ஆவேசமும் குழந்தைமையும் -வில்லியம் பாக்னரின் ‘இரு சிப்பாய்கள் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 74 )

This entry is part [part not set] of 42 in the series 20030828_Issue

பாவண்ணன்


பத்தாண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி. அப்போதுதான் பெங்களூருக்கு மாற்றலாகி வந்திருந்தேன். காவேரி நதிப்பிரச்சனை உச்சத்தில் இருந்த நேரம். இரண்டு மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுவிட்டது. அலுவலகத்துக்குச் செல்ல நகரப் பேருந்தொன்றில் பயணம் செய்துகொண்டிருந்தேன். உட்கார இடமில்லை. பயணச்சீட்டு வாங்கியபிறகு கூட்டத்தோடு கூட்டமாக நின்றுகொண்டேன். என் அருகில் இருந்த இருக்கையில் இரு சிறுவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். இருவருமே பள்ளிச் சீருடை அணிந்திருந்தார்கள். ஒரே பள்ளிக்காரர்களாக இருக்கக்கூடும் என நினைத்தேன். ஒரே வகுப்புக்காரர்களாகவும் இருக்கலாம் என்றும் தோன்றியது.

இருவர் மடியிலும் விரித்துவைக்கப்பட்ட புத்தகங்கள் இருந்தன. இரண்டு மூன்று நிமிடங்கள் குனிந்து படிப்பதும் அப்புறம் பரபரப்பாக ஜன்னல் வழியே வேடிக்கை பார்ப்பதும் அதற்கப்புறம் பேசிக்கொள்வதுமாக இருந்தார்கள். இருவருக்குமே பத்து வயதுக்கு மேல் இருக்க வாய்ப்பே இல்லை. அவர்களுடைய ஒளி ததும்பும் முகங்களையும் அழகாகப் படிய வாரப்பட்ட தலைமுடியையும் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. மென்மையும் வழவழப்பும் பொருந்திய அவர்கள் கன்னங்களைப் பார்த்ததும் தொட்டுக் கொஞ்சவேண்டும் என்று தோன்றியது.

அவர்கள் முகங்களில் படிந்திருந்த பிஞ்சுக்களையைப் பற்றிய எண்ணங்களில் திளைத்திருந்த ஏதோ ஒரு கணத்தில் அவர்களுக்கிடையே அதுவரை அதுவரை நிகழ்ந்துவந்த பேச்சு திசைமாறியதை நான் கவனிக்கத் தவறிவிட்டேன். அவர்கள் திடுமென இரு மாநிலங்களுக்கிடையேயான தண்ணீர்ப் பிரச்சனையைப்பற்றிப் பேசத் தொடங்கினார்கள். பெரிய மனிதர்களைப்போல அவர்கள் விதம்விதமாக வாதங்களை அடுக்கிக்காட்டினார்கள். தன் மாநிலத்தில் பிறக்கும் நதி தமக்கே சொந்தமாக இருக்கவேண்டிய அவசியங்களை அலசினார்கள். எடுத்துக்காட்டுகளாகத் தமக்குத் தெரிந்த வெவ்வேறு கதைகளை மாறிமாறிச் சொல்லிக்கொண்டார்கள். நதிநீரைப் பிரித்துக்கொடுத்தே தீரவேண்டிய நிலைமையொன்று வந்தால் அந்த நதியில் தண்ணீருக்குப் பதிலாக ரத்தமே ஓடவேண்டும் என்றெல்லாம் உணர்ச்சிமயமாகக் கொந்தளித்தார்கள். அவர்களுக்குத் தண்ணீர் கொடுக்கக்கூடாது, நம் மூத்திரத்தைத்தான் கொடுக்கவேண்டும் என்று சீற்றத்துடன் சொன்னான் ஒருவன். எந்த நொடியிலும் வாழ்க ஒழிக கோஷங்களை அவன் எழுப்பிவிடக்கூடும் என்று தோன்றியது.

வண்டிக்குள் நின்றிருந்தவர்கள் நெருக்கடிச் சிரமங்களையும் மறந்து அச்சிறுவர்களின் வாதங்களைக் கேட்டு மெய்மறந்து புன்னகைத்துக்கொண்டார்கள். சிறுவர்கள் சொல்பவை அனைத்தும் சத்திய வாக்குகள் என்பதைப்போல அமைதியாகக் கேட்டார்கள். சிறுவர்களுடைய பேச்சின் தொடர்ச்சியைத் தமக்குள் உடனடியாக உருவாக்கிக்கொண்டார்கள். பிரச்சனையில் நியாய அநியாயங்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அலசினார்கள். அந்த இடத்தில் நிற்கவே ஒருகணம் எனக்கு அச்சமாக இருந்தது. பீதியில் என் முகம் உறைந்தது. நெற்றியில் துளிர்க்கும் வேர்வையும் பதற்றமும் என்னை எந்த நேரமும் காட்டிக்கொடுத்துவிடும் என்று தோன்றியது. என் கவனத்தைத் திருப்புவதற்காக ஜன்னல் வழியே புலப்படும் கட்டடங்களையும் விரைவாக ஓடுகிற இருசக்கர வாகனங்களையும் ஓட்டுபவர்களுக்குப் பின்னால் தலைமுடி காற்றில் பறக்க ஒயிலாக உட்கார்ந்து செல்கிற பெண்களையும் மரங்களையும் மாறிமாறிப் பார்க்கத் தொடங்கினேன். ஆனால் எந்தக் காட்சியிலும் மனம் பதியாமல் மீண்டும் மீண்டும் அச்சிறுவர்கள்மீதே பதிந்தது. அவர்களுடைய ஆவேசம் ததும்பிய உரையாடல்கள் தொடர்ந்து காதில் விழுந்தபடியிருந்தன.

அப்பேச்சு எதுவுமே சிறுவர்களுடைய பேச்சாகவே இல்லை. அவர்கள் நெஞ்சங்களில் ஏதோ ஒரு பேய் புகுந்துகொண்டு ஆவேசப்படுத்துகிறது என்று தோன்றியது. அவர்களுடைய குழந்தைமையைச் சுத்தமாக அந்தப் பேய் துரத்திவிட்டுக் கால்நீட்டி உட்கார்ந்ததைப்போல இருந்தது. பெற்றவர்களும் சரி, மற்றவர்களும் சரி, யாருமே குழந்தைகளின் மனங்களில் பேய்கள் நுழைவதை விரும்புவதில்லை. தம் குழந்தைகள் குழந்தைமையைப் பறிகொடுத்துவிட்டு நிற்பதைக் காண யாருக்குமே ஆர்வமிருப்பதில்லை. ஆனால் ஒரு சிக்கலான பிரச்சனையை ஒட்டித் தம்மால் வெளிப்படையாகக் கருத்துரைக்க முடியாத தருணங்களில் தம் மனத்திலிருப்பதைப் படித்துவிட்டதைப்போல அதே கருத்துகளைக் குழந்தைகள் தம் வயதுக்குச் சற்றும் பொருந்தாத விதத்தில் ஆவேசமுடன் சொல்லும்போது தடுக்கமுடியாமல் ரசிக்கிற மனஉணர்வு பிறந்துவிடுகிறது. ஏதோ ஒரு விதத்தில் அது மொழிப்பற்றாகவும் தேசப்பற்றாகவும் பார்க்கப்பட்டு அதற்கொரு அங்கீகாரத்தையும் தந்துவிடுகிறார்கள்.

இதே குழந்தைகள் இதே பேச்சை வேறுசில பொருத்தமற்ற சந்தர்ப்பங்களில் பேசும்போது இதே பெற்றோர்கள் தடுத்து நிறுத்திவிடக் கூடும். ‘போ, போ, போய் படிக்கற வேலையைப் பாரு, இல்லன்னா ஆடப்போ ‘ என்று அதட்டி அனுப்பிவிடக்கூடும். நெருக்கடியான புறச்சந்தர்ப்பம் அவர்கள் வாயைக் கட்டிப்போடுவது மட்டுமல்லாமல், அப்பேச்சைச் சுவைப்பவர்களாகவும் ஏற்றுக்கொள்கிறவர்களாகவும் மாற்றிவிடுகிறது.

அப்போதுதான் வேறொரு விஷயத்தையும் கவனித்தேன். அச்சிறுவர்களில் ஒருவன் திடுமென பேச்சை நிறுத்திவிட்டுத் தம் பைக்குள் கையைவிட்டு சாக்லெட் ஒன்றை எடுத்தான். இன்னொன்றும் இருப்பதைப்போலப் பைக்குள் கைவிட்டு வெகுநேரம் துழாவிவிட்டு உதடுகளைப் பிதுக்கினான். பிறகு சற்றும் தயங்காமல் தன் கைக்குட்டைக்குள் அந்தச் சாக்லெட்டை வைத்துக் காக்காய்க்கடி கடித்துத் துண்டாக்கி ஒரு துண்டை மற்றொரு சிறுவனுக்குத் தந்தான். இருவருமே வாய்க்குள் போட்டுச் சுவைத்தார்கள். அந்தச் சாக்லெட்டைக் கொண்டுவந்த ஆப்பிரிக்க அத்தை, அவர்கள் குழந்தைகள், அவர்கள் நடவடிக்கைகள் என்று வேறு திசைகளில் வாயில் இனிப்புக் குழையப் பேசத் தொடங்கினார்கள். ஒரே நொடியில் அவர்களைவிட்டுக் காணாமல் போயிருந்த குழந்தைமை ஒட்டிக்கொண்டதை ஆச்சரியத்துடன் கவனித்தேன். துரதிருஷ்டவசமாக வண்டிக்குள் பயணம் செய்த பெரியவர்கள் அந்தப் பிரச்சனையை ஒட்டியும் வெட்டியும் பேசத் தொடங்கினார்கள்.

வண்டியை விட்டு இறங்கிய பிறகும் மனஅமைதி குலைந்த நிலையிலேயே அலுவலகம் சென்றேன். அங்கேயும் நிம்மதியாக வேலை செய்யமுடியவில்லை. நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் பயணித்த வண்டிக்குள் துணிச்சலாகச் சொல்லப்பட்ட அச்சிறுவர்களுடைய வார்த்தைகளையே என்னைச் சுற்றியிருப்பவர்கள் மாற்றிமாற்றி அமைதியாகப் பேசிக்கொள்கிறார்கள் என்று தோன்றியதைத் தவிர்க்கமுடியவில்லை. அன்று முழுக்க எந்த இடத்தில் தண்ணீர் அருந்தினாலும் அதில் சிறுநீர் கவிச்சை அடிப்பதைப்போல எண்ணமிழந்து என் மனக்கொந்தளிப்பை அதிகரித்தபடி இருந்தது. எல்லாச் சந்தர்ப்பங்களிலும் காக்காய்க்கடி கடித்த காட்சியும் நினைவுக்கு வந்து சிரிப்பு மூட்டவும் செய்தது. பிஞ்சு மனத்தில் நஞ்சு படரத் துாண்டும் விஷயங்கள் எவை என்பதைக் குறித்து நெடுநேரம் யோசித்தபடி இருந்தேன்.

நாளாக நாளாகப் பழகிவிடுவதைப்போல இந்த விஷயமும் சகஜமான ஒன்றாக மாறிப்போனது. ஆனால் ஆவேசத்தையும் குழந்தைமையையும் மாற்றிமாற்றிக் காட்டிய அச்சிறுவர்கள் முகங்கள் மட்டும் மறக்க முடியாத ஒன்றாக மனத்தில் அழுத்தமாகப் படிந்துவிட்டன. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவர்கள் முகங்கள் வில்லியம் பாக்னர் ஒரு சிறுகதையில் சித்தரித்துக் காட்டிய இரண்டு இளம் சகோதரர்களுடைய முகங்களை ஒத்திருப்பதைக் கண்டபோது ஆச்சரியமாக இருந்தது.

செய்திகள் ஒளிபரப்பப்படும் நேரங்களில் இரண்டு சகோதரர்கள் தெருக்கொடியில் உள்ள ஒருவருடைய வீட்டுக்கு வெளியே பனியில் நின்று கேட்கும் பழக்கம் உள்ளவர்கள் என்னும் தகவலுடன் அக்கதை தொடங்குகிறது. மூத்த சகோதரனுக்கு இருபது வயது. இளையவனுக்கு ஒன்பது வயது. விவசாயக் குடும்பம். பிரெஞ்சுக்காரர்கள் வளைவுக்குள் ஒதுங்கி வாழ்பவர்கள். ஒருநாள் இரவு வானொலிச்செய்திகளில் பேர்ல் ஹார்பர் என்னுமிடத்தில் ஜப்பான் தேசம் குண்டு வீசித் தாக்கிய செய்தியைக் கேட்கிறார்கள். அதைக்கேட்டு இருவரும் உணர்ச்சிவசப்படுகிறார்கள். செய்தியைக் கேட்டதிலிருந்து மூத்தவன் வெறிகொண்டவனைப்போல அலைகிறான். ‘அந்த ஜப்பானியரை…. ‘ என்று ஆவேசமுடன் பற்களைக் கடிக்கிறான். தானும் உடனே கிளம்பிச்சென்று போரில் கலந்துகொள்ள விழைகிறான். நாளாக நாளாக அவன் ஆவேசம் கூடிக்கொண்டே போகிறது.

இரவு நேரங்களில் படுக்கையில் படுத்திருக்கும்போது சகோதரர்களுக்கிடையே, யுத்தத்துக்குச் செல்லும் ஆசையைப்பற்றிய விவாதம் எழுகிறது. மூத்தவன் தான் உடனே கிளம்பிச்செல்ல வேண்டும் என்று பரபரக்கிறான். தன்னையும் அழைத்துச் செல்லுமாறு கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறான் இளையவன். ‘நீ எதற்கு யுத்தத்துக்கு ? ‘ என்று கேட்கிற சகோதரனிடம் ‘நீ பெரியவர்களை நொறுக்கு, நான் சிறியவர்களைப் பார்த்துக்கொள்கிறேன் ‘ என்று பதில் சொல்கிறான். ஆனால் மூத்தவன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவன் பெண்கள் பின்னால் சுற்றும்பொழுது அவனுடன் போவதை விரும்பாததைப்போல இப்போதும் ஒட்டிக்கொண்டு கிளம்புவதை விரும்பவில்லைபோலும் என்று முதலில் தோன்றகிறது இளையவனுக்கு. ஆனால் அவன் மிகச் சிறியவனாக இருப்பதால் ராணுவத்தில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் என்று எடுத்துக்கூறித் தடுக்கிறான் மூத்தவன். அது உண்மை என்று உணர்ந்தும் கூட எப்படியாவது அவனுடன் ஒட்டிக்கொண்டு புறப்பட்டுவிட வேண்டும் என்று துடிக்கிறது அவன் மனம். ‘நான் சண்டையிடவில்லை. ஆனால் உங்களுக்கெல்லாம், குளிர்காய்வதற்காக விறகுகளை வெட்டிக்கொண்டு வந்து தருகிறேன். தேவையான தண்ணீரைக் கொண்டுவந்து தருகிறேன் ‘ என்று கெஞ்சுகிறான்.

பெற்றோர்களுக்கிடையேயும் மூத்தவன் ராணுவத்தில் சேர்வதையொட்டி உற்சாகமான வரவேற்பு எதுவும் இல்லை. தந்தையாரும் ஒருகாலத்தில் தன் பங்குக்கு ராணுவத்தில் உழைத்தவர். தாயின் சகோதரனும் ராணுவத்தில் பணியாற்றிக் காயமடைந்தவன். ராணுவத்தால் போதுமான இழப்புகளை அக்குடும்பம் ஏற்கனவே சந்தித்திருந்தது. வயல்வேலைகளைப் பார்த்துக்கொண்டு தனக்குத் துணையாக இருந்தால் போதுமென்று அவன் தந்தை எவ்வளவோ எடுத்துரைத்தும் அவன் தன் முடிவில் மாற்றமில்லாமல் நிற்கிறான். இறுதியில் விடைபெற்றுக் கிளம்பிச் செல்கிறான். பேசக்கூடிய சந்தர்ப்பங்கள் கிட்டும்போதெல்லாம் ‘அந்த ஜப்பானியரைச் சும்மா விடக்கூடாது ‘ என்றபடி பற்களை நறநறவென்று கடிக்கிறான் சின்னவன்.

அன்று இரவு சின்னவனுக்குத் துாக்கமே இல்லை. சாப்பாட்டுக்குப் பிறகு தன் கவண்கயிற்றையும் ஷிக்போக் பறவையனே¢ முட்டையொன்றையும் எடுத்துப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டான். தன் பூட்ஸ்களை வெளியே இருக்குமாறு பார்த்துக்கொண்டான். முன்னிரவு கழிந்ததும் எல்லாரும் துாங்கும் வேளையில் யாருக்கும் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறுகிறான். இரவு முழுக்க நடந்து இருபத்திரண்டு மைல்கள் தொலைவில் இருந்த ஜெபர்ஸன் நகரை அடைகிறான். மூத்தவன் கிளம்பிச்சென்ற மெம்பிஸ் நகரம் இன்னும் எண்பது மைல்கள் என்னும் பெயர்ப்பலகையைப் பார்த்ததும் அவன் மலைத்துவிடுகிறான். தான் அங்கே போய்ச் சேர்வதற்குள் அவன் பேர்ல் ஹார்பருக்குச் சென்றுவிடுவானோ என்று பதற்றமடைகிறான்.

அப்போது அங்கே தென்பட்ட ஒரு போலிஸ்காரன் அவனை நெருங்கி விசாரிக்கிறான். அவசரமாக மெம்பிஸ் நகருக்குச் செல்லவேண்டும் என்கிற தகவலைத் தவிர எதையும் சொல்ல மறுக்கிறான் சின்னவன். போலீஸ்காரன் அவனை அங்கிருந்த கடைக்காரன் ஒருவனுடைய பொறுப்பில் விட்டுவிட்டுத் தன் மேலதிகாரியை அழைத்துவரச் செல்கிறான். நேரத்தைக் கடத்த விரும்பாத சின்னவன் அங்கிருந்து தப்பிக்க முனையும்போது கடைக்காரன் தடுக்கிறான். அப்பொழுது தன்வசமிருந்த பேனாக்கத்தியைக் காட்டி கடைக்காரனையே மிரட்டுகிறான். அதிகாரி வந்து விசாரணை செய்யும்போது மெம்பிஸ் நகரில் தன் அண்ணன் இருக்கிறான் என்றும் அவனைத்தான் பார்க்கப்போவதாகவும் சொல்கிறான். மேற்கொண்டு எந்த விவரங்களையும் சொல்ல அவன் தயாராக இல்லை. பிறகு அவர்கள் அங்கிருந்த பேருந்தொன்றில் அவனை ஏற்றி மெம்பிஸ் நகரில் இறக்கிவிடுமாற சொல்கிறார்கள்.

மெம்பிஸ் நகரில் இறங்கியதுமே ராணுவத்தில் சேரும் இடம் எது என்று கேட்டுத் தெரிந்துகொண்டு செல்கிறான் சின்னவன். கண்ணில் பட்ட ஒரு அறைக்குள் புகுந்து தன் அண்ணனைப் பார்க்கவேண்டும் என்று கேட்கிறான். அங்கிருந்த சிப்பாய்கள் அவனை அங்கிருந்து வெளியேற்ற முனையும்போது தன் பேனாக்கத்தியால் கீறிக் காயப்படுத்திவிடுகிறான். அவன் தீவிரத்தை உணர்ந்த சிப்பாய்கள் தொலைதுாரத்தில் இருந்த முகாமுக்குச் செய்தியனுப்பி அவனுடைய மூத்த சகோதரனை வரவழைக்கிறார்கள். அவசரச் செய்தியால் உடனே அங்கே வந்து சேரும் மூத்தவன் தன் தம்பியை அங்கே பார்த்ததும் அதிர்ச்சியடைகிறான். ‘நீ எப்படி இங்கே வந்தாய் ? ‘ என்ற கேள்விக்கு ‘நீங்கள் சமைப்பதற்கு விறகும் தண்ணீரும் வேண்டாமா ? அவற்றைக் கொண்டுவந்து கொடுப்பதற்காக நான் வருகிறேன் ‘ என்று பழைய பதிலையே சொல்கிறான் சின்னவன். ஆனால் அவனைத் தக்கவிதத்தில் ஆறுதல்படுத்திக் கிராமத்துக்குத் திருப்பியனுப்ப ஏற்பாடு செய்துவிட்டு மறுபடியும் தன் முகாமுக்குத் திரும்பிச் செல்கிறான் மூத்தவன். வாகனத்தில் மிகவும் நட்போடு அனுப்பிவைக்கப்படுகிறான். வாகனம் வேகமாகச் செல்கிறது. அந்த ஓட்டுநருடைய வேகத்தில் மிக விரைவாகவே தன் பிரெஞ்சுக்காரன் வளைவை அடைந்துவிடலாம் என்று தோன்றுகிறது. அந்த எண்ணம் எழுந்ததுமே அவனுக்கு அழுகை வந்துவிடுகிறது. அதை அவனால் நிறுத்தவே முடியவில்லை.

ஒன்பது வயதுள்ள ஒரு சிறுவன் திடுமென எழுந்த யுத்தத்தின் எதிரொலியாக தன்னை மாவீரனாக நினைத்துக்கொண்டு ‘அந்த ஜப்பானியரை….. ‘ என்று பற்களை நறநறவென்று கடிப்பதும் தன்னைத் தடுக்க வருகிற மனிதர்களுக்கெதிராக பேனாக்கத்தியை வீசிக் காயப்படுத்த முனைவதுமாக வன்முறை முளைப்பதைப் பதிவு செய்கிறது கதை. பசிபிக் சமுத்திரம் எங்கே இருக்கிறது என்கிற தகவல் கூடத் தெரியாத சின்னஞ்சிறிய பிஞ்சு மனத்தில் முளைவிடும் வன்முறைச் சித்தரிப்பு அச்சம் தரக்கூடிய விதத்தில் உள்ளது.

இறுதியில் அவன் அழுகைக்கான காரணத்தைக் குறிக்காமலேயே முடிப்பதும் நன்றாகவே இருக்கிறது. மனத்தில் பொங்கியெழுந்த வன்முறைக்கு வடிகால் இல்லாமலேயே திரும்ப நேர்ந்துவிட்டதே என்கிற வருத்தமா ? ஊரைப் பார்த்ததும் ஞாபகத்துக்கு வந்த அம்மா அப்பா ஞாபகமா ? காணாமல்போனதை ஒட்டி அவர்களிடம் வசைபடவேண்டியிருக்குமோ என்கிற அச்சமா ? மறுபடியும் எல்லாராலும் சிறுவனாக்கப்பட்டு திருப்பியனுப்பப்படுவதால் உருவான கூச்சமா ? எல்லாவிதமான சாத்தியங்களுக்கும் வழியமைத்தபடி முடிகிறது கதை.

பிரெஞ்சுக்காரர்கள் வளைவுக்குள் வசிப்பவர்கள் என்கிற குறிப்பை தொடக்கத்திலும் முடிவிலுமாக இரு இடங்களில் பயன்படுத்துகிறார் பாக்னர். அவர்கள் அமெரிக்கர்கள் அல்லர், அமெரிக்காவில் வசிக்கக்கூடிய அயல்தேசத்தவர்கள். அவர்கள் தம்மையும் அமெரிக்கனாகக் காட்டிக்கொள்ள வேண்டிய அளவுக்கதிகமான நிர்ப்பந்தம் அல்லது மனநெருக்கடியை ஒட்டி வாசக அனுபவங்களை விரிவாக்கிக்கொள்ள இக்குறிப்புகள் நிச்சயம் உதவும்.

*

அமெரிக்காவின் மிகச்சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் வில்லியம் பாக்னர். இலக்கியத்துக்கான நோபெல் பரிசைப் பெற்றவர். ஓசையும் வெறியும், நான் இறந்து கிடக்கும்போது, ஆகஸ்டில் வெளிச்சம் ஆகிய நாவல்களை எழுதியவர். 1957 ஆம் ஆண்டில் ‘கன்னிப்பெண் ‘ என்கிற தலைப்பில் அமெரிக்க எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பொன்றை ஜோதி நிலையம் வெளியிட்டது. அத்தொகுப்பில் வில்லியம் பாக்னர் எழுதிய ‘இரு சிப்பாய்கள் ‘ சிறுகதையும் அடங்கும். மொழிபெயர்ப்பாளர் கே.எம்.ரங்கசுவாமி.

Series Navigation