உலகமயமாக்கலில் எழும் சில சந்தேகங்கள்

This entry is part [part not set] of 46 in the series 20060331_Issue

கற்பகவிநாயகம்


திண்ணை இதழில் வெளிவந்த எனது கட்டுரையைப் படித்து விட்டு, விவாதிக்க வந்த நாலு பேருக்கு, மலர் மன்னன் உலகமயமாக்கல் குறித்த சில விளக்கங்களைத் தந்திருந்தார். அவற்றில் எனக்குச் சில சந்தேகங்கள் இருக்கின்றன. அவற்றினைப் பெரியவர் தீர்த்து வைத்தால் நல்லதாயிருக்கும் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன்.

1) உலகமயமாக்கலை இப்போது தவிர்க்க இயலாது என்றும், அதே நேரத்தில் நாம் சாமர்த்தியமாகக் காய் நகர்த்தலாம் என்றும் ம.ம. சொல்லி இருந்தார். வயதிலும், அனுபவத்திலும் முதிர்ந்த மலர் மன்னன், சாமர்த்தியமாகக் காய் நகர்த்தும் செயல் குறித்து விளக்கமாய் எழுதினால் நல்லது.

2) உற்பத்தி, விநியோகம் செய்வதில் பிரச்சினை உள்ள பண்டங்களுக்கு, நமது வாயிற்கதவைத் திறந்து விடுதல் எனும் கொள்கைப்படி,

அ) உலக வங்கி மற்றும் உலக வர்த்தகக் கழகம் , இப்பிரச்சினைகள்(உற்பத்தி & விநியோகம்) உள்ளதாகப் பட்டியல் இட்டுள்ள குடிநீர் விநியோகம், பால் உற்பத்தி/விநியோகம், மின்சாரம் உற்பத்தி/விநியோகம் ஆகிய துறைகளில் அந்நியர்கள் நுழைவதை நாம் அனுமதிக்கலாமா ?

ஆ) புனித கங்கா மாதா வை, ‘தேம்ஸ் வாட்டருக்கு ‘ தந்து விடலாமா ?

3) உற்பத்தி/விநியோகத்தில் பிரச்சினை என்பதற்கான வரையறை என்ன ? இப்பிரச்சினைகள் உள்ள தொழில்கள் எவை, எவை ?

4) திறந்து விடுவதற்கான முன்நிபந்தனையே ‘உற்பத்தி/விநியோகம் செய்வதில் உள்ள பிரச்சினை ‘ எனும்போது, சீராக உள்ள துறைகளில் செயற்கையாகப் பிரச்சினைகளைப் புகுத்தி, அந்நியருக்குத் திறந்து விடலாமா ?

5) ஏற்கெனவே புறவாசல் வழியாக இந்தியாவில் நுழைந்து, சுதேசித் தொழில்களை நசிப்பிக்கும், அந்நியக் கம்பெனிகளான ஹிந்துஸ்தான் லீவர், கோக், லெஹர் (பெப்சி fபுட்ஸ்), இன்ன பிற நிறுவனங்களை என்ன செய்வது ?

புறவாசல் கதவை எப்படி இழுத்து அறைந்து சாத்துவது ?

6) இந்தியாவின் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி, இந்தியத் தொழிலாளர்களைப் பயன்படுத்தி, இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் தரமான பொருட்களை (முதல் தர தேயிலை, முதல் தர துணிமணிகள், முதல் தரமான இறால் மீன்கள்), இந்தியர் கண்ணிலேயே காட்டாமல், அயல் நாடுகளில் மட்டும் விற்றுக்கொழுக்கும் கம்பெனிகளை எந்தப் பட்டியலில் சேர்ப்பது ? இக்கம்பெனிகள் அந்நியக் கம்பெனிகளா ? சுதேசிக் கம்பெனிகளா ? எந்நாட்டையும் சேராத கம்பெனிகளா ?

7) ‘சில்லறை வணிகம், அற்புதமான சுய வேலை வாய்ப்பு ‘ என்று ஓரிடத்தில் சொல்லி விட்டு, ‘உற்பத்தியாளர், நுகர்வோர் நேரடி வியாபார ஏற்பாடு இன்னொரு மக்கள் நல நடவடிக்கை ‘ என்று மற்றோரிடத்தில் சொல்கிறார், மலர்மன்னன்.

இந்த நேரடி ஏற்பாடு, சில்லறை வணிகத்துக்கு வேட்டு வைக்காதா ?

8)என் சிற்றறிவுக்கு எட்டியமட்டில், மகளிர் சுயநிதிக் குழுக்கள் கந்துவட்டி / மீட்டர் வட்டித் தொழிலையே பிரதானமாகச் செய்து வருவதாக அறிகிறேன். பல இடங்களுக்கும் சென்று வரும் மலர்மன்னன், இச்சுய நிதிக் குழுக்களின் பிற பொருளாதார நடவடிக்கைகளை விளக்குவாரா ?

****

vellaram@yahoo.com

Series Navigation

கற்பக விநாயகம்

கற்பக விநாயகம்