இருட்டு எதிர்காலம்

This entry is part [part not set] of 30 in the series 20090423_Issue

அஹமத் சுபைர்



நான் மஸ்கட் வந்து 4 வருஷமாயிடுச்சு. இன்னும் ஊருக்குப் போக முடியல. காசு முக்கியமாச்சே..இதை விட்டுட்டு போனா அடுத்த நாள் ஊரில ஒன்னும் பண்ணமுடியாது..

இந்த பாழாப்போன பணம் தான் எல்லாத்தையும் தீர்மானிக்குது. ஒரு நல்ல நாளுக்கு நல்ல துணி மணி எடுக்கணும்னாலும் இதே காசுக்கு ஊர்ல இருக்குற எல்லாருக்கும் துணி எடுத்துப்புடலாம். நமக்கே 200 திர்ஹாம் ஆயிடுது. ஊருக்குப்போகையில ஏதாவது வாங்கிட்டுப் போனாத்தானே நல்லாயிருக்கும்.

அம்மாகிட்ட நேத்து பேசினப்போ, “ரொம்ப ஆசையா இருக்குடா புதுசா தோடு போட்டுக்கணும்னு. இலை இலையா டிசைன்ல பச்சைக் கலர் இலையும் சேந்தா மாதிரி தோடு வாங்கியாடா”ன்றாங்க.

தங்கச்சிக்கிட்ட பேசினா,”இத்தனி வருசமா ஃபாரின்ல இருக்க..என் குழந்தைக்கு மாமன்கிற முறையில என்ன செஞ்சிப்புட்ட”ன்னு கேக்குறா.

அப்பா “புதுசா ஒரு மொபைல் வாங்கிக்கொடு, இப்ப இருக்குறது வெயிட் அதிகமா இருக்கு”ன்னு சொல்றார்.

இவங்களை எப்படி சமாதானப் படுத்துறதுன்னே தெரியல..இங்க குடிக்க தண்ணி இல்லாம, நல்லதா சாப்பிடாம வயித்தக் கட்டி வாயக் கட்டி சம்பாதிக்கிறோம்னு தெரியக்கூடாதுன்னு தானே வீட்டுக்கு நாம போறப்போ இதெல்லாம் வாங்கியாறோம்..

அவங்களுக்கு எங்க புரியப் போகுது.. ஊருக்குப் போகையில வாங்கிட்டுப் போகணும்..யாருகிட்டயாவது ரூவா கடன் கேட்டா முறைக்கிறானுவோ..இன்னைக்கு இந்த பாழாப்போன ரிசஷென்னால எப்ப எவன் சீட்டை கிழிப்பான்னு தெரியாது..யாரு நம்மள நம்பி பணம் கொடுப்பா..??

நாம நல்லா வேலை பாக்குறதுனால பிரச்சினை இல்ல..அந்த சலீம் பாய் தான் கொஞ்சம் ஓவர் அலும்பு பண்ணுவார்..

அதோ வர்றார் பாருங்க..அவர் தான்..கத்தரிக்காய்க்கு குல்லா போட்டது மாதிரி..தொப்பையும் வழுக்கையுமா…பார்த்தாலே சிரிப்பு வருது.. மனுசன் எச்சிக் கையால காக்கா ஓட்ட மாட்டாரு.

“என்ன பாய், வயித்துக்குக் கூட ஒழுங்காச் சாப்பிடாம அப்படி என்னதான் காசு சேர்க்கறீங்க, கபுறுக்கு எடுத்துட்டா போப்போறிங்க?” என்ற கேள்விக்கு மையமாக முறுவலிப்பார்

அது சமாளிப்பா, அசடா என்று எனக்கு இன்று வரை புரியவில்லை .

எமகாதகத் திருடன்..இன்னைக்கு என்ன திட்டமோ தெரியல…

“என்னலே..என்ன பண்றீக..?” – சலீம் பாய்

“ஒன்னும் இல்லைன்னே..நம்மள வேலையை விட்டுத் தூக்கிருவாங்களோன்னு பயமா இருக்குன்னே”..

“போடா போக்கத்த பயலுவளா..!, இந்த மடம் இல்லாட்டி சந்த மடம்னு போவீகளா..பயந்துகிட்டு..நான் நம்ம *முதீரை நேத்து பார்த்தேன்.அவருக்கு உன் மேல நல்ல அபிப்ராயம்லாம் இல்லை. நீயா வேலையை விட்டுப் போனீன்னா ரொம்ப நல்லது..வேலையை விட்டுப்போறேன், வீட்டுல கஷ்டம், நான் இருந்தே ஆகணும்னு பேசிப்பாரு.. ஒத்துக்கிட்டாருன்னா சம்பளம், சாவடில்லாம் நல்லா போட்டுக் கொடுப்பாரு..அவரா அனுப்பினா ஒரு நயா பைசா பேறாது..புரிஞ்சு நடந்துக்கோ என்ன..!”

“சரிண்ணே, பேசிப் பாக்குறேன்..”

ஒரு பத்து நிமிசத்துல போன் வருது நம்ம சலீம் பாயை வேலையை விட்டுத் தூக்கிட்டாங்களாம்னு நம்ம பையன் சிவா சொல்றான்..பதறிப் போய்ட்டேன்..ஹ்ம்..யாரை நம்புறதுன்னே தெரியல..

இப்பத்தான் பேசிட்டுப் போனார்..ஹ..என் மேல முதீருக்கு நல்ல அபிப்ராயம் இல்லையாம்…காமெடி..

சலீம் பாயை போய் பார்ப்போம். மனுசனை இப்ப விட்டா ஓட்டுறதுக்கு வேற வாய்ப்பே கிடைக்காது..

“என்ன சலீம் பாய், விஷயம் கேள்விப் பட்டேனே உண்மையா?” – லொள்ளுக்கு ஒண்ணும் குறைச்சலே இல்லை..

“ஒண்ணும் இல்ல தம்பி..துணிமணிலாம் அடுக்கிட்டு இருக்கேன். இன்னைக்கு நைட்டே கிளம்பணுமாம்..நான் இத்தனை நாளா ஒரு பைசா கூட யாருக்கும் வச்சுக்கோன்னு கொடுத்ததில்ல..அது ஏன்னு யாரு கிட்டயும் சொல்லல..இன்னைக்கு உன்கிட்ட சொல்லணும்னு தோணுது பேசலாமா?”

“ஐயோ என்ன பாய்…நீங்க சொல்லுங்க பாய்..”

“எனக்கு நகம் முளைச்ச காலத்துலேர்ந்து சம்பாதிக்கேன்..அக்கா, தங்கச்சிங்க கல்யாணம், தம்பிக படிப்புன்னு இம்புட்டு காலம் ஓடிப்போச்சு..இப்பதான் ஒரு நிலம் வாங்கி வீடு கட்ட ஆரம்பிச்சேன். ஆனா பாருங்க அந்த இடம் பங்காளிங்க இடமாம்..இப்ப கோர்ட்ல கேஸ் நடக்குது..ஒத்த ஒத்த ரூபாயா சேத்து கட்டுற வீடு தம்பி..இப்படி நடுவுல நிக்கிது..ஊருக்கு போனா எல்லாரும் கேலி பேசுவாங்க தம்பி..துபாய்ல ஒட்டகத்தை மேய்ச்சிட்டு இங்க மாடு மேய்க்க வந்துட்டான்னு, நினைச்சாலே அழுகையா வருது தம்பி”

“ஐயோ, ஏன் அழறீங்க சலீம் பாய்..ஒரு கதவை அடைச்சா ஆண்டவன் இன்னொரு கதவை திறப்பான் சலீம் பாய்”..

“இல்லைப்பா, நான் இப்ப ஊருக்கு போனா நான் தற்கொலை தான் பண்ணிக்குவேன், இந்த துறைல யாராவது இரண்டு பேர அனுப்பனும்னு முடிவு பண்ணுனப்ப, உன் வயசு காரணமா உன்னை வச்சிக்கிட்டாங்கலாம்..ஓடி ஆடி வேலை செய்வேன்னு..இன்னொருத்தன் அந்த ஜின்ஞ்சா பார்ட்டி.., மவ கல்யாணத்துக்கு வாங்கின வட்டியே மாசாமாசம் கழுத்தை நெரிக்குது.என்ன செய்யப்போறோமோ தெரியலப்பா”

“மனச தேத்திக்கங்க பாய்..எல்லாம் நல்ல படியே நடக்கும்.”

ஆதரவு சொன்னாலும் மனச ரம்பம் போல அறுக்குது.. என்னா செய்றது.. நாம என்னா செய்ய முடியும்னு தோணுது.

இதெல்லாம் நடந்தது 3 மணிக்கு..

சிவா போன் பண்ணான்..சாயங்காலம் 6 மணிக்கு “டேய் மாப்ள..சலீம் பாயை போக வேண்டாம்னு முதீர் சொல்லிட்டாருடா..அதுக்கு பதிலா வேற ஒருத்தன் போறானாம், யாருன்னு தெரியுமா?”

* முதீர் – மேலாளர்.

– அஹமத் சுபைர்,
துபாய்.

Series Navigation

அஹமத் சுபைர்

அஹமத் சுபைர்