இயல் விருது வழங்கும் விழா

This entry is part [part not set] of 34 in the series 20100704_Issue


இயல் விருது வழங்கும் விழா

விருது பெறுபவர்கள்:
ஐராவதம் மகாதேவன், கோவை ஞானி

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூலை 2010
5.30 PM – 9.00 PM

GRT Grand Hotel
Southern Hall
120 Thyagarayar Road
T.Nagar
Chennai

நிகழ்ச்சி நிரல்:

வரவேற்பு:
பேரா. செல்வா கனகநாயகம், கனடா
தொடக்கவுரை:
பேரா. வீ.அரசு, சென்னைப் பல்கலைக்கழகம்
சிறப்புரை:
எழுத்தாளர் ஜெயமோகன்
கோவை ஞானி அறிமுகம்:
பேரா. தமிழவன், பெங்களூரு
ஏற்புரை:
கோவை ஞானி
ஐராவதம் மகாதேவன் அறிமுகம்:
பேரா. ஆ.இரா.வேங்கடாசலபதி, சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்
ஏற்புரை:
ஐராவதம் மகாதேவன்
வாழ்த்துரை:
கவிஞர் சுகுமாரன்
நன்றியுரை:
கலாநிதி நா.சுப்பிரமணியன், கனடா

விழாவைத் தொடர்ந்து சிற்றுண்டி இடம்பெறும்

தாங்கள் விழாவுக்கு வந்து விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இயல் விருதுக் குழு
தமிழ் இலக்கியத் தோட்டம்
கனடா

தமிழ் இலக்கியத் தோட்டம்:

கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், கொடையாளர்களின் ஆதரவுடன் 2001ஆம் ஆண்டு கனடா நாட்டில் ரொறொன்ரோவில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் பொதுவான நோக்கம் உலகமெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதாகும். தமிழ், ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்பை ஊக்குவிப்பது, அரிய தமிழ் நூல்களை மீள்பதிப்பு செய்வது, தமிழ் பட்டறைகள் ஒழுங்கு செய்வது, கனடிய நூலகங்களுக்கு இலவசமாக தமிழ் நூல்கள் அளிப்பது போன்ற சேவைகள் இதனுள் அடங்கும்.

இந்த இயக்கத்தின் முக்கியமான பணி வருடா வருடம் உலகத்தின் மேன்மையான தமிழ் இலக்கிய சேவையாளர் ஒருத்தருக்கு வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது வழங்கி கௌரவிப்பதாகும். ‘இயல் விருது’ என்றழைக்கப்படும் இந்த சாதனை விருது பாராட்டுக் கேடயமும் 1500 டொலர்கள் பணப் பரிசும் கொண்டது. உலகளாவிய ஆலோசனக் குழு ஒன்றின் பரிந்துரையில் வருடா வருடம் இந்த விருது வழங்கப்படும். இந்த வாழ்நாள் விருது ஒரு படைப்பாளிக்கோ, கல்வியாளருக்கோ, நூல் வெளியீட்டாளருக்கோ, விமர்சகருக்கோ அல்லது வேறு வகையில் அளப்பரிய தமிழ் தொண்டாற்றிய ஒருவருக்கோ அளிக்கப்படும். முதலாம் ஆண்டு வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான விருது எழுத்தாளர் திரு சுந்தர ராமசாமிக்கும் (2001), இரண்டாவது ஆண்டு எழுத்தாளர் திரு கே. கணேசுக்கும் (2002), மூன்றாவது ஆண்டு விமர்சகர் திரு வெங்கட் சாமிநாதனுக்கும் (-2003), நான்காவது ஆண்டு பதிப்பாளர் திரு பத்மநாப ஐயருக்கும் (-2004), ஐந்தாவது ஆண்டு கல்வியாளர் ஜோர்ஜ் ஹார்ட்டுக்கும் (2005), ஆறாவது ஆண்டு நாடகவியலாளர் திரு ஏ.சீ.தாசீசியஸ் அவர்களுக்கும் (-2006), ஏழாவது ஆண்டு மொழிபெயர்ப்பாளர் திருமதி லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம் அவர்களுக்கும் (-2007), எட்டாவது ஆண்டு எழுத்தாளர் திருமதி அம்பை அவர்களுக்கும் (2008) வழங்கப்பட்டது.

2008ஆம் ஆண்டிலிருந்து பல்கலைக் கழகத்தில் தமிழ் கற்கும் சிறந்த மாணவருக்கு ஆயிரம் டொலர் புலமைப் பரிசிலும் உண்டு. அறிவிக்கப்பட்ட தலைப்பில் கட்டுரை எழுதி முதலாவதாக வரும் மாணவருக்கு இந்தப் பரிசு வழங்கப்படும். மேலதிக விவரங்கள் இணையதளத்தில் அவ்வப்போது வெளியிடப்படும். வருடாவருடம் ரொறொன்ரோ பல்கலைக் கழகத்துடன் இணைந்து தமிழ் இலக்கியத் தோட்டம் தமிழ் அறிஞர்களின் விரிவுரைகளுக்கு ஏற்பாடு செய்யும்.

தமிழ் இலக்கியத் தோட்டம் பற்றிய மேலதிக விபரங்களுக்கு, www.tamilliterarygarden.com இணையதளத்தைப் பார்க்கவும்.

இயல் விருது 2009:

2009ஆம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் ஆய்வுகளில் நீண்ட காலமாக ஈடுபட்டுவரும் இருவருக்கு வழங்கப்படுகிறது. கோவை ஞானி என்று அழைக்கப்படும் கி.பழனிச்சாமியும், ஐராவதம் மகாதேவனும் பெறுகிறார்கள். பரிசுப் பணம் பிரித்து வழங்கப்படாமல் இருவருக்குமே தலா 1500 டொலர் வழங்கப்படுகிறது.

கோவை ஞானி:

கோவை ஞானி என்று அறியப்படும் கி.பழனிச்சாமி ஒரு தமிழாசிரியர். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழிலக்கியத்தில் தீவிர சிந்தனையாளராகவும் கோட்பாட்டாளராகவும் திறனாய்வாளராகவும் இயங்கி வருகிறார். இவரை ‘இடைவிடாது இயங்கிவரும் ஆய்வு அறிஞர் ஞானிக்குள் தமிழ் இயங்குகிறது’ என்று வர்ணிப்பார்கள். தமிழின் நவீன இலக்கியங்களை மார்க்ஸிய நோக்கில் ஆராய்ந்தவர்களில் முதன்மையானவர். நுட்பமான இலக்கிய உணர்வும், பேரிலக்கியங்களை, திறந்த மனத்துடன் அணுகும் பண்பும் கொண்டவர். இவர் ‘நிகழ்’ என்ற சிற்றிதழை பல ஆண்டுகளாக தமிழில் புதிய இலக்கியத்திற்கான களமாக நடத்தி வந்தார். இதுவரை இவர் 24 திறனாய்வு நூல்களையும் 12 தொகுப்பு நூல்களையும் 4 கட்டுரை தொகுதிகளையும் இரண்டு கவிதை நூல்களையும் எழுதியிருக்கிறார். இதுதவிர தொகுப்பாசிரியராகவும் பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். இவர் எழுதிய புத்தகங்களில் ‘இந்தியாவில் தத்துவம், கலாச்சாரம்’, ‘கடவுள் ஏன் இன்னனும் சாகவில்லை’, ‘தமிழ் நாவல்களில் தேடலும் திரட்டலும்’, ‘மறுவாசிப்பில் தமிழ் இலக்கியம்’ ஆகியவை முக்கியமானவையாக கருதப்படுகின்றன. இவருடைய நீண்ட கால தமிழ் சேவைக்காக ‘விளக்கு விருது’, ‘தமிழ் தேசியச் செம்மல் விருது’, ‘தமிழ் தேசியத் திறனாய்வு விருது’, ‘பாரதி விருது’ ஆகியவை வழங்கப்பட்டிருக்கின்றன.

ஐராவதம் மகாதேவன்:

ஐராவதம் மகாதேவன் திருச்சியில் உள்ள வளனார் கல்லூரியிலும் பின்னர் சென்னைப் பல்கலைக் கழகத்திலும் கல்வி பயின்றார். இந்திய ஆட்சிப் பணியில் 33 வருடங்களும், தினமணி இதழின் ஆசிரியராக நாலு வருடங்களும் பணிபுரிந்தார். இவருடைய தினமணி காலத்தில் தமிழ் மொழியின் பரவலான எழுத்து பாவனை தூய தமிழ்ச்சொற்களின் அறிமுகத்தால் பெரும் மாற்றமடைந்தது. தமிழ் எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து இவர் நடத்திய நீண்ட கால ஆராய்ச்சிகளுக்காக சர்வதேச புகழ் இவரை தேடி வந்தது. கல்வெட்டு ஆராய்ச்சிகளில் இவர் காட்டிய அர்ப்பணிப்பும் உழைப்பும் தொல்தமிழ் குறித்தும் பண்பாடு, வரலாறு குறித்தும் தீர்க்கமான முடிவுகளை எட்ட உதவியிருக்கிறது. இவர் நாம் வாழும் காலகட்டத்தின் மாபெரும் ஆய்வாளர் என்பதை பல்துறை அறிஞர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். பிராமி எழுத்துமுறை தமிழகத்தில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பரவியது என்பதையும் அந்த நூற்றாண்டிலேயே எழுத்தறிவு தோன்றியது என்பதையும் ஆராய்ச்சி மூலம் நிறுவியிருக்கிறார். அரசவை, மேனிலை மக்கள், வழிபாட்டு தலங்கள் மத்தியில் மட்டுமே எழுத்தறிவு என்ற நிலை இல்லாமல் எல்லா நிலைகளிலும் எல்லா மக்களிடையேயும் எழுத்தறிவு காணப்பட்டது என்பது இவருடைய ஆராய்ச்சியிகளின் முக்கியமான முடிவு. இவர் எழுதியுள்ள நூல்கள்: The Indus Script : Texts, Concordance and Tables (1977); Early Tamil Epigraphy, from the Earliest Times to the Sixth Century A.D (2003) இவருடைய ஆராய்ச்சிகளுக்காக இந்திய அரசு இவருக்கு 2009ஆம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதை வழங்கியுள்ளது.

இயல் விருது விழாவுக்கு வருகை தந்து, விழா பற்றிய செய்தியை தங்கள் ஊடகத்தில் வெளியிட்டு உதவும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ் இலக்கியத் தோட்டம்
கனடா


Kalam, 44 First Floor, 5th Street, Om Sakthi Nagar, Valasaravakkam, Chennai – 600 087, India; Blog: kaalammagazine.blogspot.com; Phone: 94442 74205

Editor: Selvam Arulanantham, 16 Hampstead Court Markam, ONT L3R 3S7, Canada; E-Mail: kalam@tamilbook.com

Series Navigation

author

அறிவிப்பு

அறிவிப்பு

Similar Posts