‘உயிரோடு தமிழ்கூடும் போது ‘

This entry is part [part not set] of 36 in the series 20030223_Issue

கரு. திருவரசு


இவளோடு எனக்கென்ன உறவு – தமிழ்
மகளோடு இசையாலே நான்சேர்ந்த பிறகு – இவளோடு

உணர்வோடு விளையாட வருகின்றாள் மாது
உயிரோடு கலந்தாடத் தமிழ்கூடும் போது – இவளோடு

குயிலோசை குழலோடு சுகம்பேசும் நாதம்
குழைத்தின்பத் தமிழ்மங்கை இசையூட்டும் போதும்
மயிலோடு மலர்க்கென்றும் எழில்தந்த சாரம்
மணமாலை அணிந்தென்னை அணைக்கின்ற நேரம் – இவளோடு

புலனைந்தும் சுகம்நாடும் பெண்ணின்ப வரவு
புனலாடி நனைந்தாலே மனம்வேண்டும் துறவு
புலன்சோரப் பொறிஓய்ந்தும் உயிர்ப்போடு கலந்து
புதுத்தேனாய்த் தமிழ்மங்கை இனிப்பாளே மணந்து – இவளோடு

thiruv@pc.jaring.my

Series Navigation

கரு.திருவரசு

கரு.திருவரசு