உயிர்த்தெழும் மனிதம்

This entry is part [part not set] of 25 in the series 20010924_Issue

திலகபாமா,சிவகாசி


தனக்குள் விழுங்கி
தளிரச் செய்த மண்ணாய்
துளித்துளியாய் வீழ்ந்து
துடைத்தெடுத்த வானத்தில்
தொலைந்து போகும் மேகமாய்
இதழ் இதழாய் விரிந்து
இதழிதலாய் உதிர்ந்து
காய்ந்து சுருங்கி காய்தனுக்குள்
துளிஉயிர்ப்பாய் சுருங்கிக்
கிடக்கும் விதையாய்
படிப்படியாய்
நூற்றிப்பத்துமாடிகள் உயர்ந்து
உருளச் செய்து கொண்டிருந்த
உலக வர்த்தகத்தை
அலுமினியப்பறவையிரண்டு
வெண்ணைய்க்குள் கத்தியாய்
விழுந்து நுழைந்து
எண்ணைய்க்குள் விழுநெருப்பாய்
எரிந்து உருக்க
கல்கல்லாய் சேர்த்து
உருவான அழகு மானுடம்
புழுதி அலையாய்
சாலைதனில் விரவிக் கிடக்க
மூடிய புழுதியில்
முழுகிக் கிடந்த மனிதம்
சிதறிக் கிடந்தது
சதைதுண்டுகளாகவும்
இரத்தத் துளிகளாகவும்
சாம்பருக்குள்ளிருந்து
பீனிக்ஸ் பறவையாய்
உயிர்த்தெழும் நம்பிக்கையுடன்
சஞ்சீவி பர்வதம்
தூக்கி வந்த அநுமனாய்
மனிதம் உயிர்த்தெழ
சிலுவையில் தவம் கிடக்கும்
சராசரி மனிதர்கள்

Series Navigation

திலகபாமா,சிவகாசி

திலகபாமா,சிவகாசி