இரவு நட்சத்திரங்கள்

This entry is part [part not set] of 35 in the series 20070927_Issue

தீபச்செல்வன்


இந்த இரவு
நட்சத்திரங்கள் பூட்டப்பட்டதைப்போலிருக்கிறது
ஓரு திருப்தியோடு மதுக்கோப்பைகளை
தூக்கி அருந்தமுடிகிறதில்லை
நான் அடிக்கடி வானத்தைப் பார்க்கிறேன்
எங்களால் எப்படி
இந்த செயற்கை மகிழ்ச்சியோடு
வாழ்ந்துவிட முடிகிறது.

ஓரு விருந்து ஓழுங்குசெய்யப்பட்டிருக்கிறது
நாம் பேசுகிறோம்
உன்னைப்பற்றி என்னைப்பற்றி
எங்களைப்பற்றி
எங்களை சூழ்ந்திருப்பவை பற்றி
மனந் திறந்து பேசுகிறோம்.

எங்களோடு கூடியிருந்த நண்பன்
களத்தில் மரணித்ததுபற்றி
நினைவுகொள்கிறோம்
எல்லைகளில் அடிக்கடி
மூளும் போரைப்பற்றி பேசுகிறோம்
துப்பாக்கிகளோடு எந்நேரமும்
எல்லைகளில் விழித்திருக்கும்
போராளிகளைபற்றி பேசுகிறோம.

எங்களால் பாடல்களை இசைக்கமுடிகிறது
சிகரட் விரலிடுக்கில்
புகைந்துகொண்டிருக்கிறது
மதுக்கோப்பபைகள்
சிதறலாக தெரிகின்றன.

எனினும் நாம் எதைப்புரிந்தோம்
நமது தோள்கள்
உதிர்வதைப்போலிருக்கின்றன
நேற்று எங்களோடிருந்த
இந்த மேசையின் நண்பன்
எதுவும் சொல்லாமல் நாட்டைவிட்டு
ஓடிப்போயிருக்கிறான்.

நாம் நிறையவற்றை அறியாதிருக்கிறோம்
மலரவேண்டிய இடத்தில்
மௌனமாயிருந்து உதிருகிறோம்
மதுக்கோப்பைகளின் இருட்டில்
நெருங்கியிருக்கும் நமதன்புகளை
எந்தக்காலையில் உலர்த்தப்போகிறோம்.

நாம் எந்த நிதானத்தை பற்றி
பேசவேண்டும்
எந்த புரிதலும் வார்த்தைளும்
நமக்கு தேவைப்படுகின்றன
பிரகாசமும்
மங்களலும் எங்கிருக்கிறது.

நாம் எந்த பாடல்களை
இசைக்கவேண்டும்
எங்களுக்கு மதுவை
சேவகம் செய்பவனின் வியர்வைத்துளிகள்
பியர்கள்மீது படுகின்றன
அவனிடம் ஒரு நிறைந்த
புன்னகை இருக்கிறது
ஓவ்வொரு காலையிலும்
அவனின் முகம் பிரகாசமடைகிறது.

மதுக்கோப்பைகளிலும்
சிகரட்டுக்களிலும் கலந்துகிடக்கும்
இந்த வெளிச்ச சூழலின்
ஆயுளைப்பற்றி என்ன பேசினேன்?
சிலவேளை நான் தவறாய் பேசலாம்
இந்த மேசையில் நிறைய விடயங்களை
புரியமுடியும்
நெருக்கத்தை பரிமாறமுடியும்
ஆதரவும் பலமும் பிறக்கமுடியம்
வார்த்தைள் கடும் அர்த்தமாயிருக்கும்
நாம் அறியவேண்டியவை
நிறைய இருக்கிறது.

நான் தள்ளாடுகிறேன்
சிகரட்டின் நுனியில் குடிவாழும்
நெருப்பை இழத்தபடி
இரவில் வெளிச்சம் தீர்வதுபோலிருக்கிறது.

பாடல்களை நிறுத்துகிறோம்
வானத்திற்கு காதெறிகிறோம்
வேவு விமானம் சுற்றுகிறது
அவதானத்துக்கான நேரம் வருகிறது
வானத்தில் நட்சத்திரங்களை காணவில்லை
சிகரட்டுகள் அணைகின்றன
மதுதீர்ந்த கோப்பைகளை
சேவகன் எடுத்துப்போகிறான்
மேசை வெளிக்கிறது
நாம் இரவின் நடுவிலிருக்கிறோம்।

பதுங்குகுழியை இன்றும் கூட
சுத்தம்செய்ததுபோலிருக்கிறது।


deebachelvan@gmail.com

Series Navigation

தீபச்செல்வன்

தீபச்செல்வன்