ஆதிமூலம்: அகத்தின் அழகை முகத்தில் வடித்தவர்

This entry is part [part not set] of 34 in the series 20080131_Issue

மலர்மன்னன்


நண்பர் கே. எம். ஆதிமூலம் இனி நேரில் சந்திக்கப்பட முடியாதவராகிவிட்டார் என்ற தகவல் ஜனவரி 15 அன்று குறுஞ் செய்தியாக எனக்கு வந்தபோது தமிழ் நாட்டிற்கு வெளியே இருந்தேன். தனக்கு உடல்நிலை சரியாக இல்லை என்பதைக் கூட அவர் பிறருக்குத் தெரிவிக்காமலேயே இருந்துவிட்டார் எனவும் கேள்வியுற்றேன். பிறரைச் சந்திப்பதையும் அவர் தவிர்த்து வந்திருக்கிறார்.

எனது கவனங்களும் பணிகளும் திசை மாறிப் போனதால் அவரைச் சந்திப்பதே மிகவும் அரிதாகி அவருடனான தொடர்பு விட்டுப் போய் பல ஆண்டுகளாகிவிட்டிருந்தன. 1995 ல் என் மகள் தனது வீட்டின் வரவேற்பறையில் வைப்பதற்கு ஆதிமூலம் தீட்டிய ஓவியம் ஒன்றை வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் அவளையும் அழைத்துக் கொண்டு சோழமண்டல்த்திற்கு அருகாமையி லுள்ள அவர் வீட்டிற்குச் சென்றதுதான் அவரைக் கடைசியாகச் சந்தித்தது. அதன் பிறகு நான் தமிழ் நாட்டிற்கு வெளியே சென்று விட்டதோடு சில ஆண்டுகள்வரை திரும்பியும் வராததால் அவரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பே இல்லாமற் போயிற்று.

சென்னையில் உள்ள அரசினர் கவின் கலைக் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்களுடனான எனது பழக்கம் நாற்பது ஆண்டுகளுக்கும் முற்பட்டது. அங்கு பயின்ற பல மாணவர்களே பிறகு அங்கே ஆசிரியர்களாகப் பொறுப்பேற்ற பிறகும் அவர்களுடனான தொடர்பு தொடர்ந்தது.

ஆதிமூலமும் அங்கேயே ஆசிரியராக இருந்து அவரது தாக்கத்தை நேரடியாகப் பல மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் எனக் கல்லூரி முதலவராகப் பொறுப்பேற்ற தனபால் உள்ளிட்ட பலரும் விரும்பியதுண்டு. ஏனெனில் அவரிடம் சரக்கு நிரம்ப இருந்தது அவரது மாணவப் பருவத்திலேயே வெளிப்படத் தொடங்கி விட்டிருந்தது. ஆனால் ஆதிமூலம் சென்னையிலேயே மத்திய அரசின் நெசவுத் துறையைச் சேர்ந்த நெசவாளர் மையத்தில் ஒரு வடிவமைப்பாளராகச் சேர்ந்துவிட்டார். அங்கு அவர் நெசவாளர்கள் திரைச் சீலைகள், போர்வைகள் முதலனாவற்றை நெய்வதற்கான பல வரிவிடிவங்களை உருவாக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன் நுண் கலைகளில் ஈடுபட்டுள்ளவர்களிடையே நெருக்கமான புரிந்துணர்வு இருக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் சிலர் முனைப்பாக இயங்கலானோம். ந. முத்துசாமி, சா. கந்தசாமி, பிற்பாடு க்ரியா என்கிற பதிப்பகத்தைத் தொடங்கிய எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோருடன் நானும் ஒரு முதல் கட்டமாக இலக்கியப் படைப்பு முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் சித்திரம், ஓவியம், சுடுமண் சிற்பம், செராமிக் எனப்படும் பீங்கான் மண் கலை வடிவம் ஆகிய துறைகளில் இருப்பவர்களுக்கும் இடையே நெருக்கமான பிணைப்பு ஏற்படச் செய்வதில் தீவிரம் காட்டலானோம். இவ்வாறான முயற்சிகளின் பயனாக எங்களுடன் அதிக அளவில் நெருக்கமாகப் பழகத் தொடங்கியவர், ஆதிமூலம். எங்கள் மூலமாகத் தற்காலத் தமிழ் இலக்கிய முயற்சிகளைப் பரிச்சயம் செய்துகொள்ளத் தொடங்கி, காலப் போக்கில் படைப்பிலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொள்ளலானார்.

ஆதிமூலத்தின் அழுத்தமான வரை கோடுகளில் எடுத்த எடுப்பிலேயே நாங்கள் மனதைப் பறிகொடுத்தோம். எங்களை மேலும் மயக்கத் தமிழ் எழுத்து வரிவடிவங்களுக்குச் சித்திரத் தோற்றம் அளித்து உயிர்கொடுக்கலானார், ஆதிமூலம். மிகவும் அனாயாசமாக அவர் அதைச் செய்தார். அதனாலேயே அவை அழகு மிகுந்தன. தமிழ் எழுத்துகளுக்குக் கலை வடிவங்களாகத் தோற்றம் கொள்ள இப்படியும் ஒரு சாத்தியக் கூறு உள்ளது என எங்களுக்குப் புரியவைத்தார், ஆதிமூலம்.

பொதுவாக அரபி, பாரசீக எழுத்துகளைக் கலாபூர்வமாக வரைவதற்கென்றே தேர்ச்சிபெற்ற கலைஞர்கள் உண்டு. உருவங்களை வடிக்கலாகாது என்கிற சமயக் கட்டுப்பாட்டின் காரணமாகத் தங்களுடைய படைப்பாற்றலுக்கும் தூண்டுதலுக்கும் வடிகாலாக எழுத்துகளைக் கலை வடிவங்களாய் அவர்கள் உருவாக்கத் தொடங்கியதாலேயே எழுத்துகளை வடிப்பது ஒரு தனிக் கலையாக அந்த கலாசாரங்களில் வளர்ச்சி பெற்றது. அரபி, பாரசீக எழுத்துகளும் இயல்பாகவே சித்திர வடிவம் பெற்றிருந்ததால் அவை கலை வடிவங்களாக மிளிர்வது வெகு இயல்பாக அமைந்தது.

தமிழில் இதற்கான வாய்ப்போ, அவசியமோ, தூண்டுதலோ இல்லை. எனவே அன்றைய சித்திரக்கார்கள் எவரும் வழக்கத்தி லுள்ள எழுத்த்துக்களுக்குக் கலை வடிவம் தரவேண்டும் என்கிற எண்ணம் ஏதுமின்றி அவற்றை அவற்றின் வடிவம் உள்ளவாறேதான் வரைந்து வந்தனர்.

இதற்கு மாறாக, ஆதிமூலம் தமிழ் எழுத்து வரி வடிவங்களின் அமைப்பு குறித்து மானசீகமாக ஓர் ஆய்வையே மேற்கொண்டிருந்தார். ஒவ்வொரு எழுத்தின் வடிவும் எந்த வளைவில் அல்லது கோட்டில் பிற எழுத்துகளிலிருந்து மாறுபட்டுத் தனது தனித் தன்மையை நிறுவிக்
கொள்கிறது என்கிற நுட்பத்தை அடையாளம் கண்டு கொண்டார். அந்த உள்ளிருப்பை அப்படியே வைத்துக்கொண்டு அதற்குக் கலைவடிவம் தரலானார். அவர் படைப்பில் தமிழ் எழுத்து ஒவ்வொன்றும் ஒரு புறம் தனது உள்ளார்ந்த அடையாளத்தைத் தக்க வைத்துக்கொண்டு, இன்னொரு பார்வையில் அதுவரை கண்டுகொள்ளப்படாத புதிய வடிவத்துடன் உயிர்த் துடிப்போடு காட்சியளித்தது.

ஆதிமூலம் தமிழ் எழுத்து வரிவடிவங்களுக்குப் புதிய தோற்றத்தை அளிக்கும் பரிசோதனையை வெற்றிகரமாகச் செய்துவருவதைக் கண்டு உத்வேகம் பெற்ற பலர், தாமும் அவ்வாறே எழுத்துகளைப் புதிய தோற்றத்தில் வரைய முற்பட்டனர். ஆனால் அவர்களால் படைக்கப்பட்ட எழுத்துகள் அவற்றுக்குள்ள இயல்பான வடிவங்களின் சிதைப்பாகவே அமைந்தன. ஏனென்றால் அவர்களுக்கும் ஆதிமூலத்திற்கும் பார்க்கிற நோக்கில், உள்வாங்கிக் கொள்கிற சிரத்தையில் வித்தியாசமிருந்தது.

ஒவ்வொரு எழுத்தின் ஜீவாதாரப் புள்ளி எது என்பதைக் கண்டறிந்து அதை அப்படியே வைத்துக்கொண்டு அதன் வெளிக் கட்டமைப்பில் மாத்திரம் சில மாற்றங்களைச் செய்து
வரைவதில் ஆதிமூலம் கவனமாக இருந்தார். மற்றவர்களுக்கு அது ஒரு முக்கியமான அம்சமாகத் தோன்றவில்லை. ஆகவே அவர்கள் ஒரு தமிழ் எழுத்தைப் புதிய வடிவில்
வரைந்தபோது அதில் ஜீவன் காணாமற்போனது.

ஆதிமூலம் ஒவ்வொரு எழுத்தின் அகத்தையும் அறிந்து, அதை அதன் புறத் தோற்றத்தில் வெளிப்படுத்தினார். ஏனென்றால் அகத்தின் அழகை முகத்தில் வடிக்கத் தெரிந்தவர் ஆதிமூலம்.

ஆதிமூலத்தின் மனித வடிவங்களும் இதனாலதான் இனம்புரியாத தத்ரூபத் தோற்றங்கொள்கின்றன. 1969ல் காந்தி நூற்றாண்டையொட்டிப் பல்வேறு கோணங்களில் அவர் வரைந்த காந்தி சித்திரங்கள் அவரை மிகவும் பிரபலப் படுத்தின. அந்தச் சித்திரங்கள் ஒவ்வொன்றும் காந்தியின் பாவங்களை மட்டுமின்றி அவரது குணாம்சத்தையும் வெளிப்படுத்துவதால்தான் நம்மை அதில் லயிக்கச் செய்து முக்கியத்துவம் பெறுகின்றன.

புகைப்படங்கள் காட்சியைப் பிரதியெடுத்துக் காட்டுவதோடு தமது எல்லையைக் குறுக்கிக் கொள்பவை. அதனால்தான் கலைஞன் வரையும் சித்திரமோ தீட்டும் ஓவியமோ வெறுமனே பிரதியெடுப்பவையாக இல்லாமல் உள்ளுறையும் கட்டமைப்பை வெளிப்படுத்துவதாக அமையவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அந்த உள்கட்டமைப்பானது சித்திரம் அல்லது ஓவியம் செய்தவனின் உள்ளுறையும் உறக்க நிலையை எழுப்பிவிட்டு இரண்டின் சங்கமமாகப் படைப்பு வெளிப்படுகிறபோது அது சிறப்பாக அமைந்து பார்வையாளனை ஈர்த்துக்கொள்கிறது. ஓவியமோ சித்திரமோ அழகாக இருப்பது மட்டும் தெரிகிறது. எதனால் எப்படி அழகாக இருக்கிறது என்று சொல்லத் தெரிவதில்லை. அகத்தின் அழகு முகத்தில் தெரியுமாறு அமைவதால்தான் அது நமது கவனத்தைக் கவர்ந்துகொள்கிறது.

ஒரு தடவை ஆதிமூலத்துடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருக்கையில் அவர் வரைந்து தள்ளிய காந்தி சித்திரங்களைப் பற்றிப் பேச்சு வந்தது. காந்திஜியின் சித்திரங்களை வரைவதற்கு எப்படியும் அவர் புகைப்படங்களைத்தான் சார்ந்திருக்க முடியும். அப்படியிருக்க அவரால் எப்படி காந்திஜியின் முக பாவம், உடல் மொழியின் தோரணை ஆகியவற்றைத் தத்ரூபமாகக் கொண்டு வர முடிந்தது என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.

காந்தியின் சத்திய சோதனை, அவர் தொடர்பான செய்திகள் ஆகியவற்றைப் படித்தும், பழைய செய்தி ஆவணப்படங்களைப் பார்த்தும் காந்தியை உள்வாங்கிக் கொண்ட பிறகுதான் காந்தியைப் பல கோணங்களில் வரையத் தொடங்கியதாகச் சொன்னார். சில படங்களை எவ்வித வெளி ஆதாரங்களும் இன்றி மனதில் பதிந்த வடிவத்தின் ஆதாரத்திலேயே வரைந்ததாகவும் தெரிவித்தார்.

கால் என்கிற பெயரில் ஒரு காலாண்டு இதழைத் தொடங்க முடிவு செய்தபோது மாஸ்ட் ஹெட் என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அந்தப் பெயர்த் தலைப்பை ஆதிமூலம்தான் வடிவமைத்துக் கொடுக்க வேண்டும் என்று எவ்வித யோசனைக்கும் இடமின்றித் தீர்மானித்தேன். எனது விருப்பத்தைத் தெரிவித்ததும் 1/4 என்கிற எண்ணுருவைப் பல கோணங்களில் வரைந்து கொடுத்தார். எல்லாமே மிகச் சிறப்பாக இருந்த போதிலும் ஏதாவது ஒன்றைத்தானே பயன்படுத்திக் கொள்ள முடியும்! இருப்பவற்றுள் மிகவும் அழகாகத் தோன்றியதைப் பயன்படுத்திக் கொண்டேன். கால் முதல் இதழின் அட்டையில் போடுவதற்கும் தமிழ் நாட்டின் கிராமியக் கலைகளுள் ஒன்றான நாட்டியக் குதிரை ஆட்டத்தை அவரே வரைந்து தந்தார்.

மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறை தமிழில் வெளியிட்டு வந்த திட்டம் என்கிற மாத இதழுக்கு நண்பர் சொக்கு சுப்பிரமணியம் ஆசிரியராக நியமனம் பெற்றதும் அவர் செய்த முதல் நல்ல காரியம் ஒவ்வொரு மாதமும் இதழின் அட்டைப் படம் ஆதிமூலம் வரைந்ததாகத்தான் இருக்க வேண்டும் என முடிவு செய்ததுதான். ஆதிமூலம் என்ன வரைந் திருக்கிறார் என்று பார்த்து மகிழவதற்காகவே இதழ் தயாராகும் நாட்களில் திட்டம் அலுவலகத்திற்குச் செல்வதை அப்போதெல்லாம் வழக்கமாகக் கொண்டுவிட்டிருந்தேன்.

சொக்கு சுப்பிரமணியமும் ஆதிமூலமும் அந்தக் கால கட்டத்தில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மத்திய அரசு பொதுப்பணித் துறை அரசு அலுவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர். அதனால் திட்டம் இதழுக்கு ஆதிமூலத்திடமிருந்து தவறாமல் சித்திரம் வரைந்து வாங்குவது சொக்குவுக்கு எளிதாக இருந்தது.

இந்தச் சந்தர்ப்பத்தில் எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஆன்மிகத்தில் ஈடுபட்டுப் பலரைச் சீடர்களாகப் பெற்றிருந்த ஒருவரின் படத்தை வரைந்து தருமாறு ஆதிமூலத்தைக் கேட்டிருந்தேன். அவரும் வரைந்துகோடுத்தார். ஆனால் அந்த அருமையான சித்திரம் தனக்கு வேண்டாம் என்று அந்த ஆன்மிகவாதி கூறிவிட்டார். காரணம் நான் முன்னரே குறிப்பட்ட மாதிரி ஆதிமூலம் அகத்தின் அழகு முகத்தில் வெளிப்படுமாறு சித்திரத்தை வரைந்துவிட்டிருந்ததுதான்.


Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்