இவர்களது எழுத்துமுறை -10 வண்ணநிலவன்

This entry is part [part not set] of 41 in the series 20101010_Issue

வே.சபாநாயகம்.


1. உங்களது இலக்கியக் கொள்கை என்ன?

இலக்கியம் என்பது ரசனைதான். எல்லோராலும் ரசிக்கப்படுவதால், எல்லோருக்கும் பிடித்திருப்பதால் கலை வாழ்கிறது. சாதிப்பிரச்சினையை வைத்து ஒரு கதை எழுதினேன். அந்தப் பிரச்சினை என்னைப் பாதித்தது எழுதினேன். அவ்வளவுதான் கலையில் முடியும். அதிர்ஷ்டவசமாய் கலையில் தீர்வு இருக்கலாம். எனக்கு முக்கியமானது கலைதான்.

2. உங்களை வெளி உலகுக்கு பிரபலப்படுத்திய ‘கடல்புரத்தில்’ அச்சில் வந்தபோது உங்கள் மனநிலை என்னவாக இருந்தது?

என்னைப் பொறுத்தவரை எதுவுமே பாதிக்கல. எனக்கு எல்லாமே ரொம்ப சாதாரணமாகத்தான் படுது.
ஏதோ நாம ரொம்ப சாதாரணமா செஞ்சா எல்லோரும் இப்படி பிரமாதமா இருக்குன்னு சொல்றாங்களேன்னுதான்
எனக்கு ரொம்ப ஆச்சரியம் ஏற்பட்டது. மகிழ்ச்சியோ, கர்வமோ, அகந்தையோ எனக்கு ஏற்படல.

3. இது தன்னடக்கமா?

நல்ல எழுத்து எது என்று எனக்குத் தெரியும். என்னைவிட பிரமாதமாய் எழுதுபவர்கள் இருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். நான் எழுதிய எழுத்துக்கள் எனக்குத் திருப்தியா இல்லை. என்னை விடவும் பிரமாதமான எழுத்துக்களைப் பார்க்கும்போது நான் அதற்கு அருகே இல்லை. என் நல்ல எழுத்தை இனிமேல்தான் எழுத வேண்டும். அது முடியுமான்னு தெரியல.

4. உங்கள் படைப்புகளில் குறிப்பாக கடல்புரத்தில் மற்றும் ரெயினீஸ் அய்யர் தெரு நாவல்களில் தகாத உறவு அதிகம் இருக்கிறதே? இது உங்கள் வயதின் மனோ நிலையா?

நான் கண்ட, கேட்ட விஷயங்களைத்தான் கதைகளில் சொல்லி இருக்கிறேன். இவை அல்லாத விஷயங்களும் நிறைய இருக்கின்றன.

5. புதுமைப்பித்தனைப் போல் என் சிறுகதைகளிலும் நாவல்களிலும் நிறைய பரிசோதனை முயற்சிகளைச் செய்திருக்கிறேன். ஒன்றை மாதிரி ஒன்றை நான் எழுதுவதே இல்லை. இந்த என் பரிசோதனை முயற்சி ஒருவேளை வாசகனை எட்டாமல் போயிருக்கலாம். என் தாமிரபரணிக் கதைகளைப் பார்த்தால் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு முகத்தோடு இருக்கும். நான் எல்லாக் கதைகளையும் ஒரே மாதிரி, ஒரே குரலில் சொல்வதில்லை. நான் எந்தப் பாத்திரத்தை அமைக்கிறேனோ அதன் குரலில்தான் பேசுகிறேன்.எனது குரல் வேறு வேறு விதமாய் இருக்கும். என் ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு ட்யூன் மாதிரி பார்க்கிறேன். என் நாவலுக்கும் இது பொருந்தும். இதற்கு மத்தியிலும் வண்ணநிலவன் பார்க்கும் பார்வை, இது வண்ணநிலவனின் கோணம் என்பது இருக்கும். விதம் விதமாய், நவம்நவமாய் நான் சொல்ல நினைப்பதை வேண்டுமானால் என் தனித்துவம் என்று சொல்லலாம். காதலையும் வறுமையையும் மட்டும் நான் எழுதவில்லை.

6. எனக்கு எழுத்து எப்போதுமே தாகம் அல்ல. எதோ தோணிச்சி எழுதினேன். இலக்கியத்தை மேலெழுந்த வாரியாகச் செய்ய இஷ்டமில்லை. எதையாவது எழுதுவது என்று நான் எழுதுவதில்லை. என் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்றோ வாராவாராம் என் பெயர் பத்திரிகையில் வரணும்னோ, என் நோக்கம் கிடையாது. பொறக்கும் போது பேனாவோடா பொறந்தேன்? சாகும்தன்னியும் எழுதிக்கிட்டே இருக்கணும்கிற சங்கல்பமும் இல்லை. 0

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்