்கு மகிழ்ச்சியோடு கொடுத்தார். ஒரு பழைய நோட்டுப் புத்தகத்தில் மர ஸ்கேல் வைத்து, புழுக்கைப் பென்சிலால் நாலைந்து கோடு இழுத்து பத்து பவுண்ட் வரவை எழுதிவிட்டுப் பக்கத்தில் ஒரு சிறு அலமாரியைக் காட்டினார். எல்லாம் கிரகாம் கிரீன் சேகரித்த புத்தகங்களாம். அடுத்த முறை வரும்போது ஓய்வாகப் பார்க்க வேண்டும் ஒவ்வொன்றாக – அதெல்லாம் அங்கே இருந்தால்.

அந்த நோட்டுப் புத்தகம் எத்தனை வருடப் பழசு என்றும் மறக்காமல் கேட்க வேண்டும்.
88888888888888888888888888888888

பி.பி.சியின் ‘தி ஸ்ட்ரீட்’ தொடரில் ஒரு காட்சி.

வேலையிலிருந்து நீக்கப்படும் ஒருத்தர் அதிகாரியிடம் காலைப் பிடித்துக் கெஞ்சாத குறையாக இன்னும் சிறிது காலம் வேலையில் தொடர அனுமதி தரச்சொல்லிக் கெஞ்சுகிறார். போயிடுப்பா, இல்லேன்னா, காவல்காரனைக் கூப்பிட்டு உன்னை வெளியே கொண்டு விட வேண்டியிருக்கும் என்கிறார் அதிகாரி.

பிழைப்புக்கு வழியில்லாத அந்த ஐம்பத்தெட்டு வயதுக்காரர் தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கிறார். தூக்குப் போட்டுத் தொங்கப் பார்த்தால், கயிறு அறுந்துபோகிறது. மின்சார ஒயரைத் தொட்டு ஷாக் அடித்துச் சாக நினைத்தால், ப்யூஸ் போகிறது. நூலகத்தில் போய் புத்தகம் தேடுகிறார். ‘எப்படி வெற்றிகரமாகத் தற்கொலை செய்து கொள்வது?’ கிடைக்கிறது. இரவல் வாங்கிப்போக, லைப்ரேரியனிடம் புத்தகத்தை நீட்டுகிறார்.

‘இதை யார் திரும்பக் கொண்டு வந்து கொடுப்பாங்க?” நூலகர் சிரத்தையாக விசாரிக்கிறார்.

ப்ளாக் ஹ்யூமரில் பிரிட்டீஷ்காரர்களை மிஞ்ச முடியாது.
—————————————————
eramurukan@gmail.com

Series Navigation