இரு தலைக் கொள்ளி எறும்புகள்!

This entry is part [part not set] of 39 in the series 20030925_Issue

ஜோதிர்லதா கிரிஜா


ஆணும் பெண்ணும் ஒருவர்க் கொருவர் அனுசரித் தாலது குடும்பம்

வீணாய்ச் சண்டை வாதம் செய்தால் விளையும் அதிலே பூகம்பம்!

பத்துத் திங்கள் சுமந்த கதையை பீத்திப் பிதற்றும் பெண்ணினமே! – பதி

னெட்டு மாதம் குட்டியை யானை சுமப்பதை எண்ணிடு இக்கணமே!

இன்னொரு பெண்ணை மருமக ளாக்கிக் கொண்டவள் நேற்றைய மருமகளே – இதை

என்றும் நினைவில் வைத்திருந் தாலவள் உண்மையி லேஒரு பெருமகளே!

‘மங்கையொ ருத்தி மருமக ளாக நமக்கும் ஒருநாள் வந்திடுவாள் – அவள்

தன்கை ஓங்கிட வாதிடு வாள், தாங்கா எரிச்சல் தந்திடு வாள்’ என்பதை எண்ணிப் பார்த்திட் டால் இன்றைய மருமகள் திருந்
திடுவாள்; இங்கிதம் காட்டி மாமிய வள் அன்பை உடனே அடைந்திடுவாள்!

தாரம் ஒருபுறம் தட்டுகிறாள்! தாயோ மறுபுறம் மொத்துகிறாள்!

பாவம்! இவர்துயர் தீர்த் திடவே தாயும் தாரமும் திருந் திடுவீர்!

இருதலைக்கொள்ளி எறும்புகளாய் இம்சைக் குட்படும் இளைஞர்களே!

இருவரும் புரியும் தவறுகளை இதமாய் எடுத்துச் சொல்லுங்களேன்!

தாயோ, தாரமோ ஒருபுற மாய்ச் சாயா திருந்து பாருங்க ளேன்!

ஞாயம் யார்புறம் நன் குளதோ நாளும் அவர் பால் சாருங்க ளேன்!

ஓயாப் போரும் ஓய்ந்து விடும்! உண்மை இதுதான் கேளுங்க ளேன்!

காயம் படாத மனத்துடனே காலம் முழுதும் வாழுங்க ளேன்!

*********

jothigirija@vsnl.net

Series Navigation