உலகக் கண்டங்களுக்குப் புது மார்க்கம் தேடிய திட வைராக்கியத் தீரர்கள்-2 மகா அலெக்ஸாண்டர் (கி.மு:356-323)

This entry is part [part not set] of 31 in the series 20060929_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


மண்டை ஓட்டின் மதிலைத் தாண்டாது,
ஒண்டிக் கிடக்கும்
ஓய்ந்து போன மூளை
உறங்கி உறங்கி ஊறுகாய் ஆகும்!
ஓய்வு உடலுக்கு! ஆத்மாவிற் கில்லை!
இறைக்காத கிணறு தூண்டாத மனது!
இறைத்த கிணறு நீர் ஊறும்!
இறைக்காத கிணறு வேர் நாறும்!
விழித்த கண்தான் ஒளிவீசும்!
வீறிடும் நெஞ்சம் விண்வெளி செல்லும்!
வேட்கை மில்லா காளை,
வேட்டை ஆடா மூளை,
ஆர்வம் மழுங்கிய கூர்மை!
நெடுந் தூரம் செல்லா கால்கள்,
நிலவைப் பற்றாக் கரங்கள்,
பயணம் செய்யாப் படகு,
பணிகள் செய்யா உடலும்
பாரில் உலவுதல் ஏனோ?

முன்னுரை: எனது கட்டுரை 2350 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவின் மாசிடோனியா மாநிலத்து மாவீரர் மகா அலெக்ஸாண்டர் [கி.மு:356-323] முதலாகத் தொடங்குகிறது. கிரேக்க வீரர் மகா அலெக்ஸாண்டர் தனது மத்திம வாழ்வின் துவக்கத்தில் 32 ஆம் வயதில் நோய்வாய்ப்பட்டுக் காலமானார். பதினெட்டு வயது முதல் அவரது அபாரப் போர்த்திறமை வெளிப்பட்டு, அந்தக் குறுகிய காலத்திலே சீரான கிரேக்கப் படையைத் தயாரித்து வட ஆ·பிரிக்கா, மத்தியாசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் வட இந்தியா வரை சென்று வெற்றிக்கொடி நாட்டிக் கடல் வழியாக முதன் முதலில் மீண்டு மத்தியாசியாவை அடைந்தவர். பெரும் படை வீரரை மட்டும் கொண்டு செல்லாது, அலெக்ஸாண்டர் தன்னுடன் விஞ்ஞானிகள், தளவரையாளிகள் [Surveyors] ஆகியோரையும் அழைத்துச் சென்று, பூகோள வரைப்படம், காலநிலை, நாட்டின் வரலாறு, கலை, கலாச்சாரம் போன்றவை பதிவு செய்தார். அதே சமயம் ஐரோப்பிய கிரேக்க நாகரீகம், கலைகள், கலாச்சாரம் பற்றி அந்த நாடுகளும் அவரது படையெடுப்புக்குப் பிறகு முதன்முதல் அறிந்து கொண்டன.

அலெக்ஸாண்டரின் போதகக் குரு அரிஸ்டாடில் [கி.மு.384-322]. கிரேக்க வேதாந்தி பிளாட்டோவின் [கி.மு.427-347] சீடர் அரிஸ்டாடில். கி.மு. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க இதிகாசக் கவி ஹோமர் அலெக்ஸாண்டரின் அகப்பேரொளி [Inspiration]. தந்தையாரின் வாரிசாய்ப் பெற்ற, தளர்ந்து போன கிரேக்க நாட்டைப் பன்மடங்கு பெரிதாக்கி, அன்னிய நாடுகளில் கிரேக்கரின் கலாச்சாரத்தை முதன்முதல் விதைத்தார். அவர் கைப்பற்றி விரிவாக்கிய நாட்டுப் பரப்பு எகிப்த் முதல் வட இந்தியா வரை பரவியது. வென்ற தளத்தில் எல்லாம் அலெக்ஸாண்டர் தன்பேரில் புதுப்புதுப் பெயர்களை வைத்தார். ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அவர் எகிப்தில் அடிக்கல் நாட்டிய அலெக்ஸாண்டிரியா நகரம், காலவெள்ளம் அடித்துச் செல்லாது அவரது தீர வரலாற்றை இன்னும் முரசடித்துக் கொண்டிருக்கிறது!

ஆசிய அதிபதி மகா அலெக்ஸாண்டர்

கி.மு.338 ஆம் ஆண்டில் கிரேக்கருடன் கிரேக்கர் போரிட வைத்து அலெக்ஸாண்டரின் தந்தை இரண்டாம் ·பிளிப் [Philip II] தனித்தனியாக ஆண்டுவந்த மாஸிடோனியன் குடிவாசிகளின் பகுதிகளையும், மற்ற நகரங்களையும் சேர்த்து ஓர் ஐக்கிய மாசிடோனியாவாக ஆக்கினார். ஆனால் அப்போது 20 வயதான அலெக்ஸாண்டருக்குத் தந்தை செய்த அவ்விணைப்புப் போதுமானதாகத் தெரிய வில்லை! கி.மு.336 ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் அரசராக முடிசூடினார். மாபெரும் கிரேக்க இதிகாச வீரர்களான ஹெர்குலிஸ், அக்கிலிஸ் [Hercules, Achilles] பரம்பரையில் வந்ததாக அலெக்ஸாண்டர் தன்னைப் பீற்றிக்கொண்டார்! அவர்களைப் போன்று தானும் தன் தனது பராக்கிரமத்தை உலகில் காட்ட வேண்டும் என்று தீர்மானித்தார்.

கி.மு.334 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டர் திறமையுடன் 30,000 கிரேக்கப் படையினரை அணிவகுத்து, உணவு, உடை, வாகனம், வசதி அளித்து ஹெல்லெஸ்பாண்ட் [Hellespont (Gallipoli)] தளமுனையைக் கடந்து பெர்ஸியா [Persia] நாட்டின் உள்ளே நுழைந்தார். தனது போர்த் தந்திரத்தாலும், கனிவுக் கவர்ச்சியாலும் கிராகஸ் நதியைக் கடந்து போரிட்டு, லெபானின் டையரையும் [Granicus (Goneri) River to Tyre (Beirut Lebanon)] அடுத்துக் கைக்கொண்டு, எகிப்தைப் பிடித்தார். அதாவது முதல் மூச்சிலேயே தனது பராக்கிரமத்தில் கிழக்கு மத்தியதரைப் பகுதிகளைக் கைப்பற்றித் தன் வெற்றிகளை நிலைநாட்டினார். கி.மு.331 இல் பெர்ஸிய மன்னன் மூன்றாம் டாரியஸ் [Darius III] மூர்க்கப் படைகளை கௌகமேலா [Gaugamela (Tabriz, Iran)] என்னுமிடத்தில் முறியடித்து, பெர்ஸிபோலிஸ் அரண்மனைக்குத் [Persepolis] தீவைத்தார். 150 ஆண்டுகளுக்கு முன்பு பெர்ஸியா மன்னன் கிரேக்கரின் அக்ரபோலிஸ் [Acropolis] நகரைத் தீவைத்து அழித்த கோரத்திற்குப் பழிவாங்கிக் கொண்டார்.

“ஆசிய அதிபதி” [Lord of Asia] என்று தன்னைப் பீற்றிக் கொண்டு, அலெக்ஸாண்டர் காடு, மலை, பாலைவனம் கடந்து, கடும் மழை, வெப்பம் தாங்கிக் கொண்டு ஆ·ப்கானிஸ்தானில் உள்ள ஹிந்துகுஷ் மலைத் தொடர்களைத் தாண்டி, எதைப் பற்றியும் அறியாத பிரதேசங்களில் துணிவாகப் படைகளுடன் கால்வைத்தார். ஐந்து நதிகள் பாயும் சிந்து சமவெளிப் பரப்பில் அலெக்ஸாண்டர் நுழைந்து இந்திய மன்னன் புருஷோத்தமனைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். வென்ற நாடுகளில் எல்லாம் தன் பெயரில் 32 புதிய நகரங்களுக்கு அலெக்ஸாண்டிரியா எனப் பெயரிட்டார். இறுதியாக ஹைபஸிஸ் நதிக் கரையில் [Hyphasis (Sutlej River)] கிரேக்கப் படையினர் களைத்துப் போய் அடுத்துப் போரிட மறுத்தனர். பிறகு சிந்து நதித் தீரத்தில் தென்புறம் நடந்து படாலா [Patala] வழியாக அரபிக்கடலை அடைந்து படகுகளில் பெர்ஸின் வளைகுடா கடந்து பாபிலோனை [Babylon] வந்து சேர்ந்தார் என்று அறியப் படுகிறது. கி.மு.323 ஆம் ஆண்டு பாபிலோனில் அலெக்ஸாண்டர் தனது 32 ஆம் வயதில் நோய்வாய்ப் பட்டுக் காலமானார்.

அலெக்ஸாண்டடிரின் குரு மாமேதை அரிஸ்டாடில்

கிரேக்க நாட்டின் மாமேதை அரிஸ்டாடில் பிளாடோவின் சீடர்; அலெக்ஸாண்டரின் குரு. அரிஸ்டாடில் கி.மு.384 இல் மாசிடோனியாவின் ஆன்ராஸ் குடியேற்றப் பகுதியில் பிறந்தார். அவரது தந்தை பெயர் நிகோமாசெஸ் [Nicomachus]. தந்தை மாசிடோனியா மன்னரின் அரசவை மருத்துவராகப் பணியாற்றினார். தந்தையாரே மகனுக்குக் கல்வி புகட்டியதாகத் தெரிகிறது. சிறுவயதிலே இறந்து விட்டதால், ·பெட்டிஸ் [Phaetis] என்னும் பெயர் கொண்ட தாயைப் பற்றி எதுவும் வரலாற்றில் தெரியவில்லை. பத்து வயதில் தந்தையும் மரணம் அடைந்த பின், அரிஸ்டாடில் சித்தப்பாவுடன் வாழ்ந்து வந்தார். தந்தையின் மருத்துவ அறிவு அரிஸ்டாடிலின் சிந்தை விரியத் தூண்டு கோலாய்ப் புகட்டியது. அவர் 18 வயது முதல் 37 வயது வரை பிளாடோவின் பல்கலைக் கழகத்தில் [Plato’s Academy] கல்விப் பயிற்சி பெற்றதாகத் தெரிகிறது. அவர் பல்வேறு தலைப்புகளில் [பௌதிகம், உயிரியல், விலங்கியல், அரசியல், தர்க்கவியல், கவிதைக் காவியம்] நூல்கள் எழுதினார். அவற்றில் பல முழுமையாகத் தற்போது கிடைக்க வில்லை. சாக்ரெடிஸ் [கி.மு.470-399], பிளாடோ ஆகியோருடன் அரிஸ்டாடிலும் மிக்க செல்வாக்குடைய பூர்வீக கிரேக்க மேதைகளின் பட்டியலில் ஒருவராக மேலாக வீற்றிருக்கிறார். அவர் அனைவரது ஆழ்ந்த வாக்குமொழிகள் மேற்கத்திய வேதாந்தப் படைப்புகளாக கருதப்படுகின்றன. பிளாடோ, அரிஸ்டாடில் ஆகியோரது ஆக்கப் படைப்புகள் பூர்வீக வேதாந்தச் சாரங்களில் பிரதான நிலையைப் பெற்றுள்ளன.யாரது ஆக்கப் படைப்புகள் பூர்வீக வேதாந்தச் சாரங்களில் பிரதான நிலையைப் பெற்றுள்ளன.

அரிஸ்டாடிலின் உரையாடல்கள் அவரது மாணவரால் எழுதப்பட்டு நூல்களாய் நிலவின. அவை பௌதிகம், கோட்பாடியல், அரசியல், கவித்துவம், நிக்கோமசென் நெறியியல், தி அனிமா (ஆத்மாவைப் பற்றி) [Physics, Metaphysics (Ontology), Politics, Poetics, Nicomachean Ethics, De Anima (On the Soul)]. அரிஸ்டாடில் தன் காலத்திய அனைத்துத் அறிவுத் தலைப்புகளைப் பற்றிக் கற்ற மிகச்சிலரில் ஒருவராகக் கருதப் படுகிறார். அவர் ஆழ்ந்து அறிந்தவை: உடற்கூறியியல், வானவியல், பௌதிகம், விலங்கியல், நிதிநிலையியல், பூதளவியல், பூகோளவியல், விண்கற்கள், கருச்சினைவியல் [Anatomy, Astronomy,Physics, Zoology, Economics, Geology, Geography, Meteorology, Embryology]. வேதாந்தப் பிரிவுகளில் அரிஸ்டாடில் நெறியியல், கலைநுகர்ச்சி, அரசியல், உளநூல், மதநூல், கோட்பாடியல் [Ethics, aesthetics, Politics, Psychology, Theology, Metaphysics] அறிந்தார்.

பிளாடோவின் மரணத்துக்குப் [கி.மு.347] பிறகு அவருக்குக் கிடைக்க வேண்டிய பதவி, பிளாடோவின் உறவினன் ஒருவனுக்கு அளிக்கப் பட்டதால் அவர் கழகத்தை விட்டு வெளியேற நேர்ந்தது. கி.மு. 342 இல் மாசிடோனியா மன்னர் ·பிளிப்பால் அழைக்கப்பட்டு, அலெக்ஸாண்டருக்குக் குருவாக நியமனம் ஆனார். அப்போது அலெக்ஸாண்டருக்கு வயது 13. கிரேக்க, ரோமானிய வரலாற்றை எழுதிய புளூடார்க் [Plutarch (A.D.46-127)] எழுதியிருப்பதின் மூலம், அரிஸ்டாடில் அலெக்ஸாண்டருக்கு நெறியியல், அரசியல் போதித்ததோடு ஆழ்ந்த வேதாந்த ஞானத்தையும் ஊட்டியதாக அறியப் படுகிறது. பின்னால் அலெக்ஸாண்டர் அரிஸ்டாடிலுக்கு அன்னிய நாட்டுக் கலைத்துவ, வேதாந்த, விஞ்ஞான, வானியல் நூல்களை அளித்ததாகத் தெரிகிறது.

அலெக்ஸாண்டர் போர் முறையில் பின்பற்றிய விதிகள்

அலெக்ஸாண்டரின் அபாரப் போர்த்திறம், பராக்கிரமம், வைராக்கியம் ஆகியவற்றுடன் அவர் கையாண்ட போரெடுப்பு நியதிகள், பயன்படுத்திய முறைகள் சில குறிப்பிடத் தக்கவை:

1. ஸிசிலி [Sicily] நாட்டிலிருந்து எடுத்த வந்த புதிய போர் நுணுக்க முறை [New Military Technology] பயன்படுத்தப் பட்டது. மாசிடோனியாவில் புதிய போர் நுணுக்க முறை விருத்தி செய்தவர்: ஸாரிஸ்ஸா [Sarissa: Spear]

2. கிரேக்க உள்நாட்டுக் குழுக்களை நட்புடன் ஒன்று சேர்க்க கையீட்டு நிதி [Bribery Money] அளிக்கப்பட்டது.

3. டெல்·பிக் குழுவினர் ·பிளிப் மன்னர் தலைமையில் சலுகை மூலமாக தன்வசப் படுத்தப் பட்டது. [Corruption of Delphic Council]

4. பெர்ஸியன் எதிர்ப்புப் பகையாளிகளை ·பிளிப் மன்னர் விளித்துத் தன் உதவிக்குப் பக்கபலமாக ஆக்கிக் கொண்டு பெர்ஸிய மன்னரோடு சண்டை யிட்டார். அவ்விதம் செய்த கிரேக்கக் கூட்டுறவு விடுதலை நெறிப்படி தவறானது.

5. ஆசிய மன்னருக்கு எதிராக ஹெல்லனெஸ் படைகளைத் தூண்ட ·பிளிப், அலெக்ஸாண்டர் கையாண்ட
போர் முறைபாடுகள் தவறானவை.

6. வெற்றி பெற்ற நாடுகளில் காலனீய ராணுவ ஆதிக்க ஆட்சிமுறையை அலெக்ஸாண்டர் ஆரம்பித்து வைத்தார்.

7. அன்னிய நாட்டுத் தளபதிகள், அரசர்களுடன் கிரேக்க ராணுவ அதிகாரிகள் இடமாற்று மணமுறையை [Intermarriage System] ஆதரித்தது. அலெக்ஸாண்டரே ஆ·ப்கானிஸ்தானின் ரோஸானை அம்முறையில் மணந்து கொண்டார். [Roxane from Bactria, Afganistan]

8. தான் பெயரிட்ட 32 அலெக்ஸாண்டிரியா நகரங்களில் புதிய கிரேக்கக் கலாச்சாரத்தைப் பரப்பினார்.
கிரேக்க மொழி, கட்டடக்கலை, விளையாட்டு, உடற்பயிற்சி, அரசியல் கூடங்கள் அமைக்கப் பட்டன. அவற்றில் கிரேக்கர் மட்டுமல்ல, அந்நாட்டு நபர்களும் பங்கு கொள்ளலாம். ஹெல்லனி/கிரேக்க [Hellene/Greek] கலாச்சாரத்தில் நாடு, இனம், நிறம், மதம், சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்று பேதங்கள் கிடையா! பின்னிய அந்த கலாச்சாரம் “ஹெல்லனி” [Hellene] நாகரீகம் என்று அழைக்கப் பட்டது.

9. கிரேக்க நாட்டில் ஏனைய காலனி நாடுகளின் கலாச்சாரம், நாகரீகம், பழக்க வழக்கங்கள், கட்டடக் கோபுரங்கள், வளைவுகள் பின்பற்றப் பட்டன.

10 புதிய மதப் புனைகள், மதக் கோட்பாடுகள், சமயங்கள் [Religious Cults, Dualism of Mesopotamian Zoroastrianism] ஏற்றுக் கொள்ளப் பட்டன.

11 அலெக்ஸாண்டரின் சாம்ராஜியம் நான்கு பிரிவுகளாகி [ (1) Ptolemies of Egypt, (2) Seleucids of Syria-Mesapotomia, (3) Attalids of Pergamum, (4) Antigonids of Macedonia] அரசியல் முறைபாடுகள் முரணாகி ஒன்றை ஒன்று பயமுறுத்திக் கட்டுப்படுத்தத் தொடங்கின.

(தொடரும்)

************************

தகவல்கள்:

Picture Credits: [The Following References (1 to 8)]

1. Journeys of the Great Explorers By: Rosemary Burton, Richard Cavendish, Bernard Stonehoue [2001]
2. The Discoveries, A History of Man’s Search to Know his World By: Daniel Boorstin [1985]
3. Geographical Atlas of the World [1993]
4. Atlas of World History By: Harper Collins [1998]
5. Atlas of the World By: Reader’s Digest [1992]
6. The Travels of Marco Polo, The Venitian By: William Mars [1948]
7. Far Voyager, The Story of James Cook By: Jean Lee Lantham [1970]
8. Works of Man – A History of Invention & Engineering from the Pyramids to the Space Shuttle By: Ronald Clark [1985]
9. Marco Polo, Travels the Silk Road to China & India, Awake Magazine [June 8 2004]
10 Britannia Concise Encyclopedia [2003]
11 Aristotle -Wikipedia, Free Encyclopedia.
12 Philip & Alexander: Changes Introduced [www.csun.edu/~hcf11004/alexphil.html]
13 Atlas of World History Vol I & II [1974]
14 National Geographic -Great Peoples of the Past The Greeks Map [1999]

******************

jayabarat@tnt21.com [September, 28 2006]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

உலகக் கண்டங்களுக்குப் புது மார்க்கம் தேடிய திட வைராக்கியத் தீரர்கள் -1

This entry is part [part not set] of 35 in the series 20060922_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்! ….
மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்! …
வானை அளப்போம்! கடல்மீனை அளப்போம்!
சந்திர மண்டலத் தியல் கண்டு தெளிவோம்!

மகாகவி பாரதியார் [பாரத தேசம்]

கப்பலில் பயணம் செய்ய முடியாத எந்தக் கடலுமில்லை! மனிதர் குடியேற முடியாத எந்தப் பூமியுமில்லை!

ராபர்ட் தோர்ன் [Robert Thorne, Geoghapher (1527)]

உலகப் புதிர்களை விடுவிக்கும் பணிகளை மேற்கொள்!
உணர்வாய்! உளவு செய்யும் நாம் கடவுளின் ஒற்ற ரென்று!

வில்லியம் ஷேக்ஸ்பியர் [Play: King Lear]

“உலகப் புதிர்களை ஒளித்து வைப்பது கடவுளின் மகத்துவம்! ஆனால் அதைக் கண்டுபிடித்து விடுவிப்பது அரசனின் [அரசாங்கம்] மகத்துவம்.”

·பிரான்ஸிஸ் பேகன் (1605) [The Advancement of Learning]

புல்லாங்குழல் ஞானிக்கு அவன் புதல்வனே.
நல்லிசை கற்றவன் திறமுடன் சிறு வயதிலே! -தெரிந்த
எல்லாக் கானமும் வடிப்பது மட்டும் குழலிலே!
நில்லாமல் பொழிவான் மலைமேல் வெகு தொலைவிலே!

பாலர் களிப்பா [Nusery Rhyme]

முன்னுரை: கற்காலப் பண்டை மனிதர் முதல் தற்கால நவயுக மனிதர் வரை, அனைவரும் தம்மைச் சுற்றியுள்ள உலகை ஆராயவும், தமக்கு அப்பாற்பட்ட விண்வெளியைத் தேடிப் பயணம் செல்வதிலும் தீராத தாகம் கொண்டிருந்தனர்! கற்கால மனிதன் நாற்புறமும் நடந்து சென்றோ, குதிரை மீது சவாரி செய்தோ கண்டுபிடித்த கண்டங்களில்தான் நாமின்று உண்டு, உறங்கி, திரிந்து, போராடி வசித்து வருகின்றோம். தற்கால மனிதன் எளிதில் அணுக முடியாத ஆர்டிக், அண்டார்க்டிக் துருவ முனைகளுக்கும் சென்று மீண்டு விட்டான்! பனி உறங்கும் உன்னதச் சிகரமான இமயமலை உச்சிக்கும் ஏறி இறங்கி விட்டான்! கடலுக்குக் கீழ் ஆறு மைல் ஆழத்திற்கும் தணிவாகப் பசிபிக்கடலில் உள்ள “மெரியானாஸ் பாதாளத்துக்கு” [Marianas Trench, Pacific Ocean] மினி கடலடிக் கப்பலை [“Trieste” US Navy’s Submersive (Mini Submarine)] அனுப்பி எப்படி அழுத்தம் உள்ளது என்று அறிந்துவிட்டார்!

வரலாறு முழுவதும் உலக மாந்தர் பூதளத்தின் குறுக்கிலும், நெடுக்கிலும் தனித்தோ அல்லது குழுவாகவோ நடந்து புலப்பெயர்ச்சி யானதைப் பற்றிப் படித்திருக்கிறோம். பஞ்சம், பட்டினி, நோய், பகைவர் தாக்கல், உள்நாட்டுப் போர், ஜனப் பெருக்கம், வேலையின்மை, பணம் தேடல், ஆய்வுத் தேடல் போன்ற பல காரணங்கள் மாந்தரின் புலப்பெயர்ச்சியை நாட வைத்தன! கண்டங்களுக்குப் புலம் மாறும் சிலர் தரை வழியாகச் செல்கிறார். சிலர் கடல் வழியாகப் படகிலோ, கப்பலிலோ செல்கிறார். அவரில் சிலர் அன்னிய நகரில் நிரந்தரமாகத் தங்கி விடுகிறார். சிலர் உளவுப் பணி முடிந்ததும் தாயகத்துக்கு மீள்கிறார். புகுந்திடும் புதிய நாட்டு மக்களால் சிலர் கொல்லப் படுகிறார்! புகுவோர் சிலர் புது நாட்டு மக்களுடன் போரிட்டு அவரைக் கொன்று விடுகிறார்!

பதினைந்தாம் நூற்றாண்டில் கொலம்பஸ் வட அமெரிக்காவின் கண்டு பிடிப்புக்குக் காரணமாகி உலக வரலாற்றின் மாறுதலுக்கும், மேன்மைக்கும் அடிக்கல் நாட்டினார். ஆர்க்டிக், அண்டார்க்டிக் துருவப் பனித் முனைகளுக்குச் சென்றோர் பெருஞ் சாதனையாளர் என்று பெயர் பெற்றார். இமயத்தின் சிகரத்தில் முதன் முதலில் ஏறி நின்ற டென்சிங், ஹிலாரி ஆகியோர் உலகப் புகழ் பெற்றனர்! எல்லாவற்றுக்கும் மேலாக 1969 ஆம் ஆண்டில் விண்வெளித் தேடலில் உலக வரலாற்றுச் சாதனைகளின் உன்னத கிரீடமாகச் சந்திர மண்டலத்தில் முதன்முதல் தடம்வைத்த நீல் ஆர்ம்ஸ்டிராங் பெருஞ் சாதனைத் தீரரெனப் பெயர் பெற்றார். மனித இனம் இந்த மாநிலத்தில் வாழும் வரை என்றென்றும் தள ஆய்வுத் தேடல், அறிவுத் தேடல், விஞ்ஞானத் தேடல், விண்வெளித் தேடல் போன்ற தீராத வேட்கைகளை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது! அரசாங்கமோ அல்லது தனி நபரோ அவற்றை எழவிடாமல் தடுப்பதும் தவறாகும்!

பண்டைக் காலத்துத் தீரரின் நீள் பயணத் தேடல்கள்

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஆ·பிரிக்காக் கண்டத்திலிருந்துதான் மனித இனம் முதன்முதலில் தோன்றி விருத்தியானது என்னும் புதிய கோட்பாடு சமீபத்தில் பலராலும் ஒப்புக் கொள்ளப் பட்டிருக்கிறது! பிறகு அங்கிருந்துதான் மானிடக் குழுவினர் அடுத்தடுத்து உலகெங்கும் பரவிக் குடியேறினார். அவரேதான் பின்னால் வெவ்வேறு வித நிறத்திலும், தோற்றத்திலும் மாறி, வெவ்வேறு மரபுகளைப் பற்றிக் கொண்டு, புது மொழிகளைப் படைத்துக் கொண்டு, பல்வேறு அரசியல் முறைகளில், சமூக வாழ்க்கை வரலாறுகளை வடித்துக் கொண்டார் என்றும் அறியப் படுகிறது. உலகத்தின் பெரும்பாகங்கள் எழுத்தறி வில்லாத, சமூக வரைநெறி யில்லாத, பயண வரலாறுகளை விட்டுச் செல்லாத, சாதாரண மானிடரால் தேடிக் குடியேற்றப் பகுதிகளாய் மாற்றம் அடைந்தன. அவரது துணிவுச் செயல்கள், விடா முயற்சிகள், பயணத் திறமைகள், சாதனைகள் ஆகியவற்றைப் பின்வந்த சந்ததிகள் எதுவும் அறிந்து கொள்ள முடியாமல் போயிற்று!

எனது தேடற் பயணக் கட்டுரைகள் அதற்குப் பின் தோன்றிய நாகரீகச் சமூகங்களின் சாதனைகளைக் கூற வருகின்றன. எனது கட்டுரைகள் கூட்டம், கூட்டமாய்ப் புலப்பெயர்ச்சி செய்தவரைப் பற்றியவை அல்ல. தனிப்பட்ட முறையில் ஒருவரோ, அவரைச் சார்ந்தவரோ தெரியாத தளத்துக்குத் துணிவாகப் பயணம் செய்த தீரரைப் பற்றியவை. எனது கட்டுரை 2350 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவின் மாஸிடோனியா மாநிலத்து மாவீரர் மகா அலெக்ஸாண்டர் [கி.மு:356-323] முதலாகத் தொடங்குகிறது. கிரேக்க வீரர் மகா அலெக்ஸாண்டர் தனது மத்திம வாழ்வின் துவக்கத்தில் 33 ஆம் வயதில் நோய்வாய்ப்பட்டுக் காலமானார். பதினெட்டு வயது முதல் அவரது அபாரப் போர்த்திறமை வெளிப்பட்டு, அந்தக் குறுகிய காலத்திலே சீரான கிரேக்கப் படையைத் தயாரித்து வட ஆ·பிரிக்கா, மத்தியாசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இந்தியா வரை சென்று வெற்றிக்கொடி நாட்டிக் கடல் வழியாக முதன் முதலில் மீண்டு மத்தியாசியாவை அடைந்தவர். பெரும் படை வீரரை மட்டும் கொண்டு செல்லாது, அலெக்ஸாண்டர் தன்னுடன் விஞ்ஞானிகள், தளவரையாளிகள் [Surveyors] ஆகியோரையும் அழைத்துச் சென்று, பூகோள வரைப்படம், காலநிலை, நாட்டின் வரலாறு, கலை, கலாச்சாரம் போன்றவை பதிவு செய்யப் பட்டன. அதே சமயம் ஐரோப்பிய கிரேக்க நாகரீகம், கலைகள், கலாச்சாரம் பற்றி அந்த நாடுகளும் முதன்முதல் அறிந்து கொண்டன.

கி.மு.1100-1000 ஆண்டுகளில் கிரீஸின் வடமேற்குப் பகுதியில் வாழ்ந்த பழங்குடி மாந்தர் டோரியன்ஸ் [Dorians Tribe] என்போர் தென் ஐரோப்பியப் பிரதேசங்களில் புகுந்து குடியேறினர். கி.மு.445 இல் ஹெரொடோடஸ் [Herodotus: Dorian Greek] என்பவர் எகிப்த் மற்றும் மத்தியாசியப் பகுதிகளில் பயணம் செய்து ·பாரோ மன்னர்களின் பிரம்மாண்டமான பிரமிட்களைப் பற்றிக் குறிப்புகள் எழுதி வைத்தார். கி.மு.138 இல் சைனாவின் சாங் செயன் [Chan Ch’ien] என்பவர் மத்தியாசியாவின் குறுக்கே சாமர்க்கண்டு வரைப் பயணம் செய்ததாக அறியப் படுகிறது. அலெக்ஸாண்டரைத் பின்பற்றி எட்டாவது நூற்றாண்டில் [கி.பி.1200] பேகன் வைக்கிங்ஸ் [Pirates: Pagan Vikings] என்னும் கடற் கொள்ளைத் தீவிரவாதிகள் ஐரோப்பாவில் நார்வே, சுவீடன், டென்மார்க், ரஷ்யா ஆகிய நாடுகளை 200 ஆண்டுகளாகத் துன்புறுத்தி வந்தனர். அத்துடன் ஐஸ்லாந்து, கிரீன்லாந்து, ஏன் வட அமெரிக்காவின் வடக்குப் பகுதிகளில் முதன்முதல் கப்பலில் சுற்றி வந்து சில இடங்களில் புதுக் குடியேற்றத்தைப் புகுத்தினர்! வைக்கிங் மாந்தர் ஸ்காண்டிநேவியா, கடற்தளப் பகுதிகளில் வாழ்ந்து வந்த வேளாண்மை மக்கள். ஆங்கே ஜனப்பெருக்கம் மிகையாகவே, அவர்கள் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது! வைக்கிங்ஸ் தீவிரவாதிகளைத் தொடர்ந்து கப்பல் பயணி வெனிஷியன் மார்கக் போலோ [Venetian Voyager: Marco Polo], ஸ்பானிஷ் கிரிஸ்ட·பர் கொலம்பஸ் [Spanish Voyager: Christopher Columbus], ·பெர்டினென்ட் மாஜெல்லன் [Ferdinand Magellan], வாஸ்கோட காமா, காப்டன் குக், டேவிட் லிவிங்ஸ்டன், ரோவால்டு அமுன்ட்ஸென் [Roald Amundsen] ஆகியோர் தமது தீரக் கப்பல் பயணங்களைத் துவங்கி முடித்துக் காட்டினார்.

(தொடரும்)

************************

தகவல்கள்:

Picture Credits: [The Following References (1 to 8)]

1. Journeys of the Great Explorers By: Rosemary Burton, Richard Cavendish, Bernard Stonehoue [2001]
2. The Discoveries, A History of Man’s Search to Know his World By: Daniel Boorstin [1985]
3. Geographical Atlas of the World [1993]
4. Atlas of World History By: Harper Collins [1998]
5. Atlas of the World By: Reader’s Digest [1992]
6. The Travels of Marco Polo, The Venitian By: William Mars [1948]
7. Far Voyager, The Story of James Cook By: Jean Lee Lantham [1970]
8. Works of Man – A History of Invention & Engineering from the Pyramids to the Space Shuttle By: Ronald Clark [1985]
9. Marco Polo, Travels the Silk Road to China & India, Awake Magazine [June 8 2004]
10 Britannia Concise Encyclopedia [2003]

******************

jayabarat@tnt21.com [September, 21 2006]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா