உருவமற்ற நிழல் பொழுது/ மனம்

This entry is part [part not set] of 23 in the series 20081204_Issue

நிலாரசிகன்


1.உருவமற்ற நிழல் பொழுது

நான் தனித்திருக்கும்
உலகில்
என்னுடன் பயணிக்கிறது
நிழலொன்று.
எங்கிருந்து வந்ததென்றும்
யாருடையதென்றும் புரியவில்லை.
நடந்தும் ஓடியும் அதனிடமிருந்து
தப்பித்துவிட இயலாமல்
தளர்ந்து அமர்கிறேன்.
மெதுவாய் என் நிழலிடம்
பேச ஆரம்பித்தது
அந்த அந்நிய நிழல்.
புரிந்து கொள்ள முடியாத
மொழியில் இரு நிழல்களும்
பேசுவதை ஊமையாய்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
நான்.

2. மனம்
மேகங்கள் அலையும் மலைச்சரிவு
பச்சைநிறத்தை உடுத்திக்கொண்டு
உறங்குகிறது.
மரங்களின் நடுவில் நுழைந்து
பாறையில் விழுந்து
உடைகிறது மழைத்துளி.
சாம்பல் நிற அரவம்
அசைவற்று கிடக்கிறது
பெருத்த வேர்களைக்கொண்ட
மரத்தடியில்.
ஏதோ சில பறவைகளின்
சிறகடிப்புச் சத்தம் காற்றில்
கரைந்து வழிகிறது.
மலைப்பாதை வழியே
வளைந்து நெளிந்து ஊர்ந்துகொண்டிருக்கிறது
பேருந்தும் மனதும்.


nilaraseegan@gmail.com

Series Navigation

நிலாரசிகன்

நிலாரசிகன்