ஊழ்வினை

This entry is part [part not set] of 46 in the series 20040520_Issue

வை.ஈ. மணி


பழியொரு பக்கம் பாவமொரு பக்கமென
பழமொழி கூறும் பொருளது பொய்யன்று
தந்தைதாய் செய்தபழி சேய்தனைச் சாருமென்று
சிந்தனையில் வேரூன்ற சான்றொன்று காண்போம்

செல்வம் படைத்த செருக்கில் நாரணனும்
கல்விக் கரசியின் கணவனும் மமதையில்
தற்பெருமை பறைசாற்றித் தீவிரமாய் வாதிட
அற்புதமாய் சிவபிரானின் ஒளிப்பிழம் போங்கியதே

சோதியின் முடிகாணச் சென்றனன் பிரமனவன்
பாதங்கள் கண்டுவர விரைந்தான் நாரணனும்
முடிகண்டே னென்றுபொய் மொழிந்த பிரமன்
துடித்தனன் பசுபதி தலையொன்று கிள்ளவே

தொழிலைத் தொடர்ந்து துவங்கிய அயனது
கழுத்தில் ஊற்றெனக் கசிந்த உதிரம்
குழைத்த மண்ணிற் கலந்து படைப்பிற்
கிழைத்த தீங்கினில் எழுந்தது தீவினை

நேர்மை நிலவும் நெற்றியில் சிந்தும்
வேர்வையின் சேர்க்கை மனிதற் கில்லை
பயன்தரும் உலகிற்கு பல்வேறு பிறவிகள்
சுயநலம் கொண்டுலகை சிதைப்பான் மனிதன்

பருவங்கள் மாறிட புறப்பற்று கூடியே
கருவினை பெருகும் புலன்களின் ஈர்ப்பினால்
பிறப்புடன் தான்பெற்ற பழிச்சுமை மனிதன்
இறக்குமுன் அகற்றிட இயலாது திண்ணம்.

—-
ntcmama@rogers.com

Series Navigation

வை ஈ மணி

வை ஈ மணி