இந்து அறநிலையத் துறையும், சில மடங்களும், இந்துத்துவாவும்

This entry is part [part not set] of 39 in the series 20060512_Issue

கற்பக விநாயகம்


பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில், இந்து ஆலயங்களை நிர்வகிக்கும் பொறுப்பு மதத் தலைவர்கள், ஆன்மீக சான்றோர்கள், துறவியர்கள் அடங்கிய தனி வாரியத்திடம் ஒப்படைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அக்கட்சி ஆட்சிக்கு வரப்போவதில்லை என்றாலும், இக்கொள்கை முடிவில் அடங்கி இருக்கும் விசமத்தனத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆலயங்களை நிர்வகிப்பது என்பதை, நாம் ஏதோ கட்டிடத்தையும், கருங்கல் சிலையையும் சுத்தமாய் வைத்துக் கொள்வதுதானே என மேலோட்டமாய்ப் புரிந்து கொண்டோமானால், இக்கொள்கையின் சூட்சுமம் புரியாது.

தமிழ் நாட்டில் உள்ள பெருங்கோவில்களுக்கு மன்னர்களும், பின்னர் வந்த பாளையக்காரர்களும், பின்னாளில் ஜமீன்தார்களும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வரியிலி நிலமாய் எழுதி வைத்தனர். அச்சொத்துக்களில் இருந்து வரும் வருமானத்தில்தான் உலகுக்கெல்லாம் படியளக்கும் எம்பெருமான்கள் ஜீவிதம் நடத்திக் கொண்டு வருகின்றனர்.

உதாரணமாக மதுரை மீனாட்சி அம்மனை வாழ வைக்க, தெற்கே சாத்தூர் வரை பல ஊர்களின் நிலங்கள் இருந்தன.

பா.ஜ.க.வ்¢ன் சகோதர அமைப்பான இந்து முன்னணியும் “கோவில் சொத்துக்களை இந்துக்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும்” என்று ரொம்ப காலமாய் சொல்லி வருகின்றது.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் வரை இந்நிலங்கள் எல்லாம், பார்ப்பனர்களால் அறங்காவலர்கள் எனும் பெயரால் ஏகபோகமாய் ஆண்டு அனுபவிக்கப்பட்டு வந்தன.

மதுரை மீனாட்சி கோவில் பூசகர்களின் தனிச்சொத்தாக அவை மாறிப்போய் ஒவ்வொரு சிவாச்சாரியாரும் கொழுத்த பண்ணைகளாய் விளங்கியதை ‘fபுல்லரின்’ ‘தேவியின் திருப்பணியாளர்கள்’ ஆய்வு நூல் பட்டியலிட்டுக் காட்டுகின்றது.

இக்கோவில் நிலங்களில் மேல் வாரம், கீழ் வாரம் என இடை நிலை சாதியினரும், தலித்களும் ரத்தம் சொட்டப் பாடுபட்டனர்.

இந்நிலங்களில் இருந்து மீட்டப்பட்ட பணம் கோவிலின் நலனுக்கென்று சிறு துளியே பயன்பட்டது. பெரும்பகுதியை பார்ப்பனர்கள் தமது இகலோக இச்சைகளைத் தீர்க்கவும், ஊதாரித்தனமான செலவுக்காகவும் பயன்படுத்தினர்.

இசை, கூத்து, தாசிகளின் கூட்டம் என்று கோவில் பணத்தை வாரி இறைத்தனர்.

கோவில் நிலங்களை ஆண்டனுபவித்த மேட்டுக்குடியினரின் செயலை, பாரதியார் 29/09/1906 இல் கீழ்க்கண்டவாறு எழுதி இருக்கிறார்.

“ஆலயச் சொத்துக்கள் முதலியவற்றை யார் மேல் பார்க்கிறார்கள்? நம்மவர்கள்தானே? இவர்கள் சரியானபடி நடக்கிறார்களா? தேவஸ்தானக் கமிட்டிகள், ஆலயப் பஞ்சாயத்துக்கள் இவற்றின் சீர்கேட்டை நம்மவர்களில் யார்தான் அறியமாட்டார்கள்? வாயினால் வேதாந்தம் பேசச் சொன்னால் இந்தப் பஞ்சாயத்தாரெல்லாம் வெகு செம்மையாகப் பேசுவார்கள். ஆனால் இவர்கள் தமது சொந்தப் பிழைப்பிற்கும், வேறு பல அதர்ம விஷயங்களுக்கும் தர்ம சொத்தை வாரி இறைப்பதற்கு வரம்பே கிடையாது.”

······················································

இவ்வாறு கொள்ளை அடிக்கப்பட்ட கோவில் சொத்துக்களைப் பாதுகாக்க, ஜஸ்டிஸ் கட்சி, சென்னை மாகாணத்தை ஆண்ட 1920களில், இந்து அறநிலையத் துறை உருவாக்கப்பட்டுப் பெருங்கோவில்களின் நிர்வாகம், இத்துறையின் கீழ் வந்தது. இத்துறை ஆரம்பிக்கப்பட்ட பின்னர்தான், அதுவரை நடந்து வந்த கோவில் சொத்துக் கொள்ளைகள் வெட்ட வெளிச்சமாய்த் தெரிந்தன.

“இச்சட்ட முன்வரைவு தயாராகும் முன்னரே சீனுவாச அய்யங்காரும், வெங்கட் ரமண அய்யங்காரும் அடிக்கடி போய் மடாதிபதிகள், மகந்துக்களைப் போய் சந்தித்ததும், சத்திய மூர்த்தி அய்யரும்,வெங்கட் ரமண அய்யங்காரும் சட்டசபையில் பிரயோஜனம் இல்லாத தத்துவங்களைக் கொண்டு வந்து தேவஸ்தான மசோதாவைத் திருத்தவும், மாற்றவும் அடிக்கடி பிரேரேபரணை கொண்டுவருவதுமாயும், உபயோககமில்லாத கேள்விகளைக் கேட்க முனைந்ததன் மூலம், தேவஸ்தான மசோதாவை பார்ப்பனர்கள் எவ்வகையில் எதிர்கொண்டார்கள் என்பதும் புலப்படும்” (குடி அரசு 14/02/1926) எனும் குடியரசு செய்தியில் இருந்து இச்சட்டத்தை வரவிடாமல் தடுக்கப் பார்ப்பனர்கள் மேற்கண்ட பகீரதப் பிரயத்தனங்கள் தெளிவாய்த் தெரிகின்றன.

இச்சட்டத்தை சட்டசபையிலேயே ஒழித்துக் கட்ட பார்ப்பன உறுப்பினர்கள் சுமார் 500 திருத்தங்களை முன்வைத்தனர். இதனால் பெரியார், இம்மக்களைக் கடிந்து தனது குடியரசில் எழுதினார்.

இச்சட்டத்தினை அறிமுகம் செய்யும்போது பெரியார் “தேச மகாசபையின் பெயரால், இந்து மத பரிபாலன மசோதாவை எதிர்ப்பது போலிச் செயலாகும். மகந்துகளையும், மடாதிபதிகளையும் தொங்கிக்கொண்டு நிற்கும் சுய நலங்கொண்ட பார்ப்பனர்களின் இழிவான தந்திரங்கள் வெளிப்படையாய்ப் புலப்படுகின்றன. தென்னிந்தியப் பார்ப்பனரல்லாதாரின் சார்பாக நான் முழுமனதுடன் ஆதரிக்கிறேன்” (குடி அரசு 22/08/1926) எனச் சொல்லி ‘இந்து அறநிலயத் துறை மசோதா’வை ஆதரித்து இருக்கிறார்.

இத்தகைய சட்டங்கள் தமிழ்நாடு, கேரளா தவிர இதர மாநிலங்களில் இல்லாததால், அறங்காவலர் எனும் பெயரில் இன்னமும், பார்ப்பனர்கள், முன்னாள் ராஜா /ஜமீன்தார்களால் கோவில்கள் ஒட்டச் சுரண்டப்பட்டு வருகின்றன.

கோவில்களைத் தவிர ஏகப்பட்ட விளைச்சல் நிலங்களை இந்து மதத்தின் பல்வேறு மடங்கள் சொந்தமாய் வைத்துள்ளன. தமிழ்நாட்டில் சங்கர மடம், திருப்பனந்தாள், திருவாவடுதுறை, மதுரை, தருமபுரம், குன்றக்குடி ஆதீனங்களின் சொத்துக்களே 6 லட்சம் ஏக்கர் வரை என தோழர்.நல்லகண்ணுவின் ஒரு கட்டுரை குறிப்பிடுகிறது. இம்மடங்களின் சொத்துக்களை அரசு இன்னமும் கையகப்படுத்தவில்லை.

இச்சொத்துக்களை இன்னமும் ஆண்டு அனுபவித்து வருபவர்கள் பார்ப்பன, வெள்ளாள சாதி இந்துக்களே.

காசி முதல் கன்னியாகுமரி வரை இம்மடங்களுக்கு சொந்தமாய் பல ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்கள் இருக்கின்றன.

இம்மடங்களில் பட்டத்துக்கு வருபவர்கள் குறிப்பிட்ட உயர் சாதியில் பிறந்திருக்க வேண்டும் என்பது விதி. இச்சொத்துக்களை நிர்வாகம் செய்யவோ, ஆண்டனுபவிக்கவோ அச்சாதியினரே உரிமை பெற்றுள்ளனர்.

தற்போது, மடங்கள் நீங்கலான ஏனைய கோவில்கள் இந்து அறநிலையத்துறையின் கீழ் வருவதால், கோவில் கணக்கரில் இருந்து இன்ன பிற வேலைகள் (அர்ச்சகர் தவிர) அனைத்து சாதியினருக்கும் இட ஒதுக்கீட்டு முறையில் தரப்படுகின்றன.

ஓரளவிற்கு சமூக நீதி, இந்து அறநிலையத்துறையில் இருப்பதற்குக் காரணம், அத்துறை அரசின் கட்டுப்பாட்டில் வருவதால்தான்.

······················································

பா.ஜ.க. விரும்புவது என்ன என்றால், 85 ஆண்டுகளுக்கு முந்தைய முறைப்படி மீண்டும் பார்ப்பனர்கள் கையில் கோவில் சொத்து போய்ச் சேரவேண்டும் என்பதே. இது எதில் போய் முடியும் என்றால், மீண்டும் கோவிலை விட்டு அ-பிராமண வேலையாட்களும், அலுவலர்களும் துரத்தப்படுவதில் போய் நிற்கும்.

தற்போது மாநில அரசின் கீழ் இந்து அற நிலையத்துறை வந்தாலும், உண்மையில் அரசுக்கு நெருக்கமான மடத்தலைவர்களின் நிர்வாகமே கோவில்களில் நடைபெறுகின்றது. இதற்கு ஆதாரமாய் 2004 ஆம் ஆண்டு கும்பகோணம் மகாமகத்தின்போது, கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பாழடைந்த கோவில்களைப் புணரமைக்க ஜெயா அரசு, இத்துறையின் பணமான ரூபாய் 50 கோடியை சங்கராச்சாரி மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்புகளுக்குத் தந்தது.

மகாமகத்தின்போது தஞ்சை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளராக இருந்த திருஞானம், மாவட்ட வருவாய் அலுவலர் முனியப்பன் ஆகிய இருவரும் தலித்கள். இருவரும் மகாமகத்தை ஒட்டி, கோவிலுக்குள் வரவேண்டி இருக்கும்; எனவே கோவில் தீட்டாகி விடக்கூடும் என்பதால், அவர்கள் இருவரும் சங்கராச்சாரியின் உத்தரவின் மூலம் பணி மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்து அறநிலையத் துறை உயிருடன் இருக்கும்போதே தலித்கள் இவ்வாறு நடத்தப்படுகின்றனர் எனும்போது இதனை ஆன்மீகத் தலைவர்கள் கையில் கொடுத்தால் நிலமை இன்னும் மோசமாகத்தானே ஆகக்கூடும் !

இந்து அற நிலையத் துறையை ஒழித்துக் கட்டக் குரல் கொடுப்பதன் மூலம், இந்து முன்னணி, பா.ஜ.க. ஆகிய அமைப்புகள், இந்துக்களில் எப்பிரிவினரின் நலன்களை முன்னிறுத்துகின்றன என்பது அம்பலமாகி இருக்கின்றது.

······················································

ஆன்மீக சான்றோர்கள், துறவியர்கள் அடங்கிய தனி வாரியத்திடம் கோவிலை ஒப்படைப்பார்களாம்.

ஏற்கெனவே இங்கு துறவிகள் அத்தனை பேரும் கோடிகளில் புரண்டு கொண்டு சுயநிதிக் கல்லூரி வியாபாரத்தில் இருப்பது போதாதா?

இக்கட்சி குறிப்பிடும் சான்றோர்களின் ஆன்மீகத் தரத்தை எதை வைத்து அளப்பார்கள்? பிறப்பின் அடிப்படையிலா?

நியாயமாய் நாம் செய்ய வேண்டியது என்ன என்றால், இருக்கும் கோவில் நிலங்களையும், மடங்களின் நிலங்களையும் பறிமுதல் செய்து, அவற்றை உழுபவர்களுக்கே சொந்தமாக்க வேண்டும்.

உலகமெல்லாம் படியளக்கும் பெருமாள், தன்னைத் தானே கவனித்துக் கொள்ளட்டுமே.

······················································

இந்துத்துவ அமைப்புகள் நாட்டார் தெய்வங்களையும் தம்முள் இழுத்துச் செரிக்க முனைகின்றது என முன்னர் குறிப்பிட்டிருந்தேன்.

எழுத்தாளர் பாமரன் ஒரு யோசனையைச் சொல்லி இருக்கின்றார். வருமானம் செழித்துக் கிடக்கும் கபாலீச்சுவரர், மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகர்களை ஒரு வருசத்தில் ஆறுமாதம், வறுமையில் வாடும் அய்யனார் கோவிலுக்கும், அய்யனார் கோவில் பூசாரிகளை கபாலீச்சுவரர், மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் இடமாற்றம் செய்து அனைத்துத்தரப்பு அர்ச்சகர்/பூசாரிகளின் வாழ்வில் ஒளியூட்டலாமே என்பதுதான் அந்த யோசனை. இதற்கு ஆதரவு தெரிவித்து இதனை நிறைவேற்ற பா.ஜ.க. / இந்து முன்னணி முன் வரத் தயாரா?

······················································

இந்து அறநிலையத்துறையின் வருமானத்தில் இருந்து சிறு பங்கை எடுத்து நலிவுற்ற கிராம தேவதைகளின் கோவில்களில் விளக்கெரிக்க ஜெயாவின் 1991-96 ஆம் ஆண்டுக்கால ஆட்சி வழிவகை செய்திருந்தது. இதன் மூலம் அக்கோவில்கள் அரசு உதவி பெறும் கோவில்களாக மாறி இருக்கின்றன. இதனால், அக்கோவில்களுக்கு அரசு விதிமுறைகளை அமுல்படுத்தக் கட்டளை இட முடியும்.
எனவே அரசு உதவி பெறும் கோவில்களை அனைவரும் நுழைவதற்கு அனுமதிக்க வேண்டும்.

ஆனால் நிலைமை என்னவாயிருக்கிறது?

பல சிற்றூர்களில் இச்சிறு தெய்வங்கள், ஆதிக்க சாதிகளின் சாதிக் கட்டுப்பாட்டை மீறமுடியாமல்தான் கிடக்கின்றன.
கூத்தரம்பாக்கத்தில் தலித்மக்கள் கோவில் நுழையத் தடை இருந்தபோது நமக்குக் கிடைத்த ஆன்மீகத் தலைவர்கள் “நீங்க சுத்தமா இல்லே” எனத் திருவாய் மலர்ந்தவர்கள்தானே. இத்தகைய ஆன்மீகத் தலைவர்களிடம் கோவில்களை ஒப்படைக்கச் சொன்னால் என்ன நடக்கும்?

தெய்வங்களிடையே பேதங்கள் எல்லாம் இல்லை. மாடனும் காடனும் நமது தெய்வங்கள்தான் எனப் பசப்பும் இவர்கள், எந்த ஊரிலும் தலித்களை, ஆதிக்க சாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் அம்மன் கோவில்களில் நுழையச் சிறு துரும்பையும் எடுத்துப் போட்டதில்லை.

அனைத்துச் சாதியிலும் உள்ள விவசாயிகளைத் திரட்டி, கோவில் நுழைவை நடத்தியவர்கள், விவசாயிகள் விடுதலை முன்னணியினர்தான்.

விழுப்புரத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊர் காரப்பட்டு. அங்குள்ள காரப்பட்டு அம்மன் கோவிலில் தலித் மக்கள் நுழையத் தடை போட்டிருந்தனர், அவ்வூர் ஆதிக்க சாதி இந்துக்கள். தலித் மக்களை இழிவுபடுத்தும் ஆதிக்க சாதியினரின் இப்போக்கைக் கண்டிக்க எந்த இந்து அமைப்பும் தயாராக இல்லை. ஆனால் விவசாயிகள் விடுதலை முன்னணியினரின் தலைமையில் தலித் மக்கள் ஒன்று திரண்டு காரப்பட்டு அம்மன் கோவிலில் நுழைந்தனர்.

அப்போது தலித் பெண் ஒருவர் மேல் அருள் வந்து “ஏய்! இன்னைக்கு நடந்த மாதிரி, எல்லா ஜனங்களும் சேர்ந்து படையல் போட்டாத்தாண்டா ஏத்துக்குவேன்” என அம்மன் வாக்கு சொன்னது.

அதே அம்மனே ஆதிக்க சாதிப் பெண் ஒருவர் மேல் அந்த ஊரில் இறங்கி “ஏய்! நுழைஞ்சிட்டீங்களா! காலை வச்சிட்டீங்களா! என் ஒடம்பெல்லாம் பொச பொசன்னு எரியுதுடா! இனிமே நான் இருக்க மாட்டேண்டா” என்றது.

கோவிலை அதன் பின்னர் நிரந்தரமாகப் பூட்டி வைத்தனர் ஆதிக்க சாதியினர்.
இதுதான் இந்து சாமிகளின் சாதி வெறி.
(ஆதாரம்: புதிய கலாச்சாரம், மார்ச் 1998)

கோவில்களை எல்லாம் ஆன்மீகச் சான்றோர்களிடம் ஒப்படைத்து விட்டால், இக்கோவில்களை, இந்து ஆன்மீகப் புலிகள், தலித்களுக்குத் திறந்து விடப்போகிறார்களா என்ன?

அரசின் நிதி உதவி பெறும் கோவில்களிலேயே, தலித்கள் நுழைய முன்கை எடுக்காத, இந்த ஆன்மீகத் தலைகளிடம் இதை எப்படி எதிர்பார்க்க முடியும்?

கூரை ஏறிக் கோழியே பிடிக்க முடியாத இவர்கள், எங்கே வானம் ஏறி வைகுண்டம் போவது?

······················································

தற்போது நடைமுறையில் இருந்து வரும் இந்து அறநிலையத் துறையில் உள்ள வேலை வாய்ப்புக்களில் பலவற்றிற்கு விண்ணப்பிக்கக் கூட பெண்களுக்கு அனுமதி கிடையாது. கேட்டால், ஆகம விதிகள் அதைத் தடுக்கின்றன எனக் காரணம் வேறு. பெண்களில் பலரும் பல முறை நீதி மன்றம் சென்று வாதாடி, சில வேலை வாய்ப்புக்களைப் பெற்று அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கைப்படி வேலை கிடைத்து வாழ்கின்றனர்.

‘வேலைக்குப் போகும் பெண்கள் எல்லாரும் ஒழுக்கம் கெட்டவர்கள்’ என்ற கருத்தினை உடைய நமது ஆன்மீகத் தலைவர்களின் கையில் கோவில்கள் போனால், பெண்களின் வேலைவாய்ப்பும் பறி போகும் அபாயம் இருக்கின்றது.

······················································

மேற்கு வங்கத்தில் இருக்கும் ரஹாராவிலுள்ள ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தர் கல்லூரி, கிழக்கு பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகளின் நலனுக்காக மத்திய மாநில அரசுகளின் நிதி கொண்டு நிறுவப்பட்டது. இதற்காக அப்போது சுமார் 7.25 லட்சம் ரூபாய் நிதி தரப்பட்டது. ராமகிருஷ்ணா மடம், இக்கல்லூரிக்கு நிலம் மட்டும் அளித்திருந்தது. 1963ல் கட்டிடப் பணி முடிந்ததும், பாகிஸ்தான் அகதிகள் மூலமாக ராமகிருஷ்ணா மடம் விண்ணப்பம் போட்டு, மத்திய அரசின் அகதிகள் மறுவாழ்வு அமைச்சகம் மற்றும் மாநில அரசின் நிதியைப் பெற்று சிறுவர்களுக்கான விடுதியை நடத்த முன்வந்தது. இதன்மூலம் அரசின் நிதியுதவி பெறும் கல்லூரியாக 1975 வரை அது இருந்து வந்தது. அது வரை, மாநில அரசு 3 ஆண்டுகளுக்கொரு முறை கல்லூரி நிர்வாகக் கமிட்டி ஒன்றை நியமித்து, அக்கமிட்டி மூலம் கல்லூரி முதல்வரை நியமித்து வந்தது. ஆனால் அதன் பிறகு அக்கல்லூரி நிர்வாகத்தை ராமகிருஷ்ணா மடம் ஏதேச்சாதிகாரமாய்க் கைப்பற்றிக் கொண்டது. அரசு உதவி பெறும் அக்கல்லூரியை மடத்துச் சொத்தாக வளைத்துக் கொண்டது. முதல்வராக சுவாமி சிவமயானந்தாவை ராமகிருஷ்ணா மடம் நியமித்தது.

அரசு நிதி உதவி பெற்று நிறுவப்பட்ட கல்லூரி, அதற்கான விதி முறைகளின்படியே முதல்வரை நியமிக்கவேண்டும். இதனை வலியுறுத்தி, கல்லூரி ஆசிரியர்கள் கல்கத்தா உயர்நீதிமன்றம் போனார்கள்.

நீதி மன்றத்தில் ராமகிருஷ்ணா மடம் தனது பித்தலாட்ட நாடகத்தை அரங்கேற்றியது. “நாங்கள் இந்துக்களே அல்ல.சிறுபான்மை மதத்தவர்கள்” என்றது மடம். ஆர் எஸ் எஸ் காரர்கள் அவ்வப்போது கூவுவார்களே-சிறுபான்மை மதத்தவரின் கல்வி நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை நீக்க வேண்டும் என்று-அச்சலுகைகளத் தாங்களும் பெற வேண்டும் என்பதற்காகவும், கல்லூரிச் சொத்தை அபகரித்து அனுபவிக்கவும், முற்றும் துறந்த ராமகிருஷ்ண மடத் துறவிகள், நீதி மன்றத்தில் தங்களை ‘இந்துக்கள் அல்ல’ என வாதிட்டனர்.

மடத்து வழக்கறிஞரின் வாதமோ “இந்து மதம் நான்கு வர்ணங்களையும், ஜாதிகளையும் கொண்டது. ஓர் இந்து, இந்நான்கு வர்ணங்களில் ஏதாவது ஒன்றில் இருந்தாக வேண்டும். இந்து மதத்தின் எ·கு சட்டம் சாதீயம். ஒரு மனிதனுக்கு இந்து மத நம்பிக்கைகள் இருக்கலாம். ஆனால் அவன் ஏதாவது ஒரு சாதியில் இல்லை எனில் அவன் இந்து சமுதாயத்தில் உறுப்பினனே இல்லை. அவன் இந்துவே இல்லை. இந்த சாதீயம் ராமகிருஷ்ணாயிச மத நம்பிக்கையில் இல்லை” என்றும்

“ராமகிருஷ்ணர் போதித்து, அனுஷ்டித்த அடிப்படையிலேயே ராமகிருஷ்ணாயிசம் நிறுவப்பட்டுள்ளது. அத்வைத அடிப்படையிலானது என்றாலும் இது ‘நவீன அத்வைதம்’. இதனாலேயே ராமகிருஷ்ணாயிசம், இந்து மதத்தின் ஒரு பிரிவாகி விடமுடியாது” என்றும் இருந்தது.

கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியும் “ராமகிருஷ்ணா மத ஒழுங்கைப் பின்பற்றுபவர்களே தாம் போதிக்கும், பிரச்சாரம் செய்யும் ராமகிருஷ்ணரின் நவீன அத்வைதம் இந்து மதத்திலிருந்து வேறுபட்டது, அலாதியானது என்று அப்பட்டமாகப் பிரகடனப்படுத்துகிறார்கள். பிறகு அதை நான் ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. எனவே இந்த மடத்தைப் பின்பற்றுபவர்கள் மேற்கு வங்கத்தின் மக்கள்தொகையில் சிறுபான்மையினர் ஆகின்றனர். அதனால் அரசியல் சட்டம் 30ன்படி சிறுபான்மை மதத்தின் கல்வி உரிமைகளை வழங்குகிறேன்” எனத் தீர்ப்பளித்தார்.

சொத்துக்களைக் காப்பாற்ற தம்மை ‘இந்துக்கள் அல்ல’ எனச் சத்தியம் செய்வார்கள், இந்துக்களில் உயர்வாய் மதிக்கப்படும் இத்துறவிகள். அதே இந்து மதத்தில், வாதத்தில் தோல்வியைத் தழுவும்போது ‘பெரியாரும் இந்துதான்’ என்றும் ஜல்லியடி அடிப்பார்கள். அண்ணா சொன்ன ‘பேச நா இரண்டுடையாய்’ என்பதற்கு முன் உதாரணமாய் இருப்பவர்கள்தாம் இந்து மதக் காவலர்கள்.

மலர்மன்னன் போற்றிப் புகழும் ஆரிய சமாஜமும் இப்படி தம்மை ‘இந்து அல்ல’ எனப் புளுகும் செயலை 1971ல் செய்துள்ளது. எதன் நிமித்தமென்றால், பஞ்சாபில் உள்ள டி.ஏ.வி. கல்லூரியின் சொத்துக்களைக் கைப்பற்றவே ஆகும். ஆரிய சமாஜிகளும் ‘சிறுபான்மையினர் மதம்’ என்றே தீர்ப்பைப் பெற்றனர்.

இவ்விரண்டு நிகழ்ச்சிகளில் இருந்தும் எமக்கு சில கேள்விகள் எழுகின்றன.

1) இந்துக்கள் அல்லாதவர்கள் என்றும், நான்கு வர்ணத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் என்றும் கோர்ட்டில் வாதிட்ட ராமகிருஷ்ணா மடத்தினர், நான்கு வர்ணத்தினை வலியுறுத்தும் பகவத்கீதை, கிருஷ்ணன் கதைகளை ஆயிரக்கணக்கில் அச்சிட்டு விற்பது ஏன்?

2) இந்துக்களே அல்லாத ஆரிய சமாஜிகள், ‘சுத்தி’ சடங்கு செய்து, மற்ற மதத்தவர்களை, இந்து மதத்திற்கு மதமாற்றம் செய்து வருவது ஏன்?

3) இவ்விரு குழுவினரும் இந்துக்களா? இல்லையா?

4) இந்துக்கள் எனில், கோர்ட்டில் இவர்கள் சொன்னவை பொய்யா?

5) சிறுபான்மை மதத்தவருக்கு அளிக்கப்படும் சலுகைகளை எதிர்க்கும் இந்துத்துவ சக்திகள், ஆரிய சமாஜி, ராம கிருஷ்ணா மடம் அனுபவிக்கும் சிறுபான்மை மதச் சலுகைகள் குறித்து முன்வைக்கும் கருத்து என்ன?

6) இந்துக்கள், தத்தம் வசதிக்கேற்ப ஓர் இடத்தில் தம்மை ‘இந்துக்கள் அல்ல’ என்றும், இந்து மதத்தைத் தீவிரமாய் எதிர்த்த பெரியாரை ‘இந்து உணர்வு உள்ளவர்’ என்றும் சொல்வது நாணயமான செயல்தானா?

7) வள்ளலாரையும், வைகுண்டரையும், நாராயண குருவையும், தங்களின் எண்ணிக்கையைப் பெருக்கிக் காட்டிட அவர்களை ‘இந்துக்கள்’ எனப் பிடிசாதனை பண்ணுபவர்கள், ‘ராமகிருஷ்ணா மடம்’ மற்றும் ‘ஆரிய சமாஜம்’ செய்த இச்செயலைப் பற்றி என்ன சொல்லுவார்கள்?

······················································

vellaram@yahoo.com

Series Navigation

கற்பக விநாயகம்

கற்பக விநாயகம்