ஈழத்தில் சமாதானம்

This entry is part [part not set] of 30 in the series 20020302_Issue

மதுரபாரதி


அந்த ஒளிக்கீற்று
மின்னலா, உதயமேதானா ?

நள்ளிரவுக் கதவுத்தட்டல்களில்
வெளிப்போந்து
வாராமல் மறைந்தவர் எத்தனை பேர்.

ஆனாலும் கண்களின் கதவைத்
திறந்து வைத்துக்கொண்டு
வருவார் வருவார் என
நம்பிக்கையே விளக்காகக் காத்திருக்கும்
தாய்மார், மனைவிமார் எத்தனை பேர்.

புதைத்த கண்ணிவெடிகள் உயிர்பெற்றபோது
எத்தனை உயிர்கள் புதைந்தன.

வெடிப்பதுதான் நின்றிருக்கிறதா,
போரேவா ?

எழுதுகோல் ஏந்தித் திருவாசகமும் திரிகோணமிதியும்
கற்கவேண்டிய சிறாரின் கைகளில் தானியங்கி
விமானம் வீழ்த்தும் துப்பாக்கிகள்.

என் செல்வங்களே வாருங்கள்,
வாழ்க்கையை மீண்டும் துவக்க
அவகாசம் உண்டு.

என் தாய்மார்களே
வற்றிப் போனது கண்ணீர்தான்
முலைப்பால் மீண்டும் சுரக்கும்.

நம்பிக்கையின் வெள்ளம் பாய்ந்து
மீண்டும் துளிர்க்கவேண்டும் மனிதம்.

அடுத்த முறை இரவில்
கதவு தட்டப்படும்போது
தாழ் திறக்கக் கைநடுங்கும்
பழகிப்போன அச்சத்தினால்.

திறவுங்கள்,
தட்டுவது அமைதித் தேவதையாகவும் இருக்கலாம்.

——-

madhurabarathi@yahoo.com

Series Navigation

மதுரபாரதி

மதுரபாரதி