இந்த வாரம் இப்படி – ஃபெப்ரவரி 25, 2001

This entry is part [part not set] of 19 in the series 20010226_Issue

மஞ்சுளா நவநீதன்


வீர பாண்டிய பாரதி

பாரதி திரைப்படம் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. இது பல யோசனைகளைக் கிளறி விட்டது. பாரதி- படம் கடந்த மாதங்களில் பல விதமான விமர்சனங்களையும், கவனிப்பையும் பெற்றுள்ளது. பெரும்பாலும் சாதகமான விமர்சனங்களே வெளி வந்துள்ளன. ஞான ராஜசேகரன் நல்ல டைரக்டர். இந்தப் படம் படத்தின் கலைச் சிறப்புக்கு இல்லாவிடினும், பாரதி பற்றிய மறு சிந்தனையாக மக்களிடம் கவனிப்புப் பெறுவது நல்ல விஷயம் தான் என்பதால் நான் இதை விமர்சனத்துக்குள்ளாக்க விரும்பவில்லை.

இதன் நடிகர்கள் எல்லோரும் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். காலப் பின்னணி இன்னும் சற்று பொருத்தமாய் வெளிப்பட்டிருந்தால் நன்றாய் இருக்கும். வசனங்கள் ஓரளவு இன்றைய மொழியாய் உள்ளன. 80 வருடத்திற்கு முந்திய மொழியின் தொனியை வெளிப்படுத்த வில்லை. வரலாற்று நபர்களை நடிக்கத் தேர்வு செய்தவர்களும் (Casting) ஓரளவு பொருத்தமாய்ச் செய்திருக்கிறார்கள்.

என் சிந்தனைகள் வரலாற்றை அடிப்படையாய்க் கொண்ட படங்கள் பற்றியது. விவரணப் படமாய் இல்லாததாலேயே வரலாற்றை அடிப்படையாய்க் கொண்ட முழு நீளப் படங்கள் ஓரளவு வரலாற்றின் நிகழ்ச்சிகளைக் காட்டிலும் , வரலாற்றின் சாராம்சமான போக்குகளை (Spirit of History) மையப் படுத்த நேர்கின்றன. தமிழில் வரலாற்றுப் படங்கள் வெகுவாகக் குறைவு. அதன் காரணம் தமிழ் மக்களின் ரசனையில் நாடகத் தன்மையும், மிகைப் போக்கும் ( Melodrama ) பெற்று விட்ட இடம் தான். கருணாநிதியின் கனல் தெறிக்கும் வசனங்களும், சிவாஜி கணேசனின் கையுயர்த்திய சைகைகளுமாய். சினிமா என்பதை நாடகத்தின் மோசமான அம்சங்களுக்குத் தந்து விட்டோம். நமக்குக் ‘கட்ட பொம்மு ‘ தேவையில்லை. ‘வீர பாண்டியக் கட்ட பொம்மன் ‘ தான் வேண்டும். இவற்றில் ‘கப்பலோட்டிய தமிழன் ‘ வரலாற்றுத் திரைப்படம் என்ற அளவில் உண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப் பட்ட படம். அது சரியாக ஓடவில்லை என்பது நிஜம். மக்கள் யதார்த்தத்திற்குத் தயாராக இல்லை என்பது தான் இதன் பாடம். (நல்ல வேளை பாரதியாராக சிவாஜி கணேசன் நடிக்க வில்லை என்பது ஓரு பெரும் ஆறுதல்.)

பாரதியை ஓரளவு ‘வீர பாண்டிய பாரதி ‘ (அல்லது ‘அக்கிரகாரத்தில் பாரதி ‘ என்றும் சொல்லலாம்) என்று சொல்ல வேண்டும். ஆர்யா (நிழல்கள் ரவி) படத்தின் செய்தியை (Message) சொல்வதுடன் படம் துவங்குகிறது. பாரதி மரண ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஒரு சில நபர்களுடன் படம் தொடங்குகிறது. பாரதிக்குக் கிடைக்காத கவனிப்பைப் பற்றி கவலை கொள்கிறது. ஒரு மகாகவிக்கு இப்படிப் பட்ட கவனிப்புத் தானா என்ற ஆதங்கம் கொள்கிறது.

ஆனால் , இறக்கும் போது பாரதி ‘மகாகவி ‘ அல்ல என்பது தான் உண்மை. இதன் அர்த்தம் அவர் கவிதைகளின் சிறப்புப் பற்றியதல்ல. சமூகத்தின் கவனிப்பின் முன்னரும், சக அரசியல்-இலக்கிய முக்கியஸ்தர்களின் கவனிப்பின் முன்னரும் அவர் பெற்றிருக்க வேண்டிய இடத்தைப் பெறவில்லை. அது ஏன் எப்படி என்பது பெரிதும் ஆய்வுக்கு உள்ளாக வேண்டிய விஷயம். இந்தப் பரிணாமம் பற்றி மிகச் சிறந்த புத்தகம் தமிழில் உள்ளது. அ மார்க்ஸ்- கா சிவத்தம்பி எழுதிய ‘பாரதி முதல் மகாகவி வரை ‘ என்ற அந்தப் புத்தகம் மறு பதிப்பு வெளி வந்துள்ளதா என்று தெரியவில்லை. அண்ணாதுரையின் மரணத்திற்கு வந்த கும்பல் போலவும், எம் ஜி ஆர் மரணத்திற்கு வந்த கும்பல் போலவும், நிச்சயம் பாரதி மரண ஊர்வலத்திற்கு வர முடியாது. ஏனென்றால் நம் வாழ்வில் சினிமாவும் , அரசியலும் பெற்று விட்ட – சரியான என்றும் சொல்லலாம் – இடம் அப்படி.

இந்தப் படத்தின் மிக முக்கியமான அம்சமாய் நான் கருதுவது: சமூகத்தின் நிகழ்காலத்தை மாற்றியமைக்க முயற்சி செய்யும் ஒருவனின் மிக வலிமையான போராட்டம் அவன் குடும்பத்திற்குள்ளும் , அவனுடைய உடனடிச் சூழலுக்குள்ளும் (பாரதிக்கு இந்தச் சூழல் சாதியைச் சார்ந்ததாய் இருந்தது ) என்பதை இந்தப் படம் மிக உரத்த குரலில் சொல்கிறது.

****

காதலர் தினம் – இந்தியாவில் சிவ சேனா , மலேசியாவில் காவல் துறை.

காதலர் தினம் என்று ‘Valentine ‘s Day ‘ – க்குப் பெயர் அளித்த புண்ணியவான் யாரென்று தெரியவில்லை. இதன் சரியான அர்த்தம் அன்பானவர்களின் நாள் என்பது தான். அவர்கள் காதலர்களாகவும் இருக்கலாம், நண்பர்களாகவும் இருக்கலாம் காதலர் தினம் கொண்டாடப் படுவதும் நல்லதே. ‘ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே ‘ என்று உரத்த குரலி முழங்க வேண்டும்.

சிவ சேனா இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறதாம். இந்தியப் பண்பாட்டில் காதல் கிடையாது என்பது இதன் பொருளா என்று தெரியவில்லை. தமிழர்கள் ‘களவு ‘ என்பதை ஒழுக்கமாகவே கொண்டு இயங்கியவர்கள். வசந்தோற்சவமும், ஹோலியும் நம்மிடையே உண்டு.

இந்தியாவின் வசந்தோற்சவம், இன்னும் பாகிஸ்தானில் ‘பஸந்த் ‘ ஆகக் கொண்டாடப்படுகிறது. இங்கே பஸந்த் காரணமாக ரொம்ப அதிகமாக செய்யும் ஒரு விஷயம் வண்ணவண்ணமாக பட்டம் விடுவதுதான். இதற்கும் பாகிஸ்தானில் எதிர்ப்பு. இஸ்லாமுக்கு எதிரானது என்று முஸ்லீம் மத போதகர்கள் இதை எதிர்க்கிறார்கள். சிந்து அரசாங்கம் பஸந்த் கொண்டாடினால் சிறை என்று கூட இந்த வருடம் அறிவித்திருந்தது.

அமெரிக்காவில் கூட இந்த வாலன்டைன் தினம் என்பதை கிரிஸ்தவ குழுக்கள் எதிர்த்து வருகின்றன. இது ஒரு பாகன் (கிரிஸ்தவத்துக்கு முந்தய மதம்-Pagan) பழக்கம் என்று இதை தீவிரமாக எதிர்த்து வருகின்றன. இன்னும் சில கிரிஸ்தவ குழுக்கள் இது கிரீட்டிங் கார்ட் கம்பெனிகளின் சதி வேலை என்றும் திட்டி வருகின்றன. மக்கள் சந்தோஷமாக இருப்பதில் எத்தனை பேருக்கு வருத்தம்!.

மலேசியாவில் காவல்துறையே காதலுக்கு எதிராய் இறங்கியிருக்கிறது. ஹோட்டல் ஹோட்டலாகப் புகுந்து அங்கிருக்கும் தம்பதியினரையும் காதலர்களையும் கைது செய்திருக்கிறது. மற்றொருவன் தன் தனியறையில் என்ன செய்கிறான் என்று பார்த்து, அவனுடைய புனிதமான அந்தரங்கத்தை மதிக்காமல், தன் ஒழுக்கத்தை அவன் மீது திணிப்பது மாதிரி ஒரு ஒழுக்கக் கேடு கிடையாது. எல்லா சுதந்திர மறுப்புகளும், அடக்குமுறைகளும், ஒழுக்கம், மதம், பண்பாடு, ஒழுங்கு முறை என்ற பட்டாடைகள் அணிந்து தான் தங்கள் ஏகாதிபத்திய அசிங்கங்களை மறைத்துக்கொள்கின்றன.

****

ஜெயலலிதாவின் அருகில் சோ

சோ மிகவும் தெளிவாகவே இப்போது ஜெயலலிதா சார்பாக வேலை செய்து கொண்டிருக்கிறார். பழைய சுப்பிரமணியசாமி ஞாபகம் வருகிறது.

ஜெயலலிதாவுக்கு என்று ஒரு சுழி. அந்தம்மாவை முன்பு தீவிரமாக எதிர்த்தவர்கள் கூட பின்னால் தீவிர ஆதரவு கொடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். வீரமணி, சோ, சுப்பிரமணிய சாமி, ராமதாஸ் போன்று நீளுகிறது. ஆனால் ஜெயலலிதா எல்லோரையும் தோலுறித்து காண்பித்ததற்காக அவருக்கு தமிழகம் கடமைப்பட்டிருக்கிறது. அவர் மீது வழக்குப் போட்ட சுப்பிரமணிய சாமி அவருக்கு கூஜா தூக்கினார். சுயமரியாதை தன்மானச்சிங்கங்களை காலில் விழுந்து போட்டோ எடுத்து பத்திரிக்கையில் வெளியிட்டார். பார்ப்பன நடிகை என்று பேசிக்கொண்டிருந்த வீரமணியை அவரது பெரும் ஆதரவாளராக மாற்றிக் காண்பித்தார். ஊழல் ஊழல் என்று பேசிக்கொண்டிருந்த கம்யூனிஸக்கட்சிகளை அவரது கூட்டணியில் சேர்த்தார். சிதம்பரத்தின் மீது மகளிர் அணியை ஏவிவிட்ட அவர் பின்னர் தமகா உடன் கூட்டு ஏற்படுத்தினார். பாமகவை வன்முறைக் கட்சி என்றும் புலிகளின் வால் என்றும் பேசிய சோ மூலம், மூப்பனாரிடம் பாண்டிச்சேரியை பாமகவிடம் ஒப்படைக்க தூதுவும் விட்டிருக்கிறார். அவரை உபயோகப்படுத்திக்கொண்டவர்கள் என்றால் பாரதீய ஜனதா கட்சி மட்டும்தான் எனக்கு ஞாபகம் வருகிறது. எனக்கு பெரிய புதிர், ஏன் வாஜ்பாயி திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய ஜெயலலிதா கேட்டதை கடைசிவரை மறுத்தார் என்பதுதான். இதற்கு விடை எப்போதாவது எதிர்காலத்தில் கிடைக்கலாம்.

மீண்டும் சோவுக்கு வருகிறேன். செக்குலர் முன்னணி என்பதை எல்லாம் கிண்டல் செய்து வந்த சோ, இப்போது செக்குலர் முன்னணிக்காக ஜெயலலிதாவுக்காக தீவிர வேலை செய்து வருகிறார். மூப்பனாரிடம் ஜெயலலிதா சார்பாக தூது சென்ற சோ, காங்கிரஸ் பாண்டிச்சேரியில் அரசமைக்க கேட்காமல், அதை பாமகவுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் பேசியிருக்கிறார். பா ம க-வை வன்முறைக் கட்சி, புலிகளின் வால் என்றெல்லாம் பேசினாரே சோ என்று எக்கச்சக்கமாய் யாரும் கேட்டுவிடக் கூடாது.

மூன்றாம் அணி என்று ஒன்று தோன்றி, அதன் சார்பில் முதலமைச்சர் பதவிக்காக சிதம்பரத்தை அந்த அணி முன்னிறுத்தினால், அதற்கு நல்ல வாய்ப்பு இருக்கும் என்பது என் கருத்து. கருணாநிதி, ஜெயலலிதா, சிதம்பரம் என்ற மூன்று பேர் முதலமைச்சருக்காக போட்டியிடும் காலத்தில், சிதம்பரத்துக்கு ஓட்டுப் போட்டு பார்க்கலாம் என்று தமிழர்கள் சிந்திக்கலாம். மூன்றாவது அணி உருவாக்க வேண்டும் என்பது எப்போதுமே மூப்பனாரின் எண்ணமாய் இருந்து வந்திருக்கிறது. எம் ஜி ஆர் , கருணாநிதியை எதிர்த்து மூன்றாவது அணியாக மூப்பனார் முயன்ற போது 25 சீட்டுகளைப் பெற்றது பலருக்கு நினைவிருக்கலாம். துரதிர்ஷ்டவசமாக , நாடாளுமன்றத்தில் எம் ஜி ஆர் ஆதரவு வேண்டும் என்பதற்காக, இந்திரா தன் சொந்தக் கட்சியான காங்கிரஸையே தமிழ் நாட்டில் பலி கொடுக்கத் துணிந்தார். மூன்றாவது அணி நிச்சயம் இப்போது பதவிக்கு வராவிடினும், தொடர்ந்த செயலாக்கத்தில் பத்தாண்டுகளிலாவது ஆட்சிக்கு வர வாய்ப்புண்டு.

இந்த முறை ஒரு வேளை இரண்டாவதாக வந்தாலும், அடுத்த முறை தேர்தலில், சிதம்பரம் முதலமைச்சராகி விடலாம். தமிழகத்துக்கு ஒரு நல்ல மாற்றாக இருக்கும்.

****

இடதுசாரிகளின் இன்னொரு வரலாற்று தவறு.

ஏன் இடதுசாரிகளை நான் வாரிக்கொண்டிருக்கிறேன் என்று பலர் கேட்கிறார்கள். முக்கியமான காரணம், இடதுசாரிகள் தமிழ்நாட்டில் முக்கியமான ஓட்டு வங்கியாக இல்லை என்றாலும், அவர்களது தாக்கம் தமிழ்நாட்டில் அதிகம் என்பதுதான். இன்றைய பெரும்பான்மையான சாதிக்கட்சிகள் பெரியார் சிந்தனை, இடதுசாரிகள் சிந்தனை ஆகிய இரண்டாலும் வெகுவாக பாதிக்கப்பட்டவை.

கீழ்நிலையில் உள்ளவர்களுக்காக போராடுகிறோம் என்ற வரிகளோடு கூடவே இடதுசாரிகளின் சிந்தனையையும் தன்னகப்படுத்திக்கொள்கிறார்கள். பிறகு சொந்த சாதிக்காரனுக்கு கம்பெனி வைக்க உதவும் விஷயமாக பின்னால் அரசுக்கு வந்ததும் சீரழிந்து, தொழிலாளர்கள் வழக்கம்போல முதலாளிகளை மட்டும் மாற்றிக்கொள்ளும் விந்தை தொடர்ந்து நடைபெறும் இந்த தமிழகத்தில், வாயில் விரலை வைத்துக்கொண்டு அலைவது இந்த ‘கீழ்நிலையில் ‘ உள்ள மனிதர்கள்தான்.

இடதுசாரிகளின் இன்னொரு வரலாற்றுத் தவறுக்கு வருகிறேன்.

புத்தாதேப் பட்டாச்சார்யா என்ற வங்காள முதலமைச்சர், வங்காள அரசுக்குச் சொந்தமான 67 தொழில் நிறுவனங்களை தனியாருக்கு விற்க முனைந்திருக்கிறார். இந்த 67 தொழில் நிறுவனங்களும் நலிந்த தொழில் நிறுவனங்கள் என்று எல்லோருக்கும் தெரியும். ஏன் நலிந்தன என்பதற்கு எந்த கொள்கை ரீதியான ‘மார்க்சியச் சித்தாந்த ‘ விளக்கம் தரப்போகிறார்கள் ? ஏன் அவைகளைத் தொழிலாளர்களுக்கே விற்கவில்லை ? தொழிலாளர்களுக்குச் (அரசு தொழிற்சாலைகள் மக்கள் சொத்து அல்லவா ?) சொந்தமான ஆலைகள் ஏன் நலிந்தன ? தொழிலாளர்களின் வேலைச் சித்தாந்தம் அதற்குக் காரணமா ? அப்படியெனில் சித்தாந்தத்தை மறு பரிசீலனை செய்ய அவர்கள் தயாரா ?

இடதுசாரிகள் இதுவரை பேசிக்கொண்டிருந்த எல்லா விஷயங்களுக்கும் எதிர்மறையான காரியம் இந்த தனியார் மயப்படுத்துவது. (இதில் வியாபாரிகள் தலைவர் சொன்னது இன்னும் வேடிக்கையானது. வங்காள முதலமைச்சர் போல முதலாளிகள் ஆதரவாக மற்ற முதலமைச்சர்களும் இருக்க வேண்டும் என்று பேசுகிறார்)

இவர்கள் பாணியிலேயே கேட்கிறேன் :- இதுவரை தனியார் மயத்துக்கும், உலகமயமாக்கலுக்கும் எதிராக தொழிலாளர்களை அணிவகுத்து கொளுத்தும் வெயிலில் அவர்களை தெருவில் பேரணி வகுக்க வைத்த இவர்கள் இப்போது ஏஸி அறைகளில் பேசுவதென்ன ? – இதுபோலத்தானே இவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

தனியார் மயமாக்கல் என்ற பெயரில் மீண்டும், மீண்டும் பெருமுதலாளிகளுக்குக் கம்பெனிகளைத் தாரை வார்ப்பதில், பா ஜ க, மார்க்ஸிஸ்ட் கட்சி, காங்கிரஸ் என்று எல்லாக் கட்சிகளும் ஒற்றுமையாய்ச் செயல் படுகின்றன. இந்த இரண்டுக்கும் மாற்றாக ஒரு சோதனை முயற்சி இந்தியாவிலேயே வெற்றிகரமாய் நடந்து வருகிறது. அமுல் பால் கூட்டுறவு அமைப்புத் தான் இது. இது பற்றித் தீவிர சிந்தனையோ , இதன் வெற்றிகளை மற்ற துறைகளுக்குப் பயன் படுத்தும் யோசனையோ யாரிடமும் இல்லை. ஏன் இந்தத் தொழிற்சாலைகளை தொழிலாளர்களும், நிர்வாகம் படித்த எம் பி ஏ-க்களும் இணைந்து நடத்தக் கூடாது. ‘இந்தியன் இன்ஸ்டிட்யூட் அஃப் மேனேஜ்மெண்ட் ‘ கல்கத்தாவிலேயே இருக்கிறது. இந்தக் கல்லூரி வல்லுனர்களிடம் ஏன் இதற்கு யோசனை கேட்க கூடாது இவர்கள் ? ‘பால்கோ ‘ அலுமினியக் கம்பெனியை ஸ்டெர்லைட் நிறுவனத்துக்குத் தாரை வார்க்க எல்லோரும் தயாராகிவிட்ட நிலையில் இது பற்றிய யோசனை ஏன் முன்வரவில்லை ?

அரசாங்க நிறுவனங்களில் வேலை நடக்காது என்பது சொந்த கிராமத்தைவிட்டு வெளியே போகாத ஒரு விவசாயிக்குக் கூட தெரிந்த விஷயம். அதை ஆயிரத்தெட்டு கொள்கை, கூப்பாடுகள் போட்டு அமுக்கி, மயிர்பிளக்கும் வாதங்கள் வைத்து விவரணம் பண்ணி அரசியல் பண்ணிக் கொண்டிருந்தார்கள் இந்த இந்திய இடதுசாரிகள். இன்று தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டார்களா என்று தெரியவில்லை.

தென்னிந்தியாவிலேயே தொழில்துறையில் பின் தங்கிய மாநிலமாக கேரளா இருப்பது ஆச்சரியமான விஷயம் அல்ல.

***

திருநெல்வேலி அருகில் நாங்குநேரியில் தொழிற்பூங்கா

அரசியல் பேச்சுக்கு நடுவில், நடந்த நல்ல காரியங்களை பாராட்ட மறந்துவிடக்கூடாது. தமிழக முதல்வர் கருணாநிதி நாங்குநேரியில் பெரிய அளவில் தொழிற்பூங்கா ஆரம்பித்திருக்கிறார்.

மனதாரப் பாராட்டுகிறேன். இங்கு இன்டெல் தொழில் நிறுவனம் பெரிய அளவில் சில்லுகளை தயாரிக்கப் போவதாகவும் செய்தி. ஏஓஎல் என்ற அமெரிக்க இணைய நிறுவனம் இங்கு 100 அமெரிக்க மில்லியன் டாலர் செலவில் ஆராய்ச்சிசாலையை அமைக்கப்போவதாகவும் செய்தி. இன்னும் ஏராளமான நிறுவனங்கள் இங்கு வரப்போகின்றன. சுமார் ஒரு லட்சம் பேருக்கு நேரடியாக வேலை கிடைக்கும் இங்கு என்று உத்தேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மறைமுகமாக வேலை வாய்ப்பு கிடைக்கப்பட போகிறவர்கள் ஏராளமாக இருக்கும்.

அமெரிக்க நிறுவனங்கள் இந்தியர்களுக்கு வேலை அளிப்பது இரண்டாம் பட்சம். முதல் விஷயம் இந்த தொழில் நுட்பங்கள் ஸ்குரூ டிரைவர் தொழில் நுட்பங்கள் அல்ல என்பது. ராஜீவ் காந்தி காலத்தில் பெரும்பாலும் கருவிகளை நிர்ணயிப்பதும், தயாரிப்பதும் தொழில் நுட்ப ஆராய்ச்சியும் வெளிநாடுகளிலேயே நடந்தன. இறுதியாக கருவிகளை பூட்டுவது மட்டுமே இந்தியாவில் நடந்து இந்தியாவில் பொருள்கள் விற்கப்பட்டன.

ஆனால் இப்போது தொழில் நுட்ப ஆராய்ச்சியும் இந்தியாவுக்கு வர ஆரம்பித்திருக்கிறது. நம் ஊர் அம்பாஸடர் கடந்த 50 வருடங்களாக அப்படியே இருப்பது ஒரு பெரிய சாதனைதான். கரிய புகையை அசிங்கமாக வெளியிட்டுக்கொண்டு, அந்த அம்பாஸடர் காரை சிறப்பாக்குவோம் என்ற எந்த வித எண்ணமுமில்லாமல் பெட்ரோலை தீய்த்துக்கொண்டு 50 வருடம் ஓட்டியாகி விட்டது. காரணம் எல்லோருக்கும் தெரியும். பேசி என்ன பிரயோசனம் ?

தென் பகுதி தமிழ்நாடு அதிமுக கோட்டை என்று தெரிந்திருந்தும், அனைத்து தமிழ் மக்களுக்குமாக சிந்தித்து அந்த பகுதியிலும் தொழிற்பூங்கா ஆரம்பிக்க உழைத்த முதலமைச்சர் கருணாநிதிக்கு என் பாராட்டுக்கள்.

***

அமெரிக்காவில் ஆள் தட்டுப்பாடு

அமெரிக்காவில் சுமார் 1 கோடிப்பேர் கணிணித் தொழில் நுட்பம் சம்பந்தமான வேலையில் இருக்கிறார்கள். (10 மில்லியன்). சுமார் 8,00,000 (எட்டு லட்சம்) கணிணித்தொழில் வேலையாட்கள் தட்டுப்பாடு இந்த வருடம் இருக்கும் என்று கணக்கிட்டு இருக்கிறார்கள். உலகெங்கும் கணக்கிட்டால் இன்னும் அதிகம் இருக்கும்.

இந்தியாவிலிருந்து வரும் கணிணித் தொழில் நுட்பவியலாளர்களுக்கு, கணிணி வேலையாட்களுக்கும் நிறைய வேலை உலகெங்கும் இருக்கிறது. இந்திய தொழில்நுட்பவியலாளர்களுக்கு மதிப்பும் இருக்கிறது. ஆனாலும் சுமார் 2,00,000 கணிணி பொறியியலாளர்களே இந்தியாவில் இருக்கிறார்கள் என்று படித்தேன். கணக்கு சரிப்பட்டு வரவில்லை.

ஆகவே, தனியார் பொறியியற் கல்லூரிகளை இன்னும் அதிகமாக தமிழ்நாட்டில் ஆரம்பிக்கவும், இன்னும் அதிகத்தரத்தில் தேர்வுகளையும் பாடங்களையும் நடத்தவும் வேண்டும். அதை விட முக்கியம், நல்ல மாணாக்கர்கள், நல்ல பொறியியலாளர்களாகி வெளிவர, பொறியியற் கல்லூரிகளில் நல்ல ஆசிரியர்களை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அந்த ஆசிரியர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் உண்மையிலேயே நல்ல சம்பளமும் தர வேண்டும்.

நிறைய பொறியியல் கல்லூரிகள் ஆரம்பிப்பதால், சாதிகளுக்கு இடையில் வரும் கோட்டா போட்டியும், மனவருத்தங்களும் குறைய வாய்ப்பு இருக்கிறது.

***

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்

இந்த வாரம் இப்படி – ஃபெப்ரவரி 11, 2001

This entry is part [part not set] of 18 in the series 20010211_Issue

மஞ்சுளா நவநீதன்


**

ஒரு இந்திய மருத்துவக் கம்பெனி வழி காட்டுகிறது

இந்தியாவின் சிப்லா என்ற மருத்துவக் கம்பெனியும் , ‘எல்லைகள் அற்ற மருத்துவர்கள் ‘ என்ற அமைப்பும் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள விருக்கின்றன. இதன் படி, எய்ட்ஸ் நோய்க்கான மருந்தை சிப்லா மருத்துவர்கள் அமைப்பிற்கு விற்பனை செய்யும். இந்த மருந்து எய்ட்ஸ் மிகக் கொடூரமாய்த் தாக்கியிருக்கும் ஆப்பிரிக்காவில் வினியோகம் செய்யப் படும். இந்த மருத்துவர் அமைப்பு நோபல் பரிசு பெற்ற அமைப்பு.

இந்த எய்ட்ஸ் மருந்துகள் அமெரிக்காவில் கிட்டத்தட்ட நாலரை லட்சம் ரூபாய் அளவிற்கு விற்கப் படுகின்றன. சிப்லாவின் விலை 13000 ரூபாய் தான். காரணம் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள காப்புரிமைச் சட்டங்கள் பெரிய மருந்துக் கம்பனிகளுக்கு ஆதரவாய் ஒருப்பது தான். அமெரிக்கக் கம்பெனிகள் ஏற்கனவே இந்த முயற்சியை முறியடிப்போம் என்று மிரட்டியிருக்கிறார்கள்.

உதாரணமாய் ஒரு மருந்து கண்டுபிடிக்கப் பட்டால், அந்த மருந்த எந்த முறையில் ஒரு கம்பெனி உருவாக்குகிறதோ அந்த முறைக்கு மாறாக வேறொரு முறையில் மருந்தைத் தயாரிக்க முடியும் என்றால் இந்தியாவில் இதற்குத் தடையில்லை. ஆனல் அமெரிக்க , ஐரோப்பா நாடுகளில் அந்த மருந்தை எந்த முறையானாலும் மற்ற கம்பெனிகள் தயாரிக்க முடியாது.

இந்தியாவிற்கு இருக்கிற இந்த அனுகூலம் பெருமளவில் மக்களுக்கு உதவியாகவும், பெரும் மருத்துவக் கம்பனிகளைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், மலிவு விலையில் மக்களுக்கு மருந்துகள் கிடைக்க போட்டி உருவாகவும் உதவுகிறது. ஆனால் 2005- வாக்கில் இந்தக் காப்புரிமைச் சட்டம் மாற்றியமைக்கப் படும் என்கிறார்கள். இதனால் இந்தியமக்கள் பெரும் துயருக்கு ஆளாக நேரிடும். இந்தியா பெரிய நாடாக இருப்பதால், அதிக அளவு மக்கள் ஒருமித்து கருத்து தெரிவிப்பதால் இந்த காப்புரிமைச் சட்டம் இவ்வளவு காலமாக இந்திய மக்களுக்குச் சார்பாக இருந்து வந்தது. (துண்டு துண்டாக இருந்திருந்தால், மற்ற ஆப்பிர்க்க நாடுகள் போல, வெளிநாட்டு மருந்துகளையும் வெளிநாட்டு மருந்து நிறுவனங்களையும் நம்பி இருக்க வேண்டிய நிலையில் ஒரு இனப்படுகொலையை சந்திக்க வேண்டி வந்திருக்கும். ஊழலுக்கு தலையாட்டும் ஜெயலலிதாவும் லல்லுவும் எந்த விதத்தில் இந்த மருந்து நிறுவனங்களை எதிர்கொள்வார்கள் என்பது யூகத்துக்கு இடமானது)

ஆப்பிரிக்கா எய்ட்ஸ் கொடூரத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற அக்கறை எந்த வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கும் இல்லை. சொல்லப் போனால், எய்ட்ஸ் மருந்துகள் அமெரிக்காவை விட ஆப்பிரிக்காவில் விலை அதிகம். இது ஆப்பிரிக்க மக்கள் மீது தொடுக்கப் படும் மறைமுகப் போர் என்று மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் சிப்லாவின் மனிதநேயப்பணி பாராட்டத் தக்கது மட்டுமல்ல, அது இந்தியாவிற்கும் சிப்லாவுக்கும் லாப நோக்கு உடையதும் கூட.

இதிலிருந்து நாம் பெரும் பாடம், இன்றைய இந்திய காப்புரிமைச் சட்டம் தொடர்ந்து இருக்க நாம் போராட வேண்டும் என்பதே.

*****

உலக வர்த்தக நிறுவனம் : அடுத்த மாநாடு ஆளில்லாக் காட்டிலே

உலக வர்த்தக நிறுவனம் சியாட்டில் நகரத்தில் நடந்த மாநாட்டின் போது பலதரமான எதிர்ப்பாளர்கள் இயக்கங்கள் நடத்தினார்கள். பசுமைக் கட்சி, தொழிலாளர் அமைப்புகள், வளரும் நாடுகள் பற்றிய அக்கறை கொண்ட அமைப்புகள் என்று பலவித அமைப்புகள் எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்டன. இது உலக வர்த்தக அமைப்பிற்கு தலைவலியாகவும், பாதகமான விளம்பரமாகவும் அமைந்து விட்டது. பார்த்தார்கள் : ஒரு அருமையான வழி கண்டுபிடித்தார்கள். தோஹா வில் (கத்தார் நாட்டின் தலைநரத்தில் ) அடுத்த மாநாடு நடத்துவது என்று முடிவு செஉதிருக்கிறார்கள்.

மிக அருமையான தேர்வு இது. இந்த நாட்டில் ஜன நாயகமும் இல்லை. மக்கள் பிரதிநிதிகளும் கிடையாது. சாதாரண எதிர்ப்புத் தெரிவித்தாலே கடுமையாய்த் தண்டனை கிடைக்கும். இஸ்லாமிய மன்னரின் ஆட்சி நடைபெறுகிறது இங்கே. யாரும் எங்களை எதிர்க்கவே இல்லை அதனால் நிம்மதியாய்க் கூட்டம் நடத்தி தீர்மானங்களை நிறைவேற்றி விடலாம் என்று நினைக்கிறது போலும் உலக வர்த்தக நிறுவனம். உலக ஏகாதிபத்திய நிறுவனம் என்று இதன் பெயரை மாற்றினாலும் பொருத்தம் தான்.

****

பிராமணியம் , தேவரியம், வன்னியரியம் இணைகிறது

தி மு க- மீது என்ன குற்றச் சாட்டு வேண்டுமானாலும் சொல்லலாம் ஆனல் வெளிப்படையான சாதி அரசியல் அது பண்ணியது என்று குற்றம் சாட்டுவது கடினம். (மறைமுகமாய், அந்தந்தப் பகுதிகளுக்குத் தகுந்தாற்போல் சாதிக் கணக்கீடு பண்ணி வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது. அதே நேரம் கீழ்ஜாதி மக்களுக்கு அவர்கள் எண்ணிக்கையை விட அதிக விகிதாச்சாரத்தில் அவர்களை அரசியலில் நிறுத்தியும் இருக்கிறது) ஜெயலலிதா தமிழ் நாட்டு அரசியலுக்கு அளித்த மாபெரும் கொடை என்று அப்பட்டமான சாதிய அரசியலைச் சொல்ல வேண்டும். தென் மானிலங்களில் தாம் என்னவோ குறிப்பிட்ட சாதியின் காவலாளி என்று காண்பித்துக் கொண்டு, கிருஷ்ண சாமியின் கட்சியை வன்முறைக்கும்பல் என்று சாடியது நேற்று நடந்த விஷயம். இன்று ராமதாஸ் கட்சியுடன் கூட்டு. ‘கொள்கைக் கூட்டணி ‘ என்று பேசி போன தடவை யார் எங்களுக்கு அதிக சீட்டுகள் கொடுக்கிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி என்று அறிவித்தவர் இவர். வாழப்பாடி ராமமூர்த்தியின் மீதுள்ள கோபத்தால் தான் ஜெயலலிதாவுடன் அவர் சேர்ந்தார் என்று யாருமே நம்பத் தயாரில்லை.

ஆனால் மக்கள் ஒட்டு மொத்தமாய் சாதித் தலைவர்களிடம் தம்மை ஒப்புக் கொடுத்துவிட்டு , செம்மறியாடுகள் போல் ஓட்டுப் போடுவார்கள் என்பது தப்புக் கணக்கு. இது இன்னும் சில வருடங்களில் அப்பட்டமாய்த் தெரியவரும். இப்போது உள்ள சாதிக் கட்சிகள் எல்லாம் உதிர்ந்து போய் விடும் என்று சொல்லலாம். இன்றைய அரசியல் விசித்திரத்தினால் மக்களை வெறும் சாதிச் சார்பை மட்டுமே பார்க்கிறவர்கள் என்று தப்புக் கணக்கு போடலாகாது.

ஆனால் இன்றைய அதிமுகவின் ஜாதி வெறி அரசியலை, திமுகவின் பிராம்மணிய எதிர்ப்பின் விளைவுதான் என்று வாதிடலாம். ஆனால் திமுக தன் பிராம்மணிய எதிர்ப்பை கொஞ்சம் கொஞ்சமாக கைகழுவிக்கொண்டு தமிழ்நாட்டின் எல்லாமக்களின் கட்சியாகவும் தன்னைக்காட்டிக்கொள்ளும் முயற்சியின் போது, அதிமுக அப்பட்டமான ஜாதி அரசியலை கைக்கொள்ளுவது ஜெயலலிதாவின் எப்படியாவது ஆட்சியில் அமர்ந்துவிடவேண்டும் என்ற எண்ணத்தையே பிரதிபலிக்கிறது.

ஆனால் தமிழ்மக்கள் தமிழ்அரசியல் வாதிகளைவிட புத்திசாலிகள்.

****

பழம்பெரும் எழுத்தாளர் சாவி மறைவுக்கு அஞ்சலி

சாவி என்ற பெயரில் எழுதிவந்த சா.விஸ்வநாதன் எப்போதுமே ஒரு வெளிப்படையான பத்திரிக்கையாளர். கருணாநிதியின் நெருங்கிய நண்பராக இருந்தவர்.

தினமணிக்கதிர் இதழின் ஆசிரியராக இருந்தபோது, ஜானகிராமன் ஜெயகாந்தன் போன்ற சிறந்த எழுத்தாளர்களுக்கு தளமமைத்துத் தந்தவர். குங்குமம் பத்திரிக்கையின் முதல் ஆசிரியர். சாவி என்ற பத்திரிக்கையைத் தோற்றுவித்தவர். இளைஞர்களை ஊக்குவித்தவர். மாலன் போன்ற எழுத்தாளர்களுக்கு ஜனரஞ்சகப் பத்திரிக்கைகளில் இடம் அளித்தவர். வித்தியாசமான எழுத்துக்களை (முடிந்தமட்டும்) ஆதரித்தவர்.

தான் மணியன் என்ற நபருக்கு கோஸ்ட் எழுத்தாளராக இருந்ததை வெளிப்படையாகச் சொன்னவர். திராவிட இயக்கத்தினர் பிராம்மணியத்துக்கு எதிராகவே நிற்கிறா1கள்; பிராம்மணர்களுக்கு எதிரானவர்கள் அல்லர் என்று கூறிக்கொண்டிருந்தார்கள். அதற்கு ஒரு நல்ல உதாரணம் கருணாநிதிக்கும் சாவிக்கும் இடையே இருந்த நட்புறவு.

விசிறி வாழை, ஊரார் போன்ற சிறந்த நெடுங்கதைகளையும் வாஷிங்டனில் திருமணம் போன்ற நகைச்சுவை கதைகளையும் எழுதியவர். இரண்டு கலாச்சாரங்களுக்கிடையே சடங்குகளும் நடைமுறைகளும் மாறுபடும் விதத்தை மக்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை நகைச்சுவையுடன் அணுகியவர்.

அவர் மறைவுக்கு, அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அவரது வாசகர்களுக்கும் திண்ணை ஆழ்ந்த வருத்தத்தினை தெரிவித்துக்கொள்கிறது.

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்