ஆரவாரமில்லாது வாழ்ந்த அ.மு.ப.

This entry is part [part not set] of 31 in the series 20061214_Issue

தேவமைந்தன்


அலட்டலும் ஆரவாரமும் மிகுந்தவர்களும் தற்புகழ்ச்சியும் பொய்ம்மையும் நிரம்பியவர்களும் “அகத்தே கறுத்துப் புறத்தே வெளுத்தவர்களும்” ஆன மனிதர்களின் நடுவே, அடக்கமாகவும் அமைதியுடனும் வாழ்ந்து தமிழுக்கு உழைத்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர் அ.மு.ப. என்று அன்பாக அழக்கப்பெற்ற பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் அ.மு. பரமசிவானந்தம் அவர்கள். தமிழ் உரைநடை வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர். சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள் பலவற்றைப் படைத்தவர். அவர் நூல்கள் பல. சென்னை தமிழ்க்கலைப் பதிப்பகம் ஒரு ரூபாய் விலைக்கு வெளியிட்ட ‘கண்டதும் கருத்தும்’ என்பது அவற்றுள் ஒன்று. அவ்வப்பொழுது பற்பல இதழ்களில் அவர் எழுதிய பதினான்கு கட்டுரைகளின் தொகுப்பு அது. பதிப்பித்த ஆண்டு அதில் குறிக்கப்படவில்லை. அனேகமாக 1947திசம்பரில் அது பதிப்பாகியிருக்க வேண்டும் என்பதற்கு பத்ராவதி இரும்புத் தொழிற்சாலையை, அ.மு.ப. 16-6-1947அன்று சென்று கண்டு அது பற்றி “பார்க்கப் பாரதி இல்லையே” என்றெழுதிய கட்டுரை இந்நூலில் முதலிடம் பெற்றுள்ளமை ஆதாரம்.

“பயன் இதுவா?” என்றொரு கட்டுரை, பழைய சென்னையைப் படம் பிடித்து வைத்து, இன்று நமக்குத் தருகிறது. அதில் சில பகுதிகளைத் தருகிறேன்.

“அன்று மாலை நான்கு மணிக்கு மேல் எங்காவது செல்ல வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. புறப்பட்டேன். வீட்டில் புறப்படும்போது எங்கு செல்லுகிறோம் என்ற எண்ணமில்லை… நேராகச் செண்ட்ரலுக்கு ஒரு டிக்கெட் கொடுத்தார் பஸ் கண்டெக்டர். நான் இரண்டணா கொடுக்கவே அவர் அதற்குச் சரியாக டிக்கெட் கொடுத்துவிட்டார். மூர்மார்க்கெட்டில் இறங்கி நேரே திருவல்லிக்கேணி பஸ் ஏறி கடற்கரைப் பக்கம் போனேன்.”

“செம்படவன் ஒருவன் காலையில் கடல் நோக்கிச் சென்றவன், தன் பாய்மரத்துடன் நான் இருந்த இடத்திற்குச் சற்று தூரத்தில் வந்து இறங்கினான். சிலர் அவனைச் சுற்றி வட்டமிட்டார்கள். வயதான ஒரு அம்மையார் மட்டும் சிறிது தூரத்தில் உட்கார்ந்து கொண்டு கடலையும் கூட்டத்தையும் மாறி மாறிக் கவனித்துக் கொண்டு இருந்தார்கள். அவர் தம் முகக்குறிப்பிலிருந்து அவருடைய வாட்டம் நன்கு வெளிப்பட்டது. ஆனால் நான் அவ்வளவு அதிகமாக அதுபற்றி அப்போது எண்ணவில்லை. செம்படவன் கரையில் இறங்கி, தான் அன்று கொண்டுவந்திருந்த கடல் மீன்களை யெல்லாம் விரித்து வைத்தான். சுற்றி யிருந்த பலர் அவனைப் புகழ்ந்தார்கள். கடந்த சில நாட்களாக இவ்வளவு பொருள்கள் – உயர்ந்த மீன்கள் – அவன் கொண்டு வரவில்லையாம். ஆகவே அன்று அவனுக்கு (அதிர்ஷ்டம்) என்று அவர்கள் கூறினார்கள்.

ஆனால் நல்ல கட்டமைந்த உடலையுடைய அந்த வாலிபச் செம்படவன் மட்டும் அவர்கள் புகழ்ச்சியை மதிக்காதவன் போலத் தோன்றினான். அத்துடன் அவன் முகம் வாட்டத்தையும் காட்டிற்று. நான் இருந்த இடத்தைவிட்டு எழுந்து அவன் அருகில் சென்றேன். “எவ்வளவு அதிகமாகக் கரைக்கு வந்தாலும் எனக்கு மனச் சந்தோஷம் ஏதுங்கோ? இதையெல்லாம் யார்கிட்ட கொடுப்பேனுங்க. போன பெளர்ணமிக்கு என் ஆயி நான் கொண்டாந்ததையெல்லாம் பாத்து, சந்தோஷப்பட்டு ‘மவனே’ன்னு திஷ்டி கழித்தாளே! இந்தப் பருவத்திலே-இன்னைக்கு அவ இல்லையே, என்னை உட்டுட்டு போயிட்டாளே. எனக்கு திஷ்டி கழிக்கத்தான் யார் இருக்கிறாங்கோ! எங்க தெய்வம் – ஆயி கண்ணை மூடிப் பத்து நாள் ஆயிட்டே..” என்றான்………………

நான் இவர்கள் பேச்சில் மூழ்கி இருந்ததோடு சற்றுத் தொலைவில் அமர்ந்துள்ள அந்தக் கிழ அம்மையாரையும் கவனித்துக் கொண்டிருந்தேன். அந்தச் செம்படவன் சொன்னதைக் கேட்டதும் அவர்கள் வாட்டம் அதிகமாயிற்று. கண்கள் அதிகமாக நீரைப் பொழிய ஆரம்பித்தன. நான் இதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கத்தான் வேண்டுமென்று நிச்சயித்தேன்………….

“அம்மா” என்றேன். அவர்கள் திரும்பிப் பார்த்தார்கள்…..”அப்பா நீ யாரோ முன்பின் அறியாதவன்; என்றாலும் என்னிடம் பரிவு காட்டிப் பேசுகிறாய். என்னை இந்த முறையில் அன்போடு கேட்பவர்கள் யார் உள்ளார்கள்?… இதோ சொல்கிறேன். அது ஒரு ‘பாரதம்.”

இப்படிச் சொல்லிவிட்டு அந்த வயதான அம்மையார் சொன்ன அவர்களின் வாழ்க்கைக் கதை:

சுமார் 30 வருஷங்களுக்கு முன் [1917 வாக்கில்] அவர்கள் கல்கத்தாவில் இருந்தார்களாம். அவர்களின் வீட்டுக்காரர் ஒரு கம்பெனியில் கூட்டு வியாபாரம் செய்து மாதம் 500 ரூபாய்க்கு மேல், வரும்படி ஈட்டினார். மணமாகி 10 வருஷங்களுக்குப் பிறகு மகன் பிறந்தான். தவமாய்த் தவமிருந்து பெற்ற மகனை அவர்கள் வளர்த்த முறையே தனி. கல்கத்தாவில் காளி வரத்தால் பிறந்ததென்று முடிவு கட்டிக் காளியப்பன் என்றே அவனை அழைத்தார்கள். அவன் வளர்ந்து நாலாண்டு முடிவதற்குள்ளாகவே அவனுக்குத் தம்பி ஒருவன் பிறந்தான். இருவரையும் நன்கு ஆளாக்கிக் கல்விச் செல்வம் பெற வைத்தார்கள். பெரியவன் பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டு வரும்பொழுது தாங்கள் பிறந்து வளர்ந்த தமிழகத்துக்கே திரும்பி வாழ்வதென்று தீர்மானித்தார்கள். தென் ஆர்க்காடு ஜில்லாவில் ஒரு சிற்றூர், அவர்களின் சொந்த ஊர். நகரவாழ்வே பழகிப் போய் விட்டமையால், சென்னை மயிலாப்பூரில் வாடகை வீட்டில் வாழ்க்கையைத் தொடர்ந்தார்கள்.

காலச் சக்கரம் விரைவாகச் சுழன்றது. இன்று பெரியவன் காளியப்பன், கல்கத்தாவில் தன் தந்தை நடத்திவந்த வியாபாரத்தைப் புதிதாகத் தொடங்கி நடத்தி வருகிறான். சின்னவன் பீ.ஏ. பாஸ் செய்துவிட்டு உத்தியோகத்திலிருக்கிறான். அவர்களின் அப்பா மூன்று வருஷங்களுக்கு முன் இறந்து விட்டார். இறக்கு முன், இரண்டு பிள்ளைகளுக்கும் நிறையச் சொத்து வைத்து விட்டுச் சென்றதோடு தனக்கு – தான் இருக்கும் வரையில் 2000 ரூபாய் பாங்கியில் தன் பெயருக்குக் கட்டி வைத்துச் சென்றார். அவர் இறந்த பிறகு பெரியவன் கலியாணம் செய்துகொண்டு வியாபாரத்தை நன்றாக நடத்தி மாதம் 500 ரூபாய்க்குச் சம்பாதிக்கிறான். சிறியவனோ உத்தியோகம் பார்க்கிற படியால் ரயில்வேயில் பெங்களூரில் மாதம் 100 ரூபாய் சம்பளம் வாங்குபவனாக இருக்கிறான்.

கலியாணம் ஆன சில நாட்களுக்கெல்லாம் காளியப்பன், தன் தாயாரையும் தம்பியையும் வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டான். தம்பிக்குக் கலியாணம் பண்ணிவிட்ட பின்பு போகிறேன் என்று கெஞ்சிய தாயின் வார்த்தைகளை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.போதாததற்கு, அவன் வரும்படியில் அவர்களுக்கும் செலவு செய்வது நஷ்டம் என்று வேறு சொல்லியிருக்கிறான்.

மனம் மிக வருந்திய தம்பி, தன் தாயான அவர்களை அழைத்துக் கொண்டு அண்ணன் வீட்டிலிருந்து வெளியேறி, சென்னைக்கே மீண்டு, திருவல்லிக்கேணியில் ஒரு சிறிய வீட்டைப் பார்த்துத் தன் தாயாருக்கு வாடகைக்கு அமர்த்திக் கொடுத்துவிட்டு, பெங்களூருக்கு வேலை கிடைத்துச் சென்றுவிட்டான்.

தற்பொழுதைய நிலை என்ன? அ.மு.ப. சொற்களாலேயே மீண்டும் பார்ப்போம்: “சின்னவன் எந்தக் காரணத்தைக் கொண்டும் பெங்களூர் வரக்கூடாது என்றான். பெரியவன் நான் எந்தக் காரணத்தைக் கொண்டும் அவன் வீட்டிற்கு வரக் கூடாது என்று எழுதி விட்டான். இந்த இரண்டு நாட்களாக நான் உண்ணவில்லை; உறங்கவில்லை… தம்பீ! சற்று முன்பு அந்தச் செம்படவன் நிறைய மீன் கொண்டு வந்து இருந்தும், பார்க்க அம்மா இல்லையே என்று வருந்தியதைப் பார்த்தாயல்லவா? என் மகனுக்கு எல்லாச் செல்வமும் இருந்தும் என்ன பயன்? இரண்டாயிரத்தைக் கொடுத்தாலும் இதுமாத்திரம் என்ன நன்மையைச் செய்துவிட முடியும்? தவமிருந்து பெற்ற மகன் இன்று இவ்வளவு செல்வத்துக் கிடையில் நான் ஒழிந்தால் நல்லது என்பது எதன் பயன்? செல்வம் பெற்ற பயனல்லவா? நிறைய மீன் வந்தும் அம்மா இல்லையே என்று அலறுவது எதன் பயன்? அந்தப் பாழும் செல்வவாடை அவர்களிடம் இல்லாதது அல்லவா?

இப்படி இரண்டு பிள்ளைகள் இருந்தும் ஒரு ஆதரவும் இல்லாது தனியாக – ஒண்டிப் பறவையாக – ஒரு மூலையில் குடியிருப்பதை எண்ண வாட்டம் அதிகரிக்கிறது” என்று கூறி முடித்தார்கள்.

அ.மு.ப., தான் கண்டதை, இன்றைக்கு 59 ஆண்டுகளுக்கு முன்னால், எவ்வளவு எளிமையாகப் பதிவு செய்து வைத்திருக்கிறார்! அது சரி..

“தேவைக்கு அதிகமான பணமும் சொத்தும் தேவையே இல்லாத வேதனைகளைத்தான் கொண்டுவந்து சேர்க்கின்றன. அதனால் ஆரோவில்லுக்குள் பணத்துக்கும் சொத்துக்கும் மதிப்பே கிடையாது!” என்று உலக நகரத்தை உருவாக்கும்பொழுது அன்னை கூறினார்கள். இன்று உலக நகரம் அதை கனவு கண்டு உருவாக்கிய அன்னை அவர்களின் நோக்கப்படி இருக்கிறதா?

****
annan_pasupathy@hotmail.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்