ஈரோட்டுப் பாதை சரியா ? – 1

This entry is part [part not set] of 52 in the series 20040513_Issue

ப. ஜீவானந்தம்


‘கண் முன்னால் கிழக்கு வெளுத்துவிட்டது! கதிரவன் எழுந்துவிட்டான்! புதிய ஒளி எங்கும் பரவிவிட்டது! சுயமாரியாதைக் கோட்டத்தில் மட்டும்தானா, இல்லை தமிழகம் முழுவதுமே புரட்சி மனப்பான்மை பொங்கித் ததும்புகிறது. நாடெங்கும் புதுநாதம் ஒலிக்கிறது. தென்றல் வீசுகிறது. ஒவ்வொரு துறைகளிலும் மறுமலர்ச்சி தேவை என்ற துடிதுடிப்பு காணப்படுகிறது. எப்படி ஏற்பட்டது இந்த புதிய நிலை ? யாரால் விளைந்தது இது ? இந்தக் கேள்விகளுக்கு ஒரு பதில் ‘ஈரோட்டுப் பாதை ‘. ‘ ( ‘ஈரோட்டுப் பாதை ‘ என்ற சிறுநூலில் இருந்து).

‘உண்மையான பொது உடைமைத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு (நல்ல வைத்தியன் நோய்க்கு ஏற்றபடி, அவனவன் உடற்கூறுக்கு ஏற்றபடி மருந்து கொடுப்பது போல) திராவிட நாட்டிற்கு ஏற்றவிதமாக கம்யூனிஸம் என்ற உயர்மருந்தை நோயாளிக்குக் கொடுத்துவரும் இயக்கம் திராவிட கழகம் ஒன்றேதான் என்பதையும், மனப்பாடஞ் செய்த பாடல்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு மருந்து கொடுக்கும் சில நாட்டு வைத்தியர்களைப் போலில்லாமல் நோயின் முதிர்ச்சியையும் கண்டறிந்து முதிர்ந்த அனுபவத்தை ஒட்டி, மருந்து கொடுத்துவரும் இயக்கம் இது ஒன்றேதான் என்பதையும் நன்றாக உணர்ந்துள்ள பொதுமக்கள் இந்தப் புதிய விஷமப் பிரசாரத்தினால் ஏமாந்துவிட மாட்டார்கள் என்பது நமக்குத் தெரியும். ‘ ( ‘விடுதலை ‘ தலையங்கம் 20-10-47)

‘தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சிக்கு சுயபுத்தியில்லை. ‘ ( ‘விடுதலை ‘ தலையங்கம் 4-8-47)

‘ஆம்! பெரியார் அவர்கள் கூறுவதே திராவிடர்களின் முடிவு ‘. ( ‘விடுதலை ‘ தலையங்கம் 9-8-47)

20 ஆண்டுகளுக்கு மேலாகவே, ஈரோட்டுப் ‘பெரியார் ‘ ஈ.வெ.ரா. தமிழர்களுக்கும் ‘திராவிடர்களுக்கும் ‘ காட்டிய, காட்டுகிற பாதைதான் ஈரோட்டுப் பாதை.

‘நம்முடைய இருபது ஆண்டுப் பயணம் வீணாகவில்லை. நாம் தொடங்கிய காரியம் எதுவும் வெற்றி தராமல் போனதுமில்லை. பல போராட்டங்களில் எதிர்பார்த்ததற்குமேல் பலனடைந்தும் இருக்கிறோஒம். நம்முடைய பாதையோ ஆபத்துகள் செறிந்தது – ஆனால், இலட்சியத்தை நிறைவேற்றுவது ‘ என்று ‘ஈரோட்டுப் பாதை ‘யின் ஆசிரியரான ‘இளைஞர் ‘ கூறுகிறார்.

இவரைப் போன்று ஈரோட்டுப் பாதைதான் தமிழ் மக்களின் லட்சியபுரியை அடையச் சிறந்த பாதை என்று நம்பி, அதன் வழிச் செல்கிற இளைஞர்கள் தமிழ்நாட்டில் பலர். ஸ்தாபன ரீதியான தொழிலாளர்களிலும் ஒரு சிறு பகுதியார் மேற்படி கருத்தைத் தழுவி நிற்கிறார்கள். ஆரம்ப ஆசிரியரகளிடையிலும், தமிழாசிரியர்களிடையிலும் மாணவர்களிடையிலும் இந்தக் கருத்து குறிப்பிடத்தக்க அளவு காணப்படுகிறது.

ஈரோட்டுப் பாதையில் செல்வோரில் சிறுபாலோர் இந்தி-எதிர்ப்புக் கிளர்ச்சியின் மூலமும் பெரும்பாலோர் திராவிட கழகத்தின் மூலமும் வந்தவர்களே.

யுத்த கால முடிவிலும் அதன் பின்னாலும் நாடு முழுவதும் கரை புரண்டோடிய புதிய சக்தி, திராவிடக் கழக வாய்க்காலிலும் பாய்ந்தது. விடுதலை ஆர்வம், தமிழ்ப்பற்று, இனஎழுச்சி, புதுவாழ்வு நாட்டம், புரட்சி உணர்ச்சி, பொதுவுடைமைக் காதல் இவைகளுக்கு உள்ளத்தைப் பறிகொடுத்த இளைஞர்களில் அநேகர், பொதுவுடைமைப் பேச்சு, ஜாதிமத ஒழிப்புக் கிளர்ச்சி, திராவிட நாட்டுப் பிரிவினை, இவை குறித்து ஈ.வெ.ரா., அண்ணாத்துரை ஆகிய திராவிடக் கழகத் தலைவர்கள், ஆற்றிய சொற்பொழிவுகள், தீட்டிய கட்டுரைகள் ஆகியவற்றில் சொக்கி திராவிடக் கழகத்தில் குவிந்தார்கள். அவர்களுக்கு ஈரோட்டுப் பாதையைப் பற்றிய சரித்திர அனுபவமும் இல்லை. பல கோணங்களிலிருந்து அதனை ஆராய்ச்சி செய்ய முடிகிறதும் இல்லை.

ஈரோட்டுப் பாதையைப் பற்றி இதுவரையில் தமிழ் மக்களுக்கு மக்கள் கண்ணோட்டத்தோடு செய்யப்பட்ட விமர்சனம் கிடைத்ததில்லை. இன்றைய தமிழ் மக்களுக்கு ஈரோட்டுப் பாதையையும், இருபதாண்டு சரித்திரத்தையும், சுருக்கமாகக் கூறவும், ஈரோட்டுப் பாதைக்கும், கம்யூனிஸ்ட் பாதைக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை விளக்கிக் காட்டவும், இக்கட்டுரை முயற்சிக்கும்.

ஈரோட்டுப் பாதையின் இருபதாண்டுகள்: இன்று ஈரோட்டுப் பாதை திராவிடக் கழகம் என்று அழைக்கப்படுகிறது. ஆரம்பித்த பொழுது அதற்கு இந்தப் பெயரில்லை. கூடுவிட்டுக் கூடு பாய்வதுபோல் பல பெயர்களைத் தாங்கி ஈரோட்டுப் பாதை இருபதாண்டுகளைக் கழித்திருக்கிறது.

பார்ப்பனரல்லாதார் இயக்கம், சமூக சீர்திருத்த இயக்கம், சுயமரியாதை இயக்கம், பகுத்தறிவு இயக்கம், சமதர்ம நாஸ்திக இயக்கம், தமிழர் இயக்கம், திராவிடர் இயக்கம் என்ற பல பெயர்களோடு பாதை காட்டி வந்திருக்கிறார், தன்னைப் பின்பற்றிய தமிழ் மக்களுக்கு ஈரோட்டுப் பெரியார்.

பார்ப்பனரல்லாதார் இயக்கம்: ஈ.வெ.ரா. காங்கிரஸ் தலைவராக காட்சியளித்த காலத்தில் பரம காந்தி பக்தர். காந்தீயக் குட்டையில் ஊறிய மட்டை. அந்த ஒத்துழையாமைக் காலத்திலும், காந்தீயத் தலைமையில் நம்பிக்கையற்ற பலதீவிரவாதிகள் காங்கிரஸில் இருந்தனர். ஹஸரத் மோகினி, டாங்கே போன்றவர்களும், வங்காளம், பஞ்சாப் மாகாணங்களிலிருந்து அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியில் இடம் பெற்றிருந்த புரட்சித் தலைவர்களூம் தேசீய இயக்கத்தை முன்னேற்ற வேண்டி, காந்தீயத் தலைமையைப் புரட்சிக்கண்ணோடு குறை கூறினர். அப்பொழுது ஈ.வெ.ரா. முற்போக்குவாதியல்ல. காந்தி பக்தராக இருந்து தீவிரவாதிகளை எதிர்த்து வந்தார்.

அன்று தமிழ்நாட்டில் ராஜாஜியின் பரமானந்த சிஷ்யர் நாய்க்கர். ‘ஜஸ்டிஸ் கட்சி ‘யை அதன் ஆரம்பமுதலே ‘தேசீயத்திற்கு விரோதமான வகுப்புவாத பிளேக் ‘ என்று கடுமையாக அந்நாளில் எதிர்த்துவந்த முதலியார், நாயுடு, நாய்க்கர் ஆகிய முப்பெரும் பார்ப்பனரல்லாத தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவர்களில் நாய்க்கருக்கே முதல் தாம்பூலம் வைக்க வைக்கலாம்.

அத்தகைய நாய்க்கர் 1925ல் காஞ்சீபுரத்தில் நடந்த தமிழ் மாகாண மகாநாட்டின்போது காங்கிரஸை விட்டு வெளியேறினார். வெளியேறும்போது ‘காங்கிரஸ் மகாசபையில் பார்ப்பனரல்லாதார் நன்மையடைய முடியாது. காங்கிரஸை ஒழிப்பதே இனி எனது வேலை ‘ என்று ஒரு போடு பொட்டு வெளியேறினார்.

காங்கிரஸ், அரசியல் ஸ்தாபனம். காங்கிரஸ், ஜாதி, மத, வகுப்புவாதமற்ற அரசியல் ஸ்தாபனம். காங்கிரஸ், ஏகாதிபத்திய எதிர்ப்பு ஸ்தாபனம். காங்கிரஸ், விடுதலை ஆர்வம் உள்ள பொதுமக்களை வரவர வசீகரிக்கும் முற்போக்கு தேசியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்தாபனம். இவ்வாறு காங்கிரஸ் ஸ்தாபனத்தை மதிப்பிட்டார்கள் அன்றைய அரசியல் தீவிரவாதிகள். காங்கிரஸிலிருந்த பிற்போக்குத் தலைமையை, பிற்போக்குத் திட்டங்களை கண்டித்து அம்பலப்படுத்தினார்கள். காங்கிரஸ் பிரதிநிதித்துவப்படுத்திய தேசீய இயக்கத்தை புரட்சிகரமாக வளர்க்க முழுமூச்சுடன் பாடுபட்டார்கள்.

காங்கிரஸில் படர்ந்த அரசியல் பிற்போக்கை தீவிரவாதிகள் திருத்த கச்சை கட்டினார்களே ஒழிய, காங்கிரஸ் ஸ்தாபனத்தையே வெறுத்து விலகிப்போக விரும்பினார்கள் இல்லை. ஆனால், ஈ.வெ.ரா.வோ வகுப்புவாதச் சகதியை அள்ளி காங்கிறஸின் முகத்தில் எறிந்துவிட்டு, தேசீய ஸ்தாபனத்தைத் துறந்தார். அரசியல் பார்ப்பனர்களிடம் அவருக்கேற்பட்ட ஆத்திரத்தின் பலனை, அவரிடம் பொங்கி எழுந்த வெறுப்பின் வேகம், அவரை தேர்வடம் போட்டு இழுத்து, காங்கிரஸீக்கு வெளியே வெகுதூரம் கொண்டு போயிற்று. காங்கிரஸின் மேல்தட்டில் கண்டி தேசீயத்திற்கு விரோதமான ஜாதி ஆணவத்தை சம்மடி அடி கொடுத்து உடைத்தெறியும் நன்முயற்சியில் ஈடுபடுவதற்குப் பதிலாக காங்கிரஸையே அடியோடு அழித்துவிடுவேன் என்ற அடாத துவேஷ அம்டுவில் தள்ளிற்று.

1924ல் கான்பூர் கம்யூனிஸ்ட் சதிவழக்கு நடந்தது. தமிழ்நாட்டு சிங்காரவேலு செட்டியார் அதில் சம்பந்தப்பட்டவர். ஈ.வெ.ரா. அன்று மாறுதல் வேண்டாதார்.

குருகுலப் போராட்டம்:

1926ல் தமிழ்நாட்டையே குலுக்கி ஆட்டிய சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் ஏற்பட்டது. காற்றுள்ளபோதே தூற்றிக் கொண்டார் ஈ.வெ.ரா. பக்குவம் கெடுவதற்கு முன்னால், சந்தர்ப்பத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, காங்கிரஸ் – தமிழர் இளைஞர்களுக்கிடையே பிராமண எதிர்ப்பு விதையை தாராளமாக விதைக்கத் தொடங்கினார். தருணம் கிடைக்கும்பொழுதெல்லாம் காங்கிரஸைத் தாக்க தயங்கியது இல்லை. மயங்கியதும் இல்லை அவர்.

பிராமணீய எதிர்ப்பின் வேகம் ஏற ஏற, ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள், ஈ.வெ.ரா.வுக்கு ஞானாசிரியர்களாகக் காட்சியளித்தார்கள். அரசியல் பார்ப்பனர்களை ஒருபோதும் நம்பாதே என்ற சர்.பி.தியாகராஜ செட்டியாரின் வாக்கு, வேதவாக்காக ஒலித்தது ஈ.வெ.ரா.வுக்கு. ‘பார்ப்பனர்கள் வகுப்புவாதிகள் ‘ என்ற வகுப்புவாத மோஹினி, ஈ.வெ.ராவின் இதயபீடத்தில் ஏறிச் செம்மையாக உட்கார்ந்து கொண்டது. அரசியல் பார்ப்பனர்களைச் சாக்காக வைத்து காங்கிரஸ் ஸ்தாபனத்தின்மீது ஓய்வு ஒழிவு இன்றிச் சொல்லம்பு தொடுத்து வந்தார்.

1926ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி படுதோல்வியடைந்தது. மண் கவ்வி விழுந்த ஜஸ்டிஸ் கட்சி, ஈ.வெ.ரா.வின் கைத்தாங்கலில் எழுந்து புத்துயிர் பெற்று மீண்டும் தேர்தலில் காங்கிரஸை முறியடிக்க விரும்பிற்று. ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் ஈ.வே.ராவை வளைத்துக்கொள்ள முயன்றனர். காங்கிரஸை பழிவாங்கும்வெறி, ஈ.வெ.ராவை ஜஸ்டிஸ் கட்சிக்குத் தூணாக்கிற்று.

மதுரையில் 1926 டிசம்பரில் நடந்த பார்ப்பனரல்லாதார் மாநாட்டில் (ஜஸ்டிஸ் கட்சி மகாநாட்டில்) ஈ.வெ.ரா. பங்கெடுத்துக் கொண்டார். அம்மாநாட்டிற்கு வ.உ.சி., ஜார்ஜ் ஜோசப் போன்ற தேசபக்தர்கள் அழைக்கப்பட்டார்கள். கதர் ஆதரிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேசபக்தர்களையும் கதரையும் காட்டி தேசீய உணர்ச்சி கொண்ட பார்ப்பனரல்லாத இளைஞர்களை ஜஸ்டிஸ் கட்சியின் பக்கம் இழுத்துவிடலாமென்று சூழ்ச்சி செய்தனர். ஈ.வெ.ராவின் தூண்டுதலே இதற்குக் காரணம். பதவி மோகிகளான ஜஸ்டிஸ் கட்சியின் ஜரிகைத் தலைப்பாகைகள் மக்களை ஏய்க்க கதர் வேஷம் போட்டன.

அப்பால் தமிழ்நாடு முழுவதும் பார்ப்பனரல்லாதார் மகாநாடுகள் நடந்தன. அவைகளிலெல்லாம் ஈ.வெ.ராவின் சொற்பெருக்குகள் நிகழ்ந்தன.

இந்த காலத்தில்தான் ஏகாதிபத்திய அடிமை நாவலர் ஏ.ராமசாமி முதலியார் ஈ.வெ.ராவை தமிழ்நாட்டு ரூஸோ (பிரெஞ்சுப் புரட்சிக்கு முக்கியமான காரணஸ்தன்) என்று, வாயாரப் பாராட்டினார். இந்த பாராட்டு, ஈ.வெ.ரா. ஜஸ்டிஸ் கட்சிக்கு செய்த சேவைக்கு சன்மானம்.

சீர்திருத்த இயக்கம்: பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை வலுப்படுத்த, சமூக சீர்திருத்தப் பிரசாரம் மிக அவசியம் என்பதை உணர்ந்தார் ஈ.வெ.ரா. ஜாதி எதிர்ப்பு, சடங்குகள் எதிர்ப்பு, புரோகித மறுப்பு, பிரசார சண்டமாருதம் தமிழ்நாடு பூராவும் நடைபெற்றன. தாழ்த்தப்பட்ட, பார்ப்பனரல்லாத ஜனத்திரளை தன்வழிக்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு இழுக்க முடிந்தது ஈ.வெ.ரா.வால்.

சென்னையில் ‘நால்வர் சந்திப்பு ‘ நடந்தது. (1-8-27) அடுத்தவார குடியரசில் வெளியான பிராமணீய சடங்கை விலக்கியவர் பட்டியலில் ஈ.வெ.ரா., திரு.வி.க., டாக்டர் நாயுடு, ஆர்.கே. ஷண்முகம் ஆகிய நால்வரின் பெயர்களும் முன்வரிசையில் இடம் பெற்றன. இவ்வாறு காங்கிரஸ்காரர்களோடு இணைந்து, சமூகச் சீர்திருத்தத்திற்கு ஆதரவு தேடுவதாகக் காட்டி, காங்கிரஸ் ஒழிப்பு வேலைக்கு மறைமுகமாக பணம் திரட்ட முனைந்தார். ஈ.வெ.ரா.

1927ல் கோவையில் நடந்த ஜஸ்டிஸ் கட்சியின் விசேஷ மகாநாட்டுக்கு ஈ.வெ.ராவின் தூண்டுதலினால், திரு.வி.க., டாக்டர் நாயுடு, ஷண்முகம் செட்டியார், சுரேந்திரநாத் ஆச்சாரியா ஆகியோர் அழைக்கப்பட்டார்கள். ஜஸ்டிஸ் கட்சியார் காங்கிரஸில் சேர்ந்து காங்கிரஸைக் கைப்பற்ற வேண்டுமென்று அவர்கள் யோசனை கூறினர். ஆனால், அந்த யோசனையை ஈ.வெ.ரா. பெரும்திரளான ஜஸ்டிஸ் கட்சியோடு சேர்ந்து எதிர்த்தார்.

1927ல் காந்திஜியோடு வருணாஸ்ரம தர்மத்தைப்பற்றி, ஈ.வெ.ரா.வும் எஸ்.ராமனாதனும் விவாதித்தனர். விவாதத்திற்குப் பின்னால் ‘மூன்று காரியங்கள் முடிவு பெறாமல் நமது நாட்டிற்கு விடுதலை இல்லை ‘ என்று குடியரசில் எழுதினார். அவையாவன:

1. காங்கிரஸ் ஒழிப்பு, 2. இந்துமத ஒழிப்பு, 3. பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு.

மேற்படி நோக்கங்களுக்கு தக்கபடி ஈ.வெ.ரா. தனது சித்தாந்தத்தை உருவாக்கினார். ‘நாம் முதலில் சுயமரியாதை அடைந்தால்தான் அரசியல் உரிமை பெறத் தகுதியுடையவராவோம் ‘ என்றார். ‘சுயமரியாதை முதலில் அரசியல் விடுதலை பிறகே ‘ என்பதுதான் அந்த சித்தாந்தம்.

(தொடரும்…)

Series Navigation