உரிமையும் பருவமும் (கிருஷ்ணன் நம்பியின் ‘மருமகள் வாக்கு ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 66)

This entry is part [part not set] of 42 in the series 20030626_Issue

பாவண்ணன்


வயதில் மூத்த நண்பரொருவர் நகரிலேயே மிகப்பெரிய பள்ளியில் தன் மகளைச் சேர்த்தாள். அவள் ஆசைப்பட்டு கேட்டு எந்த விஷயத்தையும் அவர் மறுத்ததில்லை. ஒவ்வொரு ஞாயிறு விடுமுறையின்போதும் அவர் குடும்பத்தோடு வீட்டுக்குச் சற்றே தொலைவில் இருந்த பூங்காவுக்கு சென்று பொழுதைப் போக்கிவிட்டு வருவார். மதிய உணவு, சிற்றுண்டி எல்லாம் பூங்காவுக்கு அருகில்தான். வரும்போது வழியில் காண்கிற விளையாட்டுப் பொருட்களையெல்லாம் வாங்கி மகளுக்குத் தருவாள். தெருவோரங்களில் விற்கப்படுகிற புத்தகங்களில் மகள் சுட்டிக்காட்டுகிற புத்தகங்களை உடனடியாக வாங்கித் தந்துவிடுவார். நானும் உடன்சென்றிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் புத்தகக் கடையில் புகுந்த அப்பெண் விலங்குககளைப்பற்றிய ஒரு என்சைக்ளோபீடியாவைத் துாக்கமுடியாமல் துாக்கி வைத்துக்கொண்டு அதை வாங்கித் தருமாறு கேட்டாள். அதன் விலை ஆயிரம் ரூபாய். தனக்காகப் பத்து ரூபாய் கூட மற்றவர்களிடம் கடன் கேட்காத அவர் அந்தப் புத்கத்துக்காக அருகிலிருந்த என்னிடமிருந்து பணத்தை வாங்கி அந்தப் புத்தகத்துக்கான விலையைச் செலுத்தினார். அச்சிறுமியின் முகம் மலர்ந்தபோது அவரும் குழந்தையைப்போலச் சிரித்தார்.

புத்தகம் மட்டுமல்ல, புத்தாடைகள், விளையாட்டுச் சாமான்கள், மீன்தொட்டி, பறவைக்கூண்டுகள் என எதைக் கேட்டாலும் அவர் அதை உடனடியாக வாங்கி வந்துவிடுவார். அவருக்குத் தன் மகள் தன்னிடம் இருக்கும் வரையிலான இளமைப்பருவத்தை ஆனந்தமாகக் கழிக்கவேண்டும் என்றும் ஒருவருடைய வாழ்நாளிலேயே இளமைப்பருவ இன்பமே மிக முக்கியமானதென்றும் அதுவே மனத்தைச் செழுமைப்படுத்துவதென்றும் ஏதேதோ சொல்லிச் சமாதானப்படுத்தினார். அளவு கடந்த செல்லத்தால் அக்குழந்தையின் ஆளுமை பாதிக்கப்பட்டுவிடுமோ என்று நண்பரின் மனைவிக்குக் கவலையாகவும் அச்சமாகவும் இருந்தது. அப்போதெல்லாம் அவர் மனைவியின் ஐயங்களைப் போக்கும் விதமாகப் பக்குவமாகப் பேசி அமைதிப்படுத்துவார்.

ஓய்வாக இருக்கும்போதெல்லாம் அச்சிறுமியிடம் நிறையப் பேசுவார். பல கதைகளைச் சொல்வார். விளையாட வைப்பார். வீட்டிலேயே இருவரும் ஷட்டில் காக் விளையாடுவார்கள். ஓட்டப்பந்தயத்தில் அவர் உருவாக்கிய ஊக்கத்தால் அச்சிறுமி பள்ளியிலேயே முதலாவதாக வந்தாள். பிறகு பள்ளிகளுக்கிடையேயான போட்டிகள், வட்டம், மாவட்டங்களுக்கிடையேயான போட்டிகள் அனைத்திலும் பங்கெடுத்துப் படிப்படியான வெற்றிகளை அடைந்தாள். அவள் ஆர்வம் கல்லுாரிக்காலத்திலும் தொடர்ந்தது. மலையேற்றப் பயிற்சிக்காக ஒருமுறை கல்லுாரியிலிருந்து கிளம்பிய குழுவுடன் சென்று இமயமலைச்சாரலுக்குப் போய்வந்தாள். பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, வினாடிவினா என்று எல்லா அம்சங்களிலும் சிறந்து விளங்கினாள்.

பத்தாண்டுகள் பறந்த வேகமே தெரியவில்லை. அவள் திருமணத்துக்குத் தகுதியானவளானாள். அவளே தனக்குப் பிடித்தவனைத் தேர்ந்தெடுத்தாள். இருவருக்கும் திருமணத்தை நண்பரே முன்னின்று நடத்தினார். புகுந்த வீட்டுக்கு வாழச் சென்றாள் பெண்.

இருபத்தைந்து வயது வரை இருந்த பெண்ணா இவள் என்று பார்த்தவர்கள் சொல்லும்படி மாறிப்போனாள் அவள். பழைய விளையாட்டு, கிண்டல் எல்லாம் இல்லை. மாமியாருக்குப் பிடித்தவளாகத் தன்னை மாற்றிக்கொண்டாள். பல விஷயங்களுக்கு ஆலோசனை வழங்குபவராக மாமியாரை மாற்றிவிட்டாள். தன்னைக் கவரும் விஷயங்களே வீட்டில் நடக்கின்றன என்னும் நம்பிக்கை அவள் மனத்தில் உதிக்கும்படி நடந்துகொண்டாள். அதே சிரித்த முகம். துறுதுறுப்பு. களை.

அவளைப்பற்றி ஒருமுறை நண்பருடன் பேசத்தொடங்கினேன். ‘பெண்கள் எவ்விதத்தில் இப்படி மாறிப்போகிறார்கள் ? ‘ என்று தயக்கத்துடன் கேட்டேன். அதற்கு அவர் பதியன் போடும் முறையையும் பெண்ணை வாழ அனுப்பும் முறையையும் ஒப்பிட்டுச் சொன்னார். பதியனிடும் செடி முதலில் வேறொரு இடத்தில் இருந்தது. நடப்படும் இடத்துக்கேற்ற வகையில் புதிய மண், புதிய தண்ணீர் எல்லாவற்றுக்கும் ஏற்றவகையில் அச்செடி ஒருசில நாள்களுக்குள்ளேயே தன்னைத் தகவமைத்துக்கொள்கிறது. இந்தியப் பெண்களிடமும் இக்குணம் அடிப்படையிலேயே உள்ளது என்றார்.

‘இருக்கும் இடத்தில் கிட்டும் வாய்ப்பு வசதிகளுக்கேற்ப களிப்படையும் வாய்ப்புகளை பெண்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள். குழந்தைகளாக இருக்கும்போது தம் பெற்றோர்கள் உருவாக்கித்தரும் வசதிகளால் களிப்படையக் கற்றுக்கொள்கிறார்கள். இளமைப்பருவத்தை அடையும்போது, அத்தருணத்தில் கிட்டும் வாய்ப்புகளுக்கேற்ப ஆனந்தத்தைக் கண்டடைகிறார்கள். மணம் முடித்துப் புகுந்த வீடடையும்போது அங்கிருக்கும் வாய்ப்புகளுக்கும் வசதிகளுக்கும் தகுந்த விதத்தில் மகிழ்ச்சியை உருவாக்கிக்கொள்கிறார்கள். மகிழ்ச்சி எப்போதும் வெளியே இல்லை. உள்ளேயே இருக்கிறது. அந்த ஊற்றுக்கண்ணைக் கண்டடைகிற பெண்களுக்கு மகிழ்ச்சிக்குக் குறைவில்லை. பழையதையும் புதியதையும் ஒப்பிட்டுப்பார்த்துக் குழப்பிக்கொள்ளும் பெண்கள் தடுமாற்றம் கொண்டுவிடுகிறார்கள். அப்போது இல்வாழ்க்கை இன்பம் சமநிலை குலைகிறது. எது சரி, எது தவறு என்று என்னால் எடுத்துச் சொல்லமுடியாது. ஆனால் களிப்பைக் கண்டடையும் குணமும் பாதுகாப்பாக அக்களிப்பைத் தக்கவைத்துக்கொள்ளும் குணமும் இந்தியப் பெண்களிடம் உள்ளது ‘ என்று சொல்லிமுடித்தார்

நண்பரின் வார்த்தைளை எவ்வளவு தொலைவுக்கு ஏற்றுக்கொள்வது என்று எனக்கும் குழப்பமாக இருந்தது. அவர் சொல்வது உண்மையென்றால் மாமியார் மருமகள் பிரச்சனைகள் தொடர்பான சங்கதிகள் தினமும் செய்தித்தாள்களில் இடம்பெறுவதற்கான காரணம் என்னவென்று புரியவில்லை. சாயங்காலம் தொடங்கி முன்னிரவு வரை நீடிக்கும் தொலைக்காட்சித் தொடர்நேரங்களில் பெரும்பாலும் அலசப்படும் அளவுக்கு இந்த மாமியார் மருமகள் விஷயம் கருப்பொருளாக மாறியது எப்படி என்றம் புரியவில்லை. எங்கோ ஒருசிலர்க்கு நண்பருடைய மகளுக்கு அமைந்ததைப்போல வாழ்க்கை அமைந்துவிடுகிறது. மறுபாதியினருக்கு வேறு விதமாக அமைந்துவிடுகிறது. பிரச்சனை உள்ளவர்கள் இக்கரையிலுமாக பிரச்சனை இல்லாதவர்கள் அக்கரையிலுமாக இருக்கிறார்கள் என்று நினைத்தபடி அத்திசையில் அலைந்த யோசனைகளை நிறுத்தினேன். நிறுத்த முடியாத ஒன்றாக யோசனையின் முடிவில் ஒரு சிறுகதை எஞ்சி நின்றது. அது கிருஷ்ணன் நம்பி எழுதிய ‘மருமகள் வாக்கு ‘ என்னும் சிறுகதை

கதையில் மாியார் மருமகள் இருவர் இடம்பெறுகிறார்கள். மீனாட்சி அம்மாள் என்பவர் மாமியார். ருக்மிணி என்பவள் மருமகள். ருக்மிணி மெலிந்து துரும்பாக இருந்தாலும் வேலைக்குக் கொஞ்சமும் சளைக்காதவள். அதிகாலையில் வாசலில் சாணம் தெளித்துக் கோலம் போடுவதிலிருந்து படுக்கப் போகும் முன் மாட்டுக்கு வைக்கோல் பிடுங்கி வைப்பது வரை எல்லா வேலைகளையும் அப்பழுக்கில்லாமல் செய்துவிடுவாள். மருமகளின் வாயைக் கிளறி வார்த்தைகளைப் பிடுங்க அக்கிரகாரத்துக்காரர்களால் முடியவில்லை. அந்த அளவுக்கு வீட்டோடு அடங்கிக் கிடக்கிறவள் அவள்.

அப்போதுதான் ஊருக்குத் தேர்தல் வருகிறது. போட்டியிடுபவர்கள் இருவர். ஒருவருடைய சின்னம் கிளி. மற்றொருவருடைய சின்னம் பூனை. அக்கிரகாரத்து வாக்குகள் எல்லாம் கிளிக்குத்தான் போகப்போகிறது என்று பேசிக்கொள்கிறார்கள். தேர்தலுக்கு முன்தின இரவுப்பேச்சில் தேர்தல் விஷயம் பிரதானமாக அடிபடுகிறது. ‘ஒங்க ஓட்டு கிளிக்குத்தானே மாமி ? ‘ என்று மீனாட்சி அம்மாளின் வாயைக் கிளறுகிறாள் ஒருத்தி. ‘ஏன்டி எல்லாம் தெரிஞ்சு வெச்சுண்டே என்னச் சீண்டறயா ? ‘ என்று கேட்கிறாள் மீனாட்சி அம்மாள். ‘ஒங்க மாட்டுப்பொண் ஆருக்குப் போடப்போறாளோ ‘ என்று கேட்கிறாள் இன்னொருத்தி. ஏஏன்டி என்னயும் அவளயும் பிரிச்சுப் பேசறேள். நானும் அவளும் ஒன்னுடி ‘ என்கிறாள் மீனாட்சி அம்மாள்.

மறுநாள் காலையில் வாக்குப்பதிவு நடக்கத்தொடங்ககிறது. மீனாட்சி அம்மாள் முதல் ஆளாகப் போய் வாக்களித்துவிட்டுத் திரும்பி விடுகிறாள். ருக்மணி தொழுவத்தில் மாட்டுக்குத் தவிடும் தண்ணீரும் காட்டிக்கொண்டிருந்தாள். பசுவிடம் மனம்விட்டுப்பேசும் அவள் தேர்தலைப்பற்றிக் கூடப் பேசுகிறாள். பசுவைப் பார்த்து ‘உனக்குக் கிளி பிடிக்குமா, பூனை பிடிக்குமா ? ‘ என்று கேட்டுவிட்டுத் தனக்குக் கிளிதான் ரொம்பப் பிடிக்கும் என்கிறாள். தான் பிள்ளை பெற்றபிறகும் தொடர்ந்து பால் தரவேண்டும் என்று பசுவிடம் கேட்டுக்கொள்கிறாள். பசு அவளைப் பார்த்து ‘ம்மா ‘ என்று கத்துகிறது. ‘போறேன், போய் ஓட்டுப் போட்டுட்டு வந்து கன்னுக் குட்டியைக் குடிக்க விடறேன். அதுக்குள்ள அவசரப்படாதே ‘ என்கிறாள்.

மாமியார் சொல்லி வைத்திருந்தபடி பக்கத்துவீட்டுப் பெண்கள் சிலர் ருக்மிணியை சாவடிக்கு அழைத்துச்செல்ல வருகின்றனர். கிணற்றடியில் முகம் கை கழுவிக்கொண்டு ருக்மிணி வீட்டக்குள் நுழைகிறாள்.

‘சரி சரி தலைய ஒதுக்கிண்டு நெத்திக்கிட்டுண்டு பொறப்படு ‘ என்று மாமியார் முடுக்குகிறாள். வேகவேகமாக உடைமாற்றிக்கொண்டு விரல்களாலேதே தலைமுடியை நீவிச் சரிப்படுத்திக்கொண்டு கிளம்புகிறாள். கிளம்பும் போது தனியாக அழைத்து ‘போனதும் ஒரு சீட்டுத்தருவா. பூனப்படமும் கிளிப்படமும் போட்டிருக்கும். பூனப்படத்துக்குப் பக்கத்துல முத்திர குத்திடு ‘ என்று சொல்லி அனுப்புகிறாள்.

சாவடியின் வரிசையில் நின்றவண்ணம் தொலைவில் தெரிகிற அனிசமரத்தை வேடிக்கை பாரக்கிறாள் ருக்மிணி. தன் சொந்த ஊரான வேம்பனுாரில் ஐந்தாவது வரை படித்த பள்ளியில் பார்த்த அனிசமரத்தையும் அந்த மரத்திலேறிப் பழம்பறித்துத் தின்றதையும் நினைத்து ஆனந்தத்தில் திளைக்கிறாள். அந்த அனிசமரத்தையே பார்த்துக்கொண்டிருந்தபோது அதன் நுனிக்கிளையில் ஒரு பச்சைக்கிளி பறந்துவந்து உட்கார்கிறது. அதைப் பார்த்ததும்தான் அவளுக்குத் தான் வாக்களிக்க நிற்கிற விஷயம் உறைக்கிறது. மனத்துக்குள்ளேயே அக்கிளியிடம் தன் வாக்கு அதற்குத்தான் என்றும் அதை ஏற்கனவே தீர்மானித்தாகிவிட்டது என்றும் தன் மாமியாரிடம் போய் இவ்விஷயத்தைப்பற்றிக் கிளி சொல்லக்கூடாது என்றும் தன் வீட்டுக்கு அது கண்டிப்பாக வரவேண்டும் என்றும் தன்னை மாட்டுத்தொழுவத்தில் காணலாம் என்றும் சொல்கிறாள்.

வரிசை கரைந்து சாவடிக்குள் நுழைந்ததும் ஆண்களின் அருகாமை அவளுக்குக் கூச்சத்தையும் ஒருவகை மனக்கிளர்ச்சியையும் உருவாக்குகிறது. யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் சுற்றியிருப்பவற்றை மனசில் கனவுச் சித்திரமாக நினைத்துக்கொண்டு முன்னால் செல்கிறாள். அங்கே அவளிடம் ஒரு சீட்டு நீட்டப்படுகிறது. அவள் ஒரு மறைப்புக்குள் செல்கிறாள். ருக்குவின் நெஞ்சு படபடக்கிறது. முத்திரை அச்சையும் கையில் எடுத்துக்கொள்கிறாள். கையும் கிளிக்கு எதிரே சென்றுவிடுகிறது. திடாரென தன் கையை யாரோ பற்றியிருப்பதைப்போன்ற எண்ணம் எழுகிறது. மாமியார் மீனாட்சி அம்மாவின் கைதான். அவர் அங்கில்லை. ஆனால் அங்கிருந்து அவளுக்குக் கட்டளையிடுவதைப்போன்ற எண்ணம் எழுகிறது அவளுக்கு. கிளிக்கு நேர் எதிராக இருந்த அவள் கையை பூனைக்கு நேர் எதிராக மாமியார் கை நகர்த்தவும் பளிச்சென்று அங்கு முத்திரை விழுந்து விடுகிறது.

பரபரவென்று சாவடியை விட்டு வெளியேறுகிறாள் அவள். சுற்றியிருந்த தோழிகள் ‘யாருக்குடி ஓட்டு போட்டே ? ‘ என்று கேட்கிறார்கள். ‘எங்க மாமியாருக்கு ‘ என்ற வார்த்தைகள் அவள் அறியாமல் வாயிலிருந்து வெளிப்படவும் கூடிநின்ற பெண்கள் பெரிதாகச் சிரிக்கிறார்கள். ருக்மிணி தலையைத் தொங்கப் போட்டபடி அங்கே நிற்காமல் அவர்களைக் கடந்து விரைந்து நடக்கத் தொடங்குகிறாள்.

இக்கதையில் இரண்டு காட்சிகள் ஒப்பிடப்பட வேண்டியவை. ஒரு காட்சியில் ருக்கு பள்ளிச்சிறுமி. அனிசமரத்தில் ஏறி உட்கார்ந்து பழம் தின்கிற சிறுமி. பழத்தைத் தின்றுவிட்டுக் கொட்டைகளை, கீழே நின்றபடி படம்போடச்சொல்லிக் கெஞ்சுகிற சிறுவர்களை நோக்கி வீசியெறிந்து விளையாடுபவள். இன்னொரு காட்சியில் ருக்கு மருமகளான இளம்பெண். கிளிச்சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்கிற எண்ணமிருந்தாலும் உள்ளத்தில் ஆழப்பதிந்து ஆட்டிப்படைக்கிற மாமியாரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு பூனைச்சின்னத்துக்கு வாக்களிப்பவள். ஒரு பருவத்தில் இருக்கிற உரிமை மற்றொரு பருவத்துக்கு மாறியதும் இல்லாமல் போகிறது. சிறுமிப்பருவத்திலிருந்து இளம்பெண் பருவத்துக்கு மாறியதும் மனத்தில் உதிக்கும் எண்ணத்தின்படி நடக்க இயலாத உரிமையைப் பறிகொடுத்துவிட்டு ஆட்டுவிக்கப்படும் பாவையாக மாறிப்போகிறாள் பெண். இந்தியப்பெண்களிடம் காணப்படுகிற புதிரான மாற்றத்தைத் துல்லியமாகப் படம்பிடிக்கிறது கதை.

*

இளைய வயதில் மறைந்த எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பி குறைந்த எண்ணிக்கையிலேயே சிறுகதைகள் எழுதியிருந்தாலும் பல முக்கியமான சிறுகதைகளை எழுதியுள்ளார். ‘நீலக்கடல் ‘, ‘காலைமுதல் ‘ ஆகிய இரண்டு சிறுகதைத்தொகுப்புகள் மிக முக்கியமானவை. ஸ்நேகா பதிப்பகத்தின் முயற்சியால் இவருடைய எல்லாச் சிறுகதைகளும் அடங்கிய தொகுப்பொன்று வெளிவந்தது. ‘யானை என்ன யானை ‘ என்ற தலைப்பில் குழந்தைக்கவிதைத்தொகுதியொன்றையும் எழுதியுள்ளார். புதிய தமிழ்ச்சிறுகதைகள் என்கிற தலைப்பில் அசோகமித்திரனால் தொகுக்கப்பட்டு நேஷனல் புக் டிரஸ்டுவால் 1984 ஆம் ஆண்டில் வெளிவந்த தொகுப்பில் முதல் கதையாக ‘மருமகள் வாக்கு ‘ இடம்பெற்றிருக்கிறது.

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்