ஈவேராவின் இதிகாசப் பொய்கள்

This entry is part [part not set] of 28 in the series 20050526_Issue

விஸ்வாமித்ரா


இராமாயணமும், மகாபாரதமும் தமிழ்மக்களிடயே எங்கிருந்தோ ‘ஆரியர் ‘களால் கொண்டுவந்து புகுத்தப்பட்ட பொய்க்கதைகள் அல்ல. ராமகாதை மற்றும் மகாபாரதக் கிளைக்கதைகளும் கூட எப்படி மக்களின் அன்றாட வழக்கிலே புழங்கி வந்தன என்பதற்குச் சான்றுகள் சங்க நூல்களிலேயே நிறைய உள்ளன. அண்மையில் மரபுக்கவிஞர் திரு.ஹரிகிருஷ்ணன் அவர்களின் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில்கூட இதைக் குறிப்பிட்டுப் பேசியதைப் பார்த்தேன். கிழக்கு பதிப்பகத்தார் வெளியீடான அவருடைய ‘அனுமன் ‘ புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் இதை விரிவாய் எழுதியுள்ளார்.

நம் திராவிடஸ்தான் புரட்சிவீரர் ஈ.வே.ராமசாமி நாயக்கர் இந்த இதிகாசங்களைக் குறித்துச் செய்த திரிபுப்பிரச்சாரங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அதை அப்படியே நம்பிக் கொண்டிருக்கும் ஒரு முட்டாள்கூட்டத்தை, அதுவும் நன்றாகத் தமிழ் கற்றதுபோல் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு போலிப்பகுத்தறிவுக் கூட்டத்தை, இணையத்தில் தொடரும் அதன் விஷமப்பிரச்சாரத்தைக் காண நேர்ந்ததால் இதைப் பதிவு செய்கிறேன்.

இனி இராமாயணத்தைக் குறித்து ஈவேரா உதிர்த்த சில முத்துக்கள்:

“இராமாயணம் திராவிட மக்களை இழிவு செய்து ஆரியர்களைத் தெய்வமாக்க உருவானது.” (விடுதலை – 26.1.1943)

அதே ஈவேரா சில வருடங்கள் சென்றபின் சொன்னது:

“இராமாயணம் – வால்மீகி என்கின்ற ஒருவரால் ஆரியர்களை (தேவர்களை) அயோக்கியர்கள், ஒழுக்கமற்றவர்கள், தீயகாரியங்களைச் செய்வதற்குப் பயப்படாத வஞ்சகர்கள் என்பதைக் காட்டவும், திராவிடர்களை (தென் இந்தியர்களை) மெத்த நாகரிகமுள்ள மேன்மக்கள், சூதுவாதறியாத பரிசுத்தமானவர்கள், வீரர்கள் என்பதைக் காட்டவும் சித்தரிக்கப்பட்ட ஒரு கதைத் தொகுப்பாகும்.” (விடுதலை – 17.10.1954)

இந்த முரண்பாட்டைப் பாருங்கள்.

முதலில் இராமாயணம் திராவிட மக்களை இழிவு செய்து ஆரியர்களைத் தெய்வங்களாக்க உருவானது என்று கூறுகிறார். இரண்டாவது, திராவிடர்களை மெத்த நாகரிகமுள்ள மேன்மக்களாகக் காட்ட உருவானது என்று கூறுகிறார். என்ன பிதற்றல் இது!

மேலும் பார்ப்போம்.

“இராமாயணத்தில் தசரதன் தன் தங்கையையே கட்டிக்கொண்டு இருக்கிறான். வால்மீகி மாற்றிவிட்டான். ஆனால் புத்தராமாயணம், சமணராமாயணம் முதலியவைகளைப் பார்த்தால் தெரியும். தசரதனும் கோசலநாட்டு அரசன். கவுசலையும் கோசலநாட்டு அரசன் மகள். அதன் காரணமாகவே கவுசலை அல்லது கோசலை என்று அழைக்கப் பட்டாள். சுமார் 70 வருடம் முன்வரையில் சயாமில் இந்தமுறை அரசகுடும்பத்தில் இருந்து வந்திருக்கிறது.” (விடுதலை – 25.5.1961)

ஈவேராவின் கருத்துப்படி பெளத்தரும், சமணரும் முதலில் சொன்ன இந்த ஆபாசக் கதையை வால்மீகி மாற்றி விட்டான் என்றாகிறது. ஆனால் உண்மை என்னவென்றால் முதலில் தோன்றியது வால்மீகி ராமாயணம்தான்.

ஈவேராவின் இந்த இதிகாசப்பொய்யை வெளிச்சம் போட்டுக்காட்ட ஆசிரியர் ம.வெ. பல இடங்களில் அலைந்து தேடி சமணராமாயணத்தைக் கண்டுபிடித்து எழுதுகிறார்:

எனக்கு புத்தராமாயணம் கிடைக்கவில்லை. ஆனால் சமணராமாயணம் கிடைத்திருக்கிறது. அதில் தசரதன் பெற்றோர் பற்றியும் கவுசலையின் பெற்றோர் பற்றியும் என்ன சொல்லப் பட்டிருக்கிறது தெரியுமா ?

தசரதன் தந்தை அரண்யன்.

கவுசலையின் தந்தை கெளசலன், தாய் அமிருதப்பிரபா.

இதில் எங்குமே ஈவேரா சொல்லும் ஆபாசப் பொய்த்தகவல் இல்லை.

(ஆதாரம்: நூல் – ஜைனராமாயணம், மூலம் ரவிசேனாச்சாரியார், தமிழில் தத்துவமேதை கஜபதி ஜைன், வெளியீடு – ஜைன இளைஞர் மன்றம்)

ஆகவே சமண ராமாயணத்தைப் பார்த்தால் தசரதன் தன் தங்கையையே கட்டிக் கொண்டு இருப்பது தெரியும் என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

மேலும் ‘இராமாயணக்குறிப்புகள் ‘ என்ற நூலில் ஈவேரா அடுக்கியிருக்கும் பொய்கள் ஒன்றிரண்டல்ல.

“பார்ப்பனர்கள்தான் அக்காலத்தில் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என்கிற பெயர்களை வைத்திருந்தனர், நம் திராவிட மக்களைத்தான் ராட்சதர்கள், அரக்கர்கள் என்று பெயரிட்டு அழைத்திருந்தனர்.” (இராமாயணக் குறிப்புகள் – பக்கம்-3)

அதே புத்தகத்தில் மேலும் சொல்வது.

“தேவர்கள், ராட்சதர்கள் என்ற பிரிவினைக்கு விளக்கம் இல்லை.” (பக்கம்-5)

தேவர்கள் தன்மை என்ன ? ராட்சதர்கள் தன்மை என்ன ? மனிதர்கள் தன்மை என்ன ? மிருகங்கள், பட்சிகள் தன்மை என்ன ? இவையெல்லாம் இராமாயணத்தில் வரையறுக்கப் படவில்லை.” (பக்கம்-5)

தேவர்கள், ராட்சதர்கள் என்ற பிரிவினைக்கு விளக்கமே இல்லை என்கையில், பொதுவில் திராவிட மக்களைத்தான் அரக்கர்கள் என்று பெயரிட்டு அழைத்தனர் என்று எப்படிச் சொல்ல முடியும் ? இது ஈவேராவின் கண்டுபிடிப்பே அல்லாமல் வேறில்லை.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ‘இலக்கியம் மொழி கலை குறித்த பெரியாரின் சிந்தனைகள் – ஒரு மதிப்பீடு ‘ என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வேட்டில் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் இராமாயணம் பற்றிய ஆராய்ச்சி எவ்வளவு உண்மையில்லாதது என்று விளக்குகிறார்.

முனைவர் ப.கமலக்கண்ணன் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.

ஃ பல்வேறு மொழிகளில் பல்வேறு புலவர்களால் எழுதப்பட்ட இந்த இராமாயணத்தைப் பற்றிப் பெரியார் அதிகமாகக் கருத்துகள் கூறியிருந்தாலும் மேலோட்டமான ஆய்வாகவே இருக்கிறது.

ஃ பெரியார் பேச்சுவழக்கில் சில கருத்துக்களை மக்களுக்கு எடுத்து வைத்தவைகளை, ‘இராமாயணப் பாத்திரங்கள் ‘ என்ற தலைப்பில் (திக வெளியீடு) தொகுக்கப்பட்ட இந்த நூலில் இராமனைப் பற்றியும் ‘ இராவணைப் பற்றியும் கூறுகின்ற கருத்துக்கள் முன்னுக்குப்பின் முரணாகவே உள்ளன.

ஃ ‘இராவணன் மகா கல்விமான், வேதசாஸ்திர விற்பன்னன், தைரியசாலி, மிகுந்த பக்திமான், அநேக வரங்களைப் பெற்றவன் ‘ என்று கூறும் பெரியார், இராவணனின் செயல்கள் தமது கொள்கைகளுக்கு முரணாக உள்ளதைக் கண்டு கொள்ளவில்லை. இராவணன் ஒரு திராவிடன் என்று கூறிவிட்டு இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், நிறைகளை மட்டும் உயர்த்திக் காட்டித் தமது ஒரு சார்பான நிலையைக் காட்டுகிறார்.

ஃ இராவணனை இடித்துரைக்கின்ற காரணத்தாலேயே அப்பாத்திரத்தைப் பற்றிப் பெரியார் கண்டு கொள்ளவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. பெரியார் அடிப்படையில் ஓர் ஆராய்ச்சியாளர் அல்லர்.

ஃ வசிட்டன் என்றால் இந்திரியங்களை வென்றவன் என்று பொருள். இவன் சூரியகுல அரசர்க்குக் குருவும் மந்திரியும் ஆகின்றவன் என்ற குறிப்பும் உள்ளது. ஆனால் வசிட்டரைப் பெரியார், புரோகிதன் என்ற முறையிலேயே காண்கிறார். இராமாயணத்திலே இவர் பிரமனை நிகர்த்தவர் என்று அறிமுகப்படுத்தப் படுகிறார். இருந்தாலும் இவர் வைத்த முகூர்த்த நேரம் சரியில்லாததால் இராமன் வனவாசம் போக நேர்ந்தது என்று பெரியார் கருதுகிறார். இந்தக் கருத்து பகுத்தறிவாளரான பெரியாரின் கொள்கைகளுக்கு முரண்பாடாக இருக்கிறது. சடங்கு, சோதிடம் முதலியவற்றில் நம்பிக்கை இல்லாத பெரியார், வசிட்டர் குறித்த நேரம் சரியில்லை என்று கூறுகிறார். வசிட்டர் ஆரியர் என்று பெரியார் கருதியதால் இந்தக் கருத்து நடுநிலை தவறி விட்டதாகவே எண்ணலாம்.

ஃ இராமாயணக் கதையின் தோற்றமும் அதன் காரணங்களும் ஆபாசக் களஞ்சியமாக இருக்கிறது என்று அடிப்படை அற்ற ஒரு காரணத்தை எடுத்துரைக்கிறார்.

ஃ எண்ணற்ற பண்புகளைக் கொண்ட இலக்குவனிடம் குறைகளோடு நிறைகளும் உண்டு என்பதைப் பெரியார் ஒப்புக் கொள்வதாகத் தெரியவில்லை.

ஃ இவரது கருத்துக்களில் பெரும்பாலும் அடிப்படைச் சான்றுகளே இல்லாத ஒரு நிலையைக் காண முடிகிறது. ஆராய்ச்சிக்கு அடிப்படையான வரையறை இல்லாமல் மேலோட்டமாகவே அமைந்துள்ளது.

இதற்கு மேலும் ‘தந்தை பெரியாரின் சில சொந்தக் குழந்தைகள் ‘ செய்துவரும் விஷமப்பிரச்சாரத்துக்கு பதில் சொல்ல ஏதுமில்லை.

குறிப்புகள் தந்துதவிய தலித் அறிஞர் ம.வெங்கடேசனுக்கு மீண்டும் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக

**

Series Navigation

விஸ்வாமித்திரா

விஸ்வாமித்திரா