இந்த வாரம் இப்படி, ஏப்ரல் 21, 2001

This entry is part [part not set] of 15 in the series 20010422_Issue

மஞ்சுளா நவநீதன்


***

திருச்சியில் தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்பு குழுவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

பொதுச்சொத்துக்களை வீணடிக்கும் கட்சிகளுக்கு ஓட்டுப்போடக்கூடாது என்று வலியுறுத்தி நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்து என் ஆதரவு. நன்றாக நானும் கூட சென்று கோஷம் போட்டேன். (நிறைய என்னைப்போல பெண்கள்)

***

இந்திய எல்லைக்காப்பு படைவீரர்கள், பங்களாதேஷ் ராணுவத்தால் சித்திரவதைக்கொலை

நிலத்தகராறு அடிப்படைக்காரணம். இந்தியாவுக்குள் சுமார் 55 கிராமங்கள் பங்களாதேஷைச் சேர்ந்தவை. பங்களாதேஷின் உள் இருக்கும் சில 111 கிராமங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை. இந்த இடங்களுக்கு சாலைகள் போடுவதும், இந்த இடங்களுக்கு இந்தியப் போர்வீரர்கள் போவதும் தொடர்ந்து ஒரு பிரச்னையான வேலையாக இருந்து வந்திருக்கிறது. கிராமங்களை அந்தந்த நாடுகளோடு சேர்த்துவிடலாம் என்றால் அதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஓட்டு வேண்டும். அப்படிப்பட்ட ஓட்டு காங்கிரசுக்கு இருந்தகாலத்தில் கூட இது கண்டுகொள்ளாமல் விடப்பட்டு விட்டது.

இதற்கு இரண்டுவிதமான பார்வைகளை இந்தியப்பத்திரிக்கைகளில் காண்கிறேன்.

முதலாவது, பாஜக அரசு பங்களாதேஷை கெட்ட நாடாக முஸ்லீம் நாடாக காண்பித்து வங்காளத்திலும் அஸ்ஸாமிலும் ஓட்டு வாங்க நடத்தும் நாடகம் என்று. இது பாஜக இருக்கும் தேசீய முன்னணி அரசு கிறுத்துருவமான அரசு எனக்காட்ட நடக்கும் முயற்சி.

இரண்டாவது, ராஜீவ் அல்லது இந்திரா இந்தியாவை ஆண்டு கொண்டிருந்தால் பங்களாதேஷ் இப்படி தைரியமாக இந்திய எல்லைக்காவல் படையினரை துன்புறுத்தி கொல்லுமா ? என்ற கேள்வி. இது பாஜக கையாலாகாத அரசு என்று காட்ட நடத்தும் முயற்சி.

இரண்டுமே ஒன்றுக்கொன்று எதிரான பார்வைகள் என்பது இரண்டுகருத்துகளையும் ஒரே கட்டுரையில் எழுதும் பத்திரிக்கையாளர்களுக்கு புரியாமல் போயிற்றா அல்லது அவர்கள் தங்களுக்கு பாஜக அரசு மீது இருக்கும் வெறுப்பில் என்ன எழுதுகிறோம் என்றுகூட சிந்திக்காமல் எழுதுகிறார்களா என்று தெரியவில்லை.

எனக்கென்னவோ வேறு காரணம் தோன்றுகிறது. வெகுவிரைவில் பங்களாதேஷ் நாட்டில் தேர்தல் வருகிறது. எதிர் அணியில் இருக்கும் திருமதி ஜியா அவர்கள் இந்திய எதிர்ப்பு உணர்வை பங்களாதேஷில் ஊட்டி வளர்த்து வருகிறார். பிரதமராக இருக்கும் ஹஸீனா வாஜெத் இந்திய ஆதரவாளர் என்ற ‘குற்றச்சாட்டை ‘ ஜியா பரப்பி வருகிறார். இஸ்லாமிய தீவிரவாதிகள் மத்தியில் இந்திய எதிர்ப்பு முக்கியமான் ஓட்டு சேகரிக்கும் உத்தி. தான் இந்திய ஆதரவாளர் இல்லை எனக்காட்டிக்கொள்ள ஹஸீனா செய்யும் வேலைதான் என்பது என் அபிப்ராயம்.

பங்களாதேஷ் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு பிழைப்புத்தேட வந்த ஏழைகள் மீது இந்தக் கோபம் திரும்பாமல் இருக்கவும், நீண்ட பங்களாதேஷ்-இந்திய நட்புறவு இந்தக்கொலைகளால் பாதிப்புக்குள்ளாகாமல் இருக்கவும் பிரார்த்தனைதான் செய்ய முடியும். கோபத்தில் பங்களாதேஷின் உள்ளே இந்தியா புகுந்து அடித்தால் இரண்டு நாள் கூட அந்த தேசம் இருக்காது என்பது பங்களாதேஷ் நாட்டுக்குத் தெரியாததல்ல. வாஜ்பாயி டாக்காவுக்கு பஸ்ஸில் சென்று அங்கு நட்புறவு வளர்க்க முயன்றார். லாகூருக்கு பஸ்ஸில் சென்று கார்கில் வாங்கிக்கொண்டு திரும்பி வந்தது போல, டாக்காவிலிருந்து என்ன வாங்கிக்கொண்டு வரப்போகிறார் என்பதை காலம்தான் பதில் சொல்லும்.

***

வாய்பாயி படத்தை பயன்படுத்த யாருக்கு உரிமை ?

தமிழக பாஜக திமுகவுக்கு மட்டுமே வாஜ்பாயி படத்தை பயன்படுத்த உரிமை என்று கூறியிருக்கிறது. நல்ல வேடிக்கை. இன்று வாய்பாயி படத்தை போட்டு ஓட்டு கேட்கும் நிலைக்கு பெரியார்தாசர்கள் வந்தது. அதில் போட்டா போட்டி வேறு.

***

சுப்பிரமணியசாமி செய்யும் வேடிக்கை

‘சுமார் 4700கோடி ரூபாய்களுக்கு மேல் சோனியா காந்தியும் இத்தாலி நாட்டு டூரின் ஊரில் இருக்கும் சொந்தக்காரர்களும் சொத்து வைத்திருக்கிறார்கள். அவர் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு போட வேண்டும் ‘ என்று சுப்பிரமணிய சாமி கேட்டது யார் காதிலும் விழவில்லை. கேள்வி நேரத்தின் போது, மந்திரி வசுந்தரா ராஜி சிந்தியா, ஒரு உறுப்பினர் அதுசம்பந்தமான கேள்வி கேட்டதற்கு பதில் சொல்லும் போது, அது போல எந்த ஆரம்ப விசாரணையும் அரசாங்கம் செய்யவில்லை என்று சொன்னதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் போட்ட ஆட்டத்தில் இன்னும் பாராளுமன்றம் நடைபெறவில்லை.

ஆரம்ப விசாரணை கூட செய்யவில்லை என்றுதான் சொல்லியாயிற்றே, இன்னும் என்ன கலாட்டா என்று கேட்டால், அந்தக் கேள்வியையே எப்படி அனுமதிக்கலாம் என்று தகராறு.

சோனியாவுக்கு மடியில் கனமில்லை என்றால் வழியில் என்ன பயம் ? விசாரணை செய்யச்சொல்லி சவால் விடவேண்டியதுதானே ? ஏன் இந்த ஆர்ப்பாட்டம் ?

அம்பிகா சோனி தொலைக்காட்சியில் பேசும்போது ‘சுப்பிரமணிய சாமி போன்ற ஆட்களை அரசியலிலிருந்து ஓரம் கட்ட வேண்டும் ‘ என்று பேசியிருக்கிறார். இதே சுப்பிரமணியசாமிதான் ஜெயலலிதாவையும் சோனியாவையும் டாபார்ட்டி வைத்து சந்திக்கவைத்து சுமார் 4700 கோடி ரூபாய் அளவுக்கு இந்திய மக்கள் வரிப்பணத்தை ஒரு தேவையில்லாத தேர்தல் மூலம் வீணடிக்க வைத்தவர் என்பதை சோனி மறந்து விட்டார். அப்போது பதவி ஆசையில் சுப்பிரமணியசாமி என்னவாகத் தெரிந்தார் என்று தெரிந்தால் நல்லது.

***

இறுதியாக ஒரு வேண்டுகோள். http://www.techreview.com என்ற முகவரிக்கு போய் நல்ல நல்ல அறிவியல் விஷயங்களைப் படிக்கலாம். தமிழில் புரிந்து கொள்வது போல எளிய நடையில் உங்களால் அவைகளை மொழியாக்கம் (அர்த்தம் அனர்த்தமாகாமல்) செய்யமுடிந்தால், தழுவி எழுதிய கட்டுரைகளை திண்ணைக்கு அனுப்பினால், திண்ணையில் உட்கார்ந்து வெறுமே பல்குத்திக்கொண்டிருக்கும் பலர் உங்களை வாழ்த்துவார்கள்.

***

Series Navigation