இயற்கை விடுக்கும் செய்தி (பிரபஞ்சனின் ‘பிரும்மம் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 64)

This entry is part [part not set] of 34 in the series 20030607_Issue

பாவண்ணன்


எங்கள் அலுவலகம் இருக்கும் சேஷாத்ரிபுரம் சாலையில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நண்பரொருவர் கடை வைத்தார். உண்மையில் அந்த இடம் கடை வைப்பதற்கு எந்த விதத்திலும் பொருத்தமான இடமே அல்ல. பெரிய கட்டடத்தின் மாடிப்படிகளுக்குக் கீழே தரைக்கடியில் பள்ளம் பறித்தமாதிரி ஒரு சதுரமான இடம். சற்றே குறைந்த வாடகைக்குக் கிடைத்ததால் அதைத் தேர்ந்தெடுத்தார். கடைக்குள் இரண்டு மேசைகள் போட்டு ஆங்கிலத் தட்டச்சுப்பொறி ஒன்றும் கன்னடத் தட்டச்சுப்பொறி ஒன்றும் வைத்திருந்தார். அக்கம்பக்கத்தில் நிறைய வழக்கறிஞர்கள் இருந்தார்கள். அவர்களிடமிருந்து வாடிக்கையாக அவருக்குத் தட்டச்சு வேலை கிடைத்தபடி இருந்தது. ஓராண்டுக்கும் மேலாக இப்படியே கடையை நடத்தி வந்தார்.

வாடிக்கைக்காரர்கள் குறைவதைப்போல அவருக்கு ஏதோ ஓர் எண்ணம் உதித்ததும் கைச்சேமிப்புடன் கொஞ்சம் கடன் வாங்கி அதே இடத்தில் மேசைகளை இடம்மாற்றிப்போட்டு ஒரு எஸ்.டி.டி பூத் தொடங்கினார். தட்டச்சுப்பொறிகளை மலிவான விலைக்கு விற்றுவிட்டு ஒரு பழைய ஜெராக்ஸ் எந்திரத்தையும் வாங்கி வேலையைத் தொடங்கினார். அதிகாலை ஏழுமணிக்குத் திறக்கிற கடையை இரவு பதினொன்றரை மணிவரைக்குத்தான் மூடுவார். அந்த அளவுக்குத் தொலைபேசி செய்யவரும் வாடிக்கைக்காரர்கள் பெருகத் தொடங்கினர். அவருடைய கணக்கு சிறிதும் பிசகவில்லை. அடுத்த ஆண்டிலேயே மற்றொரு தொலைபேசி இணைப்பை வாங்கினார். அது ஒரே இணைப்பில் ஃபேக்ஸ்க்கும் எஸ்.டி.டி. பூத்துக்கும் மாறிமாறிப் பயன்பட்டது. பழைய ஜெராக்ஸ் எந்திரத்தை விற்றுவிட்டுப் புதியதாக வாங்கினார். கடை விரிவடைந்தது. சில ஆண்டுகள் வரை எந்தப் பிரச்சனையுமில்லாமல் இருந்தது.

தொலைபேசித்துறை தொலைதுார அழைப்புகளுக்கான கட்டணத்தைக் குறைத்ததாலும் ஐந்நுாறு கிலோ மீட்டர் வரை உள்ளூர் அழைப்பாக மாற்றிவிட்டதாலும் அவர் வருமானம் குறைய நேரிட்டது. அதற்குள் வெகுவேகமாகப் புழக்கத்துக்கு வந்து புகழடையத் தொடங்கிய நடமாடும் பேசிகளின் பெருக்கத்தால் வாடிக்கையாளர்களும் குறையத் தொடங்கினர். ஆழ்ந்த உள்மன விவாதங்களுக்குப் பிறகு தெற்கில் பிரபலமான ஒரு கூரியர் நிறுவனத்தில் உறுப்பினராகப் பதிந்து கொண்டு அஞ்சல்களைப் பதிவு செய்யவும் பட்டுவாடா செய்யவும் தொடங்கினார். இரண்டு இளைஞர்களை இதற்காகவே பகுதிநேர வேலைக்கு அமர்த்தினார். ஒரு நாளைக்கு முந்நுாறுக்கும் மேலான அஞ்சல்கள் பதிவாகத் தொடங்கின. அருகிலிருந்த வங்கிகள், அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகிய எல்லா இடங்களுக்கும் சென்று தனிப்பட்ட முறையில் தலைமைகளைச் சந்தித்துத் தினசரி நேரிடைப்பதிவுக்கு வழிசெய்து கொண்டார்.

திடாரென அஞ்சல்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கின. நேர்காணல்களுக்கான விண்ணப்பங்களைப் பல நிறுவனங்கள் அஞ்சல்வழியாக ஏற்றுக்கொள்வதற்கு மாறாக மின்அஞ்சல் வழியாகவே ஏற்றுக்கொள்ளத் தொடங்கின. வங்கிகளுக்கிடையேயான கடிதப் போக்குவரத்து முற்றிலுமாக நின்று போனது. மின்அஞ்சல்களின் பரிமாற்றத்தால் அந்த வணிகம் சோர்வுநிலையைத் தொடத்தொடங்கியது. ஆனாலும் நண்பர் சோர்வடையவில்லை. நீண்ட யோசனைக்குப் பிறகு மூன்று பழைய கணிப்பொறிகளை வாங்கி கைவசம் இருந்த ஒரு தொலைபேசி இணைப்பின் வழியாக அவற்றில் இணையதளங்களைப் பார்க்கும் வசதியை உருவாக்கினார். புதிய வாடிக்கைக்காரர்கள் பலர் பெருகினர். ஒருமணிக்கு முப்பது ரூபாய் கட்டணம். கடை திறந்திருக்கும் பத்துமணிநேரமும் ஏதேனும் இரண்டு கணிப்பொறிகளில் யாராவது இணையதளங்களைப் பார்வையிட்டபடி இருந்தார்கள். மறுபடியும் வருமானம் பெருகியது. தமக்கு அறிமுகமான கல்லுாரிகள், பள்ளிகள், நிறுவனங்கள், அலுலவகங்கள், வழக்கறிஞர்கள், ஆய்வு மாணவர்கள் அனைவரையும் அணுகிக் கையெழுத்துப் பிரதிகளை வாங்கி வந்து எஞ்சிய ஒரு கணிப்பொறியின் வழியாக அழகாக அச்சாக்கம் செய்து தரத்தொடங்கினார். ஒன்றிரண்டாண்டுகள் தொழில் நல்ல நிலையில் நடந்தது.

அத்தொழில் உச்சத்தில் இருக்கும்போதே கர்நாடக விரைவுப்போக்குவரத்துக் கழகம் முன்பதிவுச் சீட்டுகளைப் பதிவுசெய்து தர முகவர்களை நியமித்த போது அவரும் பணம்கட்டி முகவரானார். மற்றொரு கணிப்பொறியை வாங்கி போக்குவரத்துக் கழகத்தின் மையக் கணிப்பொறியோடு இணைத்துக்கொண்டார். முன்பதிவு செய்து தரும் ஒவ்வொரு சீட்டுக்கும் குறிப்பிட்ட விழுக்காட்டுத் தொகையை கமிஷனாக அவரே எடுத்துக்கொள்ளலாம். மையநிலையத்துக்குச் சென்று வரிசையில் நின்று சீட்டு வாங்கும் அவஸ்தையிலிருந்து தப்பிக்க மக்களுக்கு இது நல்ல வசதியாக அமைந்தது.

செய்துவரும் தொழிலில் காலத்தின் கட்டாயத்தின் காரணமாக தொய்வு நேரும் ஒவ்வொரு தருணத்திலும் தம் கூர்மையான யோசனையின் மூலம் முற்றிலும் புதிய ஒரு தொழிலில் இறங்கிச் சாதிப்பதில் அவர் வல்லவராக இருந்தார். அவர் முகத்தில் சோகத்தின் களையையோ பதற்றத்தின் களையையோ ஒருபோதும் படர் ந்ததில்லை. எப்போதும் சிரித்த முகம்தான். வாடிக்கைக்காரர்களை அன்புடன் உபசரிப்பதைக் கடமையாகக் கொண்டவர்.

தொய்வின் விளிம்பில் ஊக்கத்தின் சரட்டை அவர் கண்டுபிடித்து எழும் செயலை நான் வியக்காத நாளே இல்லை. அவர் வெற்றியைக் கண்டு பாராட்ட மனமில்லாத பலர் வெறுமனே ‘வாழத்தெரிந்தவர் ‘ என்று அவரை அடைமொழியிட்டுச் சொல்வதைக் கேட்கும் போதெல்லாம் அவர்களை மறித்து அவர் ‘வாழ்க்கையைக் கண்டுபிடிப்பவர் ‘ என்று திருத்திச் சொல்வதுண்டு. காற்றின் வேகத்தால் பயணத்திசை குழம்பும்போதெல்லாம் திசைகாட்டியின் உதவியோடு கப்பலைச் சரியான திசையில் செலுத்திக் கொண்டு செல்லும் மாலுமியைப்போல வாழ்க்கையைச் சரியான திசையில் நடத்திச் செல்பவர் என்றும் சொல்வதுண்டு. சொல்லாமல் மனத்துக்குள் அசைபோடும் ஒரு விஷயம் பிரபஞ்சனின் ஒரு கதையாகும். அக்கதையில் இடம்பெறும் முருங்கைமரப் படிமத்துக்குப் பொருத்தமானவராக அவரைத்தான் மனம் முதலில் நினைத்துக்கொள்ளும்.

‘பிரும்மம் ‘ என்கிற அக்கதையின் தொடக்கத்தில் ஒரு குடும்பம் ஒரு புதிய வீட்டுக்குக் குடிபோகிறது. வீட்டுக்கு முன்னால் காணப்படும் வெற்றுநிலத்தில் ஒரு முருங்கைக்கிளை நடுவதென முடிவாகிறது. சதுர நிலத்தின் நடுவில் அப்பா பள்ளம் தோண்டி சிநேகிதக்காரர் வீட்டிலிருந்து வரவழைத்த முருங்கைக்கிளையை நடுகிறார். அம்மா பக்கத்துவீட்டிலிருந்து சாணம் எடுத்துவந்து கொம்பின் முனையில் அப்பிவைக்கிறாள். தங்கை வாளியில் நீர்கொண்டு வந்து ஊற்றுகிறாள். சில நாள்கள் கழிந்த பிறகு கிளையில் பல்வேறு இடங்களில் பச்சைப் புள்ளிகளாகத் தளிர்கள் காணப்படுகின்றன. கிளர்த்திக்கொண்டு வெளியேறத் துடிக்கும் உயிரின் உருவம் பார்க்கப் பரவசமாக இருக்கிறது.

அன்று முதல் இரண்டு பிள்ளைகளுக்கும் விடிந்ததும் முதல் வேலை முருங்கையைப் பார்ப்பதுதான் என்றாகிவிடுகிறது. உளுத்தம்பொட்டின் அளவான தளிர், மெல்லிய நரம்பு போல அதுவிடும் கிளை, பச்சைப்பட்டாணியைப் போல அதன் இலை, ஊடே ஊடே தோன்றும் அதன் புதிய தளிர்கள் எல்லாம் அவர்கள் கண்முன்னாலேயே நிகழ்கின்றன.

முருங்கை பலவிதங்களில் அக்குடும்பத்துக்குப் பயன்படுகிறது. முருங்கைக்கீரையைப் போட்டு நெய் உருக்குகிறார்கள். சைக்கிளை நிறுத்த மரத்தடி பயன்படுகிறது. காற்று சுகத்துக்காக அதன் நிழலில் சாய்வு நாற்காலி போடப்படுகிறது. படிப்பதும் எழுதுவதும் அம்மரத்தடி பயன்படுகிறது. அதன் கீரையும் காய்களும் உணவாகின்றன. ஆண்டுகள் உருளஉருள மரத்தின் வளர்ச்சி கூடிக்கொண்டே போகிறது.

ஒருநாள் கடுமையான காற்றுடன் கூடிய மழை பொழிகிறது. தெருவை அடைத்துக்கொண்டு வீழ்ந்துவிடுகிறது முருங்கைமரம். தெருக்காரர்கள் அனைவரும் தத்தம் சக்திக்கேற்ப கீரைகளாகவும் காய்களாகவும் விறகாகவும் திரட்டிக்கொண்டு செல்கிறார்கள். பார்த்துக்கொண்டிருக்கும் போதே மரம் இருந்த இடம் வெறுமையாகி விடுகிறது. மறுநாள் காலையில்தான் அம்மரத்தின் இல்லாமையின் தாக்கம் ஒவ்வொருவருக்கும் புலப்படுகிறது. நேற்று இருந்தது இன்று இல்லை. மொட்டையாக அடித்தண்டு மட்டும் நிற்கிறது. வயதான ஒரு பெரியவரைப் பறிகொடுத்த சோகம் குடும்பம் முழுக்கப் பரவி நிற்கிறது.

கொஞ்சநாள் கழிந்ததும் தற்செயலாகக் காப்பித்தம்ளருடன் மரத்தடிக்கருகே செல்லும்போது துண்டாகி நின்றிருந்த மரத்தில் சின்னஞ்சிறு தளிரொன்று கிளைத்திருப்பது கண்டறியப்படுகிறது.

முருங்கை ஒரு வலிமையான படிமமாக இக்கதையில் பயன்படுகிறது. தோற்றமும் மறைவும் தொடர்ந்து நிகழ்ந்தபடி இருந்தாலும் இயற்கைக்கு அழிவென்பது இல்லை. இயற்கை தனக்குள் சதாகாலமும் ஊற்றெடுத்தபடி இருக்கும் சக்தியின் துணையுடன் எவ்விதமான அழிவையும் வென்றுவிடும் ஆற்றலைப் பெற்றிருக்கிறது. தன் இருப்பின் வழியாக அது மனிதகுலத்தை நோக்கி ரகசியமாக ஒரு செய்தியைச் சொன்னபடியே உள்ளது. அழிவிலிருந்து மீண்டெழும் ஆற்றலே அச்செய்தி.

*

எழுபதுகளில் தமிழ்ச்சிறுகதை உலகில் உருவான முக்கியமான படைப்பாளிகளில் ஒருவர் பிரபஞ்சன். இவருடைய கதைமாந்தர்களாக இடம்பெறும் மனிதர்களின் அன்பும் கனிவும் பரிவும் மிகமுக்கியமான அம்சங்களாகும். வாழ்வின் பல தருணங்களில் இத்தகு குணங்கள் மேலான மனிதர்கள் வழியாக வெளிப்படும்போது உணரநேரும் நெகிழ்ச்சியும் நெருக்கமும் உலகைப் புரிந்துகொள்ளத் துாண்டும் சக்திகளாக விளங்குகின்றன. சிறுகதை, நாவல்கள், நாடகம், கட்டுரை என எல்லாத் துறைகளிலும் குறிப்பிடத்தக்க படைப்புகளைத் தந்திருப்பவர். மானுடம் வெல்லும், வானம் வசப்படும், மகாநதி ஆகியவை இவருடைய முக்கியமான நாவல்கள். ‘பிரும்மம் ‘ என்னும் இச்சிறுகதை 1982 ஆம் ஆண்டில் நர்மதா பதிப்பகத்தின் வெளியீடாக வந்த ‘ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள் ‘ என்னும் தொகுதியில் இடம்பெற்றுள்ளது.

***

paavannan@hotmail.com

Series Navigation