இடி

This entry is part [part not set] of 44 in the series 20040115_Issue

சின்னக் கண்ணன்,மஸ்கட்


*****************************

(மேடை அமைப்பு: நான்கு தூண்கள் சற்றே நடுவில் இருப்பது போல வைத்துக் கொள்ளலாம். பின்புலத்தில் பாழடைந்த மண்டபம் போல வரைந்திருக்கலாம்..இன்னும் சில தூண்கள் இருப்பது போல்..சற்றே மங்கலான வெண்ணிற ஒளி எல்லா இடங்களிலும் படர்ந்து இருக்க வேண்டும்)

(காட்சி ஆரம்பிக்கும் போது இடது பக்க மூலையிலிருந்து ஒரு ஆண், ஒரு பெண் வருகிறார்கள். ஆணின் உடை வேஷ்டி,கொஞ்சம் பளபளா மேல்சட்டை ; பெண் சேலையுடுத்தி இருக்கிறாள்..சில பல ஆபரணங்கள் அணிந்து இருக்கிறாள். இருவரையும் உற்றுப் பார்த்தால் இந்தக் காலத்து ஆசாமிகள் போலத் தெரியவில்லை.. அட…ஆமாம்.. இது சரித்திர நாடகம்!)

(ஆணின் பெயர் விஜயன்; பெண்ணின் பெயர் கலாராணி)

கலாராணி: (இ.ப.மூவிலிருந்து முதல் தூணின் அருகில் நின்று) அப்பாடி.. நல்ல வேளை..

விஜயன்: (அவள் அருகில் வந்து நின்று) என்ன சொல்கிறாய் ராணி.. எது நல்ல வேளை..

கலாராணி: இது கூடத் தெரியவில்லையா..வெளியில் பார்த்தீர்களா..வானமெங்கும் மேக மூட்டமாக இருக்கிறது..காற்றும் சுழன்றடிக்கிறது.. மழை எந்த நேரத்திலும் பெய்யும்.. அதற்குள் தங்குவதற்கு இந்த மண்டபம் கிடைத்ததே..

விஜயன்: ஆமாம் ராணி..காற்றில் கூட மெல்லிய ஈரம் கலந்திருக்கிறது.. நல்ல மழை எந்நேரத்திலும் வரலாம்..

கலாராணி: இது எந்த ஊர் ?

விஜயன்: இங்கிருந்து இன்னும் ஒரு காதம் சென்றால் ராஜகிரி என்ற ஊர் வரும்..

கலாராணி: அங்கிருந்து குடந்தை..எவ்வளவு நேரம் ஆகும்..

விஜயன்: என்ன இப்படியே நடக்க ஆரம்பித்தால் ஒரு ஜாமத்தில் போய் விடலாம்..ராணி.. போவதைப் பற்றி என்ன பேச்சு இப்போது…அழகாய் இங்கு தங்கிவிட்டு காலை செல்லலாம்..(அருகில் வந்து) ராணீ…ராணிக்குட்டி..ராணிப் பட்டூ…..

கலாராணி: ம்ம்.. என்ன ராணிக்கு….

விஜயன்: ராணி… வானம் முழுக்க சூழ்ந்திருக்கும் இந்தக் கருமேகத்தைப் பார்க்கும் போது…உனது அழகு விழிப்பாவையின் கருமை அதற்கில்லையே என நினைக்கத் தோன்றுகிறது.. அவ்வப்போது மேகத்தைத் துளைத்து வரும் நட்சத்திரங்கள் தான் உனது வெள்ளை விழிப் படலமோ… அட.. இன்னும் கொஞ்ச நேரத்தில் மின்னலும் வரும்…ஆனால் அது உனது புன்சிரிப்பின் முன்னால் ஒளி மங்கிவிடும்..தெரியுமா..

கலாராணி: (வெட்கத்துடன்) ரொம்ப மோசம் நீங்கள்…ஒரு தனியிடம் கிடைத்து விட்டதென்றால் போதும். அழகை வர்ணிக்கிறேன் பேர்வழி என்று என்னிடம் நாடக வசனம் பேச ஆரம்பித்து விடுவீர்கள்..

விஜயன் (ஆச்சர்யத்துடன்): அதெப்படி ராணி உனக்குத் தெரியும் ?

கலா: எது ?

விஜயன்: நான் பேசியது நாடக வசனம் என்று.. தஞ்சையில் இரு நாட்கள் முன்னால் அரண்மனை வாசலில் ஒரு நாடகம் பார்த்தேன்.. அதில் வருவது தான் இது.. ஒரு வேளை.. நீயும் அதைப் பார்த்தாயா..

கலாராணி: அது தானே பார்த்தேன்.. நீங்களாவது சொந்தமாய்ப் பேசுவதாவது.. எனது தாய் தந்தையை நினைத்தால் தான் கவலையாக இருக்கிறது.

விஜயன்: இதில் என்ன கவலை ராணி.. நானும் நீயும் திருமணம் செய்வது என முடிவெடுத்து விட்டோம்.. அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை..குடந்தையில் இருக்கும் என் மாமன் வீட்டிற்குச் சென்று அங்கிருந்து நாளை மறு நாள் சாரங்கபாணி கோவிலில் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம்..இந்தக் கவலை எல்லாம் விடு…

(வெளியில் காற்று சுழன்றடிக்கும் சப்தம்…கூடவே சடசடவென மழை பெய்யும் சப்தம்)

கலாராணி: கொஞ்சம் வெளிச்சம் இருந்தால் நன்றாக இருக்கும்..இந்த நிலவொளியும் ஆங்காங்கே தான் தெரிகிறது..

விஜயன்: ராணி, இந்த மழை நேரத்தில் தீப்பந்தத்திற்கு நான் எங்கே போவேன்.. அதுவும் உன்னைத் தனியாக விட்டு விட்டு..

கலாராணி: நீங்கள் எங்கும் போக வேண்டாம் (இடுப்பிலிருந்து ஒன்றை எடுக்கிறாள்) இவை இருக்கின்றன்..

விஜயன்: என்ன அது ? வீட்டில் இருந்து கொண்டுவந்த அதிரசமா..கொடு..கொடு..

கலாராணி: ச்..அதெல்லாம் இல்லை..சிக்கி முக்கிக் கற்கள்..இதை வைத்துக் கொஞ்சம் நெருப்பை வரவழைப்போம்..நீங்கள் அந்த சுள்ளிகளை இங்கு போடுங்கள்..

(சற்று நேரத்தில் சுள்ளிகள் எரிவதைக் காட்டுவதற்கு..அரங்கில் அவர்கள் பக்கம் வெளிச்சம் கூடுகிறது)

கலாராணி: ஸ்.. அப்பா… நல்ல மழை பெய்ய ஆரம்பித்து விட்டது…கொஞ்சம் குளிருகிறது..

விஜயன்: (காதலுடன்) ராணி… அருகில் வாயேன்…

கலாராணி: (அருகில் வந்து) ம்ஹீம்.. வரமாட்டேன்…

விஜயன்: ஏன் செல்லம்..

கலாராணி: போங்கள்… எனக்குப் பசிக்கிறது.. கால்களும் வலிக்கின்றது…ஆனாலும் நீங்கள் மோசம்..

விஜயன்: இன்னும் தொடக் கூட இல்லையே ராணி, நான் என்ன செய்து விட்டேன்..

கலாராணி: தஞ்சையில் இருந்து புறப்பட்டு வரும்போது கருந்தாட்டாங்குடியில் போயும் போயும் ஒரு குதிரை வாங்கினீர்களே..குதிரையா அது…சரியான கழுதை..

விஜயன்: அந்தப் பையனைப் பார்த்தால் கஷ்டமாக இருந்தது..நான்கு பொன் என்பது கூடுதலான விலை தான்.. அரபு நாட்டுக் குதிரை.. அப்பா ஆசையாய் வளர்த்தது, போரில் மடிந்து விட்டார்..கஷ்ட ஜீவனம்..அது இது என்றான்..சரி என்று வாங்கினேன்..ஆனால் பாவி..ஏமாற்றி விட்டான்…

கலாராணி: அரபுக் குதிரையா என்ன.. உள்ளூர்க் கழுதை கெட்டது..பாதி வழியிலேயே படுத்து விட்டது…சே…அதன்பிறகு இவ்வளவு நடக்க வேண்டியதாகி விட்டது…ம்ம்..உங்களைக் கல்யாணம் செய்து கொள்ளும் முன்னமேயே நான் கஷ்டப் படுகிறேன்..

விஜயன்: இனிமேல் கஷ்டமே கிடையாது…

(மழையின் சத்தம் கொஞ்சம் வலுக்கிறது.. ஒரு மாட்டுவண்டியின் ஜல்..ஜல்.. ஒலி..ஹேய்..ஓய்.. என்ற சப்தம்..வண்டி நிற்கும் ஒலி

மருதவாணர் தலையில் துண்டு போட்டு உள்ளே வருகிறார்..உடன் அவரது மனைவி அம்சவேணி, சிறுவன் சுந்தரன். கலாராணியையும் விஜயனையும் ஒரு பார்வை பார்த்து விட்டு இரண்டு மற்றும் மூன்றாவது தூணிற்கருகில் நிற்கிறார்கள்)

மருதவாணர்: கிளம்பும் போதே சொன்னேன் அம்சா.. நீ தான் கேட்கவில்லை

அம்சவேணி: (தலை துவட்டியபடியே) நீங்கள் ஆயிரம் சொன்னீர்கள்…எதை நான் கேட்கவில்லை..

மருதவாணர்: ஒரேயடியாய் இருட்டி வருகிறது..மழை பெய்து ஓய்ந்த பிறகு செல்லலாம் என்றேனல்லவா..

அம்சவேணி: அது சரி.. இப்போதே சென்றால் தான் ஒரு ஜாமத்தில் அடுத்த ஊர் செல்ல முடியும்.. இன்னும் கொஞ்சம் இருந்திருந்தோமானால் நாம் நமது பெண்ணின் ஊருக்குச் சென்றாற்போலத் தான்..

சுந்தரன்: அப்பா..அப்பா.. நான் வெளியில் சென்று ஓலைப் படகு விடட்டுமா..

மருதவாணர்: சும்மா இருடா.. ஏற்கெனவே நனைந்து விட்டாய்..(அம்சவேணியிடம்) ஏன் அம்சா….குழந்தைக்குத் துவட்டி விட வேண்டியது தானே..

சுந்தரன்: போப்பா.. இதுவே நல்லா இருக்கு.. நான் மாட்டேன்..

அம்சவேணி: விடுங்கள் குழந்தையை..அதுவாகக் காய்ந்து விடும்..(கலாராணியிடம்) நீங்கள் இந்த ஊரா..பார்த்ததேயில்லையே..

கலாராணி: இல்லை.. நாங்கள் தஞ்சையிலிருந்து வருகிறோம்.. நீங்கள்..

அம்சவேணி: நாங்கள் இந்த ஊர் தான்.. ராஜ கிரி..ம்ம். இங்கு இருக்கிறது தஞ்சை.. இன்னும் பார்த்ததில்லை..இவர் தான் வியாபார விஷயமாக அடிக்கடி சென்று வருவார்..

கலாராணி: என்ன வியாபாரம் ?

அம்சவேணி: எல்லாம் மளிகை வியாபாரம் தான்.. திருவிழா சமயங்களில் கொஞ்சம் புடவை, துண்டெல்லாம் விற்பார்..ஆமாம் இந்த நகை எங்கே வாங்கினாய்..தஞ்சையிலா..

கலாராணி: என்னுடைய தந்தையின் கடையில் இருந்தது..அவர் எனக்குக் கொடுத்தார்..

அம்சவேணி: இது யாரு…உன்னோட அகமுடையானா..

விஜயன்: இல்லை..வந்து..

கலாராணி:(இடைமறித்து) ஆமாம்..

அம்சவேணி: இப்போ எங்கே போறீங்க…

(வலதுபக்க மூலைத் தூணிலிருந்து ஒரு முனகல் கேட்கிறது..)

மருதவாணர்: யார்..யாரது..

(அங்கே ஒரு கிழட்டுப் பிச்சைக்காரனும் பிச்சைக்காரியும் அமர்ந்தவண்ணம் இருக்கிறார்கள்.. மருதவாணர் முகஞ்சுளிக்கிறார்)

மருத: ஏய்.. இங்கே எதுக்கு வந்தே..

கிழவன்: உங்களை மாதிரித் தான் சாமி..மழைக்கு ஒதுங்கினோம்…ஏதாவது தருமம் போடுங்க சாமி..

மருத: சே.. ராசேந்திரரின் ஆட்சியில் ஒழிக்க முடியாதது இந்தப் பிச்சைக் காரர்களைத் தான்..எங்கு போனாலும் வந்து விடுகிறார்கள்.. ஏம்ம்ப்பா…ஊர்க் கோயில்பக்கத்துல அன்ன சத்திரம் இருக்குல்ல.. அங்க தான் தினசரி சாப்பாடு போடறாங்களே..

கிழவன்: என்ன செய்யறது சாமி..போக முடியலை…மூணு நாளா எனக்கும் இவளுக்கும் ஜீரம்..ஆனாலும் எங்க சாமி அதை ஒழுங்கா போடறாங்க..எப்பவாவது அமைச்சர்,அரசர் வந்தா தடபுடல் பண்ணி பந்தி போடறாங்க.. அவங்க இந்தப் பக்கம் போனா அவ்வளவு தான்…சுரைக்காய் சாம்பார்..பூசணிக்காய் ரசம்..

கலாராணி: பூசணிக்காய் ரசமா..கேள்விப் படாததா இருக்கே..எப்படி இருக்கும்..

விஜயன்: நாம வேணும்னா ஊர்க்குள்ள போய் சாப்பிட்டுப் பார்க்கலாம்.. நீ கண்ட கண்ட ஆட்கள் கிட்ட எப்படிப் பண்றதுன்னு கேட்டுக்கிட்டிருக்காதே..

(மழைச் சத்தம் கொஞ்சம் வலுக்கிறது..ஒரு மின்னல் வர அரங்கம் முழுதும் ஒளி வந்து மறைகிறது)

விஜயன்: ராணி..இருக்கற இருப்பப் பாத்தா போக முடியாது போல இருக்கே…

கலாராணி: அதனால் என்ன துணைக்குத் தான் ஆட்கள் இருக்கிறார்களே…

விஜயன்: சே.. நாம் தனிமையில் இருக்கலாம் எனப் பார்த்தால்..வந்து கழுத்தறுக்கிறார்கள்..(கலாராணி சிரிக்கிறாள்..அரங்கினுள் புலவர் சங்கரலிங்கம் வலது பக்க மூலையிலிருந்து நுழைகிறார்..)

சங்கர: (தலை துவட்டிய படி)

உடலைக் குளிர்விக்கும் வெந்தயம்போல், ஊடல்

மடல்விரித்து ஆடும் மனைவியைப்போல் – படத்தில்

சடசடத்துச் சீறும் அரவமென இன்னும்

புடம்போட்ட பொன்னாய் புவியாக்கும் என்றே

கணப்பொழுதில் வாயினிலே கண்டபடி வந்தும்

மனதுக்குள் நிற்கும் மழை

தளை தட்டுகிறதா என்ன.. . கொஞ்சம் ஓலையில் எழுதிப் பார்க்கணும்..

மருதவாணர்: ஐயா, தாங்கள் யார்..

சங்கரலிங்கம்:

கார்முகில் சூழ்ந்துவிடக் காரிருளில் வானிருந்து

பாரில் மழையதுவும் பெய்கையிலே – ஊரில்

விருந்தினர் வந்திருக்கச் செல்லுமென் தேவை

இருப்பதற்குக் கொஞ்சம் இடம்

விஜயன்: இல்லை ஐயா.. அவர் கேட்டது தாங்கள் யாரென்று..

சங்கரலிங்கம்:

தங்கத் தமிழில் பாவெழுதி தரணிக் கெல்லாம் புகழ்பரப்பி

மங்கா நெஞ்சின் ஓசையினை மனதில் நிற்கக் கவியெழுதி

பங்கம் வராமல் மொழியதற்குப் பாங்காய் நன்றாய்க் கடமையினைச்

சிங்கம் போலச் செய்துவரும் சோழன் அவையின் புலவன்யான்

கலாராணி: இவர் என்ன சொல்கிறார் புரியவில்லையே.. ஏங்க..உங்களுக்குப் புரிகிறதா..

அம்சவேணி: ஆமா..எனக்கும் தான் புரியவில்லை.. ஐயா.. தாங்கள் கொஞ்சம் தமிழில் பேசக் கூடாதா..

சங்கரலிங்கம்:(சிரித்து) சோழன் அவையில் இருக்கும் பல புலவர்களில் நானும் ஒருவன். எனது சொந்த ஊர் இந்த ராஜகிரி..மறுபடியும் தஞ்சை செல்வதற்குப் புறப்பட்டேன்..வழியில் மழைவர இந்த மண்டபத்தில் ஒதுங்கினேன்..

ஆமாம்.. இந்த மழை இப்போதைக்கு விடாது போலிருக்கிறதே..

மருத வாணர்: ஆமாம். நாங்களும் மழை விடுவதற்காகத் தான் காத்திருக்கிறோம்…

(மழையின் ஓசை வலுப்பட, தடாலென்ற சப்தம்.. பளீரென்று ஒரு மின்னல் அரங்கத்தை ஒரு வினாடி ஒளிமயமாக்கி மறைகிறது)

மருதவாணர்: சே..பேய் மழை..சீக்கிரம் விடாது போல இருக்கிறதே…

பெண்குரல் : அன்பர்களே…

மருத: என்ன அம்சா..திடாரென அழைக்கிறாய்..

அம்சவேணி: நான் அழைக்கவில்லையே.. ஏம்மா.. நீயா அழைத்தது..

கலாராணி: இல்லையே..

பெண்குரல்: (மீண்டும்) அன்பர்களே…

சுந்தரன்: அப்பா..பயம்மா இருக்குப்பா..

விஜயன்: யாரம்மா அது.. யாராயிருந்தாலும் மண்டபத்துக்குள் வா.. இங்கு இடமிருக்கிறது..

பெண்குரல்: (சிரித்து) நான் அசரீரி..உங்களிடம் ஒன்று சொல்ல வந்திருக்கிறேன்..

சங்கரலிங்கம்: என்ன அது..

பெண்குரல்: உங்களில் பாவம் செய்தவர் ஒருவர் இருக்கிறார்..அவரது விதி இன்றுடன் முடிகிறது…அவர் உங்களுடன் இருந்தால் உங்களுக்குத் தான் ஆபத்து. அவரை வெளியில் அனுப்பி விடுங்கள்..

விஜயன்: யார் என்னன்னு நீயே சொல்லக் கூடாதாம்மா.. அசரீரி.. உன் குரல் ரொம்ப இனிமையாக இருக்கிறது..சொல்லேன்..

பெண்குரல்: ஏதோ இதையே நான் சொல்லக் கூடாது.. சொல்லிவிட்டேன் ..வருகிறேன்..

(டொய்ங்க்க் என்ற இசை)

மருதவாணர்: என்ன இது..இப்படிச் சொல்லிவிட்டதே…

சங்கரலிங்கம்: அது தான் சொன்னதே..ஆமாம் நம்மில் பாவம் செய்தவர் யார்..

விஜயன்: சொல்லப் போனால் நீங்களாகத் தான் இருக்கவேண்டும்

சங்கரலிங்கம்: ஏன்

விஜயன்: நீங்கள் தான் புலவராயிற்றே…அழகில்லாததை மிக அழகு என்பீர்கள்..கோழையை வீரன் என்று புகழ்வீர்கள்.வான்கோழியை மயில் என்று வர்ணிப்பீர்கள்.. இப்படி எக்கச்சக்கமாகப் பொய் சொல்லும் நீர் தான் பாவம் செய்தவராக இருக்க முடியும்

சங்கரலிங்கம்:(வருந்தி) உண்மை தான்.. நான் நிறைய அப்படிச் சொல்லியிருக்கிறேன்..பாடல் புனைந்துமிருக்கிறேன்.. எனவே நானே வெளியில் செல்கிறேன்..

கலாராணி: சற்று நில்லுங்கள். நீங்கள் போக வேண்டாம்.. நான் போகிறேன்..

விஜயன்: ராணி..என்ன இது..

கலாராணி: என்னை மன்னியுங்கள்.. நீங்களே கதி என்று வீட்டை விட்டு ஓடி வந்தேன்.. பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய் தந்தையருக்குச் செய்த துரோகம் மன்னிக்க முடியாத பாவம்.. ஆனாலும் உங்களுடன் வந்த பிறகு கூட இன்னொரு பாவம் செய்தேன்..

விஜயன்: என்ன அது ராணி..

கலாராணி: ஒரு குதிரையைக் கூட ஒழுங்காகப் பார்த்து வாங்கத் தெரியாத இந்த மனிதருடன் எப்படிக் குடித்தனம் செய்யப் போகிறேனோ என நினைத்தேன்… அதுவே ஒரு பாவம் இல்லையா..

விஜயன்: அப்படிப் பார்த்தால் நானும் பாவம் செய்தவன் தான்..

கலாராணி: என்ன அது..

விஜயன்: உன்னுடன் நடந்து வரும் போது உனது ஒப்பனையெல்லாம் வியர்வையில் கலைந்து உனது உண்மை அழகைக் கண்டேன்..அதைப் பார்த்துப் பயந்து உன்னை எங்காவது விட்டுவிட்டு சமர்த்தாய் அப்பா அம்மா சொல்லும் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளலாம் என நினைத்தேன்.. அதுவும் பாவம் தானே..

(கலாராணி முறைக்கிறாள்)

மருத வாணர்: நான் செய்யாத பாவமா என்ன..தஞ்சையில் பூனை விலை கொடுத்து வாங்கிய பொருள்களை இங்கு யானை விலைக்கு விற்றேன்..ஏகப் பொய்கள் சொல்லியிருக்கிறேன்.. நான் தான் உண்மையில் பாவம் செய்தவன்..

அம்சவேணி: இவர் என்னை தஞ்சைக்குக் கூட கூட்டிச் செல்லவில்லையென அடிக்கடி மனதிற்குள் திட்டியிருக்கிறேன்..கட்டிய கணவனைத் திட்டலாமா.. நான் செய்திருக்கிறேன்.. எனவே நானும் பாவம் செய்தவள் தான்

சுந்தரன்: அப்பா அம்மா.. நானும் பாவம் செய்தவன் தான்..

மருதவாணர்: நீ என்னடா செய்தாய்

சுந்தரன்: உங்களுக்குப் பையனாகப் பிறந்தேனே..அது பெரிய பாவமில்லையா..

விஜயன்(கிழவனிடம்): என்னப்பா நீ எதுவும் சொல்லவில்லை…

கிழவன்: நாஞ் சொல்ல என்ன இருக்கிறது சாமி.. நாங்க செய்யாத பாவமா.. போன ஜன்மத்துல செஞ்ச பாவத்துக்கு இந்த ஜென்மத்தில பிச்சை எடுக்கிறோம்..எத்தனையோ தடவை நான் குருடன்னும் இவ ஊமைன்னும் சொல்லி ஏமாத்தியிருக்கோம்..எதச் சொல்ல..எத விட..

பெண்குரல்: என்ன யார் பாவம் செய்தவர் என்று தெரிந்ததா…

விஜயன்: அழகிய குரல்கொண்ட அசரீரியே… நாங்கள் அனைவருமே பாவம் செய்தவர் தான்..

பெண்குரல்: (குழம்பி) இப்படிச் சொன்னால் எப்படி..

சங்கரலிங்கம்: எப்படி சொன்னால் என்னம்மா.. நாங்கள் அனைவரும் பாவம் செய்தவர்கள் தான்.. வா.. வந்து எங்கள் விதியை முடி..

மண்ணில் அடைந்த மகிழ்வெல்லாம் போதுமென

விண்ணுலகைக் காட்டும் விதி

சுந்தரன்: அப்பா..அப்படின்னா நாமெல்லாம் செத்துப் போய்டுவோமாப்பா..ஹை..ஜாலி..வீட்டுக் கணக்கெல்லாம் போட வேண்டாம்..

மருத: ச் சும்மா இருடா..

பெண்குரல்: எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை..என் மேலாளரைக் கேட்டு வருகிறேன்..

விஜயன்: ராணி.. நமது விதி இப்படி முடியப் போகிறதே..

கலாராணி: ஆமாங்க.. சே.. ஜோடிப் புறாக்களாக வான்வெளியில் பறக்க நினைத்தோம்…ஆனால்…ம்ம்ம்

விஜயன்: ஆனால்.. பறக்க ஆரம்பிக்கும்முன்னே தரையில் விழுந்து விட்டோம்..மணல் வேறு மூடுகிறதே.. கள்ளி..சொல்லவேயில்லையே..

கலாராணி: எதைச் சொல்லவில்லை..

விஜயன்: நான் பார்த்த அதே நாடகத்தை நீயும் பார்த்தாய் என்பதை..

ஆண்குரல்: நீ எப்போதும் இப்படித் தான்..

பெண்குரல்: ஏன் என்ன செய்து விட்டேன்..

ஆண்குரல்: பேசாமல் வீட்டில் இருக்க வேண்டியது தானே.. இந்த மனிதர்களிடம் ஏதோ சொல்லி..அவர்களைப் பார்.. நம்மையே குழப்பி விட்டார்கள்..

பெண்குரல்: இப்போ என்ன செய்யலாம்..

ஆண்குரல்: ஒன்றும் செய்ய வேண்டாம்.. பொறுத்திருந்து வேடிக்கை பார்க்கலாம்..

(டக் டக் என்று குளம்புகளின் ஒலி..இரு வீரர்கள் இடது பக்க மூலையிலிருந்து உள்ளே வருகிறார்கள்)

வீரன் 1: மாறா.. பக்கத்து ஊருக்கெல்லாம் போகவேண்டியதில்லை.. இங்கேயே ஆட்கள் இருக்கிறார்கள்

வீரன் 2: ஆமாம்.. அதோ நம் மருதவாணர் கூட இருக்கிறார்..

வீரன் 1: என்ன மருதவாணரே.. வெளியூர்ப் பயணமா..

மருதவாணர்: ஆமப்பா.. பெண்ணின் வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கிறேன்..

விரன்1: என்ன நீங்கள்.. நாளை நமது ஊரில் என்ன நடக்க இருக்கிறது தெரியுமா..

வீரன் 2: சக்கரவர்த்தி ராசராசர் அறிமுகப் படுத்திய குடவோலைத் திட்டத்தை நம் சக்கரவர்த்தி ராசேந்திரர் தொடர்கிறார் அல்லவா.. நமது கிராமத்துத் தலைவரைத் தேர்ந்தெடுக்க – அது நாளை நடக்கிறது..

வீரன் 1: ஆம்.. நமது அம்பல வாணர் தான் நிற்கிறார்…அவருக்கு நீங்கள் ஓலையிட வேண்டாமா..

மருத வாணர்: (சலிப்புடன்) எனக்கு அதில் ஆர்வமில்லை தம்பி..

வீரன் 1: நீங்கள் அப்படிச் சொல்லக் கூடாது..உங்களுக்கு நூறு பொன்..அதோ இருக்கும் உங்கள் மனைவிக்கு நூறு பொன் தருகிறோம்..

சுந்தரன்: எனக்கு ?

வீரன் 2: உனக்கு கை நிறைய லட்டு தருகிறோம்.. நீ ஓலையிட முடியாதேப்பா..

அம்சவேணி: (ஆவலுடன்) ஏங்க வாங்கிக்குவோமே…

மருதவாணர்: அம்சா.. ஏற்கெனவே நாம் மரணத்தின் நுனியில் இருக்கிறோம்..

அம்சவேணி: போங்க… அசரீரி என்ன சொல்லியது..பாவம் செய்தவர் ஒருவர் தான் இருக்கிறார் என்று.. யோசித்துப் பார்த்தால் நாம் செய்ததெல்லாம் பாவமில்லை எனத் தோன்றுகிறது.. நீங்கள் யார்.. வியாபாரி தானே.. வியாபாரத்தில் பொய் சொல்லலாம் என்று பகவத் கீதையிலேயே சொல்லியிருக்கிறது..! தவிர உங்களை நான் திட்டாமல் வேறு யார் திட்டுவார்களாம்..உங்களைத் திட்டினால் என்னை நானே திட்டுவது போல..இதெல்லாம் ஒரு பாவமா என்ன..

மருதவாணர்: நீ எப்போது பகவத் கீதை எல்லாம் படித்தாய் அம்சா..

அம்சவேணி: அதை எல்லாம் கேட்காதீர்கள்..

மருதவாணர்: சரி போ.. வாங்கிக் கொள்..

(வீரன் 1 இடமிருந்து பொற்குவை வாங்கிக் கொள்கிறாள்..)

வீரன் 1: (விஜயனைப் பார்த்து) நீங்கள் கூட அம்பலவாணருக்கு ஓலையிடலாம்…உங்களுக்கும் இருநூறு பொன் கிடைக்கும்..

விஜயன்: நாங்கள் இந்த ஊரே இல்லையே..

வீரன் 2: நீங்கள் அதைப் பற்றிக் கவலைப் படாதீர்கள்..சரி என்று சொல்லுங்கள்..

விஜயன்: என்ன செய்யலாம் கலா..

கலாராணி: பேசாமல் வாங்கிக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது.. இருநூறு பொன் ஆயிற்றே..

விஜயன்: ஆமாம் ஆமாம்…ஒரு குதிரை 4 பொன் என்றால் இருநூறு பொன்னிற்கு எத்தனை கிடைக்கும்..

கலாராணி: (தலையில் அடித்துக் கொள்கிறாள்) என்ன குதிரை வியாபாரமா பண்ணப் போகிறீர்கள்..வாங்கிக் கொள்ளுங்கள்..குடித்தனம் ஆரம்பிக்கச் சரியாய் இருக்கும்..

சங்கரலிங்கம்:

ஊன்வெட்டி விட்டாலும் உள்ளம் மறைத்தேதான்

நான்வாங்க மாட்டேனே நூறு

விஜயன்: அவர் புலவர்ப்பா..அவருக்கு இருநூறு கொடுங்கள்..

வீரன் 1: சரி..அப்படியே கொடுக்கிறோம்..இந்தா.. கிழவா.. ஒழுங்காய் நாளை பெண்டாட்டியுடன் சாவடிக்கு வந்து ஓலையிடு..உனக்கு அங்கே ஆளுக்கு ஐம்பது பொன் தருகிறோம்..

கிழவன்: சரி சாமி..சாப்பாடு…கொஞ்சம் கள்ளு..

வீரன் 1: எல்லாம் உண்டு..உன் பெயர்,உன் பெண்டாட்டியின் பெயர் சொல்லு..

கிழவன்: எதுனாச்சும் நீங்களே எழுதிக்குங்க சாமி..

வீரன் 1: சரி.. உன் பெயர் கோடாஸ்வரன்.. உன் பெண்டாட்டி பெயர் திருநிறை செல்வி (ஓலையில் எழுதிக்கொள்கிறான்) மறக்காமல் நாளை அனைவரும் வந்து விடுங்கள்.. மாறா..அம்பலவாணர் நிறைய சந்தோஷப் படுவார்..இங்கேயே ஆறு ஓலைச்சீட்டு பிடித்து விட்டேன் என.. மழை நின்று விட்டதா பார்…

(மழையின் சத்தம் வலுக்க, காற்றின் சத்தமும் கேட்கிறது.. தடாலென்று மிகப் பெரிய ஓசை கேட்கிறது..பளீரென மின்னல் அடிக்க அரங்கம் முழுவதும் வெளிச்சத்தில் தெரிய..இருந்த நிலையிலேயே அனைவரும் உறைந்து இருப்பது ஒரு நிமிடம் தெரிகிறது..பின்னர் ஒளி மங்கி இருள் வந்து..திரை விழுகிறது)

*********************

kanlak@sify.com

Series Navigation

சின்னக் கண்ணன்

சின்னக் கண்ணன்