இந்த வாரம் இப்படி – பெப்ரவரி 18 -2001

This entry is part [part not set] of 17 in the series 20010219_Issue

மஞ்சுளா நவநீதன்


தலித் கட்சியான புதிய தமிழகம் திமுகவுடன் கூட்டணி

சாதிக்கட்சிகள்- முதலியார் கட்சி, முக்குலத்தோர் கட்சிக்கும் தி மு க அழைப்புகள் விடுத்திருப்பதாய் அறிகிறோம். பா ம க-வின் விலகலுக்குப் பிறகு தி மு க – பாமகவின் வாக்குகளை வேறு வகைமுறைகளில் பெறுவதற்கு முயற்சிகள் செய்து வருகிறது. அதில்லாமல் இழந்த வாக்குகளை ஈடு செய்ய வேறு கட்சிகளையும் அணுகலாம் என்று முடிவு செய்து இயங்கி வருகிறது.

தலித் மக்களின் பிரதிநிதிக் கட்சிகள் அல்லாமலேயே, எம் ஜி ஆர் ஆதரவு வாக்குகள் தனக்குக் கிடைக்கும் என்ற நினைப்பில் ஜெயலலிதா தலித் மக்களின் கட்சிகளை உதாசீனம் செய்து வருகிறார் போலும்.

போன வருடம் அமெரிக்காவுக்கு வந்திருந்த டாக்டர் கிருஷ்ணசாமியுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு தலித் தலைவரிடம் என்ன எதிர்பார்க்கமுடியுமோ அதுவே அவரிடமிருந்தும் வந்ததில் எனக்கு ஏமாற்றமில்லை. ஆச்சரியமுமில்லை. ஜான் பாண்டியன், டாக்டர் கிருஷ்ணசாமி, திருமாவளவன், டாக்டர் ராமதாஸ், கருணாநிதி, வீரமணி போன்ற எல்லோருக்கும் வேறு எந்த தனிச்சிந்தனையும் கிடையாது. அண்ணா அன்று சொன்னார், பெரியார் இதைச் சொன்னார் என்று மேற்கோள் காட்டியே அரசியல் ஓட்டும் இவர்களுக்கு பெரியார் சொன்ன சுயசிந்தனையும், அறிவியற்பூர்வமான சுயகேள்வியும் விட்டுபோய் பெரியார் அம்பேத்கார் மொழிகள் கேள்வி கேட்கமுடியாத வேதப்புத்தக நிலையை எட்டிவிட்டன. இவர்களுக்குள் நிகழும் வேறுபாடெல்லாம் யாருக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது, யாருக்கு மக்களை அனுசரித்து கட்சி நடத்தும் திறம் இருக்கிறது என்பது மட்டுமே.

தட்டியில் புகுந்தால் கோலத்தில் புகும் திறமை மட்டும் எல்லோருக்கும் இருக்கிறது. ‘என்னய்யா பாஜக பிராம்மணக்கட்சி என்றீரே இன்று அந்தக் கூட்டணியில் சேர்கிறீர்களே ‘ என்று கேட்டால், ‘நாங்கள் திமுக கூட்டணியில் சேர்கிறோம், பாஜக அந்தக் கூட்டணியில் இருக்கிறது என்பது எங்களுக்கு தேவையற்ற விவகாரம் ‘ என்று பதில் வருகிறது.

‘என்னம்மா, பாமகவை தீவிரவாதக்கட்சி, புலி ஆதரவுக்கட்சி, தடை செய்யவேண்டும் என்று சொன்னீர்களே, இன்று அதனுடன் கூட்டு வைத்திருக்கிறீர்களே ‘ என்று கேட்டால் என்ன பதில் வந்தது என்று அறிய ஆவலாக இருக்கிறேன். இருப்பினும் எது கேட்டாலும், ‘அரசியலில் நிரந்தர பகைவர்களும் இல்லை, நிரந்தர நண்பர்களும் இல்லை ‘ என்று கோரஸாக எல்லாக்கட்சியினரும் பதில் சொல்கிறார்கள்.

இந்த நிரந்தரப் பகை- நிரந்தர நட்பு பற்றி தனியாக ஒரு விமர்சனம் எழுதவேண்டும். இப்போது இந்த டாக்டர் கிருஷ்ணசாமி பற்றி மட்டும் அலட்டிவிட்டு அடுத்த விஷயம் பார்க்கிறேன்.

***

உலகமகா உளறல்களில் ஒன்றை போனவாரம் படிக்க நேரிட்டது. திமுக ஆதரவாக பேசிய எஸ்ரா சற்குணம் என்ற கிரிஸ்தவ மதபோதகர் தான் குஜராத்தில் பிரார்த்தனை செய்ததால்தான் அங்கு பூகம்பம் ஏற்பட்டது என்றும் தான் அதனாலேயே தமிழ்நாட்டில் பிரார்த்தனை செய்யப்போவதில்லை என்றும் பேசியிருக்கிறார்.

நம் ஊரில் எல்லாமும் நடக்கிறது. அமிர்தவர்ஷனி ராகம் பாடி மழையை வரவழைக்க குன்னக்குடி வைத்தியநாதன் மறக்காமல் வேஷ்டியை டப்பாக்கட்டுக்கட்டி ஏரியில் நின்றுகொண்டு வயலின் வாசித்த ஊராயிற்றே நம் ஊர். எல்லாமும் நடக்கும் நம் ஊரில்.

***

எங்கள் ஊர் திருச்சியில் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் சகோதரி பாராளுமன்ற மக்கள் பிரதிநிதியாவதற்கு போட்டியிடப்போவதாக செய்தி வந்தது. இன்னொரு பிண ஊர்வல அரசியல்.

***

பர்மாவுடன் இந்திய உறவு

பர்மாவிலிருந்து அகதிகளாக ஓடி வந்த பல தமிழர்கள் இருக்கிறார்கள். இந்தியா மீண்டும் பர்மாவுடன் – இது இப்போது மியான்மார் ஆகியுள்ளது — உறவு கொள்ளத் தொடங்கியுள்ளது என்பது இவர்களுக்கு ஆறுதலாய் இருக்கலாம். அவர்களின் பழைய நண்பர்களுடனும், இருப்பிடங்களுடனும் உறவைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

பர்மாவுடன் இந்தியா கொண்டுள்ள புதிய உறவுகள் விமர்சனத்திற்கு ஆளாகாமல் இல்லை. பர்மாவில் ஜனநாயகம் இல்லை. ராணுவ ஆட்சி தான் நடைபெறுகிறது. ஆனால் அரசாங்க உறவுகள் இந்த மாதிரி விஷயங்களைப் பார்த்து அவற்றினால் பாதிப்புப் பெறக் கூடாது. இப்படிப் பட்ட விஷயங்களினால் உறவு கொள்வதைப் பரிசீலிக்க நேர்ந்தால் எந்த நாட்டுடனும் உறவு கொள்வது இயலாது. ஒரு அரசாங்கத்தின் முதல் பணி நாட்டு மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதாகும். பர்மாவுடன் கொண்டுள்ள உறவின் அர்த்தம் பர்மாவின் எல்லாச் செயல்களுக்கும் இந்தியா அங்கீகாரம் அளிக்கிறது என்பதல்ல. மியான்மாரின் அரசு இந்தியாவிற்கு எதிராக எதுவும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும், தீவிரவாதிகளுக்கு உதவி செய்யாமல் இருக்கவும் இந்த உறவு பயன் படும்.

ஆனால் இந்தியா ஜனநாயக நாடு. பர்மாவின் ராணுவ அரசிற்கு எதிராக யாரும் எழுதுவதையோ, அமைதியான முறையில் எதிர்ப்புத் தெரிவிப்பதையோ இந்திய அரசு ஒடுக்குவதற்கு முயற்சி செய்யக் கூடாது.

****

பர்மா மட்டுமல்ல —

ஆமாம், பர்மா மட்டுமல்ல, மற்ற நாடுகளுடனும் கூட இந்தியா கடந்த பத்து வருடங்களில் சுமுகமான உறவைக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது. இஸ்ரேல் தொடங்கி, ஈராக் வரையில் எல்லா நாடுகளுடனும் கலாசாரப் பரிவர்த்தனைகள் , அமைச்சர்கள் சென்று வருதல் போன்றவை நிகழ்கின்றன.

நரசிம்ம ராவ் தொடங்கி வைத்த இந்தப் பணி நல்ல வேலையாக, பா ஜ க-வின் அரசும் தொடர்கிறது. கோட்பாட்டு ரீதியாக ரஷ்ய உறவு நாட்களில் விலக்கி வைக்கப் பட்ட உறவுகளும் இன்று முன்னணிக்கு வந்துள்ளன. நம் அருகில் இருக்கிற நாடுகள் மட்டுமன்றி, பிரேஸில், பல்கேரியா, வியத் நாம் போன்ற பெரிய , சிறிய நாடுகளுடன் உறவு பலப் பட்டு வருகிறது. ஐ நா- பாதுகாப்புக் குழுவில் இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கைக்கும் பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

நாம் நண்பர்களைப் பெருக்கிக் கொள்ள நேரும்போது, நம் எதிரிகள் வலுவிழப்பது இயல்பாகவே நடக்கிறது. அது மட்டுமல்லாமல், எதிரியாக இருக்கக் கூடியவர்களும் குறைந்து கொண்டே போவார்கள். இந்தியா பற்றிய நல்லுணர்வும் மற்ற நாடுகளில் ஏற்படுவது, இந்தியா பற்றிய ஒரு பரவலான கவனிப்பிற்கு வழி வகுக்கும்.

****

800 மில்லியன் டாலர் . டாங்கி : ரஷ்யத் தொழில் நுட்பம்

ரஷ்யாவிலிருந்து டாங்கிகளை வாங்கவும், ரஷ்யத் தொழில் நுட்பத்துடன் டாங்கிகள் தயாரிக்கவும் இந்தியா முடிவு செய்துள்ளது. ரஷ்யத் தொழில் நுட்பம் மற்ற நாடுகளின் தொழில் நுட்பத்துடன் இணை சொல்லக் கூடிய முறையில் நவீனமாய் இருக்குமா என்பது கேள்விக் குறி.

T90 டாங்கிகள் பாலைவனத்துக்கு ஏற்றவை. இதன் மூலம் பாகிஸ்தானை பாலைவனத்தில் எதிர்கொள்ள இந்தியா முடிவு செய்திருக்கிறது என்று கருதலாம். இந்தியாவுக்கு எந்த நாட்டோடு பாலைவன எல்லைக்கோடு இருக்கிறது ?

சென்னை ஆவடியில் இருக்கும் டாங்கித் தொழிற்சாலையில் இந்த டாங்கிகள் தயாரிக்கப்படும். இதன் உதிரி பாகங்கள் சென்னையில் இருக்கும் தனியார் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும். அழிவுக்கருவிகள் மூலம் சென்னை வாழ் மக்களுக்கு நன்மை. இந்த் அழிவுக்கருவிகளை உபயோகப்படுத்தும் நாள் வராது என்று நம்புவோம். ஆசைப்படுவதற்கு என்ன குறை.

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்