இது என் நிழலே அல்ல!

This entry is part [part not set] of 33 in the series 20040205_Issue

நரேந்திரன்


சென்ற வருடம் இந்தியாவிற்குப் போயிருந்த போது, நண்பர் ஒருவரிடம் ‘வசதியுள்ளவர்கள், வசதியில்லாதவர்கள் என்ற வித்தியாசமில்லாமல் பொதுவாக எல்லார் வீட்டிலும் தொலைக் காட்சிப் பெட்டி வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டு ஜனங்களுக்கு விழிப்புணர்ச்சியும் அதிகமாயிருக்குமே ? ‘ என்றேன்.

நண்பர், முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமால், ‘ஆமாமாம்! முன்பெல்லாம் எட்டரை, ஒன்பது மணிவாக்கில் ஒலியும், ஒளியும் முடிந்தவுடனேயே குறட்டை விடத் துவங்கிவிடுவார்கள். இப்போதெல்லாம் பத்து மணிக்கு ‘சித்தி ‘ சீரியல் பார்க்காமல யாரும் உறங்கப்போவதில்லை! விழிப்புணர்ச்சி நிச்சயமாக அதிகரித்துதான் இருக்கிறது! ‘ என்று ஒரு போடு போட்டார்.

கேட்பதற்கு தமாஷாக இருந்தாலும், வருத்தமும் ஒருபுறம் வந்ததைத் தவிர்க்க முடியவில்லை. எந்த சேனலைத் திருப்பினாலும் சினிமா, சினிமா, சினிமாதான். பொது அறிவை வளர்க்கும் நிகழ்ச்சிகளோ, குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளோ, உலகில் அன்றன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள் பற்றிய செய்திகளோ மிக மிகக் குறைவு. தமிழ்நாட்டின் பெரும்பாலோர் பார்க்கும் முக்கிய சேனல்கள் இரண்டும், இரண்டு பெரும் அரசியல்வாதிகளுக்குச் சொந்தமானவை. அவைகளில் காட்டப்படும் ஒன்றுக்கும் உதவாத நிகழ்ச்சிகளை மட்டுமே பெரும்பாலான தமிழர்கள் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. நல்ல நிகழ்ச்சிகளை ஒளி பரப்பி, தமிழர்கள் விவரமறிந்தவர்களாக ஆகிவிட்டால், பிறகு எப்படி அவர்கள் தலையில் மிளகாய் அரைப்பது ?

இதையெல்லாம் விட எனக்கு ஆச்சரியமளித்தது, தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தார்களின் செல்வச் செழிப்பு! வெறும் சினிமாவிற்குக் கதை, வசனம் எழுதியவர்களும், சினிமாவில் நடிக்க சில லட்சங்கள் வாங்கிய சினிமா நடிகைகளும், சிறிய கிளினிக் வைத்து நடத்திய டாக்டர்களும் அரசியல்வாதிகளான பின்பு கோடிகளில் திளைக்கிறார்கள். எங்கு நோக்கினும் அவர்களுக்குச் சொந்தமான பள பளக்கும் கட்டிடங்களும், பண்ணைகளும், தோட்டங்களும், எஸ்டேட்களும், எண்ணிலடங்கா கார்களும், தொண்டர்களும், குண்டர்களும் என ஏறக்குறைய ஆளாளுக்கு ஒரு குட்டி சாம்ராஜ்யமே நடத்துகிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை ‘politics is a low risk, high rewarding business ‘ என்பது 100% உண்மையோ உண்மை!

சொந்தமாக ஒரு தொலைக் காட்சி நிலையம் வைத்து நடத்துவது என்பது சாமானியப்பட்ட விஷயமா, என்ன ? திடாரென்று எங்கிருந்து இவ்வளவு பணம் இவர்களுக்கு வந்தது ? யாரும் கேட்பதாகத் தெரியவில்லை. கேட்டாலும் சொல்வதற்குக் காரணங்களா இல்லை ? வெங்காய ஏற்றுமதியிலிருந்து, திராட்சை சாகுபடி வரை கோடிகளில் வருமானம் வரும் தொழில்களல்லவா செய்கிறார்கள்!

அமெரிக்கா போன்ற நாடுகளில், அந் நாட்டில் வாழ்ந்த, வாழும் தலைவர்கள் வருங்காலச் சந்ததியினருக்கு ‘Role Model ‘ களாகக் கருதப்படுகிறார்கள். அவர்களின் நேர்மையும், செயல்திறமையும், ஒழுக்கமும், உயரிய சிந்தனைகளும் பள்ளிகளில் குழந்தைகளுக்குக் கற்றுத் தரப்படுகின்றன. இன்றைய தமிழ்நாட்டுத் தலைவர்கள் எனக் கூறப்படுபவர்களில் ஒருவரையாவது நமது குழந்தைகளுக்கு அங்ஙனம் உதாரணம் காட்ட இயலுமா ?

மக்கள் சபையில் ‘தேனெடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா ? ‘ என்று ஊழலுக்கு நியாயம் கற்பித்தவர்களும், ‘இது என் கையெழுத்தே அல்ல ‘ என நெஞ்சாரப் பொய்தன்னை அஞ்சாமல் சொன்னவர்களுமல்லவா நம்மை ஆள்கிறார்கள்! ‘தகிடுதத்தம் ‘ செய்து, மற்றவர்களை ஏமாற்றி, எப்படி வேண்டுமாலும் சம்பாதிக்கலாம். அதுதான் ‘திறமை ‘ என்ற எண்ணம் தமிழ்நாட்டில் அதிகம் இருக்கிறது. சாதாரண மக்கள் பொய் சொல்வது ‘கலை ‘ எனவும், அரசியல்வாதிகள் புளுகுவது ‘இராஜ தந்திரம் ‘ எனவும் கருதப்படுவது தமிழ்நாட்டில் மட்டும்தான். பொது மக்களைச் சுரண்டிக் கொள்ளை அடித்து சொத்து சேர்ப்பது ‘சம்பாதித்தல் ‘ என அழைக்கப்படும் கேவலம் நடப்பதும் தமிழ்நாட்டில்தான்.

அரசியல்வாதிகள்தான் அப்படி என்றால், அரசு அதிகாரிகள் செயல்பாடு இன்னொரு புறம் வருத்தமளிப்பதாகவே இருக்கிறது. இன்றைய தமிழ்நாட்டில் முக்கிய பதவிகள் வகிக்கும் அரசு அதிகாரிகளில் பலர் வறுமையிலும், ஏழ்மையிலும் உழன்று, கல்விகற்று அதனால் உயர்ந்தவர்கள். ஆனால், பெரும்பாலோர் அரசாங்க உயர்பதவிகள் அடைந்தவுடன் தங்களின் கடந்த காலங்களை மறந்து விடுவது மட்டுமல்லாமல், ஏழ்மையிலும், அறியாமையிலும் தவிக்கும் தமிழ்நாட்டு மக்களைச் சுரண்டிப் பிழைக்கவே முயல்கின்றார்கள்.

சென்ற வருடம் கண்டுபிடிக்கப் பட்ட 30,000 கோடி பெறுமானமுள்ள முத்திரைத்தாள் மோசடியில் பிடிபட்ட முக்கியமானவர்களில் மும்பை நகர போலிஸ் கமிஷனராக இருந்த ஒருவரும் அடக்கம். அவருக்கு மட்டும் 100 கோடிகளூக்கும் மேலாக சொத்துக்கள் இருந்ததைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். வெறும் 10,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு போலிஸ் கமிஷனரின் சொத்து மதிப்பு 100 கோடிகள்! வேலியே பயிரை மேய்ந்திருக்கிறது அங்கே!

இந்தியா போன்ற ஏழ்மை மிகுந்த நாட்டில் 30,000 கோடி என்பது சாதாரணமான பணமில்லை. மேல்தட்டு அதிகார வர்க்கம் கொள்ளை அடிப்பதை நமது சட்டங்களினால் இன்றுவரை தடுக்க இயலவில்லை. ஹர்ஷத் மேத்தா, U.T.I, திரும்பி வராத வங்கிக் கடன்கள்…இப்போது முத்திரைத்தாள் என்று மகா மோசடிகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சட்டத்தினால் இவர்களை ஒன்றும் செய்ய முடிவதில்லை. சட்டமே இவர்கள் கையில் இருப்பதுவும் ஒரு காரணமே.

*******

சென்ற வருடத்தில் ஒருநாள், அமெரிக்க Iowa மாநிலத்தின் ஒரு சிறு நகரத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த ஒரு காரை நிறுத்துகிறார் போலிஸ் அதிகாரி ஒருவர். காரில் ஸ்பானிஷ் மொழி பேசும் மெக்சிகன் இளைஞர்கள் மூன்று பேர் இருக்கிறார்கள். ‘நெர்வசாகத் ‘ தோற்றமளித்த அவர்களூடன் சிறிது நேரம் மேலோட்டமாகப் பேசிவிட்டு, அவர்களின் காரைச் சோதனை செய்யாமல் அனுப்பி வைத்துவிடுகிறார் அந்தக் காவலதிகாரி.

இச் சம்பவம் நடந்த அரை மணி நேரத்தில் அந்தப் பக்கம் இருக்கும் ஒரு வங்கியில் கொள்ளை நடப்பதாக ‘வயர்லஸ் ‘ மூலம் செய்தி வருகிறது அவருக்கு. விரைந்து போகிறார் அங்கே. அவருக்கு முன்பே அவரின் சக போலிஸ் அதிகாரிகள் அங்கு வந்திருக்கிறார்கள். துரதிருஷ்டவசமாக, அவர்கள் அங்கு வருவதற்குள் கொள்ளையர்கள் அப்பாவிப் பொதுமக்கள் நான்கு பேரைச் சுட்டுக் கொன்று விட்டுத் தப்பி விட்டதாகத் தெரியவருகிறது. விரைந்து செயல்பட்ட அதிகாரிகள் அந்தக் கொள்ளையர்கள் வெகு தூரம் போகு முன் அவர்களைப் பிடித்து விடுகிறார்கள். தன்னால் அரை மணி நேரத்திற்கு முன்னால் சோதனை செய்யப்பட்டவர்களே அந்த மூவரும் என்பது தெரியவருகிறது மேற்கண்ட அதிகாரிக்கு. மனமுடைந்து போன அவர், அந்த இடத்திலேயே தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொள்கிறார். இவ்வளவும் இரண்டு மணி நேரங்களுக்குள்.

இது சினிமாக் கதை அல்ல. உண்மையில் நடந்த ஒரு சம்பவம்.

அமெரிக்கக் காவல் துறை அதிகாரிகளின் கடமை உணர்ச்சியை விளக்கவே இந்தச் சம்பவத்தை எழுதினேன். தற்கொலை செய்து கொண்ட மேற்படி அதிகாரி ஏதாவது ஒரு காரணம் சொல்லி மழுப்பி விட்டுப் போயிருக்கலாம். யாரும் அவரை ஒன்றும் செய்திருக்க இயலாது. பின் எதற்கு அவர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் ? அதைப் புரிந்து கொள்ள அமெரிக்க போலிஸ்துறையின் செயல்பாடுகளைப் பற்றிப் படிக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்வதானால், அமெரிக்கக் காவலதிகாரிகள் தங்கள் பணியை ஒரு சம்பளம் வரும் வேலையாகச் செய்வதில்லை. அமெரிக்க ஜனநாயகத்தின் ஒரு முக்கிய அங்கமான நீதி, சட்டம், ஒழுங்கு, பொது மக்கள் பாதுகாப்பு ஆகியவற்றைச் செயல்படுத்துவதில் தங்களின் முக்கியப் பங்கு பற்றிய பெருமித உணர்வுடன் பணியாற்றுகிறார்கள். எவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் சட்டம் வளையாது அங்கே.

தான் இன்னும் சிறிது கவனமாகச் சோதனை செய்திருந்தால் இந்த வங்கிக் கொள்ளையை தடுத்திருக்கலாமே, பொதுமக்களில் நான்குபேர் இப்படி அநியாயமாக பலியாகி இருக்க மாட்டார்களே என்ற ஆதங்கத்தில்தான் மேற்கூறிய காவலதிகாரி தற்கொலை செய்து கொண்டார். அவர்களின் கடமை உணர்வு அத்தகையது. மேற்கண்ட சம்பவத்திற்கும், சில மாதங்களுக்கு முன் சென்னை ‘இந்து ‘ பத்திரிகை அலுவலகத்தில் நமது கடமையும், கண்ணியமும் மிக்க காவலதிகாரிகள், போலிஸ்காரர்கள் நடந்து கொண்டதற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டுப் போலிஸ்காரர்களில் 80 சதவீதம் பேர் குடிப் பழக்கம் உடையவர்கள்; அதில் 40 சதவீதம் பேர் குடிக்கு அடிமையானவர்கள் என்கிறது Alcoholic anonymous-இன் கருத்துக் கணிப்பு ஒன்று. நிலமை இப்படி இருக்க, இவர்களிடமிருந்து என்ன மாதிரியான கடமை உணர்ச்சியை, கண்ணியத்தையும் நாம் எதிர்பார்க்க இயலும் ? போதையில் தள்ளாடிக் கொண்டே ஒரு போலிஸ்காரர் சட்டம், ஒழுங்கைப் பற்றிப் பொது மக்களிடம் போதித்தால் எப்படி இருக்கும் ?

ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு நன்றாக இருந்ததாகவும், போலிஸ்காரர்கள் நிஜமான கடமை உணர்வுடன் வேலை செய்தார்கள் என்றும் சொல்வார் எனது தகப்பனார். நம்புவதற்குக் கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும் எனக்கு. திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகு, நன்றாக இயங்கிக் கொண்டிருந்த தமிழ்நாட்டுப் போலிஸ் துறையை திட்டமிட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விட்டதாகச் சொல்வார். அதையும் விடக் கோட்டான்களையும், குள்ள நரிகளையும், பணம் பிடுங்கி லஞ்சப் பேய்களையும், கூட்டுக் களவாணிகளையும், தகுதி இல்லாதவர்களையும் வேண்டுமென்றே தமிழகக் காவல் துறையில் நுழைத்துக் கெடுத்துவிட்டார்கள் என்பார் அவர்.

அமெரிக்க சமுதாயத்தில் காவலதிகாரிகளின் இடம் மிகவும் உன்னதமானது. மிகவும் மரியாதைக்குரியது. தன்னிடம் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எவரையும் மரியாதைக் குறைவாக நடத்தும் எந்த ஒரு காவலதிகாரியையும் இத்தனை வருடங்களில் நான் பார்த்ததில்லை. ‘Rule of Law ‘ என்பது அவர்களின் தாரக மந்திரம். சட்டத்தின் முன் சாமான்யனும், George Bush-இம் ஒன்றுபோல நடத்தப்படுகிறார்கள். நடத்தப்படுவார்கள். பொதுமக்களிடம் காவலதிகாரிகளைப் பற்றிய அச்சமும், மரியாதையும் இருக்கிறது.

இவர்களுடன் தமிழ்நாட்டுப் போலிஸ்காரர்களை ஒப்பீடு செய்ய முடியாதுதான். தன் கடமையைச் செய்ய முழுச் சுதந்திரம் கொடுக்கப் பட்டிருக்கும் அமெரிக்கக் காவலதிகாரி எங்கே, ஆளும் கட்சி அடிப்பொடிகளாக நடத்தப்படும் தமிழக காவலதிகாரிகள் எங்கே. இரண்டும் ஒன்றல்லதான். அதே சமயம், ஆதங்கத்தை வெளிப்படுத்துவதும், தமிழ்நாட்டுக் காவலதிகாரிகளின் சமுதாயக் கடமை பற்றி சுட்டிக் காட்டுவதும் தவறான ஒன்றல்ல என்பது என் எண்ணம். தமிழ்நாட்டுக் காவல் துறையில் ஒன்றிரண்டு நியாயமான அதிகாரிகள் இல்லாமலா போகப் போகிறார்கள் ?

தமிழ்நாட்டில் குற்றங்கள் பெருகிவிட்டதற்குக் கடவுள் பற்றிய அச்சம் இல்லாமல் இருப்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம். நமது முன்னோர்கள் ஒவ்வொரு ஊரிலும், நகரங்களிலும் பெரும் கோவில்களைக் கட்டுவித்தார்கள். பல் வேறு காரணங்களுக்காக அந்தக் கோவில்கள் கட்டப் பட்டாலும், மக்களின் மனதில் இறைவனைப் பற்றிய ஒரு அச்சத்தைத் தோற்றுவிக்கவே அம்மாதிரியான பிரம்மாண்டமான வழிபாட்டுத் தலங்களைக் கட்டினார்கள்.

எல்லா மனிதர்களையும், எல்லா நேரங்களிலும் கண்காணிப்பது என்பது இயலாத காரியம். நினைத்துப் பாருங்கள். ஒவ்வொரு மனிதனின் பக்கத்திலும் ஒரு போலிஸ்காரரை நிறுத்தினால் எப்படி இருக்குமென்று. குற்றங்கள் பெருகி விடாமல் இருக்க இறைவனைப் பற்றிய அச்ச உணர்வு அவசியம் என்பதை நம் முன்னோர்கள் உணர்ந்திருந்தார்கள் என்பதையே இது காட்டுகிறது. திராவிடக் கட்சிகளின் புண்ணியத்தில் அந்த அச்சம் தமிழ்நாட்டில் அழிந்து போய்விட்டது. யாரும் எதையும் செய்யலாம் என்ற மனோபாவம் பெருகிவிட்டது. அடிப்படை ஒழுக்கமும், நியதிகளூம் காற்றில் பறக்க விடப்பட்டு விட்டன. அலங்கோலங்களும், அக்கிரமங்களும் பெருகி, சாதாரண மக்கள் ஒரு வித மரத்துப் போன மனோநிலையை அடைந்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது. ஒழுக்கமும், கட்டுப்பாடும் இல்லாத சமுதாயம் சாக்கடையாக நாறிப் போய்விடும் என்பதற்கு தமிழ்நாடு ஒரு உதாரணம்.

தமிழ்நாட்டுப் போலிஸ்காரர்களைப் பார்த்துப் பொதுமக்கள் அஞ்சுகிறார்கள் என்பது உண்மைதான். ‘சட்டத்தை மீறியதால் பிடித்து தண்டனை கொடுத்து விடுவார்களோ ? ‘ என்று அஞ்சவில்லை அவர்கள். அதைச் சுட்டிக் காட்டி ‘காசு கறந்து விடுவார்களே ‘ என்பதுதான் பொது மக்களின் அச்சம். படித்த, நாகரீக எண்ணமுடைய சாதாரணத் தமிழன், தமிழ்நாட்டுக் காவல் நிலையத்தினுள் நுழையவதற்கே அஞ்சுகிறான். எத்தனை பெரிய அநீதி அவனுக்கு இழைக்கப் பட்டிருந்தாலும்! அங்கு நீதி கிடைக்காது என்பது நன்றாகவே தெரியும் அவனுக்கு. மாறாக வீணான மனவேதனையும், அலைச்சலும், செலவுகளும்தான் மிஞ்சும் என்பது நாமனைவரும் அறிந்ததுதான்.

பலன் ? எங்கும் பரவலாகி வரும் ‘கட்டப் பஞ்சாயத்து ‘. காவல் துறை மீதும், நீதி மன்றங்களின் மீதும் நம்பிக்கை இழந்த ஒரு சமுதாயம் தன் கட்டுப்பாடுகளை இழந்துவிடும். இதனால் பாதிக்கப் படப் போவது தமிழ்நாட்டில் வாழும் அனைவரும்தான். இன்றைக்குப் பதவிகளிலும், பாதுகாப்பு வளையங்களூக்குப் பின்னாலும் ஒளிந்து கொண்டு இதனை வளர விடுபவர்களும் இதிலிருந்து தப்ப இயலாது. வினை விதைத்தவர்கள் எந்தக் காலத்தில் தினையை அறுத்திருக்கிறார்கள் ?

இதையே இன்னொரு விதமாகச் சொல்லலாம்.

திருநெல்வேலியைச் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு போலிஸ் அதிகாரி சென்னையில் வேலை செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நாம்தான் ரிடையரான பின்னால் திருநெல்வேலிக்குப் போய் விடுவோமே ? சென்னையில் கொஞ்சம் அப்படி இப்படி இருந்து ‘சம்பாதித்தால் ‘ என்ன என்று நினைத்து திருடர்களிடமும், கொலைகாரர்களிடமும், சமூக விரோதிகளிடமும் அவர் லஞ்சம் வாங்கிக் கொள்கிறார்; அவர்கள் செய்யும் சமூக விரோதச் செயல்களைக் கண்டும் காணாமலும் இருக்கிறார் என்றும் வைத்துக் கொள்வோம். அவரது எண்ணம், சென்னை எக்கேடு கெட்டால் என்ன ? நாம்தான் ரிடையரான பிறகு ‘பாதுகாப்பான ‘ திருநெல்வேலிக்குப் போய்விடுவோமே என்பதுதான்.

மிக நல்ல யோசனை. ஆனால் ஒரு விஷயத்தை அவர் மறந்து விட்டார். சென்னையிலிருந்து மாற்றலாகி திருநெல்வேலியில் வேலை செய்யும் போலிஸ் அதிகாரியும் அதையேதான் அங்கு செய்து கொண்டிருக்கிறார் என்பதுதான் அது.

******

narenthiranps@yahoo.com

Series Navigation