உரத்த சிந்தனைகள்- 3

This entry is part [part not set] of 46 in the series 20041014_Issue

ராமசந்திரன் உஷா


ஜெயமோகனின் ‘காடு ‘

ஜெயமோகனின் ‘காடு ‘. ஆறு மாதத்திற்கு முன்பு விஷ்ணுபுரத்தைத் தட்டுத்தடுமாறி படித்து முடித்தேன். அடுத்து ஏழாவது உலகம். சென்ற வாரம் சொன்னது ஞாபகம் இருக்கா ? நண்பர் இது சாதாரண fiction தான் என்று சொல்லிவிட்டார். அடுத்து கையில் எடுத்தது ‘காடு ‘. முன்னுரையில் சாதாரண வாசிப்புக்கு ஏற்றதல்ல என்று ஒரு அபாய அறிவிப்பு. பயத்துடன் ஆரம்பித்தால், என்ன சொல்வது, நான்கு நாட்களில் முடித்துவிட்டுதான் வேறு வேலையே ஓடியது. மனுஷன் அப்படி என்னத்தை பேனாவில் ஊற்றி எழுதினாரோ, படிப்பின் போதை இதுதானோ ? கதையுடனே நானும் அந்த காடுகளில் நுழைந்து வந்தேன். காடு, விருட்சங்கள், மரங்கள், பெருக்கெடுத்து ஓடும் நீர், அழுகல் வாசனை, மலர்களின் மணம், அந்தக்குளிர், மழையின் ஈரம் அத்தனையையும் உணர்ந்தேன்.

என்னைப் போன்ற சாதாரண வாசகி அல்லது வாசகனுக்கும் நன்றாக புரியும்படிதான் எழுதப்பட்டுள்ளது. சமீபத்தில் படித்ததில் முதல் மார்க் இதற்குதான். இப்படைப்புக்கு ஏதாவது பரிசு கிடைத்தா ? சாகித்ய அகாதமி, ஞானபீடம் என்று சொல்லுகிறார்களே, அதற்கான தேர்வுக் குழுவினர் கண்ணில் இது பட்டதா ? யாராவது சொல்லுங்களேன்! ஜெயமோகன், மிளா என்றால் என்ன மிருகம் ?

கி.ராவின் ‘கோபல்ல கிராமம் ‘ நாவலில் வந்த காடு வேறுமாதிரி, அதில் காடு அழிக்கப்படுவதை மனிதனின் இயற்கையை வெல்லும் கடும்முயற்சியாய்க் காட்டியுள்ளார். அந்தக்காடு அழிக்கப்படுவதை படிக்கும் வாசகனைப் பதறச் செய்யவில்லை. அதில் சொல்லப்பட்ட காடு பிரமிப்பையும், பயத்தையும் உண்டாக்கி, அது அழிந்ததும்

மனிதனின் வெற்றியே பிரதானமாய் காட்டப்படுகிறது.

ஓரளவு இப்படித்தான் சா. கந்தசாமி அவர்களின் ‘ சாயாவனம் ‘ இதிலும் காடு அழிக்கப்படுவது கடைசி பாராவில் மட்டும் லேசாக வருத்தத்தை உண்டாக்கியது. கதையின் கருவே காட்டை அழிப்பது என்றாலும், இதிலும் தனிமனிதனின் ஆர்வம், விடாமுயற்சியே மேலோங்கி நிற்கிறது. கடைசியில் குழம்பிற்கு சுவைக் கொடுக்கும் புளிய மரங்கள் அழிந்துப் போயிற்றே என்று ஒரு பெண் குற்றம் சாட்டும் பொழுது, நாயகனுக்கு சிறிது குற்றவுணர்ச்சி ஏற்படுகிறது.

ஆனால் ‘ காடு ‘, இதில் யட்சிணிகளும், தேவதைகளும் நடமாடும் இடமாய் வருணிக்கப்பட்ட வனம், மனிதனின் சுயலாபத்துக்காக அழிக்கப்படுவதைப் படிக்கும் பொழுது மனம் வேதனையுறத்தான் செய்கிறது.

கதையில் குறுக்கிடும் சங்கக்கால சித்திரங்கள் ( குறுந்தொகை போன்றவை) தேவையா என்று தோன்றியது ? அதையும் முழுதாய் சொல்லாமல் மேலோட்டமாய் கோடிதான் காட்டுகிறார்.

அதைவிட கண்ணில் உறுத்திய விஷயம், அது என்னங்க ? சினிமா ஈரோவானாலும் சரி, கதையின் நாயகனையும் ஊரில் இருக்கும் அத்தனைப் பெண்களும் காமவலை வீசிப் பிடிக்கிறார்கள். இக்கதையிலும் நாயகன்- இளைஞன் காட்டில் அணைக்கட்டு வேலைக்குச் செல்கிறான். காட்டில் ஒரு மலைசாதிப் பெண்ணைப் பார்த்துக் காதல் கொள்கிறான். கவனிக்க காதல்தான், காமம் இல்லை. அதனால் அவளுடன் பழகச்சில சந்தர்ப்பங்கள் கிடைத்தாலும், தெய்வீக காதலை நிலை நிறுத்த அவனின் சுண்டு விரல் கூட அவள் மேல் படுவதில்லை.

ஆனால், பக்கத்து வீட்டு அம்பிகா அக்கா, மாமியார், எஞ்சினியர் மனைவி ஆகியோரின் காமப்பசிக்கு இரையாகிறான். கதைகளில் ஆணின் அதீத காமம், ஆண்மையின் வெளிப்பாடாய் சிலாகிக்கப் படுகிறது. இத்தகைய உணர்வுகள் பெண்களுக்கு உண்டு என்று சினிமாவிலோ, கதைகளிலோ சொல்லப்பட்டால், அவளை கீழ்தரமான கதாபாத்திரமாய்ச் சித்தரிக்கிறார்கள்.

இப்படிப்பட்ட பாத்திரங்களை பல கதையில் காணலாம். தானும் பல பெண்களை கவரும்படி ( ஜேம்ஸ்பாண்ட்) இருக்க வேண்டும் என்பது இப்படி எழுதும் எழுத்தாளர்களின் அபிலாஷையோ ?

திரைப்படம் ‘நெல்லூ ‘

இக்கதையைப் படிக்கும் பொழுது பிரேம் நசீர், ஜெயபாரதி நடித்த ‘நெல்லு ‘ மலையாளப்படம் ஞாபகம் வந்தது. திரைப்படத்துக்கும் காடு நாவலுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. சலீல் செளத்ரி இசை அமைப்பில் அத்தனைப் பாடல்களும் தேவாமிர்தம். ‘நீல பொன் மானே ‘, ‘கதலி செங் கதழி ( பாடியவர் லதா மங்கேஷ்கர்) ‘ போன்ற பாடல்கள். இந்தப் படமும் முழுக்கக் காட்டில் படமாக்கப்பட்டிருக்கும். இதில் நசீர் ஒரு வழிப்போக்கனாய் வருவார். ஜெ.பாரதி மலைச்சாதி பெண். இப்படத்திலும் ஒரு ஒற்றை யானை வரும்.

துபாய்க்கு வந்ததற்கு ஒரு நல்லபலன், அருமையான மலையாளப் படங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இங்கு வந்தால் அரபி வராது, ஆனால், கட்டாயம் மலையாளம் பேச வந்துவிடும். அந்த அளவு மலையாளிகள் அதிகம். நல்லவேளையாய் இங்கு வேலைக்கு வருபவர்களுக்கு தற்காலிக விசாதான் கொடுக்கப்படுகிறது. நிரந்தரக் குடியுரிமை மட்டும் தந்திருந்தால், கேரளா இந்தியாவில் இருந்து மறைந்து இங்கு உருவாகியிருக்கும்.

Bride and prejudice

நம்ம ஐசு நடித்துள்ள புது ஹாலிவுட் படம். இப்படத்தைப் பற்றிதான் எங்கும் செய்திகள். Gurinder chadha இந்த பெண் இயக்குனரின் இன்னொரு படம் ‘Bend it like Beckham ‘. ஐரோப்பிய நாட்டில் வசிக்கும் பஞ்சாபிப் பெண் ஒருத்திக்கு கால்பந்தில் மிக ஆர்வம். தாய்கோ மகள் சமையல் கற்றுக் கொண்டு கல்யாணம் செய்துகொண்டு போக வேண்டுமே என்ற கவலை. தந்தை அனுபம்கீர், ஆதரவுடன் பல போட்டிகளில் ஆடத் தொடங்குகிறாள்.

படத்தில் ஒரு காட்சி- மகள் பந்து ஆடும்பொழுது, சில பையன்களுடன் கீழே விழுந்து கட்டிப்புரண்டு பந்தை பிடிப்பதைப் பார்த்து ஐயோ அம்மா என்று அலறி மகளை வீட்டுக்கு இழுத்து வந்து சத்தம் போடுகிறாள் தாய். அவளைப் பொறுத்தவரை கன்னி பெண் ஆண்களைத் தொடுவது தவறு.

இதேபோல், ஒரு முறை சந்தோஷத்தில் தன்னுடைய நண்பியைக் கட்டி அணைத்து குதிக்கும்பொழுது, அந்த வெள்ளைக்காரப் பெண்ணின் தாய் வந்து கூப்பாடு போடுகிறாள். அவளைப் பொறுத்தவரையில் பெண், ஆணைக் கட்டிக் கொள்ளலாம் . அது இயற்கை. ஆனால் பெண்ணும் பெண்ணும் கட்டிபிடிப்பது மகாப்பாவம். நாட்டுக்கு நாடு சமூகக் கோட்பாடுகள் மாறுகின்றன என்பதை இயக்குனர் நன்றாகக் காட்டியுள்ளார்.

ஹிந்தியும், ஆங்கிலமும் கலந்து எடுக்கப்பட்ட படம். கிடைத்தால் கட்டாயம் பாருங்கள். ஹிந்திலீஷ் படம், ஆனால் வழக்கமான ஹிந்திபடம் அல்ல.

பயணம்

இந்த வருட இந்திய பயணத்தில் பேலூர், ஹளபீடுவுக்கும் போயிருந்தோம். ஹளபீடு கோவிலில் பிரமாண்ட நந்தி. அதன் தலையில் அரபியில் ஒரு பெயர் செதுக்கப்பட்டிருந்தது. என் மகன் அதைப் படித்ததும் கைடு முகம் மாறிவிட்டது. உங்களுக்கு எப்படி அரபி படிக்கத் தெரியும் என்று சந்தேகமாய் கேட்டதும், நாங்கள் துபாயில் இருக்கிறோம். பிள்ளைகளுக்கு பள்ளியில் அரபி கட்டாயம் படிக்க வேண்டும் என்று எடுத்துச் சொன்னதும் அவர் நம்பினது போலத் தெரியவில்லை. இரண்டு முறை முகலாயர்களால் சூறையாடப்பட்டுள்ளது. பிறகு ஆங்கிலேயர்கள் உடையாத சிற்பங்களை லண்டனுக்கு கொண்டு சென்றுள்ளனர். இருந்தும் நிதானமாய் இருந்து பார்க்க நிறைய உண்டு. அத்தனையும் மகாபாரத, இராமயண காட்சிகளைக் காட்டும் கலை பொக்கிஷங்கள். ஹெய்சாளர்கள் ஜைன மதத்தில் இருந்து இந்து சமயத்திற்கு மாறியவர்கள், அதனால் ஹளேபீடு கோவிலில் இருந்து, ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு ஜைன கோவில் உள்ளது. அக்கோவிலில் கல் தூண்களில் கண்ணாடியில் பார்ப்பதுப் போல நம் முகத்தைப் பார்த்தால் நீள வாக்கில், குறுக்காய், பரந்து காட்டுகிறது. பேலூரில் கோவில் அழகு, ஹளேபீடில் கோவிலுக்கு வெளியே அழகு.

ஒரு சந்தேகம், ஒருக்காலத்தில் ஜைன, புத்த சமயத்தினர் தமிழ் நாட்டில் இருந்தனர். ஆனால் இம்மதத்தைச் சார்ந்த கர்நாட்டகாவினர், வட இந்தியர்களைப் பார்த்துள்ளேன். ஆனால் தமிழ்நாட்டில் அவர்கள் முற்றிலும் தாய் சமயமான இந்து மதத்திற்கே வந்துவிட்டார்களா ?

சாகித்ய அகாதமி பரிசு பெற்ற ஒரு கன்னடநாவல், தமிழ் மொழி பெயர்ப்பு, அதில் ஹளேபீடு கோவில், செளத்தாலா தேவி எல்லாம் வருவார்கள். இரவு அத்தனை சிலைகளும் உயிர் பெறும். அவ்வளவுதான் ஞாபகம் இருக்கிறது. யாருக்காவது இந்த நாவல், அதை எழுதியவர் யார் என்று தெரிந்தால் சொல்லுங்களேன்.

செய்தி

திருமதி ரேவதி சங்கரன் அவர்கள் மங்கையர்மலருக்கு ஆசிரியராய் பொறுப்பேற்றுள்ளார். நடிகை, பாடகி, விளம்பரத்தில் தோன்றுபவர் என்று சகலகலாவல்லி என்றாலும், இவருக்கு எழுத்தனுபவம் உண்டா என்று தெரியவில்லை. திருமதி ரமேஷ் மஞ்சுளா மங்கையர்மலரை இன்று தமிழ்நாட்டில் ஒவ்வொரு மத்தியவர்க்கத்துப் பெண்களும் படிக்கும் அளவிற்கு வளர்த்துள்ளார். பார்க்கலாம் ரேவதி சங்கரன் அவர்களின் திறமையை! ஆனால் ம. ம சமீபகாலமாய் வெறும் சமையல் குறிப்புகள், அழகு நிலைய நடத்துபவர்களுக்கும், ஆங்கில மருத்துவம் அல்லாத மருத்துவர்களின் விளம்பர இதழாகவேக் காட்சியளித்தது. போதாதற்குக் கல்யாணச்சந்தை விளம்பரங்களும் பல பக்கங்களுக்கு ஆக்கிரமித்துக் கொண்டு, புரட்டினால் சிறு குறிப்புகளைத் தவிர ஒன்றுமேயில்லை. சிறுகதையும், கவிதையும் வெகு சுமார் ரகம்.. இப்பொழுது அவள் விகடன் பரவாயில்லை. புதுப்புது உபயோகமான விஷயங்களுடன், படிக்கச் சுவையாய் இருக்கிறது.

திருமதி ரேவதி சங்கரன் அவர்களின் ஒரு முறை தந்த பேட்டியில் பிள்ளைகள் வெளிநாட்டில் தங்கி விட்டதால், கணவருடன் தனியாக வசிப்பதாகவும் சுவிகாரபுத்திரனாய் ஒருவனை வளர்ப்பதாக சொல்லியிருந்தார். அவர் சொன்ன தத்துப்புத்திரன் ஒரு அரவாணி. இந்த பாவப்பட்ட ஜென்மங்களைப் பார்த்தாலே அருவருத்துப் போகும் நிலையில் மகனாய் கருதி வளர்ப்பது மிகவும் பாராட்ட வேண்டிய விஷயம்.

அவலம்

பெங்களூரில் இருந்து சென்னைக்கு பிருந்தாவனில் வரும்பொழுது, ஒரு அரவாணி, தலையில் விக், செயற்கையான தளுக்குடன் ஆண்களைத் தொட்டுத்தொட்டு காசு கேட்டார். முகத்தில் தாடி, மீசை வழிக்கப்பட்ட தடங்கள். குரலும் ஆண் போலதான்.

இந்த டே எக்ஸ்பிரஸ் ரயிலைப் பற்றி ஒரு குறிப்பு. மூன்று பேர் உட்கார வேண்டிய இடத்தில் நான்கு சீட்டாய் வடிவமைத்த புண்ணியவான் யாரோ தெரியவில்லை. அதிலும் சிறு குழந்தைகள் இருந்தால், பயணம் போதும் போதும் என்று ஆகிவிடும். இடித்துக் கொண்டு உட்கார முடியாமல் கதவு பக்கமாய் நின்றிருந்தேன். அந்த அரவாணி கிடைத்த காசை எண்ணிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு அம்மாள்,

‘பார்க்க ஆம்பிளை மாதிரி தானே இருக்கே, ஏன் பொம்பளை வேஷம் போட்டு இந்த பிழைப்பு ? ‘ என்றுக் கேட்டார்கள்.

சட்டென்று தன் புடைவை முந்தானையை விலக்கிக் காட்டி தான் ஒரு பெண்தான் என்றார். ‘இந்த பொறப்பே ஈனப் பொழப்புதான், இதத் தவிர பொழைக்க வேற வழியில்லை ‘ என்றார். ஒருவன் இவரை தாலிகட்டி மனைவியாக்கிக் கொண்டு வாழ்ந்து கொண்டு இருந்தானாம். அவன் சொந்த பந்தங்களுக்குத் தெரிந்து இருவருக்கு நல்ல அடி. கணவனாய் இருந்தவனை இழுத்துக் கொண்டுப் போய்விட்டார்களாம். அவன் இருக்கும் இடமே தெரியவில்லை என்றார். ஆனால் இப்படி இவர்கள் ஒதுக்கப்படுவது இந்தியச் சமுதாயத்தில் மட்டும்தானா ?

மேற்கத்திய நாடுகளில் இவர்கள் சமூகத்தால் ஒதுக்கப்படுவதில்லை. ஓரினத் திருமணங்கள் சில இடங்களில் சட்டப்படியும், சர்சுகளிலும் நடத்தப்படுகின்றன. நம்மூரில் இவர்களால் ஒழுங்காய் படித்து வேலையில் அமர்ந்து சாதாரணமாய் வாழ முடியாதா ? இப்படி படைப்பின் குளறுபடி ஒன்றும் புதிதில்லையே, புராணங்களிலும், பழங்கால சிற்பங்களிலும் பதிவாகிதானேயுள்ளது. இப்பொழுதுதான் முதன்முறையாய்

இத்தகைய நபர் ஒருவருக்கு இன்சூரஸ் செய்துக்கொள்ள எல்.ஐ.சி முன் வந்துள்ளது.

நான் பிளஸ் ஒன்னில் படிக்கும்பொழுது, ஒரு பெண் கொஞ்சம் ஆண் மாதிரி இருப்பாள். நாளாவட்டத்தில் முகத்தில் முடி முளைக்க ஆரம்பித்தது. குரலும் கனக்க ஆரம்பித்தது. பாம்பேக்குச் சென்று ஆபரேஷன் ( ! ) செய்துக் கொண்டு முழு ஆணாக மாறிவிடுவேன் என்றுச் சொல்லிக் கொண்டு இருந்தாள். எல்லாரும் அவளை ஒதுக்க ஆரம்பித்தனர். ஆசிரியைகளும் அவளைக் கண்டு கொள்ளவேயில்லை. வெகு சாதாரணமாய் ‘அறைகுறை ‘ என்றே அழைக்கப்பட்டாள். பிரச்சனை எப்போது பெரியதானது தெரியுமா ? வகுப்பு மாணவியிடம், காதல் கடிதம் கொடுத்து அவளையே கல்யாணம் செய்து கொள்ளப்போவதாய்ச் சொன்னதும், விஷயம் தலைமை ஆசிரியைக்குச் சென்று பள்ளியில் இருந்து நீக்கிவிட்டார்கள். இப்போது யோசித்தால், இதை ஆசிரியர்களும், தலைமை ஆசிரியையும் கொஞ்சம் நாசுக்காய் இவ்விஷயத்தைக் கையாண்டு அவளுக்கு உதவியிருக்கலாம். அவள் பிரச்சனைகளை காதுக் கொடுத்துக் கேட்டிருக்கலாம். ஆனால், அவளின் குறையைக் கண்டு எல்லாரும் பயந்தார்கள், அருவருத்து ஒதுங்கினார்கள். இதே ஓர் ஆண், பெண்ணாய் காட்சியளித்தால் கேலி செய்தே அவனை ஒரு வழி ஆக்கிவிடுகிறார்கள். ஆக குற்றவாளி உடல் கூறு சரியாய் இருப்பவர்கள் தானே ?

கண்ணில் விழுந்தது

எங்கள் வீட்டில் தமிழ் தொலைக்காட்சி சன் டாவி மட்டும். மற்ற சானல்களில் எப்படி என்று தெரியாது. ஆனால் சமுகச் சீரழிவுக்கு இன்றைக்கு முக்கியக் காரணம் இந்த தனியார் தொலைக்காட்சிதான். மீண்டும் மீண்டும் சிரிப்பு, டாப் டென், மைடியர் பூதம்- இவை நகைசுவை தொடர்கள் என்ற பெயரில் வெறும் ஆபாசக்கூத்துதான். மாமியார் மருமகன், மாமனார் மருமகள் சைட் அடிப்பது, பெற்றவர்களைத் தரக்குறைவாய் மரியாதையில்லாமல் பேசுவது, கெட்ட வார்த்தைகளைச் சரளமாய் சொல்லுவது என்பதுதான் நகைசுவை என்று சொல்லப்படுகிறது.

தொடர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்- குழந்தையில்லாத பெண்ணை, கணவனை இழந்தவளை சொல்லிக் காட்டுவது, எல்லாவற்றிற்கும் ஜோசியம் பார்ப்பது, உறவு முறைகளைக் கண்ணியம் இல்லாமல் பேசுவது, பணக்காரர்கள் என்றால் சின்ன வீடு, மனைவியை அடிப்பது- இதுவே கணவனை மனைவி அடித்தால் அது நகைசுவை காட்சியாகிவிடும்- என்று சொல்லிக் கொண்டே போகலாம். இவற்றைப் பார்ப்பது முக்கியமாய் வயதானவர்களும், சிறு பிள்ளைகளும்தான். ஓயாமல் வரும் இந்த தொடர்களைப் பார்த்து வயதானவர்களுக்கு மன உளைச்சலும், பல்வேறு வகையான நோய்களும் ஏற்படுகின்றன.

சிறு பிள்ளைகளுக்கு மாமியார் என்றால் கொடுமைக்காரி, ஆண்களுக்கு சின்ன வீடு, உறவினர் என்றால் ஒருவரை ஒருவர் சதா வார்த்தைகளால் காயப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மூளை சலவை செய்யப்படுகிறது. வேண்டாத கெட்ட வார்த்தைகளையும் சொல்லித்தருகிறது. ஏன் தொலைக்காட்சிக்கு சென்சார் இல்லை ? ஹிந்தி தொடர்களில் பெண்கள் புகைத்தல், குடித்தல், பிற ஆண்களின் தொடர்ப்பு போன்றவை அதிகம். இன்னும் அந்த அளவு நம் தமிழ் தொடர்கள் முன்னேறவில்லை என்று நினைக்கிறேன்.

ஆனால் ஒரு நல்ல விஷயம், படித்த பெண்கள் அதிகமாய் தொடர்களைப் பார்ப்பதில்லை, அதாவது தேர்ந்தெடுத்து ஒன்றிரண்டு பார்க்கிறார்களே தவிர அதிலேயே முழ்கிவிடவில்லை. சீரியல் பார்ப்பது கொஞ்சம் கவுரவக் குறைச்சலாகக் கருதுகிறார்கள்.

புதுசு கண்ணா புதுசு இல்லை இல்லை, இப்பொழுது பெஸ்ட் கண்ணா பெஸ்ட் குங்குமம் வார இதழின் ‘சந்திரமுகி ‘ விளம்பரத்தில் தலை முழுவதும் நரைத்துப் போன வயசான ரஜினி. கதை கட்டாயம் அவர் வயதுக்கேற்றதுப் போல இருக்கப் போவதில்லை. நாளைப் படத்தில் சாயம் தோய்த்த முடியுடனும், முகத்துக்கு இரண்டு இன்சு மேற்பூச்சுடனும் சிம்ரனுடன் ஆடப் போகிறார். ஆனாலும் அநியாயம் இது!

சமூகம்

ஐரோப்பிய நண்பரின் மாமனார் துபாய்க்கு வந்துள்ளார். அதாவது தேனிலவுக்கு. வயசு எழுபது +. ஆறுமாதத்துக்கு முன்புதான் மனைவி தவறிப்போனார். இந்த புதுமனைவிக்கும் வயசு அறுபதுக்கு மேல்தான். என்ன காதல், மோகம், வழிச்சல். எல்லார் கண்களும் அவர்கள் மேல்தான். நம் ஊரில் வயதானவர்களைப் பார்க்கும்பொழுது பாவமாய் இருக்கிறது. வயதான பெற்றோர் ஒரு சுமையாகவே மக்களால் வீட்டில் நடத்தப் படுகிறார்கள். வெகு சிலர்தான் பெற்றவர்களை மரியாதையாய் நடத்துகிறார்கள். இதில் வயதானவர்களிடமும் நிறைய தவறுகள் உள்ளன. மருமகளை வெறுப்பது, மகன் பிள்ளை என்று நினைக்காமல் மருமகள் பெற்ற பிள்ளை என்று மகளின் பிள்ளைகளை மட்டும் பாராட்டுவது, அந்த காலத்தில் தான் மாமியாரிடம் பட்டபாடுகளை இந்த காலத்து மருமகளிடம் செய்ய முடியாது என்று தெரிந்தும் பல்வேறு வகையில் தூற்றுவது, அந்த காலத்தில் தன் கணவன் தன்னைக் கண்டுக் கொள்ளவில்லை- அது அன்றைய வாடிக்கை, மனைவியிடம் பொதுவில் சாதாரணமாகவே பேசமாட்டார்கள், ஆனால் இன்று மகன் மருமகளை தாங்குகிறான் என்று சொல்லி சொல்லியே கணவனை ஏத்தி விடுவது. கிழவருக்கும் இப்போதுதான் மனைவியின் அருமை கண்ணில் புலப்பட்டு மனைவி சொல் மிக்க மந்திரமில்லை என்று யோசிக்காமல் அவளுக்கு பரிந்துப் பேசுவது என்று வீட்டை நாற அடிக்கிறார்கள்.

நிறைய வயதானவர்கள் இப்போது தனிக்குடித்தனம் என்று தனிமையில் அவதிப் படுகிறார்கள். மகன்களும் தொல்லைவிட்டது என்று கண்டுக் கொள்வதில்லை. இதில் மகள்களை பெற்றவர்கள் புண்ணியசாலிகள். வேலைக்கு போகும் மகளின் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்கிறேன் என்று மகள், அவளின் பிள்ளைகளுடன் தங்கள் உறவை கெட்டிப்படுத்திக் கொள்கிறார்கள். இதில் துணை இழந்தவர்கள் பாடு சொல்லி மாளாது.

சென்ற அக்டோபரில் நார்வேக்கு சென்றிருந்தப் பொழுது நிறைய முதியோர்கள் கண்ணில் பட்டனர். குழுக்களாய் எங்குப் பார்த்தாலும் உல்லாச பயணம் செல்லும் கும்பல். உணவு விடுதியிலும் ஆண், பெண் கலந்த உற்சாகமான வயதான நண்பர்கள் பட்டாளம். இப்படி ஒரு சுவாரசியமான வாழ்க்கை நம் ஊர் பெருசுகள் நினைத்தும் பார்க்க முடியுமா ? ஆரோக்கியமான வாழ்க்கை, தேவையான மருத்துவ வசதி, பணம் இவை இருப்பது முதுமைக்கு அவசியம். இளமையில் வறுமை கொடுமை என்றாள் அவ்வை. ஆனால் முதுமையில்தான் வறுமை கொடுமை. புராணங்களில் வரும் வானபிரஸ்த வாழ்க்கையே நன்றாக இருக்கும். அதையே முதியோர் இல்லம் என்று

வசதியான இடத்தில் சொந்தங்களை விட்டு விட்டு வைராக்கியமாய் வாழலாம் என்றால், நல்ல முதியோர் இல்லத்திற்கு மாதம் ஒருவருக்கு ஐந்தாயிரம் ரூபாய், வைப்பு தொகை பத்துலட்சமாம். இது என். ஆர். ஐ பெற்றோருக்காவது முடியுமா ?

இணையத்தில்

திசைகள் இணைய இதழில் காணாமல் போன வாசகர்கள், எழுத்தாளர்களைப் பற்றி பிரபலமானவர்கள் கருத்துச் சொல்லியிருக்கிறார்கள். நல்ல படம் ஓடுவதில்லை என்று சொல்லுவதைப் போல, யாரும் கதைகளைப் படிப்பதில்லை என்று பத்திரிக்கையாளர்கள் அபாண்டமாய் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் வாசகர்கள் சொல்லுவதென்னவென்றால், ஆ.வி, குமுதம் போன்ற பத்திரிக்கையில் வரும் கதைகள் படிக்கும் தரத்தில் இல்லை என்று. இந்த ஒரு, அரை, கால் பக்க கதைதான் எதற்குப் போட வேண்டும் ?

அடுத்து காணாமல் போன எழுத்தாளர்களைப் பற்றி- ஏன் காணாமல் போனார்கள் என்றக் கேள்வியும் அதற்கான பதிலும்! ஆனால் சொல்லப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் ஆண் எழுத்தாளர்களைப் பற்றி மட்டும்தான்.

ஏன் பெண் எழுத்தாளர்கள் காணாமல் போகிறார்கள் ?

எழுதுகிறேன் என்று ஆரம்பித்தால் எந்த பெண்ணுக்கும் வீட்டில் போதுமான ஒத்துழைப்புக் கிடைக்காது. கல்யாணம் ஆவதற்கு முன்னால், பெண் எழுத்தாளி என்றுச் சொல்லிப்பாருங்கள், மாமியார்காரி குடும்பத்துக்கு சரிப்பட்டு வரமாட்டாள் என்று நற்சான்றிதழ் வழங்குவாள். பையன் யோசித்துவிட்டு, எதற்கு வம்பு என்று வேண்டாம் என்றுச் சொல்லிவிடுவான். அதனால், இந்த மாபெரும் குறையை மறைத்து கல்யாணம் செய்தால், அவள் மெதுவாய் சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்து சொல்வதற்குள் பிள்ளை குட்டி என்று அவளுக்கு நேரமே கிடைக்காது.

பிள்ளைகள் பெரியவர்கள் ஆனப்பிறகு எழுதலாம் என்றால் முதலில் அவள் எதிர்க்கொள்ள வேண்டியது கேலி, எள்ளல் போன்றவைகளை! எழுதிகிறேன் என்று தப்பிதவறிச் சொன்னால், சமையல் குறிப்பு அல்லது அழகு குறிப்புதானே என்று அலட்சியமாய் கேட்பார்கள். இல்லை என்றதும் பெண்ணுரிமை வாதங்களா என்று சிறிது கேலி தென்படும் கேள்வியில். இவை எல்லாம் இல்லை பொதுவாய் என்றுச் சொன்னதும், உனக்கு எதற்கு இந்த வேலை என்ற பாவம் முகத்தில் தோன்றும். ஏதோ பொழுதுப் போக வேண்டுமே என்று சொல்லப்படும்.

வீட்டுப் பெண்களுக்கு விஷயங்கள் கிடைப்பது அரிது. அதனால் அரைத்த மாவையே இன்னும் நைசாய் வருடக்கணக்காய் அரைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆண்களைப் டாக்கடையில் உட்கார்ந்தோ, நடு இரவில் நடந்துக் கொண்டோ பேசுவது எங்களால் முடியாது. எழுதுகிறேன் என்று எங்காவது போகவும் முடியாது. குடும்பம், பிள்ளைக்குட்டிகள் இதற்கு பிறகுதான் எழுத்து. இல்லை ஒளவையாராகவோ, ஆண்டாள்ளாகவோ இருக்க வேண்டும். வீட்டுப் பிரச்சனைகள் மேல் ஓங்கினால் எழுத்துத்தான் முதலில் விழும் முற்றுப்புள்ளி.

ஆண் நட்புகளும் சரிப்பட்டு வராது. அதனால் தங்கள் கண்ணில், காதில் விழுந்த பெண்கள் சமாசாரங்களைத்தான் கதையாக்க முடிந்தது. பொது விஷயங்கள் காதில் விழுந்தாலும், அனுபவங்களால் கிடைக்கும் கதைக் கருதானே இலக்கியமாக முடியும்! வெகு சிலரே, நாலு விஷயங்கள் தெரிந்தவர் என்றால், அவருக்கு வீடு, அலுவலகப் பொறுப்பு என்று எழுத ஆர்வம் இருந்தும் நேரம் இருக்காது. ஆனால் இன்று இணையம் இந்த பிரச்சனையை ஓரளவு மாற்றியுள்ளது. முகமறியாத நண்பர்களிடம், அவர்கள் ஆண்களா பெண்களா என்று யோசிக்காமல் தகவல்களைக் கேட்டுப் பெற முடிகிறது.

நான் படித்தவரையில் ராஜம்கிருஷ்ணன், வாசந்தி இருவரும் நிறைய அரசியல், சமூகம் என்று எழுதியிருந்தாலும் அவர்களின் பார்வை பெண்கள் படும் கஷ்டம், அவலத்திலேயே இருந்தது. சிவசங்கரி ஓரளவு வெற்றிக் கண்டார்.

வீட்டு வேலை, குடும்ப பராமரிப்பு, அலுவலகம் என்று ஓடிக் கொண்டு இருக்கும்பொழுது, எழுதினால் என்ன லாபம் என்று தோன்றாமல் இல்லை. தமிழில் எழுதினால் என்ன கிடைக்கும் ? அங்கீகாரமா ? பணமா ? இரண்டும் இல்லையே!

ரமணிசந்திரன் ரேஞ்சுக்கு உயர்ந்ததும், ஆஹா என்று பார்ப்பார்களே தவிர ஆரம்பக்கால முயற்சிகள் எந்த பலனும் இல்லாமல் போகும்பொழுது ஆயாசத்தையே தருகிறது. எழுத்துலகில் நண்பர்களோ, உறவினர்களோ இல்லாத எனக்கு ஏன் எழுத வேண்டும் என்று அடிக்கடி தோன்றத்தான் செய்கிறது.

வெளிநாட்டில் வசிக்கும் எனக்கு கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு எழுத்து வியாதி பிடித்துக் கொண்டது. இணையத்தில் புகுந்து வந்ததும், அடுத்து அச்சில் வர வேண்டும் என்ற ஆசையாய், பத்திரிக்கைகளுக்கு அதாவது ஆ.விக்கு இணையம் மூலமாக சுமார் எட்டு கதைகள் அனுப்பியிருப்பேன். ஒன்று தேர்வாகி பிரசுரம் ஆனது. அமுதசுரபிக்கு இரண்டு கட்டுரைகள் இணையத்தின் மூலம் அனுப்பி பிரசுரமானது. பிறகு தபாலில் கலைமகள், கல்கி, மங்கையர் மலர் இவைக்களுக்கு மொத்தம் ஒரு ஐந்தாறு. அவை போய் சேர்ந்ததா என்றே தெரியாது. வெளிநாட்டில் இருந்து அனுப்பும் பொழுது, ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதைத் தெரிந்துக் கொள்ள தபால்தலைகளையும் இணைக்க முடியாது. ஒவ்வொரு முறையும் கவரில் இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டதட்ட நூறு ரூபாய்க்கு தபால்தலை ஒட்டி போஸ்ட் செய்யும் பொழுது தேவையா என்று கேள்வி மின்னி மறையும்.

இலக்கிய இதழில் வந்தவை, வந்தது என்று நண்பர்கள் பார்த்துச் சொன்னதால்தான் தெரியவே வந்தது. இன்று இணைய தொடர்ப்பு வெகு சுலபமாய் இருந்தும், ஒற்றை வரி பிரசுரமாகியுள்ளது என்று தட்டச்சு செய்ய அவர்களால் இயலவில்லை. முதல் முறைமட்டும் மூன்று, நான்கு முறை இங்கிருந்து தொலைப்பேசியில் பேசி, பத்திரிக்கையை சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்ப சொன்னேன். ஆனால் இலக்கியப் பத்திரிக்கையின் இலக்கணம் அது என்று இலக்கிய எழுத்தாளர் ஒருவர் சொன்னார்.

இது கவிதையா என்றே தெரியாமல் எழுதியது. கவிதைதான் என்று இதை எடுத்து ‘தினம் ஒரு கவிதை ‘ யாஹூ குழுவில் எழுத்தாளர் சொக்கன் போட்டிருந்தார். ஞாபகப்படுத்திக் கொண்டு மீண்டும் எழுதியுள்ளேன்.

எழுத்தாளினி

—-

மலைவாசலில் தனிமை வேண்டாம்

விடுதியில் அறை வேண்டாம்

வீட்டிலும் தனி இடம் வேண்டாம்

எனக்கென்று மேஜை, கணிணி வேண்டாம்

கொஞ்ச நேரம் அம்மா என்று அலறாமல்

இருங்கள் அது போதும் எனக்கு!

தோழியர் வலைப்பதிவு

10-10-2004

—-

ramachandranusha@rediffmail.com

Series Navigation

ராமசந்திரன் உஷா

ராமசந்திரன் உஷா