இதயங்களின் தேவாலயம்

This entry is part [part not set] of 39 in the series 20031016_Issue

ஜோஸ் மரியா ஜிரோனெலா தமிழில் : நாகூர் ரூமி


தேவாலயங்களையெல்லாம் கல்லால் கட்டக்கூடாது, இதயங்களால் கட்ட வேண்டும் என்று ஒரு நாள் அவனுக்குத் தோன்றியது. ஒன்றின்மேல் ஒன்றை வைத்து செங்கற்களைப் போல.

‘ஏன் நீயே அப்படி ஒரு தேவாலயத்தைக் கட்டக்கூடாது ? ‘ என்று நீண்டு மெலிந்த கால்களைக் கொண்ட அவன் மகள் கருத்து சொன்னாள்.

‘நீ சொல்வது சரிதான் ‘ என்று சொன்னவன் உடனே இடுகாட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

குழிவெட்டுபவனோடு கொஞ்ச நேரம் சுருக்கமாகப் பேசினான். சாதாரண அளவுள்ள இதயம் ஒன்றுக்கு ஒரு ட்யூரோவும் நல்ல நிலையிலும் பெரிய அளவிலும் உள்ள இதயங்களுக்கு ஏழு பெஸட்டாக்களும் தருவதாகச் சொன்னான்.

‘சரியா ? ‘

‘சரி ‘

அன்றிலிருந்து அந்த மனிதன் ஒவ்வொரு நாள் இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகு இடுகாட்டுக்குச் சென்றான். நெடுஞ்சாலயின் வழி நெடுகிலும் இருந்த மரங்களின் நடுவே ஒரு சிகரெட்டைப் புகைத்துக்கொண்டே.

குழிவெட்டுபவன் அவனுக்காக தன் மேஜை நிறைய இதயங்களின் குவியலோடு காத்துக்கொண்டு இருப்பான். சில நாட்களில் இரண்டு இதயங்களும் மற்ற நாட்களில் நான்கும் கிடைக்கும். சில குளிரான அல்லது கொடுத்துவைத்த நாட்களில் ஆறுகூட கிடைக்கும்.

‘இன்று பிற்பகல் ஒரு பிரம்மாதமான இதயத்தைப் பார்த்தேன். பார், என்ன அழகு! இது நிச்சயம் ஏழு பெஸட்டாக்கள் பெறும். ‘

இப்படி அடிக்கடி குழிதோண்டுபவன் அவனிடம் சொல்வான். சொல்லி, ஒரு ஏழை பணியாளின் இதயத்தை அவனிடம் காட்டுவான். அல்லது ஒரு பாவப்பட்ட காலணி செய்து விற்பவனின் இதயத்தை.

‘ஆனால் இங்கே இருக்கிறது பார், இந்த இதயத்தை நான் உனக்கு ஒரு ரியலுக்குத் தரமுடியும் ‘ என்று சொல்லி வள்ளலைப்போல ஒரு விபச்சாரியின் இதயத்தையோ அல்லது ஒரு ஓடுகாலியின் இதயத்தையோ காட்டுவான்.

ஊருக்கு வெளியில் ஒரு பெரிய பண்டக சாலையை அவர்கள் வாடகைக்கு எடுத்திருந்தனர். அதில் தங்களுடைய வினோதமான செங்கற்களைச் சேகரிக்க ஆரம்பித்தனர். காற்றில் வீச்சம் வராமலிருக்க சனிக்கிழமைகளில் ஜன்னல்களை அவர்கள் திறந்து வைத்தனர்.

யுத்தம் அவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது என்பதைச் சொல்லவேண்டியதில்லை. பீப்பாய் பீப்பாயாக விஷயங்கள் வந்து குவிய ஆரம்பித்தன. சில காலை வேளைகளில் நாற்பதிலிருந்து ஐம்பது குத்தப்பட்ட இதயங்கள்கூட பண்டகசாலைக்கு வந்து சேர்ந்தன.

1939ஆம் ஆண்டு அவன் மகள் அந்த பண்டகசாலைக்கு வந்தாள். அவள் நன்றாக வரைவாள். அதோடு, தேவாலயம் கட்டுவதற்கான ஒரு சுமாரான திட்டத்தையும் அவள் உருவாக்கி வைத்திருந்தாள். குவியலாகக் கிடந்த இதயங்களைப் பார்வையிட்டாள். வேகமாக ஒரு கணக்குப் போட்டாள். அதன் முடிவில், ‘இன்னும் ஒருசில இதயங்கள் இருந்தால் போதும், வேலையை ஆரம்பித்துவிடலாம் ‘ என்று கூறினாள்.

கழுதை வண்டிகளின் மீது வைத்து அவர்கள் அந்த இதயங்களை ஒரு மலையின் உச்சிக்கு கொண்டுசென்றனர். ஒரு காலியான நிலப்பரப்பை அவர்கள் தேவாலயம் கட்டுவதற்காகத் தேர்ந்தெடுத்திருந்தனர். அந்த மேடான இடத்திற்கு வண்டிகள் ஒரு கண்றாவி பாதை வழியாக ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் சென்று சேர்ந்தன.

குழிதோண்டுபவன் கடைசி தடவையாக வந்து போனபின் உடனே தந்தையும் மகளும் ரொம்ப அனுபவமிக்க கொத்தனார்களைப் போல வேலையைத் தொடங்கினர். அது இலையுதிர் காலம். அவர்கள் பெரும்பாலும் நிலவொளியிலேயே வேலை செய்ய நேர்ந்தது.

ஏழு பெஸ்ட்டா மதிப்புள்ள இதயங்கள் அஸ்திவாரம் அமைக்கப் பயன்படுத்தப்பட்டன. முழு அமைப்பையும் அந்த இதயங்களே தாங்கியாக வேண்டும். சற்று முக்கியமற்ற பகுதிகளில் ஒரு ரியலுக்கு வாங்கப்பட்ட இதயங்கள் பயன்படுத்தப் பட்டன.

கொஞ்சம் கொஞ்சமாக தேவாலயம் வளர ஆரம்பித்தது. புனித மேடையின் இரு பக்கங்களிலும் ஒரு குழந்தையின் இதயத்தை அவர்கள் வைத்தனர். டிசம்பர் மாதம் வந்தபோது அவர்கள் மேல்கூரையின் வளைவைச் செய்ய ஆரம்பித்திருந்தனர். புனித மேடையின்மீது தனது நண்பர்களின் இதயங்களை வரிசையாக வைத்தான் அவன்.

ஒரு நாள் மேல்கூரையின் வேலை ஏறத்தாழ முடிந்துவிட்டிருந்தபோது அவர்கள் இதயங்களை எண்ணிப் பார்த்தனர். ஒன்று குறைந்தது.

‘அப்ப, கீழேபோய்தான் வாங்கிவர வேண்டும் ‘ என்றான் அவன்.

‘வேண்டாம், வேண்டாம். இது ரொம்ப முக்கியமான இடம். நீங்கள் முழுமையாக நம்பிக்கை வைக்க முடிகிற ஒரு இதயம்தான் இதற்குத் தேவை ‘ என்றாள் அவள். இதைச் சொல்லிவிட்டு அவள் புன்னகைத்தாள். பின் இடிதாக்கியவளைப் போல இரண்டாக மடிந்தவளாக தன் இதயத்தையே தர முன்வந்தாள்.

ஆச்சரியத்திலும் பயத்திலும் அவன் அலறினான். தனது வேலையின் முன் தனியனாக தன்னை அவன் அந்த மலையுச்சியின்மீது கண்டான். பைத்தியக்காரனைப் போல அங்குமிங்கும் பாறைகளிலெல்லாம் குதித்துக்கொண்டு அழுதுகொண்டே சென்றான். கடைசியில் மனதைத் தேற்றிக் கொண்டவனாக தன் மகளின் இதயத்தைக் கிழித்து வெளியில் எடுத்தான். அவனுக்கு எந்த செலவும் வைக்காத ஒரேயொரு இதயமாக அது இருந்தது. அந்த இதயத்தை ரொம்ப உச்சியில், மத்தியில் வைத்தான். அதோடு அவன் பிரம்மாண்ட திட்டம் முழுமையடைந்தது.

இரண்டு ஆண்டுகள் அந்த மலையிலேயே தன்னை தூய்மைப் படுத்திக்கொண்டு இருந்தான் அவன். இரவும் பகலும் அந்த தேவாலயத்தின் உள்ளே பிரார்த்தனை செய்த வண்ணமிருந்தான். மலையுச்சியில் கூர்மையான குளிர்காற்று தொடர்ந்து வீசிக்கொண்டிருந்தாலும் இதயங்கள் கெட்டுப்போகாமல் இருந்தன. கோடையில்கூட.

அடிக்கடி அவனை அந்த குழிதோண்டுபவன் வந்து பார்த்துக்கொண்டிருந்தான். வரும்போது சுத்தமான லினன் துணிகளைக் கொண்டுவந்தான். ‘அந்த பண்டகசாலை ஞாபகமிருக்கிறதா ? அதை இப்போது வண்டிக்கொட்டகையாக மாற்றிவிட்டார்கள் ‘ என்று ஒரு நாள் சொன்னான்.

மூன்றாம் ஆண்டு குழிதோண்டுபவன் லினன் துணியோடு கொஞ்சம் இனிப்புகளும் ஒரு மதுப்புட்டியும் கொண்டு வந்தான். நல்ல பசியுடனிருந்த அந்த மனிதன் நன்றாக சாப்பிட்டான். குடித்தான். பின் தனியாக இருந்தபோது ஒரு பைப்பைப் பற்ற வைத்துக்கொண்டு கணப்பின் பக்கம் கதகதப்பாக அமர்ந்து கொண்டான்.

மதுவின் போதை அவனை மயக்க ஆரம்பித்தவுடன் இந்த உலகத்தைப் பற்றிய ஞாபகம் வந்தது அந்த சிற்பிக்கு. ஒரு கணம் தன் கண்களை மூடினான். ஒரேயொரு ஆசை மட்டும் இருப்பது சாத்தியமே இல்லையா ? அவன் தனக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டான். பின் கால்களை மடக்கிய வண்ணம் தரையில் படுத்து தூங்க ஆரம்பித்தான்.

வாயில் ஏதோ ஒரு கசப்பான சுவை தோன்றியவனாக வழக்கத்திற்கு மாறாக கொஞ்சம் தாமதமாகவே விழித்தான். எழுந்து தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்காக சென்றான். உள்ளே நுழைந்த அவன் வழக்கம்போல கைகளை நீட்டியவளாய் புனித மேடையை நோக்கிச் சென்றான்.

முழந்தாளிட்டு அமர்ந்த உடனேயே கூரையின் மத்தியில் இருந்து ஒருதுளி ரத்தம் அவன் பக்கத்தில் விழுந்தது.

ஆண்டவனே! அவன் மேலே பார்த்தான். ரொம்ப மேல் பகுதியில் இருந்த இதயங்களில் இருந்து ரத்தம் சொட்ட ஆரம்பித்தது. நூலாட்டம் தொடர்ந்து பெய்த மழை மாதிரி இருந்த அது மெல்ல அந்த தேவாலயத்தை நனைத்து கறையாக்கியது. தரையில் ஒரு சிறிய குளம் கட்டிக்கொண்டது. மேற்கூரை பிசுபிசுத்து தெறிப்பு விழ ஆரம்பித்தது. எந்த நேரத்திலும் தனியாக கழன்று விழுந்துவிடும் போலிருந்தது.

அந்த மனிதன் தேவாலயத்தை விட்டு வெளியே ஓடி வந்தான். அவனைப் பிந்தொடர்ந்த சிறிய துளிகள் அவன் தலையிலும் கண்களிலும் விழுந்தன. ஒரு இருபது அடி தள்ளி இருந்தபோது, அவனுக்குப் பின்னால் கணமாக ஆனால் ஒரு மந்தமான ‘தொப் ‘ என்ற சப்தம் கேட்டது.

ரத்தமற்று வெளுத்துப் போனவனாகவும் விரக்தியடைந்தவனாகவும் அவன் திரும்பிப் பார்த்தான். அவனுடைய படைப்பு பல பேரை பலிகொண்ட களம்போல இருந்தது.

வடிவற்ற குவியல்களாய் இங்கொன்றும் அங்கொன்றுமாய் சிதறி எல்லா இதயங்களும் கீழே விழுந்திருந்தன. ஒரேயொரு சின்ன இதயம் மட்டும் கைவிடப்பட்ட பறவையைப்போல மேலே வைத்த இடத்திலேயே துடித்துக் கொண்டும் ரத்தம் வடிந்து கொண்டும் இருந்தது. அது அவன் மகளுடைய இதயம்.

அழுவதற்குக்கூட அவனுக்கு நேரமில்லை. அந்த இதயங்களில் ஒன்று திடாரென்று துடிக்க ஆரம்பித்தது. பின் நகரத்திற்குச் செல்லும் பாதையில் மெல்ல நின்று நின்று குதித்துச் செல்ல ஆரம்பித்தது.

பின் இன்னொரு இதயம் பின் இன்னொன்று. அதன்பின் இன்னொன்று. ஐந்து நிமிடங்களுக்கெல்லாம் எல்லா இதயங்களும் நகர ஆரம்பித்திருந்தன. அந்த மலைபூரா இதயங்களாக இருந்தது. பாறைகளும் சரிவுப்பாதைகளும் மெல்ல இதயங்களால் நிறைந்தன. பார்ப்பதற்கு அவை பெரிய நண்டுகளைப் போலவும் சின்ன சிவப்பு ஆக்டோபஸ் பூச்சிகளைப் போலவும் இருந்தன. பள்ளத்தாக்கின் கீழே தெரிந்த நகரத்தை வெற்றி கொள்ளச் செல்லும் கொரில்லாப் படையைப் போல அவை சென்றன.

‘ஐயோ, ஐயோ அங்கே ‘ என்று கத்திக்கொண்டே அந்த மனிதன் வழிகாட்டிச் சென்ற சில ஆக்டோபஸ் பூச்சிகளைப் போன்ற அவற்றின் பின்னால் சென்றான். அவைகள் ஓடுகாலிகளின் இதயங்கள் என்று புரிந்து கொண்டான். ஆனால் அந்த படையை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று தோன்றியது.

ஐந்து மணி நேர களைப்பூட்டும் நடைப்பயணத்திற்குப் பிறகு எல்லா இதயங்களும் நகரின் வாசலுக்க்கு வந்து சேர்ந்தன. பின் அமைதியாக பக்கத்துத் தெருக்களில் நுழைந்தன. ஊர்ந்தும் நெளிந்தும் அந்த சாருண்ணிப் படை ஊருக்குள் வந்துவிட்டது என்பதை ஊர்மக்கள் உடனே தெரிந்து கொண்டார்கள்.

‘அவைகள் இதயங்கள் ‘, சில பெண்கள் பயத்துடன் முணுமுணுத்தனர்.

‘அவைகள் இதயங்கள் ‘, ஜன்னலிலிருந்து இரண்டு பெண்கள் திருப்பிச் சொல்லினர்.

‘அவைகள் இதயங்கள். ‘ ஊரே சொன்னது. தெருக்களுக்கு ஓடி வந்து.

‘அது என்னுடைய மகனுடைய இதயம் ‘ என்று திடாரென்று ஒரு கிழவி கத்திக்கொண்டே தன் கரங்களை நீட்டினாள்.

‘அங்கிருப்பது என் சகோதரன் ‘ என்று ஒரு இளம் பெண்ணில் குரல் சொல்லியது.

‘அப்பா, அம்மா, அண்ணே, மகனே ‘ என உயிரூட்டப்பட்ட இதயங்களை அணைப்பதற்காக நீண்ட கைகளுடன் நிறைந்தது ஊரே.

கடைசியில் மக்களுக்கு உண்மை தெரிந்து போனது. ஏனினில் ஒவ்வொரு இதயமும் தான் வாழ்ந்த காலத்தில் மிகவும் நேசித்த ஒரு இடத்தை நோக்கியோ அல்லது பொருளை நோக்கியோ தயக்கமின்றி உடனே நகர ஆரம்பித்தது. அவர்களுக்குப் பழக்கமில்லாத மாடிப்படிகளின்மீது தங்கள் மனைவிமார்களின் இதயங்கள் ஏறுவதைக் கண்டு பல கணவன்மார்கள் ஆச்சரியமடைந்தனர். ஒரு மாநகரத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய குழப்பமாக அது இருந்தது. ஏனெனில் எந்த இதயமும் ரகசியமாகச் செல்லவில்லை.

ஒரு சின்ன அறியப்படாத இதயம் மட்டும் மெல்ல இடுகாட்டை நோக்கிச் சென்றது. ஒரு அரை டஜன் இதயங்கள் தேவாலயத்துக்குள் நுழைந்து புனிதச் சிலுவையின்முன் பணிவாக விழுந்து வணங்கின.

இரண்டு அழகான இதயங்கள் – சந்தேகமின்றி பெண்களுடையதுதான் – சினிமா கொட்டகைகளை நோக்கிச் சென்று அங்கு ஏதோ ஒரு இருக்கையில் ஒரு மாதிரியாக ஏறி ஒருவித எதிர்பார்ப்புடன் அமர்ந்து கொண்டன.

சுருக்கம் விழுந்த கிழட்டு இதயங்கள் பல ஸ்பெயின் நாட்டின் வங்கிகளை நோக்கிச் சென்றன.

நம்பிக்கைக்குரிய இதயங்கள் வீடுகளில் சந்தோஷமாக வரவேற்கப்பட்டன. அந்த இதயத்தைச் சுற்றி குடும்பமே எல்லையற்ற அன்போடு மண்டியிட்டு அமர்ந்து கொள்ளும். யாருமே பேசவில்லை. கண்ணீர்த்துளிகள் தரையில் விழுந்தன. தனது பங்குக்கு இதயம் சந்தோஷமாக பெருமூச்சு விட்டுக்கொண்டது.

ஒரேயொரு வீட்டில்மட்டும் வரவேற்பு வித்தியாசமாக இருந்தது. குடிம்பத் தலைவனின் இதயம் டைனிங் ஹாலுக்குள் நுழைந்தது. அங்கே தன் விதவையும் குழந்தைகளும் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்திருந்தனர், சாப்பிடுவதற்கு ஒன்றுமில்லாமல். ‘அம்மா, எனக்கு ஏதாவது சாப்பிட வேணும், ஏதாவது வேணும் ‘ என்று அழுதது.

பிற்பகலானபோது இவ்வளவு குழப்பத்துக்கும் காரணமான இதயங்களின் தேவாலயம் கட்டிய சிற்பி நகரின் நடுவில் தன்னந்தனியனாய் நின்றான். எல்லா இதயங்களும் அவைகளுக்கான வீடுகளைச் சென்று சேர்ந்திருந்தன.

விரக்தியடைந்தவனாக தலையை ஆட்டினான் அவன். பின் மலையேறினான். தன் மகளின் இதயத்தைத் தேடி. இந்த உலகின்மீது நிழல் விழும் நேரம் அவன் மலையுச்சியை அடைந்திருந்தான். களைத்திருந்தான். தான் கட்டிய தேவாலயத்தின் கூரை இருந்த இடத்தை நோக்கினான். அங்கே ஒன்றுமே இல்லை. சங்கடமாகவும் சந்தேகமாகவும் இருந்தது.

அவன் மகள் எங்கே ? அவனுக்குப் பின்னால் காலடி ஓசைகள் கேட்டது. திடாரென நம்பிக்கையால் நிரம்பியவனாக திரும்பினான். மலையிலிருந்து கீழே விரைவாக கையில் ஏதோ ஒரு சின்னப் பொட்டலத்துடன் குழிதோண்டுபவனின் கோட்டுருவம் சென்றுகொண்டிருந்தது தெரிந்தது.

ட்யூரோ – (ட்யூரோ, பெஸோ, பெஸட்டா, ரியல் எல்லாம் ஸ்பெயின் நாட்டு வெள்ளி நாணயங்களின் பெயர்கள். எட்டு ரியல் சேர்ந்தது ஒரு பெஸோ)

கதாசிரியர் பற்றிய குறிப்பு

ஜோஸ் மரியா ஜிரோனெலா ஸ்பெயின் நாட்டு எழுத்தாளர். 1917ல் பிறந்த இவர் 1945ல் தனது முதல் கவிதைத் தொகுதியையும் 1946ல் முதல் நாவலையும் வெளியிட்டார். அதிகமாக இவர் நாவல்களே எழுதியிருந்தாலும் சிறுகதைகளும் பயணக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய ‘சைப்ரஸ் மரங்கள் கடவுளை நம்புகின்றன ‘ என்ற நாவலுக்காக இலக்கியத்திற்கான தேசிய விருதைப் பெற்றார்.

இவருடைய எழுத்து பெரும்பாலும் யுத்த அனுபவங்களை அடைப்படையாக வைத்தவை. இந்த ‘இதயங்களின் தேவாலயம் ‘ புன்னகைக்க வைக்கும் நுட்பமான சமுதாய விமர்சனத்தை உள்ளடக்கிய, முதல் வாசிப்பிலேயே தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு அற்புதமான சர்ரியலிஸ சிறுகதை.

Series Navigation