உடைந்த ஜன்னல்களும், நாறும் பாத்ரூமும்

This entry is part [part not set] of 30 in the series 20030125_Issue

சின்னக்கருப்பன்


இளமுருகு எழுதிய கட்டுரைக்கு நன்றி சொல்லவேண்டும். அது பலரைப் பேச வைத்திருக்கிறது. சிங்கப்பூரில் இருக்கும் என் நண்பர் இது பற்றி எனக்கு எழுதிய கடிதத்தில், சிங்கப்பூரில் போடும் அபராதம் போல தமிழ்நாட்டிலும் போட்டால் எல்லாம் ஒழுங்காக சென்னையை சுத்தமாக வைத்திருப்பார்கள் என்று சொன்னார். ஏற்கெனவே போடோவை தவறாக உபயோகப்படுத்தும் மாநிலத்தில், அது இன்னமும் தவறாகத்தான் பயன்படுத்தப்படும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும், அவர் சொன்னது சரி என்றே இந்தக் கட்டுரை வாதாடும். தெருவில் குப்பை போடும், அல்லது மலஜலம் கழிக்கும் ஒவ்வொருவரையும் முட்டிக்கு முட்டி தட்டினால், சென்னை தெரு சுத்தமாக இருக்கும் என்றும், உருப்படியான சுத்தமான பாத்ரூம் வைத்திராத உணவு விடுதிகளுக்கு பெரும் அபராதமும், அவர்களது லைசன்ஸ் ரத்தும் செய்தால் ஒரே மாதத்தில் சென்னை சுத்தமாகி விடும் என்றுமே இந்தக்கட்டுரை.

தமிழகம் சிங்கப்பூர் அல்ல. சிங்கப்பூர் ஒரு நகரம். தமிழ்நாடு ஒரு மாநிலம். இதில் ஏராளம் இருப்பது கிராமங்கள்தான். அங்கு எல்லோரும் உபயோகப்படுத்துவது வயல்வெளிகளைத்தான். ஜெயமோகன் சொல்வது போல, அடிக்கும் வெய்யலுக்கு, சில மணி நேரங்களில் எல்லாம் மக்கிப்போவதால், இந்த வாழ்க்கை முறை நமக்கு பழக்கப்பட்டுப் போய் விட்டது. ஆனால், கிராமத்தில் கற்றுக்கொண்ட வழமுறைகளை, கூட்டுக் கிராமங்கள் போல இருக்கும் இன்றைய நகரங்களிலும் தொடர்வதில் இருக்கும் தவறை யாருமே உணர மாட்டார்கள். அங்கங்கு எக்ஸ்னோரா போன்ற புறநகர் காலனி மக்கள் ஆரம்பிக்கும் சுகாதார அமைப்புகள் கூட அடிப்படை பழக்க வழக்கங்களை மாற்றிவிட முடியாது என்பதற்கு, நகரின் நடு மத்தியில் இருக்கும் ஆயிரம் விளக்குப் பகுதி நாறுவதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

கிராமத்துப் பழக்க வழக்கங்கள் வேறு; நகரத்து பழக்க வழக்கங்கள் வேறு என்று உணரவைக்க வேண்டிய கட்டாயம் இதுவரை வரவில்லை. ஏனெனில் இந்தியா ஒரு மூடிய பொருலாதாரமாக இருந்து வந்தது. இப்போது அப்படியல்ல. இந்திய அளவிலும், உலக அளவிலும் சுற்றுலா பயணிகளும், வியாபார பயணிகளும் வரும் இடங்களாகவும், பெரும் தொழிலகங்களும், மக்கள் சேரும் இடங்களாகவும் ஆகியிருக்கும் இந்த தமிழக நகரங்களில் கிராமத்துப் பழக்க வழக்கங்கள் தமிழ் மக்களைப் பற்றிய தவறான எண்ணத்துக்குத்தான் வழி வகுக்கும், அது பல விதங்களில் தமிழக பொருளாதாரத்தையும், தொழில் முன்னேற்றத்தையும் பாதிக்கும். ஏற்கெனவே பாதித்துக்கொண்டிருக்கிறது. அது நாம் உணரவில்லை என்பதுதான் உண்மை.

***

விஷயத்துக்கு வருவதற்கு முன்னர், நியூயார்க் நகரத்தில் பெருகிய குற்றங்களை எப்படிக் குறைத்தார்கள் என்பது சம்பந்தமான ஒரு புத்தகத்தை அறிமுகம் செய்கிறேன். இதன் பெயர், ‘உடைந்த கண்ணாடி ஜன்னல்களை சரிசெய்வது ‘ (Fixing Broken Windows: Restoring Order and Reducing Crime in Our Communities by George L. Kelling , Catherine M. Coles (Contributor), James Q. Wilson ).

அமெரிக்காவில் நகரங்களும் கிராமங்களும் தோன்றியபோது நம் நாட்டைப் போலவே இருந்தன. நகரங்களும் கிராமங்களும் மிகச் சிறியவையாகவும், மக்கள் நெருங்கியும் வாழ்ந்துவந்தார்கள். அப்போது போலீஸ் அந்தந்த நகரத்து அல்லது கிராமத்து மக்களால் உருவாக்கப்பட்டு அந்த கிராமங்களையும் நகரங்களையும் பாதுகாக்க ஏற்பட்டன. இவர்கள் அந்த பகுதிகளில் நடக்கும் சிறு குற்றங்களையும் (உதாரணமாக, தெருவில் குப்பை போடுவது, கண்ணாடி ஜன்னல்களை உடைத்துவிட்டு ஓடுவது, சுவற்றில் கிறுக்குவது போண்றவை) கண்டித்து சரி செய்யக்கூடியவாறு இருந்ததன் காரணம் அந்தந்த நகரங்களும் கிராமங்களும் அளவில் மிகச்சிறியவையாக இருந்தமையே. நாடு வளர வளர, நகரங்கள் பெருகின. நகரங்களில் வேலை செய்பவர்களுக்காக புறநகர் பகுதிகள் தோன்றின. புறநகர் பகுதிகளில் இருக்கும் வீடுகள் ஒன்றுக்கொன்று தொலை தூரமாக (அண்ணாநகர் முதல்தெரு படம் போல) இருந்தன. இது காவலர்கள் வேலையை கடினமாக்கியது. இதனால் ஒரு மத்திய இடத்தில் போலீசும், ஏதேனும் குற்றம் நடந்தால் அதனை பொதுமக்கள் போலீசுக்குத் தெரிவிக்க வசதியும் (நம் ஊர் 100 அல்லது அமெரிக்காவின் 911 மாதிரி) ஏற்பட்டன. முன்பு குற்றம் நடந்ததும் போலீஸ் குற்றவாளியை பிடிக்கும் வசதி இருந்தது இதனால் மறைந்தது. போலீஸ் வருவதற்குள் குற்றவாளி அந்த இடத்தை விட்டு ஓடியிருப்பான். குற்றவாளியை அடையாளம் சொல்வதும் கடினமானது. அடையாளம் சொன்னால், பின்னால் ஒருமுறை வந்து அடையாளம் சொன்னவரை குற்றவாளி குத்திவிட்டால் என்ன செய்வது என்று மக்கள் பயந்தார்கள். இது காரணமாக குற்றம் பெருகியது. அளவுக்கு மீறி பெருகிய நகரத்தில் குற்றங்களின் எண்ணிக்கையும் பெருகியது. குற்றங்களின் எண்ணிக்கை பெருகப் பெருக, மக்கள் நடமாட்டம் குறைந்தது. மக்கள் புறநகர்களுக்கு செல்ல ஆரம்பித்தார்கள். புறநகர்களிலும் குற்றங்கள் எண்ணிக்கை பெருகின. நகரங்களில் இருக்கும் வியாபாரங்கள் படுத்தன. பல நகரத்து தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால் வேலையிழந்தவர்கள் எண்ணிக்கை பெருகியது. இவர்கள்து வடிகாலாக மேலும் குற்றங்கள் அதிகரித்தன. இதன் நடுவில் அமெரிக்காவில் இந்த பரிசோதனைப் புத்தகம் வெளிவந்தது. இதன் கொள்கையை பரிசோதித்துப் பார்க்கும் முதல் இடமாக நியூயார்க் தேர்வு செய்யப்பட்டது. வெகு விரைவிலேயே குற்றங்கள் குறைந்தன. குற்றங்கள் குறைந்ததால் வியாபாரம் மீண்டும் வர ஆரம்பித்தது. மீண்டும் நகரம் மக்கள் நெருக்கடி மிகுந்த இடமாகவும், வேலை வாய்ப்புகள் உள்ள இடமாகவும் ஆக ஆரம்பித்தது.

இந்த புத்தகம் சொல்லும் கொள்கை என்ன ?

அதுவரை இருந்த கொள்கை, வறுமையே குற்றத்துக்குக் காரணம் என்றும் வறுமை அதிகமாகும் போது குற்றங்களும் அதிகமாகும் என்றும் கூறியது. இந்தப்புத்தகம் அதனைத் தலைகீழாக்கி, குற்றமே வறுமைக்குக் காரணம் என்றும், குற்றங்கள் அதிகமாகும்போது வறுமை அதிகமாகும் என்றும் வாதிட்டது.

இது கூறிய இன்னொரு விஷயம், உடைந்த ஜன்னல்கள் பற்றியது. ஒரு இடத்தில் உடைந்த ஜன்னல்கள் இருக்கும்போது, அது சரி செய்யப்படாமல் இருக்கும்போது, அந்த சுற்றுப்புறத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது என்று ஒரு குற்றவாளி நினைக்கிறான் என்றும், அப்படிப்பட்ட இடத்தில் இன்னொரு குற்றம் செய்தால், அது பல குற்றங்களில் ஒன்றாக காணப்படாமல் மறைந்துவிடும் என்றும் அவன் கருதுகிறான் என்றும், அதனால் அந்த உடைந்த ஜன்னல்கள் இருக்கும் இடங்களில் இன்னும் அதிக குற்றங்கள் நடக்கும் என்றும் கூறுகிறது இந்தப்புத்தகம்.

ஆக, குற்றங்களைக் களையும் வழி, உடைந்த ஜன்னல்களை சரி செய்வதும், ஜன்னலை உடைப்பவர்களை, அதாவது வாழ்க்கைத்தர குற்றங்களைச் செய்பவர்களை உடனே தண்டிக்க வேண்டும் என்றும் ஆலோசனை தெரிவிக்கிறது.

வங்கிக்கொள்ளையர்கைளையும், கொலைகாரர்களையும், வழிப்பறிக் கொள்ளைக்காரர்களையும் விட்டுவிட்டு ஏன் சாதாரண வாழ்க்கைத்தர குற்றங்களான, தெருவில் குப்பை போடுபவர்களையும், ஜன்னலை உடைப்பவர்களையும், வரிசை தாண்டுபவர்களையும் ஏன் தண்டிக்க வேண்டும் என்று பலர் இந்தக் கருத்தை விமர்சித்தார்கள். (இன்னும் விமர்சிக்கிறார்கள்)

ஆனால், இந்த திட்டத்தை அமுலுக்குக் கொண்டுவரும்போது பல விஷயங்கள் தெரிந்தன. வரிசை தாண்டுவதற்காக கைது செய்யப்பட்டவர்களிலும், ஜன்னலை உடைத்ததற்காக கைது செய்யப்பட்டவர்களிலும், டிக்கெட் வாங்காமல் சப்வேயில் பிரயாணம் செய்தவர்களைக் கைது செய்ததிலும் ஏராளமான கொலைக்குற்றவாளிகளும், அரசாங்கத்தால் தேடப்படும் கொள்ளையர்களும் இருந்தார்கள். இது போலீசின் வேலையை சுலபமாக்கியது. ஆகவே நகரத்து தெருக்களை பராமரிக்க ஒவ்வொரு பெரும் தெருவிலும் ஒன்று அல்லது இரண்டு போலீஸ்காரர் என்று கொண்டுவந்தார்கள். முன்பு ஒரு குற்றவாளியை கைது செய்தால் அவரைக் கூட்டிக்கொண்டு போலீஸ் நிலையம் சென்று பதிவு செய்து அடைத்துவிட்டு மீண்டும் அதே இடத்துக்கு வந்துதான் இன்னொருவரை கைது செய்யமுடியும் என்று இருந்ததை மாற்றி, ஒரு ஆளை கைது செய்து அங்கிருக்கும் தூணில் விலங்கு போட்டு வைத்துவிட்டு இன்னொரு ஆளையும் பிடிக்கலாம் என்று கொண்டுவந்தார்கள். ஒரு ஆள் கைது செய்யப்பட்டு தூணில் இருக்கும் காட்சியே பலரை ஒழுங்காக இருக்கும்படி செய்தது.

மக்கிங் என்று சொல்லப்படும் வழிப்பறிக் கொள்ளைகள் மலிந்து இருந்த நியூயார்க் ஒரே வருடத்தில் அமெரிக்காவிலேயே மிகக்குறைந்த பெரும் குற்றங்கள் கொண்டதாக ஆகியது (பெருங்க்குற்றங்கள் என்பது கொலை, கொள்ளை, வழிப்பறி ஆகியவை)

இந்த வழிமுறையை பல அமெரிக்க நகரங்களும் இதன் பின்னே பின்பற்ற ஆரம்பித்தன.

**

சரி தமிழ்நாட்டுக்கு வருகிறேன். தமிழ்நாட்டில் பெருங்குற்றங்கள் மிகக்குறைவு. கொலை நடந்தால், கொள்ளை நடந்தால் உடனே தமிழ்நாட்டு பத்திரிக்கைகளில் வந்துவிடும். அப்படியும் தென்படும் குற்றங்கள் குறைவே. ஆனால் சாலையில் விபத்துகளில் இறப்பவர்களும், உடைந்த ஜன்னல்களும், தெருக்குப்பையும், அசிங்கங்களும் மிக அதிகம். ஆனால் சமீபத்தில் பயங்கரவாதம் சார்ந்த குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. நகரில் இருக்கும் வீடுகளில் கொள்ளைகளும் அதிகரித்துவருகின்றன.

தமிழ்நாட்டில் சாலை விதிகளை பின்பற்றாமல் இருப்பதும், உடைந்த ஜன்னல்களும், தெருக்குப்பையும் அசிங்கங்களும் ஒரு வாழ்க்கைவழி என்று சொன்னால் கூட ஆச்சரியப்படமாட்டேன். அதற்குக் காரணம் பல இருக்கலாம். நம் சாதி, வெயில், காந்தி, கம்யூனிஸ்ட் ஆகிய பலரையும் குற்றம் சொல்லலாம். ஆனால், இந்தப் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்று பேச ஆரம்பித்திருப்பது ஒரு நல்ல அறிகுறி. அதனை தீர்க்க வேண்டியது அரசாங்கமே என்பதே நான் சொல்வது.

எல்லோர் வீட்டிலும் ஒரு பாத்ரூம் இருக்க வேண்டும் என்று நாம் எழுதிவிட்டால் போதாது. அதனை நடைமுறைப்படுத்துவது யார் ? அதனை அரசாங்கம் தான் நடைமுறைப்படுத்த வேண்டும். கிராம வீடுகள் உட்பட எல்லா வீடுகளும் ஒரு வருடத்துக்குள் பாத்ரூம் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று ஒரு சட்டம் போட்டால் நடந்துவிடுமா ? அவனவன் போட்ட நெல் கருகிப் போய்ட்டு இருக்கு, குண்டி கழுவ சட்டம்போடறாங்க என்று எதிர்ப்புதான் வரும்.

ஆகவே, இந்தச் சட்டமும் இன்ன பிற விஷயங்களும் நகரங்களில் மட்டுமே நடைமுறைப் படுத்தக் கூடியவை. நகரத்தில் இருக்கும் குப்பத்து வீடுகள் உட்பட எல்லா வீடுகளிலும் பாத்ரூம் இருக்க வேண்டும் என்று சட்டம் போட்டு அந்தந்த போலீஸால் சரிபார்க்கலாம். ஒரு சமூக பழக்கவழக்கத்தை மாற்றுவது கடுமையான சட்டம் மூலமாகவும் அதனை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதன் மூலமுமே. உதாரணமாக, ஹெல்மெட் போடச்சொல்லி சட்டம் வந்தபோது எத்தனை பேர் எதிர்த்தார்கள் என்று யோசித்துப்பாருங்கள். குப்பை போடுவதும், தெருவில் மலஜலம் கழிப்பது ஆகியவையும் இதுவரை தண்டிக்கப்படாத சமூகக் குற்றங்கள்தான். இதனை எதிர்த்து சட்டங்கள் வேண்டாம் என்று சொல்வது, சாலை விதிகளை மீறுவது எங்கள் உரிமை என்று பேசுவது போலத்தான்.

அடுத்தது, தெருவோரங்களில் குடிசை போட்டு பொதுச்சொத்தை ஆக்கிரமிப்பவர்களை கட்டாயமாக சுத்தம் செய்தே ஆகவேண்டும். பணக்காரர்களோ ஏழைகளோ, யாருக்கும் பொதுச்சொத்தை அபகரிக்க உரிமை கிடையாது. பொதுச்சொத்து என்பது தெருக்களும், சாலைகளும், சாலையோர நடைபாதைகளும் பூங்காக்களும், அரசாங்கப் பொருட்களும் ஆகியவை அனைத்துமே. இவர்கள் கத்துவதும் கொஞ்ச காலத்துக்கே. இதனை அனுமதிக்க முடியாது என்பது மேலிடத்திலிருந்து அரசியல் வைராக்கியமாக வந்தால் ஒழிய சென்னை போன்ற நகரங்களில் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முடியாது. இவர்கள் ஏழைகள் என்று யாரேனும் சொல்லி இவர்களுக்கு வாதாட வருபவர்களைப்பார்த்து பரிதாபம் தான் படமுடியும். என் மருத்துவ நண்பர் வழக்குமன்றத்தில் இவர்கள் மீது வழக்குத்தொடுத்தார். போலீசுக்கு நீதிபதி கடுமையான உத்தரவு போட்டார். அடுத்த நாள் அந்த இடம் சுத்தமாகத்தான் ஆனது. அதன் பின்னே, மஃப்டியில் போலீசும் இன்னும் அந்த இடத்தில் கடை வைத்திருந்தவர்களும் சங்கிலியோடு இவரது வீட்டுக்கு வந்து பயமுறுத்திவிட்டுச் சென்றார்கள். அடுத்த நாள் அதே இடத்தில் அதே கடைகள். இது சென்னை நகர மாஃபியாக்களில் ஒன்று. இதனை சகித்துக்கொள்வதோ, இதற்கு சித்தாந்த முலாம் பூசுவதோ ஆபத்து.

மூன்றாவது, கம்யூனிட்டி சர்வீஸ் என்ற சமூக வேலை என்பதை ஒரு தண்டனையாக அரசாங்கம் அங்கீகரித்து, அந்த தண்டனையை வாழ்க்கைத்தர குற்றங்களுக்கு வழங்க அனுமதி அளிக்க வேண்டும். உதாரணமாக, தவறான திசையில் சாலையில் செல்பவர்கள், தெருவில் குப்பை போடுபவர்கள், அசிங்கம் செய்பவர்கள் ஆகியோருக்கு சமூக வேலை தண்டனையை அளித்து, அவர்களை நகரத்து பூங்காக்கள், தெருக்கள், பொது கக்கூஸ்கள் ஆகியவற்றை தண்டனை நேர அளவுக்கு சுத்தம் செய்ய வைக்க வேண்டும். இதனால், எல்லா ஜாதி மத பேதமின்றி பொதுக்கக்கூஸ்களையும், பூங்காக்களையும், தெருக்களையும் சுத்தம் செய்யும்போது அடுத்த முறை அந்த பூங்காவில் யாரேனும் அசுத்தம் செய்தால் இவர்களே முன்னின்று தடுப்பார்கள்.

இரண்டாவது மூன்றாவது முறை தண்டனை பெறுபவர்களுக்கு சமூகவேலை நேரத்தை அதிகரித்து இவ்வாறு குற்றம் செய்வதை குறைக்கலாம்.

இப்படி நகரத்தில் உருவாகும் சுத்தம் கிராமங்களுக்கு படிப்படியாக செல்லும் என எதிர்பார்க்கலாம்.

இறுதியாக ஒரு வார்த்தை. முட்டிக்கு முட்டி பேர்த்தால் சரியாகப் போய்விடும் என்று ஆரம்பத்தில் எழுதியிருந்தேன். ஆசிரியருக்கு அனுப்பும் முன்னர் படிக்கும் என் நண்பர், ‘ஏன்யா, இன்னும் கொஞ்சம் போய், தெருவில் மூச்சா போனால், அதை வெட்டி விடவேண்டும் என்று எழுதுவதுதானே ‘ என்று என்னைத் திட்டினார். அது சும்மானாச்சிக்கும் எழுதியது. போலீஸ் வன்முறையை ஆதரிப்பவன் அல்ல நான். ஆனால், இந்த சமூக வேலை என்று வழங்கப்படும் தண்டனைகளில் முக்கியமாக, குறைந்தது ஒரு பொதுக் கக்கூஸையாவது தண்டனை பெற்ற ஒருவர் சுத்தம் செய்யவேண்டும் என்று இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அது இந்திய சூழ்நிலையில் எந்த ‘முட்டிக்கு முட்டி தட்டலை ‘ விடவும் கடுமையான தண்டனை. இது ஒரு வருடம் நடந்தால் ஊர், குடும்பம் எல்லாவற்றிலும் இது சம்பந்தமான சாதியம் போவதற்கு ஒரு காரணமாக இருக்கும் என்றும் கருதுகிறேன்.

***

பின்குறிப்பு: என்னை நரேஷ் லிபரல் என்று எழுதியிருந்தார். இதனைப் படித்துவிட்டு என்னை கன்சர்வேடிவ் என்று ஒத்துக்கொள்வார் என நம்புகிறேன்.

***

karuppanchinna@yahoo.com

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்