இடம்பெயர்ந்தவர்களின் முகாமிலிருந்து எழுதுகிறேன்

This entry is part [part not set] of 39 in the series 20101002_Issue

மூலம் – மாலதீ கல்பனா எம்ப்ரோஸ் (சிங்கள மொழியில்) தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை



அன்பின் சுந்தரம்,

நிலா நட்சத்திரங்கள் அணைந்துபோன
ஏழை வானத்தின் கீழ்
அந்தகார இரவு
முகாமுக்குச் சுருண்டு கொள்ளும்போது
ஊமை ஓலமிடும் நிலத்தின் கீழே
எந்த இடத்திலாவது நீங்கள் உறங்கியிருப்பீர்களென
உங்களைக் கடந்து போகும் வரும் பூட் சப்பாத்துக்களின் ஒலி
அசைகின்ற உலகைச் சொல்லித் தரும் எனக்கு

அன்றைய நள்ளிரவு இருள்
பஞ்சாயுதங்கள் வீழ்ந்த களப்பு
அப்பா இல்லாமல் போன காலம்
குஞ்சுகளுக்கு யாருடைய காவல்

அங்கிருந்தும் இங்கிருந்தும் கொஞ்சம் பேர்
வந்து அடிக்கடி விசாரிக்கிறார்கள்
ருசி தானே இந்த (சிறை) உணவு
வேறெங்கும் கிடைத்ததா இதை விடவும் சுவை உணவு

புள்ளினங்கள் பறந்தாலும்
பாடல்கள் இல்லை அவையிடத்தே
பூக்கள் மலர்ந்தாலும்
மிதிபட்டுச் சிதையும் அக்கணமே
இழுத்துப் பிடித்த வீணையின் நரம்புகள்
முன்பெழுந்த இன்னிசையை இனியெழுப்பாது

தப்பித்தோடினால் மீளவும்
முட்கம்பிகளில் சிக்கி விட நேரிடும்
விழி உயர்த்திப் பார்த்தால்
மீண்டும் தலைதூக்க முடியாமல் போய்விடும்
ஒரு துளி விழிநீர் சிந்தினால்
முழுப் பரம்பரையும் சாம்பலாகும்

அதனால் உணர்ச்சியற்றிருக்கிறேன்..
எவர்க்கும் கேட்டுவிடாதபடி சுவாசிக்கிறேன்..

நீங்கள் அங்கு உறங்கும் வரை.

இப்படிக்கு,
உங்களுடைய,
ராதா.

மூலம் – மாலதீ கல்பனா எம்ப்ரோஸ் (சிங்கள மொழியில்) தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

Series Navigation